குரலற்றவைகளின் குரல்

“மனித இனம் ஒரு நோய். இந்த பூமியைப் பீடித்திருக்கும் வைரஸ் கிருமி” – -ஏஜண்ட் ஸ்மித்.

மேட்ரிக்ஸ் திரைப்படத்தில் வரும் செயற்கை நுண்ணறிவு ஏஜெண்ட் இதைச் சொல்லும்போது யாருக்கும் கோபம் வரவில்லை. அந்த வசனகர்த்தாவின் வீட்டைத் தேடிச் சென்று யாரும் சாணி அடிக்கவில்லை. ஏனென்றால் உலகில் எந்த ஒரு விலங்கும் தான் வாழும் இடத்தை நாசம் செய்து வாழவே தகுதியற்றதாக ஆக்கிச் செல்வதில்லை. மனிதர்கள்  மட்டுமே தொடர்ந்து எந்த விதமான உறுத்தலும் தயக்கமும் இல்லாமல் வாழ்வியல் கடமை போல அந்தச் செயலை செய்து கொண்டிருக்கிறோம். நம் படைப்பின் நோக்கமே குப்பைகளை உருவாக்கவும் நீர் நிலைகளைப் பாழ்படுத்தவும் காற்றை மாசுபடுத்தவும்தான்  என்பது போல பிறந்து வாழ்ந்து இறந்து கொண்டிருக்கிறோம். மனிதன் குடியேறுவதற்கு முன், குடியேறிய பின் என்று எந்த ஒரு புவிப் பகுதியை உலகில் எடுத்து ஆராய்ந்தாலும் அதன் சுற்றுச்சூழலை அடியோடு மாற்றும் அசுர பலம் மனித இனத்துக்கு இருப்பதை நாம் அறியலாம். இதை யுவல் நோவா ஹராரி சேப்பியன்ஸ் என்ற நூலில் நெடுகிலும் சொல்லிக் கொண்டே செல்கிறார். 

சென்னையில் மாரத்தான் சீசன் என்பது சற்று வெயில் தணிந்த பிறகு ஜூலை மாதத்தில் தொடங்கும். அதன் பிறகு வரிசையாக ஓட்டங்கள் நடக்கும். ஜனவரியின் முதல் ஞாயிறு நடக்கும்  சென்னை மாரத்தானோடு முடிவடையும். அதற்கான பயிற்சிகளை பெரும்பாலும் சென்னையின் மழைக்காலங்களில்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இருபது கிலோமீட்டர் அல்லது அதற்கு மேலான நீண்ட தொலைவு பயிற்சி ஓட்டங்களுக்கு அதிகாலை நான்கு மணிக்கே தொடங்க வேண்டும். வேளச்சேரியில் இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை குறுக்கும் நெடுக்குமாகப்  பிளந்து கிடக்கும் சாலைகளில் ஓடுவது வழக்கம். அந்த இருட்டில் மழைத் தூறலில் ஓடும்போது  நீங்கள் வாழ்க்கையில் எளிதில் காண முடியாத ஒரு காட்சியைக் காண்பீர்கள். நத்தைகள். லட்சக் கணக்கிலான நத்தைகள். சிறிதும் பெரிதுமாக, ரகம் ரகமாக, ஓட்டைத் தாங்கிய படி சில, ஓடுகளே இல்லாமல் சில, எதையும் பொருட்படுத்தாமல் ஓசையில்லாமல் அந்த அகன்ற சாலையைக் கடக்க முயன்று ஓடுபவர்கள், நடப்பவர்களின் விலை உயர்ந்த காலணிகளின் அடிப்பாகத்தில் சிக்கி சட்னியாகிக் கொண்டிருக்கும். 

பள்ளிக்கரணை தாண்டிய நன்மங்கலத்தில் ஒரு வனப்பகுதி இருக்கிறது. ஒரு முறை அதை சுற்றிக் காட்டிய தன்னார்வலர் சென்னையின் வண்டலூர் தொடங்கி ராஜ்பவன் வரையிலான வனங்களும் அவை நடுவிலே இருக்கும் சதுப்பு நிலங்களும் ஒரு காலத்தில் இணைக்கப்பட்ட ஒரே வனமாக இருந்தன என்று சொன்னார். ஒரு காலத்தில் இங்கே வேங்கைப் புலிகளும் கூட கூட்டமாக  வாழ்ந்திருக்கின்றன. இப்போது இந்தப் பெரிய வனங்கள் மாநகரத்தின் நடுவே துண்டு துண்டாகத் தேங்கிவிட்டன. ஒரு பெரிய வேட்டை விலங்குக்கான உணவு உருவாக வனத்தின் பரப்பளவு ஒரு முக்கியமான காரணி. சிறிய வனத்தில் கைக்கு அடக்கமான சிறிய விலங்குகள், பழம் உண்ணும் பறவைகள் மட்டுமே தப்பிப் பிழைக்கும். அரிதாகப் பெரு விலங்குகள் தட்டுப்படும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சாலையில் அடிபட்டுக் கிடந்த பெரிய காட்டுப் பூனையை நானே பார்த்து ஓரமாக இழுத்துப் போட்டிருக்கிறேன். சிறுத்தையின் அளவில் பாதி இருந்தது. கூர்மையான காதுகள். சதுப்பு நிலப் பறவைகளை வேட்டையாடி வாழ்ந்து வந்திருக்கலாம். ஆனால் இந்த நிகழ்வெல்லாம் வெகு அரிது. 

