
இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரம் எங்கள் மூணார். எட்டிப்பார்க்கும் தூரத்தில் வெண் பஞ்சு மேகங்கள். கறுத்து நெளிந்த கூந்தலென வளைந்து நெளிந்த சாலைகள்!
ஈரக்காற்றின் சிலுசிலுப்பில் அசையும் உயர்ந்த மரங்கள்! கேரளாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தளம்! காண்போர் லயித்து ரசிக்கும் கண்கவர் மலை வாழிடம்!
கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் காடுகள், வனாந்திரப் பகுதிகள், பசும்புல் போர்த்திய குட்டி மலைகள், கண்ணுக்கினிய பள்ளத்தாக்குகள், நீரோடைகள், குட்டி அருவிகள், தேயிலைக் காடுகள், காதுமடலைக் கவ்வும் குளிர், இமைகளை உரசும் ஈரக்காற்று …. வாழும்காலத்தில் காணும் சொர்க்கம்!
அழகும், பசுமையும் பரந்து விரிந்த அதே அளவில் சுற்றுலாப் பயணிகளாலும் உள்ளூர் வணிகங்களாலும் மாசுகள் நிறைகின்றன!
ஆதிகாலம் முதலே குப்பை மேலாண்மை என்பது கவனிக்கத்தக்க ஒரு பிரிவு. *” குன்று எனக் குவைஇயக் குன்றாக் குப்பை” என்பது பொருநறாற்றுப் படை நூல் வரிகள் குன்று போல் நிறைந்த குப்பையைக் குறிப்பிடுகின்றன.
ஒரு இடத்தில் சேரும் குப்பைகளை அகற்ற நாம் மேற்கொள்ளும் முறையே அவ்விடத்தின் அழகை மேம்படுத்தும் முக்கியக் காரணி.
கேரள அரசும் மூணார் பஞ்சாயத்தும் இணைந்து ” கிரீன் மூணார்…கிளீன் மூணார்”. என்ற ஸ்லோகத்துடன் களமிறங்கியுள்ளன.
சுற்றுலாத்தலம் என்பதால் உணவு விடுதிகள், தங்கும் விடுதிகளில் இருந்து சேரும் திடக்கழிவுகள் அதீதம். மூணார் பஞ்சாயத்து அவற்றை சமையல் கழிவு, காகிதங்கள், நெகிழிகள் என வகைப்படுத்தி மறுசுழற்சிக்கு அனுப்புகிறது.சரவண பவன், குருபவன், அல்புகாரி போன்ற பெரிய உணவு விடுதிகள் சமையல் கழிவுகளை ஆனைச்சாலில் உள்ள மீன் பண்ணைகளுக்கு அனுப்புகின்றனர். நகரத்தில் முழுமையாக மட்கும் அளவிலான நெகிழிப் பைகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு.
மூணாரில் நெஸ்லே நிறுவனத்துடன் இணைந்து “ஹில்தாரி” என்னும் அமைப்பு மற்றும் 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் தன்னார்வ நிறுவனம் மூணார் காலனியில் தொடங்கப்பட்டது.இந்நிறுவனம் உணவுக்கழிவுகளை உரமாக மாற்றுகிறது. நெகிழிக் குப்பைகளை கம்ப்ரைஸர் மூலம் அழுத்தத்தில் ஆழ்த்தி சிமெண்ட் தயாரிக்க அனுப்புகிறது. அந்த சிமெண்டைப் பயன்படுத்தி மூணாரில் பல இடங்களில் நடைபாதை பெஞ்சுகள் அமைக்கப்பட்டுள்ளன.பாட்டில் போன்ற வடிவத்தில் அங்கங்கே கம்பிகளாலான குப்பைத் தொட்டிகள் வைக்கப் பட்டு பராமரிக்கப் படுகின்றன.
காய்கறிச் சந்தையின் கழிவுகள் கல்லார் எஸ்டேட்டில் உள்ள கிடங்கில் உயிர் உரமாக மாற்றப்படும்.IRTC மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் சுமார் 30 பேர் சாலையோரங்களைப் பராமரிக்க மட்டுமே உள்ளனர்.
மாட்டுப்பட்டி அணையருகே யானைகள் சுற்றுலாப் பயணிகள் எறியும் நெகிழிக் கழிவுகளை உண்ணத் தொடங்கின. தேயிலைக் காடுகளின் அடித்தளமே யானைகள் தான்! காட்டு யானைகள் கல்லார் குப்பைக் கிடங்கில் இரை தேடி வருவதும் பிரிக்கப் படாத கழிவுகளை உண்பதும் வாடிக்கை. சுற்றுலாப் பயணிகள் அங்கங்கே எறியும் மது குப்பிகள் யானையின் கால்களைப் பதம் பார்த்த சம்பவங்களும் உண்டு.
