
இந்தோனேஷியாவின் தென் பகுதியில் அமைந்திருக்கும் சும்பவா தீவிலிருந்த மாபெரும் எரிமலையான தம்போரா 1815 ஏப்ரல் 5 அன்று மிக லேசாக அதிர்ந்து நடுங்கி சாம்பலையும் எரிமலைக் குழம்பையும் வாயுக்களையும் கொஞ்சமாகக் கக்கியபோது அது அடுத்து உண்டாக்கவிருந்த பேரழிவை அந்தத் தீவில் யாரும் எதிர்பார்த் திருக்கவில்லை. முந்தைய மூன்று ஆண்டுகளாக தம்போரா உறுமிக் கொண்டுதான் இருந்தது. அவ்வப்போது வாயுக்கள் கசிந்து, கரும்புகை மேகங்கள் எரிமலை உச்சியைச் சூழ்ந்திருந்தன. எனவே அதை தீவுவாசிகள் மிகச்சாதாரணமாக எடுத்துக்கொண்டார்கள்.
மெல்ல மெல்ல நில அதிர்வு அதிகமாகி தம்போரா ஏப்ரல் 10 அன்று மாலை பெரும் வெடியோசையுடன் வெடித்துச்சிதறிய போது சும்பவா தீவின் 35000 வீடுகளும் எரிமலைக் குழம்பில் மூழ்கி காணாமலாகி, அலறக்கூட நேரமில்லாமல் 110000 பேர் நெருப்பாற்றினால் விழுங்கப்பட்டார்கள்.
14,000 அடி உயரத்தில் இருந்த தம்போரா வெடித்தபோது அதன் 4,000 அடி உச்சி வானில் வெடித்துச் சிதறியது, நான்கு மைல் அகலமும் 2,000 அடி ஆழமும் கொண்ட ஒரு குழியையும் அந்த பெருவெடிப்பு உருவாக்கி இருந்தது
எரிமலையின் நெருப்புத் தூள், விமானங்கள் பறக்கும் உயரத்தை விட அதிகமாக, 40 கி மீ உயரத்தை அடைந்தது. எரிமலைத் தூசி மேகம் 1000 கி மீ தொலைவு வரை சென்றது. சுமார் 41 கி மீ³ DRE (dense rock equivalent) அளவுக்கு பாறைக்குழம்பு வெடித்துச் சிதறியது.
தொடர்ந்து 3 மணி நேர வெடிப்பிற்குப் பின்னர் இரவு 10 மணியளவில் நெருப்புத் தூண் வீழ்ச்சியடைந்தபோது எரிமலையின் சரிவுகளில் 100 மைல் வேகத்தில் ஓடத் தொடங்கிய நெருப்பாறுகள் கடலில் கலந்து அழிவுகரமான ஆழிப்பேரலையை ஏற்படுத்தின. தூசி மற்றும் சிதிலங்கள் பல வாரங்களாக விழுந்தன, பல கி மீ தொலைவில் உள்ள வீடுகள் இடிந்து வீழ்ந்தன. நன்னீர் ஆதாரங்கள் அசுத்தமாக்கப்பட்டன, பயிர்கள் அழிந்தன, கந்தக வாயு உருவாக்கிய நுரையீரல் தொற்றினால் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.
மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பசி மற்றும் நோயால் இறந்தனர், சும்பவா மற்றும் அருகிலுள்ள தீவுகளில் உயிரிழப்பு எண்ணிக்கை 60,000 முதல் 90,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பின் தீவிரம் 1-லிருந்து 8 வரையான கணக்கீட்டில் Volcanic Explosivity Index (VEI), என்று குறிப்பிடப்படுகிறது. கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் 8 அளவிலான எரிமலை வெடிப்புகள் ஏதும் உருவாகி இருக்கவில்லை. தம்போராவின் VEI 7 என்று அளவிடப்பட்டது.
எரிமலையியலாளர்கள் மனித குல வரலாற்றிலேயே தம்போரா எரிமலை வெடிப்புதான் ஆகப்பெரிய அழிவை, உலகளாவிய தாக்கத்தை உண்டாக்கிய அல்ட்ரா பிளினியன் வெடிப்பு என வகைப்படுத்துகிறார்கள்
கனமான தூசிப் பொழிவு சும்பவா, லொம்போக், பாலி தீவுகளையும் ஜாவாவின் மேற்குப் பகுதியையும் 20 முதல் 50 செ மீ தூசியால் மூடியது, மேலும் எரிமலையிலிருந்து 1000 கி மீ தொலைவில் கூட 1-2 செ மீ தூசி அடுக்கு காணப்பட்டது. தாம்போரா மலை வெடிப்பின் புகைமண்டலம் 27 மைல்கள் (43.5 கி மீ) உயரத்தை அடைந்தது.
தம்போரா வெடித்தபோது ஏறத்தாழ 150 சதுர மைல் அளவுக்கு அதிலிருந்து எரிமலைக் குழம்போடு சாம்பலும், ப்யூமிஸ் கற்களும், உடைந்த பெரும் பாறைகளும், பலவகையான வாயுக்களுடன் 60 மெகாடன் கந்தக வாயுவும் வெளியேறின.
தம்போரா வெடிப்புகள் கந்தக வாயுக்களை வளிமண்டலத்தில் உயர்த்தியது, அங்கு அவை நீராவியுடன் கலந்து கந்தக அமிலத்துளிகள் நிரம்பிய மேகங்களை உருவாக்கின. இந்தோனேஷியாவிற்கு வெகு தொலைவில் இருந்த நாடுகளிலும் சூரிய ஒளி இந்த மேகங்களால் மூடப்பட்டு சிவப்பு நிறமானது, காற்று மற்றும் மழையினால் மேகங்கள் சிதறவில்லை.