முதலில் மனிதன் காட்டின் வழியே செல்லும் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து நடக்கிறான். அது மாடுகள் போன்ற எடை மிகுந்த தாவர உண்ணிகள் நடந்து உருவாக்கிய பாதையாக இருக்கும். பிறகு மனிதன் அந்தப் பாதைகளில் மிருகங்களின் மீது ஏறிப்பயணிக்கிறான். வேகம் போதாமல் ஒரு கட்டத்தில் வாகனம் செல்லும் பாதையாக மாற்றுகிறான். அதை வளர்ச்சி என்று சொல்லிக் கொள்கிறான். வாகனங்கள் உள்ளே வந்த பிறகு அங்கிருந்து காடு வெளியேறிவிடும். இவை ஒரு கத்தியைப் போல வனங்களை வெட்டிப் பிளக்கும். நகர்ப்புறங்களில் உள்ள காடுகளில் இப்படி ஒரு சாலை உருவாகும்போது ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு வன உயிர்கள் செல்ல முடியாமல்  உணவுச் சங்கிலி சிதைவதால் இரண்டும் வெவ்வேறு தனித்த காடுகளாக மாறிவிடும். சிறிதும் பெரிதுமாக பல உயிர்கள் அழியும். 

அந்த இருநூறு அடி சாலையின் மறுபக்கத்தில் இந்த நத்தைகளுக்காக சில ஆமைகள் காத்திருக்கக் கூடும். தேவையான உணவு கிடைக்காமல் இனமழிந்து போகக் கூடும். அப்படித்தான் ஒரு காலத்தில் இங்கு சுற்றித் திரிந்த வேங்கைப் புலிகளும் அழிந்திருக்கக் கூடும்.  நம் மக்களுக்கு வனங்கள் என்றால் மலையும் மலை சார்ந்த இடங்களும்தான். மரங்கள் அடர்ந்த சிங்கம் புலிகள் வாழும் இடத்தை மட்டுமே காடுகள் என்று நம்புகிறோம். ஆனால் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 141 வகையான தாவரங்கள், 9 வகையான மெல்லுடலிகள், 50 வகை மீன்கள், 31 வகையான நீர் நில வாழ் விலங்குகள், 212 வகையான பறவைகள், 10 வகை பாலூட்டிகள் என்று எந்த ஒரு புலிகள் சரணாலயத்துக்கும் குறையாத இயற்கை வளத்துடன் இருந்திருக்கிறது. மலையில் இருக்கும் புலிகளும் யானைகளும் அழிவின் எல்லையில் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. ஆனால் புலிகளுக்கும் யானைகளுக்கும் நம் புராணக் கதைகளில் குரல்கள் கொடுத்து வைத்திருக்கிறோம். குழந்தைக் கதைகளில் கூட அவர்களோடு அவை பேசிக் கொண்டே இருக்கின்றன. 

ஆனால் இந்த நத்தைகளுக்குக் குரல்கள் இல்லை. சாலைகளில் நசுங்கும்போது கூட அவை ஓலமிடுவதில்லை. ஓடுகள் நொறுங்கும் சத்தத்தைக் கூட தன் தசைகளால் மழுங்கச் செய்துதான் அது உயிர் விடுகிறது. இந்த நன்னீர் நத்தைகள்தான் நமது நிலத்தடி நீர் மாசுபடாமல் இருப்பதற்கான அடையாளம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். நீர் நிலைகளில் மனிதனை பாதிக்கும் அளவு நச்சு உருவாக சிறிது காலம் பிடிக்கும். ஆனால் நத்தைகள் மிகவும் மென்மையான கூருணர்வு கொண்ட உயிர்கள். எப்படி புலிகளின் எண்ணிக்கை ஒரு வனத்தின்  ஆரோக்கியமோ நத்தைகளின் எண்ணிக்கை ஒரு சதுப்பு நிலத்தின் ஆரோக்கியம். அந்தவகையில் புலிகளைக் காப்பதும் நத்தைகளைக் காப்பதும் சூழலியலில்  சமமான முக்கியத்துவம் வாய்ந்தவைதான். ஆனால் புலிகளைக் காப்போம் என்று சொன்னால் கொஞ்சம் கெத்தாக இருக்கும். நாங்கள் நத்தைகளைக் காப்பாற்றினோம் என்று போஸ்டர் வைத்தால் யார் ஓட்டுப் போடுவார்கள்? சில ஆயிரம் கோடிகள் நிதி ஒதுக்குவார்கள்?

