
காட்டுயிரினங்களில் உருவத்தில் பெரிதான யானையை விரும்பாதவர்கள், ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. ஒரு கிராமத்தில் யானை வருகிறதென்றாலே வீட்டிற்குள் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள் யானையைப் பார்க்க கூட்டங்கூட்டமாய் திரண்டு விடுவார்கள்; பறந்து வருவார்கள்; பரவசம் அடைவார்கள். இப்படி எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உயிரினமான யானையைப் பற்றிய மொத்த வரலாறும் அடங்கிய ஒரு நூல் தான் ‘யானைகளும் அரசர்களும்.’ யானை அளவிற்குத் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறும் விலங்கினம் வேறொன்றுமில்லை. தமிழ் இலக்கியத்தில் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட பெயர்களைக் கொண்ட ஒரே உயிரினமாக யானை மட்டுமே உள்ளதாக அணிந்துரையில் வரலாற்று ஆசிரியரான ஆ.இரா. வேங்கடாசலபதி சுவையோடு எழுதியுள்ளார்.
சங்க இலக்கியத்தில் யானை
புராணங்களில் யானை
போர்களில் யானை
மன்னர்களின் மனதில் யானை
சினிமாக்களில் யானை
கோயில்களில் யானை
கடின வேலைகளில் யானை
கதைகளில் யானை
கடத்தல்களில் யானை
அழிவில் யானை
இப்படி யானை இல்லாத காலங்களும் இல்லை; யானை இல்லாத களங்களும் இல்லை. பேருருவமும், அழகான துதிக்கையும் நீண்ட தந்தங்களும் கொண்ட காட்டுயிராகிய யானைகளை நேரில் பார்க்கக்கூடிய கடைசி தலைமுறை இந்நூற்றாண்டில் (21-ம்) வாழக்கூடியவர்களாகத் தான் இருக்கும். என்ன ஆச்சரியமாய் இருக்கிறதா கேட்பதற்கு! இந்த புத்தகத்தை வாசித்து முடித்தப்பின் உங்கள் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களில் இது தான் முக்கியமானதாக இருக்கும்; துயரை வருவிக்கும். யானையை எங்கு கண்டாலும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னால் வரும் உங்கள் தலைமுறைகள் அரிய உயிரினமாக (டைனோசர் போல) கருதி வியப்பார்கள். வாருங்கள் எக்கச்சக்க சுவாரசியமான தகவல்கள் கொண்ட யானைகளோடு சற்று உலா வருவோம் உவகையோடு…
யானையைப் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய இந்நூலை எழுதியவர் தாமஸ் ஆர் டிரவுட்மன். ‘திராவிட உறவுமுறை’, ‘திராவிடச் சான்று’ ஆகிய புகழ்பெற்ற நூல்களை எழுதிய தாமஸ் டிரவுட்மன் இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஏ.எல். பாஷம் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவிலுள்ள மிஷிகன் பல்கலைக்கழகத்தில் 1968 முதல் 2010 வரை மானிடவியல் மற்றும் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிய டிரவுட்மன் இப்பொழுது அங்கே தகைசால் பேராசிரியராக விளங்குகிறார். என்ற தமிழில் அழகுற மொழிபெயர்த்தவர்கள் சு.தியோடர் பாஸ்கரனும் (சூழலியல் எழுத்தாளர்), ப.ஜெகநாதனும் (பறவைகளைப் பற்றி ஆராய்பவர்) தான். மிக நேர்த்தியான மொழிபெயர்ப்பு. தமிழுக்கு முக்கியமான அன்பளிப்பு; அர்ப்பணிப்பு.