கந்தக அமிலம் சூரிய கதிர்வீச்சை மறைத்ததால் உலகளாவிய வானிலை மாறியது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சராசரியை விட குறைந்த வெப்பநிலையுடன் கூடிய கடுமையான குளிர் நிரம்பிய கோடையை எதிர்கொள்ள நேரிட்டது, உலகின் சராசரி வெப்பநிலை 3°C குறைந்தது.
தம்போரா வெடிப்பு மூன்று ஆண்டுகள் நீடித்து, உலகளாவிய வானிலை அழிவுகளை உண்டாக்கியது. தொடர்ந்து குளிர்ந்த வானிலை மற்றும் சூரிய வெளிச்சம் குறைவாக இருந்ததால் பயிர்கள் நாசமடைந்தன. பஞ்சம் மற்றும் குளிர்ந்த வானிலையை உலகின் பெரும்பகுதி அனுபவித்தது, எனவே 1816-ம் ஆண்டு “கோடை இல்லாத ஆண்டு” என அழைக்கப்பட்டது
மனித குல வரலாற்றில் பயங்கரமான எரிமலை வெடிப்புகள் ஏராளமாக நடந்துள்ளன. காலநிலைக்கு வெகுவாக குளிர்ச்சியைக் கொண்டு வந்த மவுண்ட் பினடுபோவின் “சிறிய உமிழ்வு” முதல், டோங்கா தீவுக்கூட்டத்தின் ஹுங்கா டோங்கா-ஹுங்கா ஹா’அபையின் அதிரடியாக நடந்த வெடிப்பு வரை எரிமலை வெடிப்புக்கள் உயிர்ச்சேதம், பொருட்சேதம் காலநிலை மாற்றம் போன்றவற்றை மட்டுமல்லாது வேறு வகையான தாக்கங்களையும் விளைவுகளையும் உண்டாக்கி இருக்கிறது. அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா பல காலகட்டங்களில் நிகழ்ந்த மூன்று மாபெரும் எரிமலை வெடிப்பினால் உருவான ஒரு பிரதேசம்தான்.
மாபெரும் எரிமலை வெடிப்புகள் அவை நிகழ்ந்த இடத்திலிருந்து மிக மிகத் தொலைவில் இருக்கும் பகுதிகளிலும் காலநிலையில் அதீத தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. 17-ம் நூற்றாண்டின் எரிமலை வெடிப்புகள் தீவிரமான விவசாய நெருக்கடிகளை உலக நாடுகள் பலவற்றில் உருவாக்கின. 18-ம் நூற்றாண்டில் இத்தாலி மற்றும் ஜப்பானில் குறிப்பிடத்தக்க வீரியம் கொண்ட பல எரிமலை வெடிப்புக்கள் நிகழ்ந்தன.
19-ம் நூற்றாண்டில் மிகத்தீவிரமான காலநிலைத்தாக்கத்தை உருவாக்கியது இந்தோனேஷியாவின் தம்போரா எரிமலை வெடிப்பு. உலகளாவிய அளவில், தாம்போரா வெளியிட்ட கந்தகம் விரைவாக உலகம் முழுவதும் பரவி, உலக வெப்பநிலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது, இது விவசாய உற்பத்தித்திறனைப் பாதித்தது,
அயர்லாந்தில் தொடர்ந்து நிலவிய குளிர் அதிகமான காலநிலை கோதுமை, ஓட்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்களை அழித்து பஞ்சத்திற்கு வழிவகுத்தது. கோடை இல்லாத ஆண்டில் மலேரியா மற்றும் டைபஸ் நோய் பரவலும் உண்டானதால் அங்கு 40,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தோனேஷியாவிற்கு வெகு தொலைவில் இருந்த பல நாடுகளிலும் வளிமண்டலத்தில் இருந்த வெடிப்புத் தூசியால் செம்பொன் நிற சூரியஸ்தமனங்கள் ஏற்பட்டன.
சூரிய உதயத்தை காணக் காத்திருக்கும் பெண்ணின் சித்திரங்கள் காஸ்பர் டேவிட் பிரெட்ரிக் உள்ளிட்ட பல கலைஞர்களால் அப்போது வரையப்பட்டன.
1816 -ம் ஆண்டு ஜூன் நடுப்பகுதியில் கடுங்குளிரினால் மேரி, பெர்சி ஷெல்லி, கவி பைரன் மற்றும் மற்ற இரு நண்பர்கள் சுவிட்சர்லாந்தில் சிக்கிக்கொண்டனர். அப்போது நேரம் போக்குவதற்காக பைரன் ஒவ்வொருவரும் ஒரு படைப்பை எழுதலாம் எனப் பரிந்துரைத்தார், அதுவே மேரி ஷெல்லி பிராங்கன்ஸ்டீனை உருவாக்கவும் பைரன் டார்க்னஸ் என்னும் புகழ்பெற்ற துன்பியல் கவிதையை எழுதவும் காரணமாக அமைந்தது.
ஜெ.எம்.டபிள்யு டர்னரின் அக்காலத்தைய ஓவியங்களில் சிவப்பு நிறம் அதிகமாக இருந்தது.
தாம்போரா மலை வெடிப்பு இந்தியத் துணைக் கண்டத்திற்கு கிழக்கே உள்ள வங்காள விரிகுடாவின் சுற்றுச்சூழல் நிலைமைகளையும் சூழலியலையும் பாதித்தது, இதனால் வங்காளத்தில் காலராத் தொற்று ஏற்பட்டது. இந்த நோய் விரைவாகப் பரவி, 1823 வரை நீடித்த உலகளாவிய தொற்றுநோயில் பல கோடி மக்கள் உயிரிழந்தனர். சென்னையில் கடும் கோடையில் மழைப்பொழிவும் பனியும் உண்டானது.
