பாழாகப்போகும் இப்பால் உலகு

நள்ளிரவு

ஒன்றிரண்டு வாகனங்களின் இரைச்சல்

உடனோடும் நாய்களின் குரைப்பு

அடுத்தடுத்த தெருக்களிலும்

எதிர்க் குரைப்புகள்

ட்ராக்டர் ஓட்டுபவனோடு

உரையாடியபடி

அள்ளிய குப்பைகளை

நிதானமாகக் கொட்டிக்கொண்டு இருந்தவளின்

முகத்தில்

இரண்டு நிலாக்கள்.

நகரம் வெக்கையற்று 

உறங்கிக் கொண்டிருக்கிறது.

*

இரவு ஷிப்ட் முடித்துச் செல்கையில் இப்படியான காட்சிகளைத் தினசரி பார்ப்பதுண்டு. தூய்மை நகரம் என அலுவலர்கள் பெருமை கொள்வதற்குப் பின்னே இவர்களின் உழைப்பு இருக்கிறது. குப்பைகளைக் கையாள்வதென்பது குறித்த எவ்விதப் புரிதலுமின்றியே வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கிறோம்.

நாம் இருக்குமிடத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதே நமக்கிருக்கும் பொதுப்புத்தி. நம் வீட்டுக் குப்பைகளைத் தெரு முக்கில் கொட்டிவிட்டால் போதும். நாம் தூய்மையாகிவிட்டோம் என நினைத்துக் கொண்டுள்ளோம். தன் தூய்மை, தன் வீட்டின் தூய்மை இதுவே போதும் என வாழ்ந்து மடிகிறோம். நம்மின் இப்படியான மோசமான வாழ்வை அடுத்த தலைமுறைக்கும் அப்படியே கையளித்து வைத்துள்ளோம். நாம் எவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறோம் என்பதை உணராமல் வாழ்வதே நமக்கிருக்கும் மிகப்பெரிய சாபக்கேடு. 

வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியில் குப்பைகள் இருக்காது. அதை சுற்றியே குப்பைகள் வழிந்து கிடக்கும். குற்ற உணர்வற்றே பொது இடங்களில் குப்பைகளைப் போடுகிறோம். அதுவும் திருவிழாக்கள் என்றால் போதும், மிகப்பெரிய கூட்டம் சேரும். எங்கும் குப்பைக் காடாகக் காட்சியளிக்கும். தூய்மைப் பணியாளர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தாமே என ஒரு கணம் கூட யோசிக்க மாட்டோம் என்பதே இத்தகைய அவலத்திற்குக் காரணம்.

சமூகம் யாரையெல்லாம் சாதியின் பெயரால் ஒதுக்கி வைக்கிறதோ, அவர்களே சமூகத்துடன் ஒன்றி தங்களின் பணியால் சமூகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள். கொரானா காலத்தில் அவர்களை மலர்தூவி வணங்கி வேஷம் கட்டியதில் எவ்விதப் பலனும் இல்லை. அவர்களும் சக மனிதர்கள், அவ்வேலைகளால் அவர்களின் உடல்நலம் பாதிக்காமல் இருக்க, பாதுகாப்பு உபகரணங்கள் தடையின்றி அவர்களுக்கு கிடைக்கச் செய்திடவும் ,தொடர்ந்து பயன்படுத்தப் பயிற்சி அளித்தலும், அவர்களின் வேலைகளை இலகுவாக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்தலும் போன்ற செயல்கள்தாம். அவர்களை நேசிப்பதாகும். மனித உடலுழைப்பைக் குறைக்காத அறிவியலை வைத்திருப்பதில்  என்ன பயன்?. அறிவியலில் எல்லாமும் சாத்தியம். செயல்படுத்த வேண்டியவர்களின் மனங்கள் அதற்கான தன்மையை எப்போது அடையும்?. வளரும் சமூகம் கற்றலில் தீவிரம் காட்டி வேறு வேலைகளுக்குச் சென்றுவிட, ஆள் பற்றாக்குறை என்ற நிலை வரும்போதுதான் அதற்கான முன்னெடுப்புகள் உருவாகும். ஆனால் அதற்கும் வழி இருப்பதாகத் தெரியவில்லை.  வடக்கிலிருந்து வந்தபடி இருக்கிறார்கள். ஆள்பவர்கள் நம்பும் கடவுள்கள் கனவில் தோன்றிச் சொல்லிச் செய்யவைக்கலாம்.  அது என்றும் நிகழாததும், சாத்தியமில்லாததும் கூட. கோயில் கட்டுவோம். கும்பாபிசேகம் நடத்துவோம். குப்பைகளைப் போடுவோம். கட்சிகளை உருவாக்குவோம், மாநாடுகளை நடத்துவோம். மலைபோல் குப்பைகளை குவிப்போம். எந்த ஆன்மீகவாதியும், அரசியல் தலைவர்களும் பக்தர்களுக்கும், தொண்டர்களுக்கும் குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடும்படியான எளிய கோரிக்கை கூட வைப்பதில்லை.

