நமது குப்பை நமது பொறுப்பு

நம் சென்னை பல வகையில் சிறப்பான ஊர். அதாவது, சிறு தொழில் முனைவோர், பெரிய கல்லூரிகள், சிறந்த மருத்துவ மனைகள், நல்ல பல்கலைக்கழகங்கள், அருமையான உணவுச் சாலைகள், மால் என்று சொல்லப்படும் பெரிய பெரிய கடைகள் என பல உள்ளன. ஆகவே நம் முதல்வர் அவர்கள் “சிங்காரச் சென்னை” எனவும் பெயர் சூட்டி உள்ளார். ஆனாலும் பல தெரு முனைகளில் உள்ள குப்பைக் கிடங்குகளில் குப்பை வழிந்து தரையில் சிந்தி இருக்கும் காட்சியைப் பார்க்கும் போது மனதிற்குள் ஒரு நெருடல் ஏற்படுகிறது. இந்த நிலைமை மாறுவதற்காக அரசாங்கம் முனைப்புடன் செயல் பட்டாலும் எங்களால் முடிந்த காரியத்தைச் செய்ய வேண்டும் என  எண்ணினோம். 

மேலும் எங்கள் வீட்டில் நாங்கள் ஐந்து பேர் என்பதால் ஒவ்வொரு நாளும், மூன்று வேளைகளும் சமைத்து சாப்பிடுவதனால் சமையல் கட்டில் சேரும் குப்பை ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய டப்பா அளவுக்குத் தெருவில் உள்ள கார்ப்பரேஷன் குப்பை கிடங்கில் போடுவோம். ஒரு சமயம் கார்ப்பரேஷனில் வேலை செய்பவர்கள் இரண்டு பேர் எங்கள் அடுக்ககத்திற்கு வந்து குப்பையைக் கொண்டு உரம் தயார் செய்யுங்கள் என்று அறிவுரை கூறிச் சென்றனர். அவருடைய அறிவுரையை எவரும் கண்டுகொள்ள வில்லை. ஆனால் எனக்கும் என் கணவருக்கும் ஒரு பொறி தோன்றியது. அதாவது அவர் சொன்னது போல் நாம் ஏன் நம் வீட்டில் செய்யக்கூடாது? எனத் தோன்றியது. எனவே அது சம்மந்தமான ஆராய்ச்சி செய்யத் தொடங்கினோம். அதாவது, எப்படி ஆரம்பிப்பது, யாரை அணுகி இந்த ஏற்பாடுகளைச் செய்வது, என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் எனப் பல கேள்விகள் எழுந்தன. பின்னர் எங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் விடை கிடைத்து, உரம் தயாரிக்கவும் ஆரம்பித்தோம். உரம் தயாரிக்கும் முறையைப் பற்றி விளக்குவதற்கு முன் கம்போஸ்டிங் என்றால் என்ன என்பதை விளக்குகிறேன். 

             இயற்கையான முறையில் ஆர்கானிக் குப்பைகளை மக்க வைத்து அவற்றை இயற்கை உரமாக மாற்றும் முறையே கம்போஸ்டிங் என்பதாகும். இங்கு காய்ந்த இலைகள், பூக்கள், காய், கனி இவற்றின் தோல்கள் மற்றும் அழுகியவை, காப்பி, டீ பொடி சக்கைகள் மற்றும் டீ பேக் கயிறு இல்லாமல், இவை அனைத்தும் ஆர்கானிக் குப்பை என்று கூறப்படுகிறது. 

முதலில் மூன்று அடுக்கு மண் சட்டிகள் கொண்ட “கம்பா” என்ற அடுக்கினை வாங்கினோம். அதாவது, Kambha 3T Large Home Composter model – யை வாங்கினோம். அதோடு Remix பொடி (தேங்காய் நாறு பொடி, Activators பொடி கலந்த கலவையாகும்) மற்றும் User manual -என்று சொல்லப்படுகின்ற Instructions -உள்ள புத்தகமும் கொடுத்தார்கள். அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு Instruction -னையும் நாங்கள் follow செய்து வந்தோம். தோராயமாக 15 -நாட்கள் கழித்து தேவையற்ற காய், கனி தோல் குப்பைகளைக் கொண்டு தேவையான, அருமையான, கமகம உரம் கிடைத்தது. இங்கு என் “கமகம” வார்த்தை பிரயோகத்திற்குக் காரணம் உள்ளது. ஏனெனில், இந்த ஆர்கானிக் குப்பைகள் மூலம் ஒரு வித துர் வாசனை வரும், ஆனால் அவற்றின் மூலம் கிடைத்த உரம் நல்ல வித வாசனை தரக்கூடியதாக உள்ளது. மேலும் அதை எங்கள் அடுக்ககத்தில் உள்ள செடி, கொடி, மரங்களுக்கு உரமாகப் போட்டு செழிப்பாக வளர  செய்கிறோம். 