கிழக்கு ஆசியா முழுவதிலும் பருவமழைக் காலம் பாதிக்கப்பட்டது. சீனாவின் யுனான் மாகாணத்தில் விளைச்சல் காலம் முழுவதும் வெள்ளம் மற்றும் குளிர்ந்த வானிலை நிலவியதால் 1815-1818 வரை மூன்று ஆண்டுகள் கொடிய பஞ்சம் நிலவியது.
யுனான் பஞ்சத்திற்குப் பிறகு, பணப்பயிர்கள் அழிந்ததால் பல உள்ளூர் விவசாயிகள் பாப்பிச்செடிகளை விளைவிக்கத் தொடங்கினர். பின்னர் யுனான் மாகாணம் உலகின் முக்கிய அபின் உற்பத்தி செய்யும் பகுதியாக மாறியது.
தாம்போரா மலை வெடிப்பு வட அமெரிக்கக் கண்டத்தில் வறட்சியை ஏற்படுத்தியது, அதனால் அட்லாண்டிக் பெருங்கடலில் நுழைந்த நன்னீரின் அளவு குறைந்தது. இது நீரின் உப்புத்தன்மையால் இயக்கப்படும் கடலோட்டங்களை பாதித்தது, இதனால் வடக்கு பெருங்கடல் தற்காலிகமாக சூடாகி அட்லாண்டிக் பெருங்கடல் குளிர்ந்தது.
பயிர்கள் முற்றிலும் அழிந்ததால் சுவிட்சர்லாந்தில் உண்பதற்கு பூனை இறைச்சி மட்டுமே எஞ்சியிருந்தது,
நெப்போலியன் போர்கள் முடிவுக்கு வந்திருந்த காலத்தில் உண்டான தம்போரா வெடிப்பு ஐரோப்பாவில் பெரும் அழிவை ஏற்படுத்தியது. ஆண்டுக்கணக்காக தொடர்ந்த கடும் குளிர், பெருமழைக்காலங்கள் மற்றும் பனியினால் ஐரோப்பாவில் கோதுமை, ஓட்ஸ், புல்லரிசி விளைச்சல் முழுவதும் இல்லாமல் போய் பட்டினியும் கலவரமும் கொள்ளைகளும் நடந்தன. உணவின்றி ஏராளமான கால்நடைகளும் மடிந்தன. லட்சக்கணக்கானோர் நாடுவிட்டு உணவுக்காகவும் உயிர் வாழ்வதற்காகவும் புலம்பெயர்ந்தார்கள். பலர் தங்களைத்தாங்களே அடிமைகளாக விற்றனர். இந்த நிலைமை 1819 வரை தொடர்ந்தது.
இந்த நிகழ்வு உலக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்ததோடு உணவு உற்பத்தி முறைகளில், சமூக அமைப்புகளில் மாற்றமேற்படுத்தி இலக்கிய மற்றும் கலை வெளிப்பாடுகளிலும் தாக்கம் உண்டாக்கியது. தம்போரா வெடிப்புச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் மீது மிக ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது.
எரிமலை வெடிப்பினால் உண்டான மிக நேரடியான விவசாய நெருக்கடிக்கு வரலாறு 1816-ன் கோடையில்லா ஆண்டை உருவாக்கிய தம்போரா வெடிப்பையே உதரணமாகக் காட்டுகிறது.
தொடர்ந்த ஆண்டுகளில் இந்த நெருக்கடியினால் உண்டான உணவுப் பாதுகாப்பின்மையை களையும் பொருட்டு ஐரோப்பா முழுவதும் விவசாய வழிமுறைகள் மேம்படுத்தப்பட்டு பல புதிய முன்னெடுப்புகளும் மசோதாக்களும் உருவாகின.
அச்சமயத்தில்தான் ஐரோப்பாவில் குப்பை மட்குரமான ஹ்யூமஸ் மண் வளத்தை அதிகப்படுத்துவதை கண்டறிந்து அது தொடர்பான ஆராய்ச்சிகள் துரிதப்படுத்தப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பா முழுவதும் வேளாண் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டு மண்வளத்தை, பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கச் செய்யும் ஆய்வுகள் தீவிரப்படுத்தப் பட்டன,
19-ம் நூற்றாண்டில் குப்பை மட்குரமான ஹ்யூமஸ் என்னும் சொல் ஐரோப்பாவெங்கும் மிக அதிகமாக புழங்கியதற்கு தம்போரா உருவாக்கிய பேரழிவு ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது.
“Humus” என்னும் கிரேக்க வேர்களைக்கொண்ட லத்தீனச்சொல்லுக்கு பூமி, நிலம், மண் எனப் பலபொருட்கள் உள்ளன. மனிதர்கள், மண்ணில் வாழ்கிறவர்கள் என்னும் பொருள் கொண்ட இந்திய ஐரோப்பிய வேர்களைக் கொண்டிருக்கும் “Homo” என்பதுவும் இதனோடு இணைந்த சொல்தான்.
மண்ணிலிருந்து தோண்டி எடுத்தல் என்பதைக் குறிக்கும் Exhume மற்றும் மண்ணில் புதைக்கப்பட்ட பிற்பாடு என்பதைக் குறிக்கும் Posthumous ஆகிய சொற்களும் ஹ்யூமஸுடன் இணைந்தவைகளே.
18-ம் நூற்றாண்டின் இறுதியில் நிலத்தில் இருக்கும் தாவர மற்றும் விலங்குப் பொருட்களின் சிதைவால் உருவான, ஊட்டச்சத்துக்களும் நுண்ணுயிரிகளும் நிறைந்த, மண்ணில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் மண்ணில் உள்ள கரிமப் பொருளுக்க மட்கு, மட்குரம், குப்பைமட்குரம் என்பவற்றைக் குறிக்கும் “Humus” என்ற ஆங்கிலப் பெயர் 18-ம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகி 1790-களில் விவசாய மற்றும் தாவரவியல் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள், நூல்களில் இடம்பெற்றது.
