நாகரீக குப்பை கிடங்கு மற்றும் நவீன கழிவுகளும்

“குப்பை ” உலகத்தில் இல்லாத ஒன்றை எடுத்து வந்து குப்பையாக்க முடியாது. உதாரணத்திற்கு ஒரு வாழைப்பழம் ஓரிடத்தில் உற்பத்தியாகி மற்றொரிடத்தில் விற்பனையாகி யாரோ ஒருவரால் வாங்கப்பட்டு அவர் உண்டு முடித்ததும் அதன் பழத்தோல் எங்கோ குப்பையாக விழும். இதன் காரணம் மனிதர்களே ஆனாலும் இதை பூமி செரிக்கத் தயாராக இருக்கும். குப்பையை இயற்கை குப்பை, விண்வெளிக் குப்பை என  இரு வகைப்படுத்தலாம். விண்வெளி குப்பை எதுவும் நம் கையிலில்லை அதை “வெளி”யிலேயே தள்ளி வைப்போம். 

நாம் அருவருக்கும் குப்பையின் வேறு பெயர் அசுத்தம் என்று கொள்வோமா. நம்மைச்சுற்றி இருக்கும் அசுத்தங்கள் எவை என்று பார்த்தால்,. தன் உபயோகத்திற்கு தேவை போக மற்ற  தேவையில்லாத பொருளையே குப்பை என்ற பெயரில் விலக்கி வைக்கத் தொடங்கியிருக்கக்கூடும் பழங்காலத்தில் குப்பைக் குழிகள் இருந்தன. அதில் வீட்டுக் குப்பைகளைக் கொட்டி மட்கச் செய்வர். அது வேளாண்மைக்குப் பயன்படும். நாகரீகம் தொடங்கிய காலம் முன் மனிதக் கழிவும் கூட வெட்டவெளியில் நீர் நிலையோரம் ஊரின் ஒதுக்குப்புறம் என்றிருந்த காலம் போய்  கொஞ்சம் கொஞ்சமாக வீட்டின் நாலாம்கட்டிலிருந்து முன்னேறி இப்போதெல்லாம் கழிவறை என்பது நடுக்கூடத்திற்கு வந்துவிட்டது. அதையும்  பூமியின் வயிற்றில் பெரிய குழாய்களைச்  சொருகி பூமியின் மலக்குடலைப் போல் கண்ணுக்குத் தெரியாமல் கடத்திக் கொண்டிருக்கிறோம். முன்னேறாத கிராமம் தவிர நகரங்களில் ஓரளவு மனிதக் கழிவுகள் கண்களில் படுவதில்லை. இதில் விதிவிலக்கு ஞமலிகளே.. வீட்டின் செல்லப் பிராணியாக வளர்ப்பவர்கள் கூட இடம் பொருள் தெரியாமல் தெருவோரங்களை அசுத்தமாக்கிவிட்டு அப்படியே கண்டுகொள்ளாமல் செல்வது தான் வேதனை. அயல்நாட்டில் கையோடு அவர்களே அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டுச் செல்ல வேண்டும். இது கட்டாய அரசு உத்தரவு.. இல்லையேல்  கடுமையான அபராதம் உண்டு. நம் நாட்டில் ‘ஜி எஸ் டி’ யையே தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்க இயற்கையை பாதுகாக்கும் இதற்கெல்லாம் அபராதமா ? அந்த காலம் வர இன்னும் இங்கு எத்தனை காலம் ஆகுமோ தெரியவில்லை. 

மனிதர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் பார்த்தால் இன்று நம் கண்ணுக்கெட்டிய தூரத்திலேயே பயன்பாட்டில் குப்பை குழிகள் நிரம்பி குப்பை மேடுகள் தான் இருக்கின்றன. குப்பை இன்று சர்வதேசப் பிரச்சினையாக உள்ளது. எங்கு கொட்டுவது என்று தெரியாமல் தெருக்களில், ஆறு, ஏரி, குளம், குட்டை, கடல் என அனைத்து நீர் நிலைகளிலும் கொட்டி விடுகிறோம். இதனால் நம் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதோடு மற்ற உயிர்களுக்கும் பேரின்னலை விளைவிக்கிறது. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் தன் பங்குக்கு எது செய்து வந்தாலும்  தனி மனிதன் மனம் வைத்தால் மட்டுமே சுத்தம் சோறு போடும்.

குப்பை கூளங்கள் தவிர்த்து மனிதன் மூன்றாவது வகை குப்பை ஒன்றை உருவாக்கியுள்ளான். அது தான் “நவீன இணையக் கழிவு”

