
ஆசிரியர் பாஷாசிங் ஒரு பத்திரிக்கையாளர், சமூக ஆர்வலர், பெண் எழுத்தாளர். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கக்கூடிய மனிதக் கழிவகற்றும் தொழிலாளர்களை அவரவரின் பகுதிகளுக்கு நேரடியாக சென்று அம்மக்களின் துயரங்களை மிக விரிவாக எழுதியுள்ளார். இந்நூலை தமிழில் மொழிப்பெயர்த்தவர் விஜய்சாய்.
இந்நூலை படிக்கத் தொடங்கிய போது முழுவதும் படிக்க முடியாது என்று தோன்றியது. காரணம்! அருவருப்பு. அதன் காட்சிகளை கற்பனை செய்ய முடியவில்லை. உணவு உண்ணவே பிடிக்கவில்லை. ஆனால், இந்நூலை முடிக்கும் பொழுது அந்த மனநிலை வேறு விதமாக மாறிவிட்டது.
மலம் அள்ளும் அவலங்களை நம்மால் படிக்கவே முடியவில்லை என்றால்! அந்த சூழலில் வாழ்ந்து துயரத்தை அனுபவிக்கும் அத்தகைய மக்களின் நிலையை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.
“இந்தியாவில் வாழும் மறைக்கப்பட்ட மனிதர்கள் மலம் அள்ளும் மனிதர்கள்.” அப்படி மறைக்கப்பட்ட மனிதர்களைத் தேடி இந்தியாவில் உள்ள காஷ்மீர், டெல்லி, பீகார், குஜராத், உத்தரப் பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு என ஒவ்வொரு மாநிலமாக சென்று அம் மக்களின் வாழ்வியல் துயரங்களை சொல்லும் ஆவணம் இந்த நூல்.
மனிதக் கழிவை மனிதரே அகற்றும் கொடுமையை தடை செய்யும் சட்டம் 1993 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டாலும் பி.ஆர். அம்பேத்கர் சொன்னதைப் போல் “எந்த ஒரு சட்டமும் அதுவாகவே நடைமுறைக்கு வருவதில்லை. அதனை பிடித்து தள்ளி நடைமுறைக்கு கொண்டுவர மக்கள் சக்தி தேவைப்படுகிறது.”
அனைத்து மாநிலங்களிலும் ஆண்களை விட பெண்களே மலம் அள்ளும் தொழிலில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். அதிலும் குஜராத், காஷ்மீர், உத்தரப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் “உலர் கழிப்பிடங்கள்” பற்றி கூறப்பட்டவை மலம் அள்ளுபவர்களை மனிதர்களாக கூட நினைக்கவில்லை என்பதை உணர்த்துகிறது.
உலர் கழிப்பிடத்தை சுத்தம் செய்வது என்பது, கழிப்பிடத்தில் விழுந்து கிடக்கும் மலத்தை அப்படியே கூடையில் அள்ளி தலையில் சுமந்து சென்று அருகில் இருக்கும் வெட்ட வெளி நிலத்தில் கொட்டுவது. அதற்கு கொடுக்கப்படும் ஊதியமோ மிகவும் சொற்பம். அதிலும் மழைக்காலம் என்றால் மலக்கூடையை தலையில் சுமந்து செல்லும் பொழுது மலமானது முகம் முழுக்க வழிந்து விடுமாம். எவ்வளவு தேய்த்து குளித்தாலும் கூந்தலில் உள்ள மலவாடை தங்களின் வாழ்நாள் முழுவதும் கூடவே இருக்கும் என்றும் சில நேரங்களில் கைகளில் அள்ளும் நிலையும் மிகவும் கொடுமையானதாக இருந்தது.
மேலும் திருமணம் ஆன பெண்களின் கைகளில் மருதாணி மறைவதற்குள்ளாகவே அந்த தொழிலுக்குள் செல்லும் நிலைமை, கருவுற்றிருந்தாலும் மலம் அள்ளுவது, மாற்று வேலையைச் செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு வேறு வேலையை தர யாரும் முன்வராதது, அரசும் மாற்று வேலையை தராமல் இழுத்தடிப்பது போன்ற போராட்டங்களுக்கு நடுவிலும் ஒரு சில பெண்கள் மாற்று வேலைக்கு சென்று வெற்றி பெற்றது என இந்த புத்தகம் முழுமையும் மலம் அள்ளும் மனிதர்களின் துயரங்களால் நிறைந்து இருக்கிறது.
இதில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த மலக்குழி மரணங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் இருப்புப் பாதையில் கிடக்கும் மலங்களை இன்னும் சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கான மாற்று என்ன? என்பதற்கு பல வழிமுறைக்கு பின் ஒன்றை மட்டும் தான் புரிந்து கொள்ள முடிகிறது. அது, “நாடு தழுவிய அளவில் பரந்து இருக்கிறது மனித மலத்தை மனிதரே சுத்தம் செய்யும் அவலம். அதனை மூடி மறைக்க பார்க்கிறது அரசாங்கம்” ஆம்! மைய அரசும், மாநில அரசுகளும் மலம் அள்ளும் முறையை ஒழித்துக் கட்டுவதற்கு பதிலாக அதனை மூடி மறைக்கவே செய்கின்றன எனவும், சுத்தப்படுத்தும் பணியை நவீனமயமாக மாற்றும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் இந்நூலின் மூலம் அறிந்துக் கொள்ள முடியும்.
ஒவ்வொரு பகுதிகளிலும் மலம் அள்ளும் வழக்கத்தில் சிறு சிறு மாற்றங்கள் இருந்தாலும் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பது சாதி மட்டுமே. ஆனால் ஒன்று! யாருமே அத்தொழிலை விரும்பி செய்யவில்லை. தங்களின் பிள்ளைகள் அதனைத் தொடர விரும்பவும் இல்லை. கட்டாயத்தின் பெயராலும், வறுமையாலும், மாற்று வழி இல்லாமாலும், அவர்களுடைய குலத்தொழில் என்று அவர்களையே நம்ப வைக்கப்பட்டதாலுமே “வாழ்வதே அவமானம் என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அம்மனிதர்கள்.”
மேலும் இந்நூலில் ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை மாவட்டங்களில் மலம் அள்ளும் அவலம் தொடர்கிறது? அவர்களுடைய வருமானம், அவர்கள் புறக்கணிக்கப்படும் விதம், கல்வியைத் தொடர முடியாத நிலை, அவர்களுக்கான பெயர்கள், கழிப்பிடங்களின் வகைகள், அரசாங்கம் மேற்கொள்ளாத நடவடிக்கைகள், புறக்கணிப்புகள் என அனைத்தையும் வருடக்கணக்கில் சேகரித்து இந்நூலைப் படைத்துள்ளார். அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் : பாஷா சிங்
பதிப்பகம் : விடியல்
விலை : ரூ. 300
பக்கங்கள் : 400
வகைமை : கட்டுரைகள்