எனினும் மட்குரங்களினால் மண்வளம் மேம்படுத்தப்படுவதில் தீவிரமான ஆய்வுகள் தம்போரா வெடிப்பிற்குப் பிறகான உணவுப் பற்றாக்குறையின் போது ஐரோப்பா முழுக்க நடைபெற்றபோதுதான் Humus என்னும் சொல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது.
பண்டைய மெசபடோமிய, எகிப்திய சீன, மற்றும் இந்திய வேளாண் நாகரிகங்கள் சாணம், மற்றும் தாவரக் கழிவுகளைச் சேர்ப்பதால் பயிர் விளைச்சல் மேம்படுகிறது என்பதை அறிந்திருந்தனர்.
ஹ்யூமஸ் என்கிற மட்குரத்தின் வேதியியல் குறித்து அவர்கள் அறியாவிட்டாலும், மண் வளத்தைப் பராமரிக்க கழிவுகளைச் சேர்த்தல் மற்றும் பயிர் சுழற்சி ஆகியவற்றை நடைமுறைப்படுத்தினர்.
ரோமானிய எழுத்தாளர்களான கொலுமெல்லா மற்றும் பிளினி ஆகியோர் சாணம் மற்றும் சாம்பல் மூலம் மண்ணை வளப்படுத்தும் முறைகளைப் பற்றி எழுதினர்.
5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்திய வேளாண்மை, இயற்கையாக மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை வலியுறுத்தியது.
சுரபாலரால் எழுதப்பட்ட விருக்ஷாயுர்வேதம், கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், 12-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட அபிலா சிதார்த்த சிந்தாமணி என்கிற மனஸோல்லாசா போன்ற பண்டைய இந்திய நூல்கள் உரம், தாவரக் கழிவுகள் மற்றும் கழிவுகளை உரமாக்கும் முறையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டன.
சீன விவசாயிகள் பசுந்தாள் உரமிடும் முறையைப் பின்பற்றினர். ரோமானியர்கள் விலங்குச் சாணத்தையும், மூடுபயிர்களையும் பயன்படுத்தி மண் வளத்தை அதிகரிக்கலாம் என அறிந்திருந்தனர்.
இடைக்காலத்தில் பொதுமக்களின் அறிவுக்கு எட்டாத வகையில் மடாலயங்களில் மட்டும் மேம்படுத்தபட்ட வேளாண் அறிவு பாதுகாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
விவசாய நிலங்களில் மண்ணை வளமாக்கும் கழிவுப்பொருட்கள் திரட்டப்பட்டன என்றாலும் அதற்கான அறிவியல் புரிதல் அப்போது குறைவாக இருந்தது.
அக்காலகட்டத்தில் இந்தியாவில் விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். மண் பராமரிப்பு என்பது வாய்வழியாகவும் விவசாயிகளின் அனுபவ அறிவு மூலமாகவும் கடத்தப்பட்டது. பயிர்களின் விளைச்சல் மற்றும் வருவாயைப் பராமரிக்க விவசாயிகளை மன்னர்கள் மற்றும் ஜமீந்தார்கள் ஊக்குவித்தனர்.
கிருஷி-பராசரா போன்ற பிராந்தியக் கையேடுகள் மற்றும் கட்டுரைகள் இந்திய வேளாண்மையில் இயற்கை வேளாண் முறைகளை வலியுறுத்தின.
பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் (1757–1947) பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வணிக ஒற்றைப் பயிர்களான அவுரி, பருத்தி, தேயிலை ஆகியவற்றை அறிமுகப்படுத்தினர்.
அப்போது இந்திய வேளாண் முறை பாரம்பரிய உயிரியல் முறையிலிருந்து விலகி, ரசாயனங்கள் உபயோகிக்கப்பட்டு பல பகுதிகளில் மண் சோர்வுக்கு வழிவகுத்தது.
அச்சமயத்தில்தான் இந்தியாவில் பணியாற்றிய ஆங்கில தாவரவியலாளர் சர் ஆல்பர்ட் ஹோவர்ட் கழிவுகளை உரமாக்கி மண் வளத்தை அதிகப்படுத்துதலுக்கு முன்னுரிமை அளித்து மண் வளத்தைக்காக்கும் ஆய்வுகளை முன்னெடுத்தார்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலமான 1947–1980களில் பசுமைப் புரட்சி உருவாகி ரசாயன உரங்களையும் அதிக விளைச்சல் அளிக்கும் கலப்பின பயிர்களையும் அறிமுகப்படுத்தியது.
இந்திய வேளாண்மையின் கவனம் செயற்கை உரங்களின் பயன்பாட்டுக்கு மாறியதால் மட்குரம் மற்றும் உயிரி உரங்களில் இருந்து கவனம் குறைந்தது.
அதிக அளவிலான ரசாயன வேளாண்மை,மண் கரிம கார்பன் குறைப்பு,மண் சிதைவு மற்றும் பாரம்பரிய வேளாண் அறிவின் இழப்புக்கு வழிவகுத்தது. விளைவாக வேளாண் உற்பத்தித்திறன் அதிகரித்தாலும், நீண்டகால மண் ஆரோக்கியம் மற்றும் பல்லாண்டுகளாக உருவாகி வந்த குப்பை மட்குரத்தின் அளவு வெகுவாகக் குறைந்தது.
1990 களில் இருந்து தற்போதைய நவீன வேளாண் காலம் வரை சுபாஷ் பாலேகர் மற்றும் நம்மாழ்வார் போன்றோரால் உயிரியல் வேளாண்மை, இயற்கை வேளாண்மை முறைகள் மீட்டெடுக்கும் முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன
அறிவியல் புரட்சி நிகழ்ந்த 17ம்-18ம் நூற்றாண்டுகளில்தான் “ஹியூமஸ்” என்ற சொல் இலத்தீன் மொழியிலிருந்து வந்தது.