சுத்தம் சோறு போடும், கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி, என்றெல்லாம் படித்தது எதற்கு குப்பை போடவா?  குப்பை அற்ற தெருமுக்கு எங்கேனும் உண்டா?. குப்பை வண்டி வரும். ஆனால் அவர்களிடம் குப்பையைக் கொடுக்க மாட்டோம். நமக்குத்தான் தெரு முக்கு இருக்கே என நினைப்பவர்கள் எல்லா வீதிகளிலும் உண்டு. குப்பைகள் உருவாக்கும் நோய்கள் குறித்து எந்த மீடியாக்களும் பேசுவதில்லை. அதில் அவர்களுக்கு என்ன வருமானம் இருக்கிறது?. லாபமின்றி ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்த மாட்டார்கள். குப்பைகள் இன்றி எதுவுமில்லை என்ற நிலையே உண்மையானதாக இருக்கிறது.  எல்லா நீர்நிலைகளிலும் குப்பைகளைக் கொட்டுவோம். எல்லாப் பொது இடங்களிலும் குப்பைகளைக் கொட்டுவோம். அது எங்கள் பிறப்புரிமை என்பதைப் போன்று சமூகத்தின் பெரும்பான்மையோர் இருக்கிறார்கள் எனும் உண்மை கசக்கத்தான் செய்யும். சாதி, மத, இன, வர்க்கப் பாகுபாடு இன்றி எங்கும் நிறைந்திருக்கிறார்கள். எங்கேனும் காட்டுப் பக்கம் சென்றாலும் பிளாஸ்டிக் டம்ளர்களும் பீர், பிராந்தி பாட்டில்களும் சிதறிக் கிடக்கின்ற காட்சிகள். அவ்வளவு தூரம் பயணித்துத் தூக்கிவந்து குடித்துக் கும்மாளம் அடிக்கும் நாய்களுக்குத் திரும்பக் கொண்டு சென்று குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்ற அறிவு என்றுதான் வருமோ?. வனவிலங்குகள் இதனால் எத்தகைய பாதிப்புகளுக்கு ஆளாகின்றன என்பது குறித்துக் கொஞ்சமேனும் புரிய முயற்சி செய்யும் காலம் என்றுதான் வருமோ.

காலை நடைப் பயிற்சியைப் பூங்காவில் நிகழ்த்திக் கொண்டிருக்கையில் முதல்நாள் இரவு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் கழிவுகள் சிதறிக் கிடந்தன. மிக அருகில் குப்பைத்தொட்டி இருந்தும். என்னத்தப் படித்துக் கிழிக்கிறார்களோவென திட்டியபடி கடக்கையில் அங்கு பணிசெய்தபடி இருந்த தூய்மைப் பணிப் பெண்ணிடம் என் ஆதங்கத்தைச் சொல்ல, ” விடுங்க சார், புள்ளைங்க சந்தோசமா இருந்துட்டுப் போகட்டும், வயது ஏற ஏறப் பொறுப்பாகிவிடுவார்கள்.” என்றபடி தன் வேலையைத் தொடர்ந்தார். பெரியவர்களே அக்கறையற்று இருக்கிறார்கள். அவர்களை மட்டும் குறை கூறி என்ன பயன் என நினைத்திருக்கக் கூடும். 

இருப்பதிலேயே நமக்கு எளிதான செயல் எல்லாவற்றிற்கும் அரசைக் கைகாட்டி விடுவது. பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி என எங்கும் குப்பை வண்டிகள் நிறைய ஏற்பாடு செய்து, மக்கும், மக்கா குப்பைகளைப் பிரித்துத் தர வேண்டுகோள் பாடல்கள் ஒலிக்கச் செய்து, முடிந்தளவு முயற்சிகளைச் செய்தபடிதான் உள்ளார்கள். மக்கும் குப்பைகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரிப்பு, மீத்தேன் வாயு எடுத்தல் எனத் தொழில்களை உருவாக்கி வங்கிக் கடன் போன்ற உதவிகளைச் செய்தல் என அரசுகள் முயற்சி செய்யாமல் இல்லை.

விவசாய நிலங்களில் ஒரு பகுதியை ஒதுக்கி, சிறு குழி தோண்டி குப்பை, மாட்டுச் சாணம் போன்றவற்றைக் கொட்டி வைப்பார்கள். பயிரிடும் காலம் வரும்போது நிலங்களை உழுது கொட்டியிருக்கும் குப்பைகளை அள்ளி நிலங்களில் கொட்டிப் பயிரிடுவார்கள். இப்பழக்கமும் இரசாயன உரங்களின் வரவுக்குப் பின்னர் குறைந்து போய், இப்போ இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது. 

நம் வாழ்வு முறையில், அரசியலில் உருவான மாற்றங்கள் இயல்பான, இயற்கையான வாழ்வைத் தொலைத்துவிட தற்போது குப்பைகளுக்கிடையே நம் வாழ்வு எனும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். இது பெரும் ஆபத்தான சூழல் என்பதை உணர்ந்து குப்பைகளைக் கையாளும் அறிவை ஒவ்வொருவரிடமும் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 

” பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம்; நன்பால்

கலந்தீமை யால் திரிந்தற்று” 

பண்புகள் இல்லாத ஒருவர் பெற்ற பெருஞ்செல்வம், நல்ல பாலை வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தின் அழுக்கினால் எவருக்கும் பயன்படாமல் பால் திரிந்து கெட்டது போன்றதாகும். எனக் கூறும் திருக்குறள் நாம் வாழும் இச் சமூகத்திற்கும் பொருந்தும். 

நாம் நம் உலகைக் குப்பைப் பாத்திரத்தில் வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டிய காலம் இது.

One thought on “பாழாகப்போகும் இப்பால் உலகு

  1. உண்மையை செருப்பால் அடித்தது போல இருக்கிறது இந்த கட்டுரை… குப்பைகளைப்பற்றிய எந்தக் கவலையும் அதை சுற்றி வசிப்பவர்களுக்கு இருப்பதில்லை.. சமூகம் யாரையெல்லாம் சாதியின் பெயரால் ஒதுக்கிவைக்கிறதோ அவர்கள்தான் எல்லா ஜாதிக்காரனின் குப்பைகளையும் எந்தப் புகாருமின்றி சுத்தம் செய்கிறார்கள் என்ற உண்மை கவிஞரின் அற்புதமான வரிகள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version