நத்தைகளுக்காக குரல் கொடுக்க இங்கே தலைவர்கள் இல்லை என்பதைத் தாண்டி அவர்கள் அந்த நத்தைகளின் வாழ்விடத்தில் தினமும் குப்பைகளைக் கொட்ட மாநகராட்சிக்கு சட்டத்தை வளைத்து அனுமதி தந்து கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக சாலையைக் கடக்காத நத்தைகளின் மீதும் டன் கணக்கில் குப்பைகள் ஒவ்வொரு நாளும் கொட்டப்படுகின்றன. பெரும்பாலான ஏரி அல்லது சதுப்பு நிலங்களை தமிழ்நாட்டில் ஆக்கிரமித்திருப்பது மாநகராட்சி, நகராட்சி போன்ற அரசு நிறுவனங்கள்தான். சிறிய குவியலாக ஒரு மூலையில் ஆரம்பித்த ஒரு குப்பைக் கிடங்கு இன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பெரும்பகுதியை நீள அகல உயரத்தில் ஆக்கிரமித்து ஒரு ஆகப் பெரும் அசுரன் போல விசுவரூபம் எடுத்து நிற்கிறது. ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதன் அருகே செல்லவே முடியாத அளவு நாற்றம் பிடுங்குகிறது. 2025ம் ஆண்டு சென்னை மாநகராட்சி பயோமைனிங் முறையில் அதை சுத்தம் செய்ய 300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அப்படியே அது சரியாக செலவளிக்கப்பட்டு குப்பைகள் முற்றாக நீக்கப்பட்டாலும் எஞ்சுவது ஒரு வறண்ட வெற்று நிலமாகத்தான் இருக்கும். பல ஆயிரம் ஆண்டுகளாக இயற்கை உருவாக்கிப் பாதுகாத்து வைத்திருந்த சதுப்பு நிலமல்ல. நத்தைகள் ஒருபோதும் அங்கே திரும்பப் போவதில்லை. 

2015ம் ஆண்டின் பெருவெள்ளம் வந்து வடிந்த பிறகு சென்னையின் தெருக்களில் இருந்து சுத்தம் செய்யப்பட்ட குப்பையின் அளவு 1.32 லட்சம் டன்கள். நாம் வீசியதைத்தான் வெள்ளம் பதிலுக்கு நமது முகத்தில் வீசியெறிந்து சென்றிருக்கிறது. சிந்தித்துப் பார்த்தால் வீட்டில், தெருவில், குப்பைத் தொட்டியில் எங்கு வீசினாலும் அந்தக் குப்பை இறுதியில் ஒரு நீர் நிலையையே அடைகிறது. இந்த நிலையில் நாம் குடிக்கும் அத்தனை நீரும் குப்பைகளால் வடிகட்டப்பட்ட நீர்தான் என்ற உண்மை கொஞ்சம் அச்சமூட்டக் கூடியது. 

இது அரசாங்கத்தின் குறை மட்டுமல்ல. குப்பைகள், குப்பைகள் குறித்து பொதுவாகவே இந்தியர்களுக்கு விழிப்புணர்வு இல்லை. அதற்கு பொது இடங்களின் சுத்தம் குறித்து வலியுறுத்தாத நமது கல்வித் திட்டங்களும் அதே கல்விப் பின்னணியில் இருந்து வந்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட காரணம். அதிலும் சென்னை மக்களுக்கு அந்த அறிவு மிகவும் குறைவு என்கிறது ஆய்வு.  2016ம் ஆண்டு WTERT (Waste-to-Energy Research and Technology Council) ஆய்வின் படி சென்னையில் ஒரு நாளில் ஒவ்வொரு தனி மனிதனும் தலைக்கு 0.71கிலோகிராம் குப்பையை வெளியிடுகிறான். இது இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களை விட அதிகம். (கல்கத்தா 0.66 kg, டெல்லி மற்றும் ஹைதராபாத் .65kg). பண வசதி அதிகரிக்க அதிகரிக்க குப்பையின் அளவும் அதிகரிக்கிறது. தினமும் குவியும் குப்பைகளை அகற்றாவிட்டால் நகரமே ஓரிரு நாட்களில் நாற்றமெடுக்கத் தொடங்கிவிடும். அடுத்த தேர்தல், கான்ட்ராக்ட், கமிஷன் என்று வரும்போது நத்தையாவது நரியாவது என்பதுதான் இன்றைய சூழல். 