1761-ல் வாலேரியஸ் ஹ்யூமஸ் என்கிற குப்பை மட்குரத்தை மண்ணின் ஒரு அங்கமாக அல்லாது மண்ணின் தனித கூறாக அங்கீகரித்தார். இவர் ஹ்யூமஸை “சிதைந்த இயற்கைக்கரிமப் பொருள்” என்று வரையறுத்தார். ஆனால் அந்த நேரத்தில் ஹ்யூமஸின் வேதியியல் தன்மை பற்றிய அறிதல்கள் தெளிவற்று இருந்தன. இருப்பினும், வாலேரியஸின் பங்களிப்பு பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் இறுதியில் வளர்ந்து வந்த அறிவியல் முறைகளால் சோதிக்கக்கூடிய கருதுகோள்களை வழங்கியது.
18-ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஜெத்ரோ துல் (1674 –1741,) மண் தாவர வளர்ச்சிக்கு ஒரு ஊடகம் மட்டுமே, தாவரங்கள் நீரில் கரைந்த ஊட்டச்சத்துக்களை மட்டுமே உறிஞ்சுகின்றன என்று அறிவித்து ஹ்யூமஸின் பங்கை குறைத்து மதிப்பிட்டார்.
ஜெர்மனியைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி ஆல்பிரெக்ட் தேயர் (1752-1828) ஹ்யூமஸை மண்வளத்திற்கான முதன்மை ஆதாரமாக மீண்டும் வலியுறுத்தினார், ஹ்யூமஸ்தான் தாவர ஊட்டச்சத்தின் முதன்மை ஆதாரம் என்று வலியுறுத்தினார். இதுவே “ஹ்யூமஸ் கருதுகோள்” என்று அழைக்கப்பட்டது.1809-ல் மட்குரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘’புத்திசாலித்தனமான வேளாண்மையின் கோட்பாடுகள்’’ என்ற நூலையும் அவர் வெளியிட்டார்.
இந்த கருதுகோள் அதிக கரிமப் பொருள் இருப்பு மற்றும் அதிக மண் வளம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளுக்கான விளக்கத்தை உருவாக்கிய ஆரம்ப முயற்சியாகப் பார்க்கப்பட்டது.
தொடர்ந்த ஆண்டுகளில் ஹ்யூமஸின் கார்பன், தாவரங்களுக்கு முக்கியமான கார்பன் ஆதாரம் என்று அறியப்பட்டது, ஜெர்மானியத் தாவரவியலாளர் ஸ்ப்ரெங்கல் (1787–1859) 1826-ல் ஹ்யூமஸில் உள்ள கரையக்கூடிய உப்புகள்தான் உண்மையான ஊட்டச்சத்துக்கள் என்பதை நிரூபித்தார்
19-ம் நூற்றாண்டின் மத்தியில் ஹ்யூமஸ் கோட்பாடு மீண்டும் வீழ்ச்சியடைந்தது.
வேளாண்மையில் ரசாயன புரட்சி உண்டான இக்காலகட்டத்தில் ஜெர்மன் வேதியியலாளர் ஜஸ்டஸ் வான் லீபிக் (1803 – 1873) 1840 களில் மண் அறிவியலை புரட்சிகரமாக மாற்றினார். இவர் தாவரங்கள் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவற்றைப் போல் மண்ணிலிருந்து நேரடியாக ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகின்றன, ஹ்யூமஸிலிருந்து நேரடியாக அல்ல என்பதை நிரூபித்தார். இவரே நவீன வேளாண் வேதியியலுக்கான அடித்தளத்தை அமைத்தார்.
இவர் ஹ்யூமஸ் மண்ணின் இயல்புகளை மேம்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்துக்களைத் தக்கவைக்கிறது என்பதை நிரூபித்தார், ஆனால் அது நேரடியாக தாவர உணவல்ல என்பதையும் காட்டினார்.
இவரது ஆய்வு முடிவுகள் வேதியியல் உரங்களின் மீது கவனம் செலுத்த வழிவகுத்தது, ஆனால் மண் ஆரோக்கியத்திற்கு ஹ்யூமஸ் முக்கியமானதாக இருந்ததென்பதை அவர் மறுக்கவில்லை.
அவரது ஆய்வுகள் ஹ்யூமஸ்:
- மண்ணின் பல்வேறு இயல்புகளை மேம்படுத்துகிறது
- நீர் தக்கவைப்பை அதிகரிக்கிறது
- மண் pH ஐ சமநிலைப்படுத்துகிறது
- நுண்ணுயிர் செயல்பாட்டை ஆதரிக்கிறது என்பதை நிறுவின.
இவரது ஆய்வு முடிவுகள் பெருமளவில் வேளாண் மாற்றங்கள் உருவாக்கி, செயற்கை உரங்களின் வளர்ச்சி மற்றும் பரவலான பயன்பாட்டுக்கு வழிவகுத்ததால், வேளாண்மை உயிரியல் முறைகளிலிருந்து விலகி ரசாயன அடிப்படியிலானது. பயிர் விளைச்சல் அதிகரித்தது, ஆனால் நீண்டகால அதிகபட்ச ரசாயனப் பயன்பாடு மண் சிதைவுக்கு வழிவகுத்தது.
19-ம் நூற்றாண்டின் இறுதிகளில் ரஷ்ய புவியியலாளரும் மண் அறிவியலின் அடித்தளங்களை அமைத்த பெருமைக்குரியவருமான வாசிலி வாசிலியேவிச் டோகுசேவ் (1846–1903) தீவிரமான களப்பணிகளுக்குப் பின்னர் மண்ணை வகைப்படுத்தினார். இவரது பங்களிப்பு மண் உயிரியல் ஆய்வுகளில் மிக முக்கியமானதாக இருந்தது
அதே காலகட்டத்தில் அமெரிக்க நவீன மண் அறிவியலின் தந்தையான யூஜின் வோல்ட்மர் ஹில்கார்ட் (1833 – 1916) தனது மண் வளம் குறித்த விரிவான ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். மண் வேதியியலில் இவரது பங்களிப்பு உலகளாவிய கவனம் பெற்றது.