மனிதனின் ஆட்டத்தில் விலங்குகளும் தாவரங்களும் பாதிக்கப்படுவது இயற்கையின் சீரழிவு! பூமி மனிதனுக்கு மட்டுமல்லவே!
2020ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ராஜமலை எஸ்டேட் அருகே பெட்டிமுடி டிவிஷனில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு 66 பேர் உயிரிழந்தனர் . 4 பேர் மாயமாகினர். தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் 50 பேர் உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.கனமழையால் நீர் வெளியேற வழியின்றி ஊற்றாக மாறி மண்ணோடு சரிந்து இவர்கள் வசித்த லயன் வீடுகளுக்கு மேலிருந்து பாறைகளோடு உருண்டதே காரணம்.
25 வருடங்களாக மூணார்வாசி என்பதால் இந்தக் கால் நூற்றாண்டில் எங்கள் மூணார் அடைந்த மாற்றங்களைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
இரண்டாயிரத்தின் முதல் சகாப்தங்களில் அதிக கனமழை இருந்தாலும் பேரிழிவுகள் இருந்ததில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் புற்றீசலாய் எழுந்த அடுக்குமாடி ரிஸார்ட்கள், மழைநீர் வடிய வழியின்றி சாக்கடைகளை அடைக்கும் குப்பைகளே பேரழிவுகளுக்கான மூல காரணங்கள். வருடத்தில் ஆறுமாதங்கள் மழை என்ற நிலை மாறி சில தினங்களில் கொட்டித் தீர்க்கும் மிக அதிக கனமழையும் அதன் விபரீத விளைவுகளும் தற்போதைய மூணாரின் சாபக்கேடு!
உள்ளூர் மக்கள் ஸ்வச் பாரத் மிஷன் மற்றும் ஹரித கேரளம் மிஷன் மூலமாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் பெறப்பட்ட குப்பைகளை மறுசுழற்சி செய்து வருவாய் ஈட்டுகின்றனர். ரூபாய் ஒரு இலட்சம் மதிப்புள்ள கரிம உரங்கள் பஞ்சாயத்து மூலம் விற்பனை செய்யப்பட்டன.
” ஸீரோ வேஸ்ட் கேம்பஸ்” என்ற நோக்கில் மூணாரின் பள்ளிகள் அனைத்திலும் குப்பை மேலாண்மை கற்றுத் தரப்படுகிறது.
இயற்கையின் மடியில் இளைப்பாற வரும் இடமாக மூணாரை எண்ணாமல் குடித்து விட்டு கும்மாளமிடும் கேளிக்கை விடுதியாக எண்ணும் சில சுற்றுலாப் பயணிகள் எங்களின் தீராத தொல்லை.
மூணாரில் மிகப் பிரசித்தி பெற்ற திருவிழா முருகன் கோயிலின் கார்த்திகைத் திருநாள். மலை கொண்ட முருகனின் ஆலயம் தொடங்கி நகரின் அனைத்து சாலைகளிலும் சாலையோரக் கடைகள் முளைக்கும். திருவிழாக் கூட்டத்தால் நகரம் திணறும். ஆட்டம், பாட்டம், சிற்றுண்டிகள், கரும்புக் கடைகள் என அமளியில் ஆர்ப்பரிக்கும். மறுநாள் ஒரு குப்பை கூட இன்றி இயல்பு நிலை திரும்பும். நேற்றைய திருவிழா இங்கு தான் நடந்ததா எனக் காண்பவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் நேர்த்தி எங்கள் மண்ணின் சிறப்பு!
வெள்ளை உள்ளம் கொண்ட தோட்டத் தொழிலாளிகள் தம் செங்குருதி தந்த கடும் உழைப்பே நீங்கள் காணும் பசுமைத் தோட்டங்கள்! ஊர் காக்கும் உள்ளங்கள் நேசிப்பது நாங்கள் பொத்திப் பொத்திச் சேமித்து வைக்கும் பசுமையை தான்!
“மறதி மட்டும் இல்லையென்றால்
மனதிலுள்ளவை எல்லாம்
மக்காத குப்பைகள் தான்”
என்ற கா. வெங்கடேஸ்வரன் அவர்களின் கவிதை நினைவில் வருகிறது. பசுமையை மதிக்கும் இடத்தில் குப்பைகளை எறியாத பொறுப்பு வேண்டும். மண்ணை மாசுபடுத்தும் மனிதர்களும் மக்காத குப்பைகள் தாம்!