இதுவே கம்பா என்ற மூன்றடுக்கு மண் சட்டியாகும்:

இதைச் செய்வதால் நமக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்று கேட்டீர்களானால், Kitchen waste -யை சேர்த்து உரம் செய்து விட்டால் மீதி உள்ள வீட்டுக் குப்பை மிகவும் குறைவாகவே இருக்கும். இது போல் தெருவில் உள்ள ஒவ்வொருவரும் செய்தால், தெரு முனையில் உள்ள குப்பைக் கிடங்கில் குறைவாகவே குப்பை சேரும். ஆக, வழிந்து ஓடுவதை நிறுத்தலாம். இம்முறை, வீட்டிற்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கும் நலன் உண்டாகும். இந்த உரத்தை செடி, கொடிகளுக்குப் போடுவதினால் அவை நன்கு ஆரோக்கியமாக வளரும். மேலும் குப்பையின் அளவு குறைவதினால், தெருவும் சுத்தமாகக் காணப்படும். நம் சமுதாயத்தை சீர் செய்ய அதிலுள்ள நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும். இல்லையேல், சென்னை பொறுத்தவரை குப்பைகள் முழுவதும் கொடுங்கையூர், பெருங்குடி போன்ற இடங்களில் உள்ள குப்பை சேர்க்கும் நிலப்பரப்புகளைச்(landfills) சென்று அடையும். அந்த பரப்புகள் நிரம்பிவிட்டால், சென்னை கார்ப்பரேஷன் மற்றொரு இடத்தைக் கண்டறியும். இவ்வாறு சேகரித்த குப்பைகளை அகற்றுவதற்கான ஒரே வழி,அவற்றை எரிப்பதாகும். அவ்வாறு எரிக்கும் போது அதிலிருந்து வரும் புகை மற்றும் துர்நாற்றத்தை (stench) அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். நோய் தொற்று போன்ற உபாதைகள் ஏற்படலாம். இந்த குப்பைகளை ஏற்றிச் செல்லும் Truck -போன்ற ஊர்திகள் தெருவில் செல்லும் போது ஒருவித நாற்றம் ஏற்படுவது அல்லாமல் காற்றும் மாசுபடுகிறது. 

இந்த உரம் தயாரிக்கும் முறையில் சில சவால்கள் நிறைந்த விஷயங்களும் நமக்குக் காத்திருக்கும். கஷ்டப்பட்டு ஒரு காரியத்தை செய்து முடிக்கும் போது தான் அதன் முழு பலனும் நமக்குக் கிடைத்ததாகத் தோன்றும். 