யானைகளின் உடலமைப்பு பற்றி நமக்கறியாத தகவல்களை அள்ளித் தந்துள்ளது இந்நூல். ஆசிய யானைகளின் உடலமைப்பு நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. யானையின் தும்பிக்கை மூக்காகவும், மேலுதடாகவும் இருக்கிறது. ஆண் யானைகளுக்கு இரண்டு முன்பற்கள் நீண்டு வளர்ந்து தந்தங்களாகி உள்ளது. பெட்டை யானைகளின் (பிடி) தந்தங்கள் குட்டையாக இருக்கும். தந்தமில்லா ஆண் யானைகள் மக்னா என்று அறியப்படுகின்றன. வாயினுள் நான்கு பற்கள் தான் இருக்கும். அதிகமான தாவரங்களை நாள் முழுக்க உண்பதால் பற்கள் விரைவிலேயே தேய்ந்துப் போய்விடும். 70-வயதுக்கு மேல் அதனால் வாழ இயலாது. ஒரு நாளைக்கு 12- முதல் 16 மணி நேரம் இரை தேடுவதில் செலவழிக்கிறது யானை. யானைகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. அதன் பாதங்களில் மட்டுமே சில சுரப்பிகள் உள்ளன. அதனால் யானைகளால் சூரியனின் சூட்டைத் தாங்கிக் கொள்ள இயலாது. இவையே யானை காடுகளுக்குள் வசிப்பதற்கான முக்கியக் காரணம் (இதை உணராமல் யானைகளை கோயில்களிலும் வீடுகளிலும் வளர்ப்பவர்களை என்னவென்று சொல்வது). யானைகள் மந்தைகளாகத் தான் வாழும். பெட்டை யானை தான் தலைமை தாங்குகிறது. யானையின் சினைக்காலம் 18 முதல் 22 மாதங்கள் வரை தான். பெரும்பாலும் ஒரு கன்றைத் (குட்டியல்ல) தான் ஈன்றெடுக்கும். யானைக்கு மதம் பிடிக்க முக்கிய காரணம் டெஸ்ட்டோஸ்டிரோனின் வெளிபாடு மற்றும் ஹார்மோன் மாற்றங்களே. மதம் பிடிப்பதென்பது ஒரு யானை நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்பதற்கு சான்றாகும் என்கிறது இந்நூல். 20-வயதுக்கு பின் தான் யானைகள் வேலை செய்யவே துவங்கும். 60- வயதுக்கு பின் தான் போர்களில் சிறந்து விளங்கும். இப்படிப்பட்ட யானைகள் தான் போர் யானைகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதுவரை பராமரிப்பது பெரிய வேலையல்லவா… குடல் பகுதியே 30 மீட்டர் நீளமுள்ளதாம். செரிமானத்திற்கு அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வதால் பராமரிக்கும் பணி கடினமானதே. யானையை வழிநடத்த யானைப் பாகன் பயன்படுத்தும் அங்குசம் பற்றியும் குறிப்புகள் உண்டு நூலில். இதைப் பற்றி மகாபாரதத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளதாகவும், சிற்பங்களும் உள்ளனவென்றும் நூல் கூறுகிறது. ஆப்பிரிக்க யானைகளை விட ஆசிய யானைகள் பெரியவை. இன்னுமுள்ளது சுவாரசியமான தகவல்கள். வாசித்து மகிழுங்கள்.