இவற்றைப்போன்ற 20- ம் நூற்றாண்டின் மண் நுண்ணுயிரியல் ஆராய்ச்சிகள் ஹ்யூமஸின் பங்களிப்பை மறுமதிப்பீடு செய்தன. ஹ்யூமஸ் நேரடி தாவர உணவல்ல என்றாலும் மண்ணின் இயல்புகளை மேம்படுத்துதல், ஈரப்பதத்தைத் தக்கவைத்தல், நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளுக்கு உணவளித்தல் ஆகிய மிக முக்க்கியமானவற்றைச் செய்கிறது என்பது கண்டறியப்பட்டது.
மண் நுண்ணுயிரிகளின் கண்டுபிடிப்பு ஹ்யூமஸ் எவ்வாறு ஆரோக்கியமான மண் சூழலமைப்பை உருவாக்குகிறது என்பதை வெளிப்படுத்தியது.
1950 களின் நடுப்பகுதியில் சர் ஆல்பர்ட் ஹோவர்ட் உள்ளிட்டவர்களால் தலைமை தாங்கப்பட்ட உயிரியல் வேளாண்மை இயக்கத்தினால் கழிவுகளை உரமாக்கல், குப்பைமட்குரம், மற்றும் இயற்கை மண் வளம் ஆகியவற்றின் மீதான ஆர்வம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
20- நூற்றாண்டின் இறுதிகளில் யூத அமெரிக்க கண்டுபிடிப்பாளர், உயிர்வேதியியளாலர், மற்றும் நுண்ணுயிரியலாளரான செல்மன் ஆபிரகாம் வாக்ஸ்மேன் (Selman Waksman) (1888-1973) மண்ணில் வாழும் உயிரினங்களின் சிதைவு குறித்த ஆராய்ச்சியின் போது ஸ்ட்ரெப்டோமைசின் உள்ளிட்ட பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கண்டுபிடித்தார். இவரே “மண் நுண்ணுயிரியல்” என்ற சொல்லை உருவாக்கினார், இவரது ஆய்வு மட்குரங்கள் மண் வளத்தில் உண்டாக்கும் தாக்கம் பற்றிய பெரும் புரிதலை அளித்தது.
ஆங்கிலேய தாவரவியலாலரும் இயற்கை வேளாண்மையின் தந்தை எனக் கருதப்படுபவருமான சர் ஆல்பெர்ட் ஹோவர்ட் (1873 – 1947) இந்திய விவசாயிகளுடன் தங்கி இருந்து மட்குரம் குறித்த பல ஆய்வுகளின் கண்டுபிடிப்புக்களை வெளியிட்டார், அவர் இந்திய பயிர் நோயியலில் பெரும் பங்காற்றினார்.
மட்குரங்களால் மண்வளம் பெருகுவதை நிரூபித்தவர்களில் இவர் மிக முக்கியமானவர். இந்தியாவின் மத்திய பிரதேச, இந்தூரில் உள்ள பாரம்பரிய இந்திய வேளாண் முறைகளை ஆய்வு செய்தார். இந்தூர் கழிவுகளை உரமாக்கும் முறையை உருவாக்கினார்.ஆரோக்கியமான மண்ணுக்கு ஹ்யூமஸ் கட்டுமானம் அவசியம் என்று வலியுறுத்தினார். “அன் அக்ரிகல்சரல் டெஸ்டமெண்ட்” (1940) என்ற நூலை எழுதி உலகளாவிய உயிரியல் வேளாண்மையை வலியுறுத்தினார்.
இதன் விளைவாக இந்திய பாரம்பரியக் கழிவுகளை உரமாக்கும் முறைகள் உலகளாவிய நவீன மட்குரத்தின் அடிப்படையிலான உயிரியல் வேளாண்மைக்கு பங்களித்தது. இக்காலகட்டதுக்குப் பிறகே உயிரியல் வேளாண்மை பிரபலமடைந்து மண் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
21-ம் நூற்றாண்டின் சுற்றுச்சூழல் நெறிமுறைகள், நீடித்த வேளாண்மை, காலநிலை எதிர்ப்புத்திறன், மற்றும் கார்பன் சேமிப்பிற்கு குப்பை மட்குரம் மிக அவசியம் எனக் கருதுகிறது.
நவீன மண் அறிவியல் ஹ்யூமஸை மண் நுண்ணுயிரியல், கார்பன் சுழற்சி, மற்றும் காலநிலையோடு இணைந்து செயல்படும் வேளாண்மைக்கு அத்தியாவசியம் என்கிறது
நிலத்தின் மேற்பரப்பில் தான் இந்த மட்குதல் என்னும் செயல் நுண்ணுயிரிகளால் நடைபெறுகிறது. குப்பை மட்குரமான ஹ்யூமஸ் உருவாகும் நிகழ்வு ஹ்யூமிஃபிகேஷன் (Humification) எனப்படுகிறது
ஹ்யூமிஃபிகேஷன் என்பது இறந்த உடல்கள் அழுகி மட்குதல் என்னும் செயல்பாட்டின் (decomposition) ஒரு பகுதியாகும். இது மண்ணில் உள்ள உயிரினங்களின் சடலங்கள் மற்றும் செடியின் கழிவுகள் மண்ணில் விழுந்து அழிந்தபின்பு நிகழும் ஒரு முக்கியமான நிலை.
ஹ்யூமிஃபிகேஷன் செயல்முறை:
- முதலில், செடி மற்றும் விலங்குகளின் சடலங்கள் மண்ணில் விழுகின்றன.