இந்த கம்பாவை நம் வீட்டு பால்கனி (அ) கொஞ்சம் குறைவாக உபயோகம் செய்யும் மற்றும் வெயில், காற்றோட்டம் உள்ள பகுதியில் வைக்க வேண்டும்.  மழை காலம் வரும் போது, இந்த உரம் தயாரிக்கும் முறையில் ஒரு சில மாற்றம் தேவைப்படும். அதாவது, மழை காலத்து  ஈரத்தன்மையால் ஒரு வித சிற சிறு புழுக்கள் வரத் தொடங்கும். அவை எண்ணிக்கை குறைவாக உள்ள போது அந்த சட்டியிலேயே இருக்கும். அதிகமாகத் தொடங்கிய பின் அவை வீட்டுக்குள்ளே சமையலறை, சாப்பிடும் அறை என எல்லா இடங்களுக்கும் வரத் தொடங்கும். மேலும் உணவுப் பாத்திரங்கள் மீது உட்காரும். இந்த பிரச்சனையை எதிர் கொள்வதற்கான வழியை நாங்கள் “கம்பா” வாங்கிய தொழில் அதிபரிடம் கேட்டோம். அவர், மஞ்சள் பொடியைக் கொண்டு “கம்பா” வைத்துள்ள இடத்தைச் சுற்றி பட்டையான கோடு போடச் சொன்னார். பின்பு வீட்டினுள் புழுத் தொல்லை முற்றிலும் தீர்ந்தது. மேலும் மழைக் காலமான இரண்டு (அ) மூன்று மாதங்களுக்குப் புதிதாக காய், கனி organic தோல் குப்பைகளை சட்டியில் போட வேண்டாம் என்றும் அறிவுறித்தினார். ஆகவே, பழைய குப்பைகளின் மேல் Remix பொடி போட்டு , கிளறி விட்டு தயார் செய்து கொண்டிருந்தோம். மழை காலத்திற்குப் பின் எப்போதும் போல், புத்தகத்தில் உள்ள படி follow செய்து உரம் தயாரித்தோம். இவ்வாறு எங்கள் வீட்டு காய், கனி organic தோல் குப்பைகளைக் கொண்டு சுமார் 1 ½ வருடங்கள் உரம் தயாரித்து வந்தோம். எங்கள் முயற்சி வெற்றியான படியால், இதோடு நாங்கள் நிற்கவில்லை. 

எங்களது இந்த உழைப்பை எங்கள் அடுக்ககத்திற்கு எடுத்துச் சென்றோம். எங்களது அடுக்ககத்தில் 19  வீடுகள் உள்ளன.  அவர்கள் அனைவரையும் அழைத்து, எங்கள் செயல்கள் அனைத்தையும் எடுத்துரைத்து, அதனால் கிடைத்த உரத்தையும் காண்பித்தோம். அனைவரும் உரத்தை கையில் எடுத்து முகர்ந்து வாசமாக இருப்பதாகக் கூறினர். மேலும் தங்கள் ஒத்துழைப்பைத் தருவதாக ஒப்புக் கொண்டனர். ஆனால்,அனைத்து வீட்டினர் கொடுக்கும் ஆர்கானிக் குப்பைகளைக் கொண்டு மேலும் அந்த கம்பாவைப் பயன்படுத்தி எங்கள் வீட்டில் உரம் செய்ய இயலாது. அதற்கு வேறு ஒரு பெரிய இயந்திரம் தேவை என்று எண்ணினோம். மீண்டும் அந்த தொழில் அதிபரை அணுகி வழி கேட்டறிந்தோம். அதன் படி, இம்முறை கம்பா இல்லாமல் “டம்ளர்” என்ற படுத்தவாட்டில் உருளை வடிவில் ஒரு இரும்பு stand – இல் இருக்கும். அந்த உருளையின் ஒரு பகுதியில் சிறிய கதவு இருக்கும். அதைத் திறந்து ஆர்கானிக் குப்பைகளைப் போட்டு, கதவை மூடி பின் உருளையை சுற்றி விடவேண்டும். சுற்றி விடுவதற்கு வசதியாக வெளியே ஒரு கைப்பிடி(liver) இருக்கும். அதனால் உள்ளே இருக்கும் குப்பை நன்கு ஒன்றோடு ஒன்று கலந்து, பொடியும் சேர்ந்து சுமார் 25 நாட்கள் கழித்து குப்பை நன்கு மக்கத் துவங்கும். டம்ளர் உடன் கொடுக்கும் புத்தகத்தில் உள்ள முறை படி செய்து ஒரு மாதத்திற்கு ஒரு முறை வாசம் மிகுந்த இயற்கை உரம் தயார் செய்வோம். 