நூலில் போர்க்காலங்களில் யானையின் பயன்பாடும், அரசர்களின் நிலையும் அதிகமாய் இடம்பெற்றுள்ளது. இந்திய மன்னராட்சிகளில் யானைகள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் முதன்மையான பணியே போர் தான். இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் சிறந்த போர் யானைகளைப் பற்றிய குறிப்புகள் அடிக்கடி இடம்பெறுகின்றன. போ.ர் யானைக்கான சரியான வயது 60. யதிஷ்ட்ரரின் (தர்மன்) முடி சூட்டலின் போது 60 வயது யானைத் தான் பரிசாக அளித்திருக்கிறார்கள். எகிப்திய நாகரிக காலத்தில் எட்பூவுக்கு அருகில் ஹிரெங்கன்போலிஸ் கல்லறைகளில் இரண்டு இளம் யானைகளை (10 அல்லது 11 வயது) புதைத்து வைத்திருந்ததை நூல் கூறியுள்ளது. எகிப்திய மன்னர்களான முதலாம் துட்மோஸ், மூன்றாம் துட்மோஸ் இருவரும் வடக்கு சிரியாவில் உள்ள யானைகளை வேட்டையாடியுள்ளனர். மூன்றாம் துட்மோஸ் (கி.மு. 1504 – 1450) 120 யானைகளுடன் தன்னந்தனியாகப் போ.ரிட்டுள்ளார். அசிரியா மன்னரான திக்லாத் -பைலீசரின் (கி.மு 1114 -கி.மு.824) கல்வெட்டு ஒன்று அவர் 10 ஆண் யானைகளை கொன்றதாக கூறியுள்ளது. வேட்டையில் முக்கிய அங்கமே யானைகள் தான். அதே நேரத்தில் மன்னரின் துணிவிற்கும், திறமைக்கும் அது தான் அடையாளமாக திகழ்ந்துள்ளது. யானை செழித்ததற்கு காரணமே முடியாட்சி மன்னர்கள் தான் யானைக்காக வாழிடத்தை விரிவுபடுத்தியும், காடுகளைப் பாதுகாத்தும் வந்துள்ளனர். யானைகளை பராமரிக்க தனியான பணியாட்களையும் நியமித்துள்ளனர். மன்னர்கள், ஆளுநர்கள் யானைகள் உள்ளிட்ட உயிரினங்களை கப்பமாக தந்துள்ளார்கள். பெட்டை யானைகள் (பிடி), காண்டாமிருகம், பெண் குரங்க, ஒரு காட்டெருமை முதலியவற்றை காணிக்கையாகப் பெற்றேன் என அரசர் சல்மநீசர் கூறியுள்ளார்; ஆதாரங்கள் நூலில் உள்ளது. அங்க தேச (கிழக்கிந்தியாவில் உள்ள ஒரு தேசம்) மன்னன் ஒரு சமய குருவுக்கு 10,000 யானைகளைப் பரிசாக வழங்கியுள்ளான்; அலெக்ஸாண்டரின் தளபதி செலூகஸ் மௌரிய மன்னனான சந்திர குப்தரிடம் 5000 யானைகளைப் பெற்றுக் கொண்டு கிழக்கிலிருந்த குட்டி ராஜ்யங்களை விட்டுக் கொடுத்துள்ளார். யானைகள் உயரிய இடத்தில் இருந்துள்ளதை நாம் வியந்து அறிய நேர்கிறதல்லவா! யானைகளில் சவாரி செய்ததற்கான ஆதாரம் மெசபடோமியா சுடுமண் சிற்பத்தில் (கி.மு.2000) கண்டறியப்பட்டுள்ளது.
புராணங்களிலும், பண்டைய வரலாறுகளிலும் யானையைப் பற்றிய செய்திகளும், நிகழ்வுகளும் அங்கங்கே இருப்பதையும் நூல் சுட்டிக்காட்டுகிறது தெளிவாக; சுவையாக. அயோத்தி நகரம் எப்பொழுதுமே மலைகளைப் போல் தோற்றமளிக்கும் மதங்கொண்ட யானைகளால் நிரம்பியிருக்குமென நூல் வியப்பாய் விளக்குகிறது. மகாபாரதத்தில் இளவரசர்களுக்கு அளிக்கப்படும் போர் பயிற்சிகளில் நால்வகைப் படைகளில் யானைப் படை ஒன்றும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மகத நாட்டு மன்னன் நந்தா 4000 யானைகள் கொண்ட படையை வைத்திருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். மகத வேதகால ஆரியர்களுக்கு யானை ஒரு புதுமையான மிருகமாக இருந்துள்ளது. யானையைக் குறிக்க ஹாஸ்தின் (கையுள்ள விலங்கு) என பெயரிட்டு அழைத்துள்ளனர். இச்சொல் மருவி ‘ஹாத்தி’ என இந்தி சொல்லாக இன்றும் வழங்கப்படுகிறது.