- இவைகள் பாக்டீரியா, பூஞ்சைகள் போன்ற சிதைக்கும் நுண்ணுயிரிகளின் (decomposers) மூலம் சீரான முறையில் நொறுக்கப்படுகின்றன.
- இதனால், கார்பன், நைட்ரஜன் போன்ற மூலக்கூறுகள் சிதைவடைகின்றன.
- இதன் பின், மிகக் குறைவாக முற்றிலும் சிதைவடையாத கழிவுகள் மண்ணிலேயே இருந்து விடுகின்றன – இதுவே ஹ்யூமஸ் எனப்படும் குப்பை மட்குரமாகிறது.
ஹ்யூமஸ் என்பது கருமை நிறமுடைய, நைட்ரஜனும் கார்பனும் நிறைந்த ஒரு சீரான இணைபொருள். இது மண்ணின், காற்றோட்டம், ஈரப்பதம், நீரைத் தக்கவைத்துக்கொள்ளும் இயல்பு மற்றும் வளத்தை மேம்படுத்துகிறது. ஹ்யூமிஃபிகேஷன் மிக மெதுவாக நடக்கும் ஒரு இயற்கை செயல்முறை ஆகும், மட்குரம் உருவாக பல ஆண்டுகளாகும்.
அனைத்து குப்பை மட்குரங்களும் ஒன்று போல் இல்லை. மண் அறிவியலில், மட்குரங்கள் மண்ணில் அது நீடித்திருக்கும் காலத்தின் அடிப்படையில் இரண்டாக வேறுபடுத்தப்படுகிறது.
- ஊட்டச்சத்து மட்குரம் என்பது மண் உயிரினங்களால் விரைவாக நுகரப்படும் உயிரியல் பொருட்களைக் கொண்டுள்ளது.
- மாறாக, நிரந்தர மட்குரம் என்பது உடைக்கப்படுவதற்கு கடினமான ஹியூமிக் பொருட்களால் ஆனது, இது மெதுவாக அழிக்கப்பட்டு மண்ணில் நீண்ட காலம் தங்கி இருக்கிறது. இந்த மட்குரம்தான் ஊட்டச்சத்துக்களையும் நீரையும் பிணைத்து வைத்து, வளமான மட்குர மண்ணின் உயிரியல் கட்டமைப்பின் சுமார் 90 சதவீதத்தை உருவாக்குகிறது.
நிரந்தர மட்குரம் நிறைந்த மண் ’களிமண்-மட்குரம்’ தொகுப்புகளால் செழித்துக் காணப்படுகிறது. மட்குரப் பொருட்கள் மற்றும் களிமண் தாதுக்களுக்கு இடையேயான பிணைப்பானது மண் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டால் உருவாக்கப்படுகிறது.
நிரந்தர மட்குரம் தாவரங்களின் வேர்களுக்கருகே எப்போதும் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை கிடைக்கச் செய்கிறது. குப்பை மட்குரம் இல்லாத மண்ணில், இந்த தொகுப்புகள் பெரும்பாலும் இல்லை. எனவே உரமிடல் மூலம் மண்ணுக்கு சேர்க்கப்படும் ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் தாவரங்களால் பயன்படுத்தப்படாமல் நீர்மட்டத்தில் இறங்குகின்றன, இதனால் தாவரங்கள் பலவீனமடைந்து நோய்க்கு ஆட்படுகின்றன.
பூமியின் மேற்பரப்பில் கிடைக்கக்கூடிய 4-12 அங்குல குப்பை மட்குரம் கொண்ட மண் எனும் விலைமதிப்பற்ற வளம் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டி இருக்கிறது.
ஒவ்வொரு தாவரமும் மண்ணில் வளர்ந்து பின்னர் அறுவடை செய்யப்படுகையில் மண் கணிசமான அளவில் ஊட்டச்சத்துக்களையும் மட்குரத்தையும் இழக்கிறது. காடுகள் மட்டுமே தங்கள் நுகர்வை விட அதிக மட்குரத்தை உருவாக்க முடியும். மற்ற அனைத்து மண்ணும் தொடர்ந்து மட்குரத்தை இழக்கிறது.
உலகெங்கிலும் உள்ள விளைநிலங்களில் ஏற்கனவே மட்குரம் குறைவாக உள்ளது, அதாவது குறைந்த 1 முதல் 2 சதவீதம் அல்லது மிகக் குறைந்த < 1 சதவீதம்.
எனவே, நமது விளைநிலங்களில் இருக்கும் மட்குரத்தை பாதுகாப்பது மட்டும் போதாது. உலகளாவிய மட்குர அளவுகளை அதிகரிக்கக் கூடிய வகையில் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றால், மட்குர மேலாண்மை மற்றும் மண்ணின் உயிரியல் அமைப்பு பற்றிய ஆழமான புரிதல் தேவைப்படுகிறது.
விளைநிலங்களில் மட்குரத்தை பெறுவதற்கான எளிய முறை உயிரியல் கழிவுகளை திரட்டிச்சேகரிப்பது, ஊடு பயிர்கள் மற்றும் துணைப் பயிர்களின் பயிரிடல், உயிரி உரங்களின் சீரான விநியோகம் மற்றும் நிலத்தைத் தரிசாக விடுவதை தவிர்த்தல் ஆகியவை அடங்கும். நிரந்தர மட்குர உருவாக்கத்தில் ஹ்யூமிக் அமிலங்களைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்க பயனை அளிக்கும்.