இந்த தயாரிப்பில் எங்களுக்கு இருந்த சிக்கல் என்னவெனில்,” டம்ளர்” இயந்திரத்தை எங்கே வைப்பது என்பதாகும். மழைக் காலத்தில் சிறு சிறு புழுக்கள் வரும் என்பதால், கீழ் தளத்தில் உள்ள வீடுகளுக்கு முன்பாக வைப்பதற்கு ஒருவரும் ஒப்புக்கொள்ளவில்லை. இயந்திரத்தை வைக்கும் இடத்தில் நன்கு வெயில் படவேண்டும் என்றும் மேலே தடுப்புச் சுவர் இருத்தல் வேண்டும் என்றும், வாங்கும் போது கடைக்காரர் கூறினார். அடுக்ககத்தின் பொது இடங்கள் சிலவற்றை எண்ணி ஆராய்ந்து கடைசியில் எங்கள் மொட்டை மாடியின் ஒரு பக்கத்தில் வைத்துள்ளோம். இதனால் ஒரு சில அசௌகரியங்கள் உள்ளன. அதாவது, ஒரே நாளில் மூன்று, நான்கு வீட்டவர்கள் வத்தல் செய்து காயவைக்க நினைத்தாலோ (அ) மொட்டை மாடியில் நடை பயிற்சி மேற்கொள்ளும் ஒரு சிலருக்கோ பாதிப்பு இருந்தாலும், அனைவரும் ஒரு மனதாக சமுதாய நலன் கருதி ஒப்புக் கொண்டனர். ஏனெனில் இந்த முறையில் சராசரியாக ஒரு நாளைக்கு 20 முதல் 22  கிலோ குப்பை, தெருவில் உள்ள கிடங்கை நோக்கி நகராமல், தேவை மிகுந்த இயற்கை உரமாக மாறுவதோடு அல்லாமல், வளர்ந்து வரும் செடி, கொடிகளையும் இயற்கை உரம் போட்டு செழிப்பாக்க இயல்கிறது.

நாள்தோறும் நாங்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டு ஆர்கானிக் குப்பையை ஒரு டப்பாவில் போட்டு, வீட்டு வாசலுக்கு வெளியே உள்ள பொது இடத்தில் வைத்து விடுவோம். இந்த தயாரிப்பிற்காக நாங்கள் அமர்த்திய வேலையாள் வந்து அனைத்து குப்பைகளையும் ஒன்று சேர்த்து, மொட்டை மாடியில் உள்ள “டம்ளர்” – ன் உருளையில் போட்டு கைப் பிடியைக் கொண்டு பத்திலிருந்து பதினைந்து முறை சுற்றி விட்டு, நன்கு ஒன்றுக்கொன்று சேர்ந்த பின் சுற்றுவதை நிறுத்த வேண்டும். பின்பு மாதத்திற்கு ஒரு முறை உருளையிலிருந்து அந்த உரத்தை ஒரு தார்பாலின் பேப்பரில் கொட்டி, மூன்று நாட்கள் வெய்யிலில் காய வைக்க வேண்டும். ஏனெனில் உருளையில் இருந்து எடுக்கும் போது கொஞ்சம் ஈரத்தன்மையோடு உரம் இருக்கும். இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவெனில், தலையில் வைக்கும் மற்றும் சுவாமி படத்திற்குப் போடும் பூக்கள் ஆர்கானிக் குப்பையில் சேர்க்கும் போது, அதோடு உள்ள நூல் (அ) நாரைப் பிரித்து எடுத்து விட வேண்டும். ஏனெனில், இவை மக்குவதற்கு நிறைய நாட்கள் ஆகும் மற்றும் இவை உருளையினுள் இருக்கும் கம்பியில் சிக்கிக் கொண்டு, வெளியே உள்ள கைப்பிடியால் சுற்றுவது கடினமாகும். அதனால் உரம் செய்யும் முறையில் ஒரு வித பிரச்சனை ஏற்படும். 

அடுக்ககத்தின் வேறு சில குப்பை சம்மந்தப்பட்ட மேலாண்மை 

எங்கள் அடுக்கத்தில் கீழ் தளத்தின் ஒரு மூளையில் இரு பெரிய அடுக்குகளை வைத்து, அதில் மக்கும் குப்பை, மக்கா குப்பை எனப் பிரித்து போட்டு வைப்போம். அவற்றை கார்ப்பரேஷன் ஊழியர்கள் இரு நாளைக்கு ஒரு முறையென எடுத்துச் செல்வர். 