யானைகளின் அழிவு படிப்படியாக காலங்கள் கடக்க கடக்க நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. போ.ருக்கு பயன்படும் ஆண் யானைகளைப் பிடிப்பதற்கு பெட்டை யானைகளைப் பயன்படுத்தியுள்ளனர். வட்டமான குழி வெட்டி அதில் மரப்பாலம் அமைத்து பெட்டை யானையை அக்குழிக்குள் விட்டு ஆண் யானைகளைப் பிடிப்பதை நூல் அழகாய் கூறியுள்ளது. சங்க இலக்கியத்தில் குழி பறித்துப் பிடிக்கும் முறையும் குறிப்பிடப்பட்டுள்ளது. யானைகளை பிடிப்பதற்கான 4 வழிகளை நூல் விவரிக்கிறது. செங்கடலை ஒட்டியுள்ள பழங்குடியினர் யானையின் இறைச்சியை உண்டு வாழ்ந்துள்ளனர். நூலைப் பொறுத்த வரை மூன்று காலங்களில் யானைகளின் வளர்ச்சி வீழ்ச்சி தரவுகளோடு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் எப்படியெல்லாம் சிறந்து விளங்கியது என்பதையும், நிகழ்காலத்தில் அதன் நிலையையும், எதிர்காலத்தில் யானை என்ற உயிரினமே உயிரோடிருக்குமா? என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது எனவும் அறிய முடிகிறது நூலின் தரவுகளாலும், தகவல்களாலும். சீனாவில் யானை அழிந்ததற்கு முக்கிய காரணியே வேளாண்மை, காடழிப்பு, தந்தவேட்டை போன்ற மனித நடவடிக்கைகள் தான் என அறிஞர் வென் ஹூவான்ரனின் கூறியிருக்கிறார். ஆப்பிரிக்க யானையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காரணம், தந்தத்துக்கு பெரும் கிராக்கி. இந்தியாவில் 1800-க்கு பின்னர் ஆங்கிலேய ஆட்சியில் சாகச வேட்டையின் காரணமாகவே அழிவை சந்தித்துள்ளது. ஒருவர் 1000 யானைகளைச் சு.ட்டுக் கொன்றார் என்ற பதிவுள்ளதாம் ( கொடுமையல்லவா!). யானைகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அதன் வாழிடம் விரிவடையாததே அழிவுக்கு ஒரு முக்கிய காரணம். யானையைப் பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டங்களும் வருடவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. யானையின் காப்பிடங்களைப் பற்றி அர்த்தசாஸ்திரம் பதிவு செய்துள்ளதை நூல் வெளிப்படுத்துகிறது. இந்தியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் தான் யானைகளின் நடமாட்டம் உள்ளது. அதுவும் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளா (மேற்கு தொடர்ச்சி மலை) மாநிலங்களில் தான் வாழ்கிறது என்பது நமக்கெல்லாம் மகிழ்வுக்குரிய தகவலல்லவா.
யானைகளைப் பற்றி சுவாரசியமான தகவல்களையும், தரவுகளையும் அடங்கிய இந்நூலை வாசிக்க வாசிக்க இனிமை தான்; மகிழ்ச்சி தான். எழுதினாலும் தீராத பக்கங்கள் தான். சிறு வயதில் யானை மீது பயணித்தது நினைவினின்று இன்றும் அகலவில்லை. அதை வியப்பாயல்லவா கண்டேன் அன்று. எளிதில் நீங்காத நினைவலையது. மாஞ்சோலைக் காடுகளில் யானைகளைக் காண ‘யானைச் சதம்பல்’ என்ற காட்டுக்குள் இருக்கும் இடத்திற்கு நட்புகளோடு பயமறியாமல் சென்றது நினைவில் வந்தது. யானைகளைப் பற்றிய சினிமாக்கள் யானை சைக்கிள் ஓட்டுவது, கும்கி, பேபி ஷாலினியோடு விளையாடுவது இதையெல்லாம் மகிழ்ந்து ரசித்துள்ளேன். யானைகளைப் பற்றிய அதிகமான தகவல்களைக் கொண்ட இந்நூலிலிருந்து முக்கிய தகவல்களை எடுத்து பாடபுத்தகத்தில் மாணவர்கள் அறியும் வண்ணம் கொண்டு வரலாம். கோவில் யானைகளைச் சுதந்திரமாக காடுகளுக்கே திருப்பி அனுப்பி வைக்கலாம்; மகிழ்வாக சிறிது காலம் வாழட்டுமே. யானைகளின் வலசைப் பாதைகளை ஆக்கிரமித்து அழிக்காமல் காக்கலாம்; யானைப் பற்றிய நூல்களை அழியாமல் புதுப்பிக்கலாம்; கடின வேலைகளில் யானைகளை வதைப்பதை புகார் அளிக்கலாம்; அரசு வாழிடத்தை விரிவாக்கலாம். இவையெல்லாம் நாம் வருங்காலத்தவருக்கு செய்யும் கடமைகள் தான். நூலை வாசித்தாலே மனம் யானைகளைப் பற்றிய தரவுகளைக் காக்க துடிக்கும்; ஆசைகள் பிறக்கும். அழகான இந்நூலை எழில் நிறைந்த யானைகளோடு உறவாடி வாசித்து மகிழுங்கள்; உயிரினங்களை நேசியுங்கள்; சுவாசியுங்கள். அற்புதமான நூலை தவறவிடாதீர்கள். வாசித்தே ஆக வேண்டிய பட்டியலில் இருக்கக் கடவது.