
வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளில் இருந்து வேறுபடுவதற்கு சுத்தம் மற்றும் சுகாதாரமும் ஒரு முக்கிய அம்சமாகும். வெளிநாட்டில் ஒரு குப்பையைக் கூட பார்க்க முடியாது என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதற்கு அந்த அரசாங்கம் எவ்வளவு மெனக்கெடுகிறது மற்றும் எப்படிப்பட்ட தொலைநோக்கு பார்வை கொண்டுள்ளார்கள் என்று ஆராய்ந்து பார்த்தபோது மலைத்துப் போனேன். குப்பை மேலாண்மை ஒரு சிறிய தலைப்பு என்று நினைத்து இணைய தளத்தில் ஆராய்ந்தால் பல பல வியப்பூட்டும் விஷயங்கள் கிடைத்தது.
நான் கடந்த 11 வருடங்களாக ஆஸ்திரேலியாவின் தலைநகரமான கான்பெராவில் வசித்து வருகிறேன். எல்லோரையும் வரவேற்றதைப்போலவே என்னையும் ஆஸ்திரேலியா வரவேற்றது.அதுவும் தலைநகரம் மிகவும் இயற்கையாக, அமைதியாக, மக்கள் தொகை குறைவாக இருந்தது. அதிலும் சுத்தம் பற்றி சொல்லவே வேண்டாம், எல்லா இடமும் சுத்தமாக இருப்பதால், நமக்கு எங்கும் குப்பை போடவே தோன்றாது.
அதில் வியந்து தான் ஒரு நாட்டை சுத்தமாக வைத்திருக்க என்னென்னவழிகள் உண்டு என்று வாசகர்களுக்கு இந்த கட்டுரை மூலம் சொல்ல விரும்புகிறேன்.
அரசாங்கம் ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு குப்பை தொட்டி கொடுக்கிறது. அவற்றின் கொள்ளளவு 140L மற்றும் 240L ஆகும்.ஒன்று பொது குப்பை தொட்டி மற்றொன்று மறுசுழற்சி குப்பை தொட்டி. வாரம் ஒரு முறை பொது குப்பை தொட்டி கழிவுகள் அகற்றப்படும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மறுசுழற்சி குப்பை கழிவுகள் அகற்றப்படும். சேகரிப்பு நாட்களில் மக்கள் குப்பைத் தொட்டிகளை காலை 7 மணிக்குள் வீட்டின் முன்பக்க வாயிலின் அருகில் (kerbside) வைத்திருக்க வேண்டும்
இதுபோக பச்சை குப்பை தொட்டி நமக்கு வேண்டும் என்றால் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.இதில் தோட்டத்து குப்பைகள் மற்றும் சிறு மரத்துண்டுகள் ஆகியவற்றை போடலாம்.இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இந்த குப்பை கழிவுகள் அகற்றப்படும். FOGO என்று அழைக்கப்படும் உணவு மற்றும் இயற்கை கழிவுகளுக்காக சோதனை ஓட்டமாக மேலும் ஒரு குப்பைத் தொட்டி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இங்கு அனைத்து வீடுகளில் பழம் மற்றும் காய்கறி கழிவுகள் அதிகம் சேரும். அதை முறையாக அகற்றுவதற்கு இந்த முயற்சி.
குடியிருப்பாளர்கள் வீட்டு குப்பைத் தொட்டிகளில் போடக்கூடாத பொருட்களை மறுசுழற்சி செய்யவும், அகற்றவும் பயன்படுத்தக்கூடிய வள மேலாண்மை மையங்கள் Resource Management centers Tipping places உள்ளன.. அங்கு பணம் கொடுத்து இந்த பெரிய பொருள்களை தூக்கி எறிய வேண்டும். இதனால் வீட்டில் அனாவசியமான பொருள்கள் இருக்காது. உபயோகமில்லாத மெத்தைகள் போடுவதற்கு பணம் கட்ட வேண்டும். அட்டைகள், பெரிய பொருட்களை வந்த பெட்டிகள் போடுவதற்கு பணம் கிடையாது.
ரசாயன கழிவுகள், மருத்துவக் கழிவுகள், கட்டடக் கழிவுகள் என்று தனியாக கொட்ட வேண்டும். வருடத்துக்கு ஒரு முறை இலவசமாக வீட்டில் உள்ள பெரிய பெரிய பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு நம் வீட்டின் முன் 3m3 இடத்தில் கொட்டி வைத்தால் அரசாங்கம் குப்பை வண்டி அனுப்பி எடுத்துக் கொள்ளும்.
இதற்கும் மேலே வீட்டில் உள்ள நல்ல நிலையில் உள்ள துணிமணிகள்,விளையாட்டு பொருள்கள், புத்தகங்கள், மேஜை நாற்காலிகள், வீட்டு உபயோகப் பொருள்கள்,சோபா போன்ற பல பொருள்களை பெறுவதற்கு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெரிய கடைகள் வைத்துள்ளார்கள்.அங்கு இலவசமாக நாம் பொருள்களை போடலாம், பெரிய பொருள்களை அவர்கள் வந்தும் எடுத்துக் கொள்வார்கள். அதை அவர்கள் சிறிய விலைக்கு விற்று விடுவார்கள்.இதனால் குப்பை குறைப்பது சுலபமான காரியமாகிவிடுகிறது.
உருவாகும் கழிவின் அளவைக் குறைப்பது முக்கியம். இதற்கு, உபயோகிக்கும் பொருட்களின் அளவு/ எண்ணிக்கை குறைத்தல், மீண்டும் பயன்படுத்தல் மற்றும் வேறுபட்ட நோக்கிற்காக மாற்றிப் பயன்படுத்தல் போன்ற உத்திகளை பயன்படுத்தலாம்.
இது மட்டுமில்லாமல் நிறைய கடுமையான சட்டங்களும் உண்டு, தண்ணீரை மாசுபடுத்த முடியாது, கழிவுநீர் மற்றும் ரசாயன நீர் ஏரிகளில் கலக்க முடியாது, அரசங்கம் எல்லா தவறுகளையும் பார்த்துக்கொண்டு தக்க தண்டனை வழங்கி இயற்கையை பாதுகாக்கும்.
இப்படிப்பட்ட இயற்கை மாசுபடாமல் இருக்கும் நாட்டில் தனி மனிதனாகிய நமக்கும் மாசுபடுத்தும் எண்ணம் வராது. நமக்கு இருக்கும் இந்த அழகிய உலகத்தைப் பாதுகாப்போம், வளமுடன் வாழ்வோம்.