முன்பு சில வருடங்கள், E- waste – என்று சொல்லப்படும் உபயோகமற்ற மின்னணு சாதனங்களை, எங்கள் அடுக்ககத்து வீடுகளிலிருந்து சேகரித்து ஒரு நிர்வாகத்தைச் சேர்ந்தவரிடம் ஒப்படைத்து விடுவோம். அவர் அவற்றை கார்ப்பரேஷன் விதி முறைப்படி அழித்து விடுவார். இடையில் விட்டுவிட்ட அந்த முயற்சியை மீண்டும் தொடங்க உள்ளோம். 

எங்கள் வீட்டு குப்பை சேகரிப்பு 

எங்கள் வீட்டினுள் பிளாஸ்டிக் கவர்கள், பால் கவர்கள் போன்றவை ஒரு கூடையிலும், காய், கனி போன்ற ஆர்கானிக் குப்பை ஒரு டப்பாவிலும், மாத்திரை கவர் போன்ற அழுத்தமான கவர்கள் தனியாகவும், மற்ற குப்பைகளை ஒரு கூடையிலும் மற்றும் சமையல் கட்டில் அரிசி, பருப்பு, காய், பழங்கள் ஆகியவற்றைக் கழுவிய தண்ணீர் ஒரு குடத்திலும் எனத் தனித்தனியாக சேகரித்து, உரிய இடத்தில் சேர்த்துவிடுவோம். அந்த தண்ணீரை எங்கள் அடுக்ககத்தில் உள்ள செடி, கொடிகளுக்கு ஊற்றி விடுவோம். 

சென்ற ஏப்ரல் மாதம் 26 -ம் தேதி, இந்து ஆங்கில நாளிதழில் நம் சென்னை மாநகர மேயர் பிரியா அவர்கள், தேவையான குப்பைகளை குப்பைக் கிடங்கிலிருந்து எடுத்துச் செல்லக்கூடிய Ragpickers அனைவரையும் ஒன்று சேர்த்து அறிவுரை வழங்கி, அவர்களில் அனுபவத்தின் அடிப்படையில் சுமார் 265 – மக்களுக்கு ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், ஆதார் அட்டை, ஓட்டு போடத் தேவைப்படும் அட்டை போன்றவை எடுத்துக்கொள்ள வழிமுறைகள், சமுதாயத்தில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது மேலும் வீடு கட்டத் தேவையான அறிவுரைகள் என எல்லாம் கூறினார். இந்த சந்திப்பை The Greater Chennai Corporation(GCC) – ஏற்பாடு செய்தது. இதுபோல நம் அரசாங்கமும் குப்பைகளை நல்லவித பயன்படு பொருளாக மாற்ற பல்வேறு யுத்திகளைக் கையாள்கிறது. நாமும் நம் பங்குக்கு உழைத்தால் வீடு, தெரு மற்றும் நாடு சுத்தமாக இருக்கும், தூய பாரதமாகவும் மாற்றலாம். நன்றி.

8 thoughts on “நமது குப்பை நமது பொறுப்பு

  1. மிக அருமை… தங்களது முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள், நீங்கள் பின்பற்றிய முறையை 30% மக்கள் பின்பற்றினால் பாதி குப்பை உரமாக மாறிவிடும்..

  2. மிகச் சிறப்பான கட்டுரை அனைவரும் பயன்படுத்த விரும்பினாலும் இடப்பற்றாக்குறை காரணமாக செயல்படுத்த முடிவதில்லை ஆனால் அனைவரும் முயன்றால் நடக்கும் என்பதற்கு லதா அவர்களே சான்று

  3. Very nice Latha,you have written our experience in simple words.definitly if we
    House join together and consciously segregate the waste we can keep our locality really clean.Why don’t you go to our nearby flats & advise them & explain about our efforts.Even in our flats we have to create more awareness about the segregation of waste I think.On my part I don’t allow cloth bits to go inthe dust bin by recycling them in useful way.keep up your writing skills& saree more of your experience.

  4. Congrats.
    Very nice effort.
    Environmental protection is the protection of natural resources and the reduction of harmful effects caused by human activities. This is important for mitigating climate change, protecting biodiversity, and reducing pollution and waste.

  5. Very good effort.
    சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் ஒவ்வொரு தனி மனிதரும் எடுக்கும் சிறு முயற்சி எவ்வளவு முக்கியம் என்பதை நீங்களே முன்னுதாரணமாக இருந்து விளக்கியுள்ளீர்கள். வெகு அருமை 💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version