ஹியூமிக் அமிலங்கள் மட்குரம் நிரம்பிய மண்ணில், பீட், கடல்நீர் மற்றும் லியோனார்டைட் என்று அழைக்கப்படும் மென்மையான லிக்னைட்டில் காணப்படுகின்றன. அதிக ஆக்சிஜனேற்றம் அடைந்த லியோனார்டைட்டிலிருந்து பெறப்படும் ஹ்யூமிக் அமிலங்கள் பாரம்பரிய ஆதாரங்களிலிருந்து பெறப்படும் ஹ்யூமிக் அமிலங்களை விட ஐந்து மடங்கு அதிக உயிரியல் செயல்பாட்டைக் கொண்டுள்ளன.
மண்ணில், ஹ்யூமிக் அமிலங்கள் பயிர்களின் தாவர வளர்ச்சி மற்றும் வேர் வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலமும், விரும்பத்தக்க மண் நுண்ணுயிரிகளின் பெருக்கத்தை தூண்டுவதன் மூலமும் மட்குர உருவாக்கத்தைத் தூண்டுகின்றன. அவை தேவையான களிமண்-ஹ்யூமஸ் தொகுப்புகளின் உருவாக்கத்தை செயல்படுத்தி நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை பிணைத்து வைத்து, தேவைப்படும்போது தாவரங்களுக்கு அளிக்கின்றன.
மண்ணில் ஒரு சதவீதம் மட்குர அதிகரிப்பு ஒரு ஹெக்டேருக்கு 170,000 லிட்டர் அதிக நீர்த் தக்கவைப்புத் திறனை வழங்குகிறது, இது வறட்சி எதிர்ப்புத்தன்மை மற்றும் நீர் பாதுகாப்பில் ஹ்யூமஸின் முக்கியமான பங்கை நிரூபிக்கிறது.
மண் கட்டமைப்பை மேம்படுத்துதல், ஊட்டச்சத்துக்களை சேமித்தல், நீர் வளங்களை நிர்வகித்தல், கார்பனை தக்கவைத்தல், மற்றும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளுக்கான வாழ்விடமாக செயல்படுவது- ஆகிய ஐந்து முக்கிய செயல்பாடுகள் மூலம் ஹ்யூமஸ் வேளாண்மையில் மிக முக்கியப்பங்காற்றுகிறது
கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நாம் ஹியூமஸின் இருபங்கை இழந்திருப்பது வேளாண்மை நடைமுறைகளை மறுகட்டமைப்புச் செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
வேளாண் அறிவியல் ஹ்யூமஸின் சிக்கலான மூலக்கூறு கட்டமைப்புகள் மற்றும் தொடர்புகள் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றாலும் நமது உணவுப்பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது என்னும் உண்மை நம் முன்னே தெளிவாக உள்ளது.
குப்பை மட்குரத்தின் முக்கியத்துவம் வெறும் மண் சேர்ப்புப் பொருள் என்பதற்கும் அப்பால் நீண்டு விரிகிறது, மீட்டெடுக்கப்பட்டிருக்கும் பாரம்பரிய வேளாண் முறைகளும் புதிய ஆராய்ச்சிகளும் ஹ்யூமஸ் நிறைந்த மண்ணை உருவாக்கி வேளாண் உற்பத்தித்திறனை மாற்றுவதற்கான அற்புதமான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தியுள்ளன.
எதிர்காலத்தில் உலக உணவுப்பாதுகாப்பு பெரும் அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும். மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும் விளைநிலப்பற்றாக்குறையாலும் உணவுக்கான தேவை அதிகரிப்பது, முக்கிய வேளாண் பகுதிகளில் நீர்வள மூலங்கள் குறைதல், மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக கடுமையான வானிலை மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இவை அனைத்தும் இந்த அழுத்தங்களுக்கு காரணமாக இருக்கும்.
இந்த சவால்களை எதிர்கொள்ள பல வழிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன, அவற்றில் செயல்திறன் குறைந்த நிலங்களில் பயிர் விளைச்சலை அதிகரிப்பதும், வேளாண் வளங்களின் பயன்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவதும் (அதாவது நீர், உரம் மற்றும் உயிரிப் பூச்சிக்கொல்லிகள்), உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றுவதும், உணவுக்கழிவுகளைக் குறைப்பதும் அடங்கும் இந்த வழிமுறைகள் பயனுள்ளவை என்றாலும், உலக உணவுப்பாதுகாப்பில் ஏற்படும் பாதிப்புக்கு இவை நேரடியாக தீர்வு காணவில்லை.
எனவே மண்ணில் உள்ள ஹ்யூமஸினால் மேம்படும் மண்ணின் வளமென்பது தொடர்ந்து நீடிக்கக்கூடிய மற்றும் உறுதியான வேளாண் அமைப்புகளுக்கான அடித்தளமாக இருக்கிறது.
வேளாண் அறிவியல் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ந்து வரும்போதும் மேம்படுத்தப்படும்போதும், ஹ்யூமஸ் வேளாண்மையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மேலும் முக்கியமான பங்கு வகிக்கும். இதன் பொருட்டு ஹியூமஸ் மேலாண்மை உத்திகளில் ஆய்வுகள் தொடர வேண்டியது மிக முக்கியமான தேவையாயிருக்கிறது.
ஹ்யூமஸ் நிறைந்த மண்ணின் மூலம் நாம் நிலத்தின் வளமையை மட்டும் மேம்படுத்தவில்லை உணவுப் பாதுகாப்பிற்கான நாளைய சவால்களை சமாளித்து, எதிர்கால தலைமுறைகளுக்கான சுற்றுச்சூழல் வளங்களைப் பாதுகாத்து, நீடித்த உணவு உற்பத்திக்கான அடித்தளத்தையும் கட்டியெழுப்புகிறோம்.
(தாம்போரா இன்னும் உயிருடன் இருக்கிறது. அதன் கடைசி வெடிப்பு 1967-ல் நிகழ்ந்தது, 2011, 2012 மற்றும் 2013 களில் தம்போரா மெல்ல உறுமியபடி கசிவுகளையும் வாயுக்களையும் வெளியேற்றியது)