உலகம் தோன்றியது முதல் தேவையையும் தேவையில்லாததையும் யார் தான் முடிவு செய்கிறார்கள் என்று சற்று உற்று கவனித்தால் தெரியும்.. தனி மனிதனின் விருப்பு வெறுப்பே அது.  சுத்தமும் சுகாதாரமும் விரும்பும் ஒருவர் முதலில் தன்னை சுத்தமானவன் என்று அவரே சொல்லத் தொடங்குவார்கள். அதில் அகச்சுத்தமும் சேர்ந்ததே..  சுத்தம் என்ற  ஒன்று இருக்கும் பட்சத்தில் உள்ளே  அசுத்தமும் ஒரு இடத்தில் சேர தொடங்குகிறது.  அதை வெளியேற்றும் இடமாக  எந்த ஒரு சுத்தமான மனிதரிடமும் கழிவுகளும்  சேரத்தானே செய்யும் அப்படியான அகக் கழிவுகள் ஏதோ ஒரு ரூபத்தில் யாரோ ஒருவரின் பெயரில் முகநூல் எனும் கிடங்கில் கொட்டிச் செல்கிறார்கள். தினம் வீட்டு வாசல் பெருக்கி கோலம் போடுவது போல்   குப்பைகளை சேகரித்து அடுத்த வீட்டில் தள்ளும் நல்லவர்களும் உண்டு. சிலரது முகநூல் பக்கங்கள் ‘கரை நல்லது’ என்பது போல் கழிவும் நல்லதாகவே இருக்கும். மாட்டுச்சாணமும் ஆட்டுப்புழுக்கையும் உரமாவதை போல். கதையும், கவிதையும்,  தகாத வார்த்தைகளும், கிளர்ச்சிப் படக் கழிவுகளும் கொட்டிக் கிடக்கும்  நாகரீக குப்பை கிடங்கு முகநூல்.  இங்கு வட்டமிடும் கழுகுகள் ஏராளம். இருக்கட்டுமே அதனால்  என்ன  வட்டமிடும் கழுகுகளைக் கண்டால் தான்  கோழிகள் தன் குஞ்சுகளை காக்கும். வீட்டிலிருந்து வெளியே வந்தால் பலதையும் சந்திக்க நேரிடும் அதுபோலத்தான் பொதுவெளியில் நம் பயணம் இன்னது என்று திட்டமிட்டு சென்றாலும் திசை மாறும் சில நிகழ்வுகள் நடந்தே தீரும்..

சுகாதாரத்திற்கு  செருப்பு போட்டு நடக்கும் போதும் கூட தேவை இல்லாததை மிதித்து சுகாதாரக் கேடு இலவசமாக பெற்று வருகிறோம். ஆனால்  வீட்டிற்கு வந்தால் வாசலிலேயே கழட்டி விட்டு வரும் செருப்பு  போல் தான் முகநூலை உபயோகிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் உலகமே கைப்பேசியில் அடக்கம். அதை கையிலேயே வைத்திருப்பவருக்கென்று சில பல பொறுப்புகளை உணர்ந்து கையாள வேண்டும் .  நம் உடலில் இரத்த நாளங்கள் பயணத்தில் சின்ன இடையூறு ஏற்பட்டாலும் இருதயம் பாதிக்கப்படுவது போல..   பலதரப்பட்ட மனிதர்கள் தன் மனக்குமுறல்களை கொட்டும் கழிவுக் கிடங்காக தான் முகநூலை உபயோகித்துக் கொள்கிறார்கள்.  இங்கு  மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்துப் பார்க்கத் தெரியாத மனிதர்களாக இருக்கும்பட்சத்தில்  நெகிழிகளை உணவாக உட்கொண்டு செரிக்காமல் வயிறு உப்பி மரணம் தழுவும் விலங்காக இறக்கும் சூழலை எதிர்கொள்ள நேரிடும். இப்போதைய தேவை முகநூலிலும் மலைபோல் குப்பைகளை கொட்டாமல்  இருந்தாலே போதும். தனி மனித துவேஷம் கொள்ளாமல் இருந்தால் போதும். புத்தன் போல் தன்னை பிரகடனப்படுத்தாமல் இருந்தால் போதும். பெண்கள் தங்களை பாவப்பட்டவர்களாக காட்டிக்கொள்ளாமல் இருந்தால் போதும்.. 

நகரங்களில் கொட்டப்படும் குப்பைக்கு கூட ஏதோ ஒரு வழியில் தீர்வு கிடைக்கலாம். நடு வீட்டில் இருக்கும் கழிப்பறையை கூட  சுத்தம் செய்து விடுகிறோம்.  நவீன கழிவுகளை கடத்தும் கருவியை கையிலேயே சுமந்து திரிகிறோமே கைப்பேசி .. அதில் சேகரிக்கும் டிஜிட்டல் குப்பையை  எவரேனும் பார்க்க நேர்ந்தால் மனம் பதறுகிறதே. என்ன செய்ய வருங்கால சந்ததியினர் இந்த இ.குப்பையில் சிக்கி மன நோயாளியாக ஆகப்போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை. 

இன்றைய கால கட்டத்தில் கைப்பேசி உபயோகிக்க வயது வரையறை ஏதுமில்லை. இதில் சிறு வயதினர் வெறும் பார்வையாளராகவே இருக்கிறார்கள். வளர்ந்த பொறுப்புள்ள குடிமக்கள் இணையத்தில் நவீன கழிவுகளை கொட்டும் குப்பைக்கிடங்கை உருவாக்காமல்  “இ குப்பைக்கு குட் பை சொல்வோம் “முடிந்த வரை “நல்லதையே விதைப்போம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version