சற்று நிதானமாக யோசித்தால் இந்தியர்கள் குப்பைகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்வதில் ஒரு சாதியியல் கூறும் ஒளிந்திருக்கிறது. வீசி எறிந்த அடுத்த நிமிடமே அது குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே தொடக்கூடிய அல்லது குறிப்பிட்ட சாதியினர் தொடுவதற்குத் தயங்கும் பொருளாகி விடுகிறது. குப்பைகளைக் கூட்டும் அள்ளும் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் எந்த சாதிப் பிரிவில் இருந்து வருகிறார்கள் என்பதை ஆராய்ந்தால் குப்பைகள் ஏன் ஒரு சமூகவியல் பிரச்னை என்று புரியும். குப்பைகளை அனைவரும் கூச்சமின்றித் தொட ஆரம்பித்தால்தான் அது பற்றிய விவாதங்கள் வரும். ஒன்றின் இருப்பை அங்கீகரிக்கவே தயங்கும்போதுதான் அதற்கு நாம் எந்தக் காலத்திலும் தீர்வு காணப் போவதில்லை.

குப்பைகள் உருவாவதில் ஒரு பொருளாதார அரசியலும் இருக்கிறது. அதிக குப்பைகள் உருவாவது அதிக நுகர்வின் அடையாளம். அதிக நுகர்வுதான் சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை. இங்கே பொருட்களின் வெற்றிகரமான வடிவமைப்பு அவை எத்தனை சீக்கிரம் குப்பையாக மாறும் என்பதில் ஒளிந்திருக்கிறது. மொபைல் போன் ஒரு நவீன எலக்ட்ரானிக் கருவியில் சாதாரண மனிதனால் எதையும் கழற்றி மாற்ற முடியாது. அத்தனையும் இறுக்கமாக ஒட்டி சீல் வைக்கப்பட்டிருக்கும். பழுது பார்த்தல் என்ற வார்த்தையே வழக்கொழிந்து விட்டது.  இரண்டு மெகாபிக்சல் அதிகம் கிடைக்கிறதென்று புதிய போன் வாங்குவோம். ஒரே ஆண்டில் நம் பழைய போன் குப்பையாகி விடும். அமேசான்களும் சொமேட்டோக்களும் நம் வீட்டில் வீசிச் செல்லும் பல லட்சம் டன் அட்டைப் பெட்டிகள் இருபது ஆண்டுகளுக்கு முன்பாக இல்லை. குப்பைகளைத் தொடர்ந்து  உருவாக்குவதற்காக விளம்பரங்களும், அரசுகளும், தொழிற்சாலைகளும், மனிதர்களும் இரவும் பகலும் பாடுபட்டு வரும் நிலையில் குப்பைக்கு எதிரான போர் மனிதர்களுக்கே மலைப்பான ஒன்றாகத்தான் இருக்கும். இந்த மாபெரும் போராட்டத்தில் அந்த நத்தைகளால் என்ன செய்துவிட முடியும்?

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. அந்த நத்தைகள் இந்த ஆண்டும் அடைமழைக் காலத்தில் பள்ளிக்கரணை இருநூறு அடி சாலையைக் கடந்து கொண்டுதான் இருக்கும். மனிதக் காலடிகளுக்குத் தப்பி எண்பது நூறு என்று சீறிப் பாயும் சக்கரங்களைத் தாண்டி மணிக்கு வெறும் ஒரு மீட்டர் நகரும் அந்த நத்தைகள் சாலையின் மறுபக்கத்தை அடைவது சாத்தியமே இல்லை. ஆனாலும் அந்த நத்தைகள் தன் அடுத்தடுத்த சந்ததிகளை அந்த சாலையைக் கடக்க அனுப்பிக் கொண்டே இருக்கின்றன. மனிதர்கள் வந்து அந்த இடத்தை துண்டு போடும் வரை இந்த எளிய விலங்குகள் அந்த இருநூறு அடி தூரத்தை எந்த விபத்தும் இல்லாமல் கடந்து கொண்டுதான் இருந்தன. 

நத்தைகள் செய்வதைத்தான் நாமும் செய்ய வேண்டும். இந்த உலகத்தை நாம் கண்டடைந்ததை விட சிறிதேனும் செழிப்பானதாக விட்டுச் செல்ல வேண்டியதன் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டும். முக்கியமாக நம் குழந்தைகளிடம் உரையாட வேண்டும். அவரவர் வாழ்வில் அதற்கான ஒழுக்கங்களைப் பின்பற்ற வேண்டும். என்றோ ஒரு நாள் அந்த மாபெரும் மரணச்சாலையைக் கடந்து மறுபக்கத்தை அடைவோம் என்று நம்பும் அந்த மெல்லுடலிகளின் அசையாத  நம்பிக்கைதான் இப்போது நம் ஒவ்வொருவருக்கும் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version