
இன்றைய உலகில், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் அதிகரிப்பு, மனித வாழ்க்கையை சுலபமாக்கியதோடு, சுற்றுச்சூழலுக்கு புதிய விதமான ஆபத்துகளையும் ஏற்படுத்தியுள்ளது. கண்ணுக்குத் தெரியும் குப்பையே நமக்கு பலவகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் கண்ணுக்குத் தெரியாத குப்பை வேறா? என்று முழிபிதுங்குகிறது. கண்ணுக்குத் தெரியாத குப்பைகள் (Invisible Waste) என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் நேரடியாகக் காணாத, உணராத, ஆனால் சுற்றுச்சூழலுக்குத் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும் குப்பைகளைக் குறிக்கும். இதனை மற்றொரு சொல்லில் மறைமுக குப்பை (Hidden Waste) என்றும் சொல்லலாம். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று தான் மைக்ரோபிளாஸ்டிக். (Microplastic) மனிதக் கண்களுக்கு பெரும்பாலும் தெரியாத, பிளாஸ்டிக் துணுக்குகளாகும். அவை பொதுவாக 5 மில்லிமீட்டருக்கு குறைவான அளவுடையவை. இவற்றில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மைக்ரோபிளாஸ்டிக் என்று இரண்டுவகையாகப் பிரிக்கிறார்கள்.
முதன்மை மைக்ரோபிளாஸ்டிக் என்பது ஆரம்பத்திலேயே சிறு துகள்களாக உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் (உதா: மைக்ரோபீட்ஸ் (Face wash, toothpaste, scrub-இல் உள்ள சிறிய பிளாஸ்டிக் கற்கள், Synthetic fibers (நைலான், பாலியஸ்டர் போன்ற துணிகளில் இருந்து வெளிவரும் துகள்), Plastic pellets (தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சிறு பிளாஸ்டிக் கோள்கள்) இரண்டாம் நிலை மைக்ரோபிளாஸ்டிக் என்பது பெரிய பிளாஸ்டிக் பொருட்கள் முறிந்து உருவாகும் துகள்கள். (உதா: பாட்டில்கள், பைகள்) சூரியஒளி, காற்று, நீர் ஆகியவற்றால் முற்றும், சிறு துணுக்குகளாக முறிந்து மாறும். பிளாஸ்டிக் கழிவுகள் காலப்போக்கில் மைக்ரோபிளாஸ்டிக்காகப் பல்வேறு இடங்களில் சேருகின்றன.
நாம் கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு சிறியதாயிருந்தாலும், மைக்ரோபிளாஸ்டிக் நம் வாழ்வை பெரிய அளவில் தாக்குகிறது.
நாம் தினசரி பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் — துவைக்கும் துணிகள், பாட்டில்கள் என பல பொருட்கள் மெல்ல மெல்ல மைக்ரோபிளாஸ்டிக்காக மாறுகின்றன. இவை கடலில் செல்லும் போது மீன்கள் அதை உணவாகக் கருதி விழுங்குகின்றன. அந்த மீனை நாம் சாப்பிடுகிறோம். மனித உடலில் மைக்ரோபிளாஸ்டிக் சேரும் போது, அது ஹார்மோன் மாற்றங்கள், இனப்பெருக்க பாதிப்பு, வயிற்று நோய்கள் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவை எப்படியெல்லாம் உருவாகிறது என்றால் Washing machinesனில் துவைக்கும் போது நைலான்/பாலியஸ்டர் துணிகளில் இருந்து சுமார் 700,000 துகள் வெளியேறலாம் என்று சொல்லப்படுகிறது, Plastic packaging ஒவ்வொரு முறையும் நாம் பிளாஸ்டிக் திறக்கும் போதும் சிறு துகள்கள் வெளியேறலாம். இவற்றையெல்லாம் அறியும் போது மனிதனும் இயற்கையுமே சந்திக்கின்ற மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இந்த மைக்ரோபிளாஸ்டிக் மாறியிருக்கிறது.
Vrije Universiteit Amsterdam -Netherlands நிறுவனம் 2022 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வில் மனித இரத்தத்தில் முதன்முறையாக மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கண்டறியப்பட்டன. இவ்வாய்வில் பரிசோதிக்கப்பட்ட நபர்களில் 80% பேருக்கு இரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது. இதன் முடிவாக மனித உடலுக்குள் பிளாஸ்டிக் நுழையக்கூடும் என்பதை உறுதி செய்தனர். அதன்பிறகு Hull York Medical School- UK, நிறுவனம் 2022 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வில் மனித நுரையீரலில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் Polypropylene, PET போன்ற பொருட்களை கண்டுபிடிக்கப்பட்டது. இதன் முடிவுகள் மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன நுரையீரலில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பதன் வழியாக நாம் சுவாசிக்கும் காற்றிலும் மைக்ரோபிளாஸ்டிக் இருக்கலாம்? என்ற கேள்வியே அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது.
WWF Report & University of Newcastle & UNEP Report -2019 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி குடிநீர் (bottled water), கடல் உணவு, உப்பு அகியவற்றில் இருந்து மைக்ரோபிளாஸ்டிக் நமக்குள் நுழைகிறது. ஆண்டுதோறும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கடலுக்குள் செல்கின்றன. இவை காலப்போக்கில் மைக்ரோபிளாஸ்டிக்காக மாறி, மீன்கள், புழுக்கள், பாம்புகள், நுண்ணுயிரிகள் வரை தாக்கப்படுகிறார்கள்.
Ocean Wise Study, Canada, நிறுவனம் 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வில் ஒரு சலவை செய்முறை போது குறிப்பாக Polyester, Nylon, Acrylic துணிகளில் இருந்து 7 லட்சம் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் வெளிவருகின்றன. சமீபத்திய 2023-இல் American Chemical Society–யின் ஆய்வில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் செல் மெம்பிரேன் (Cell membrane)-ஐ பாதிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டது. அதேபோல் China Medical University-2023 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வில் மைக்ரோபிளாஸ்டிக் குடலில் உள்ள நுண்ணுயிர்களை (gut microbiome) எப்படி பாதிக்கிறது என ஆராய்ந்தார்கள் அவற்றில் மைக்ரோபிளாஸ்டிக் குடலில் தங்கியிருப்பதால் அந்த மைக்ரோபியோம்கள் சமநிலையை இழக்கின்றன இதன் விளைவாக குடல் அழற்சி, எதிர்ப்பு சக்தி குறைதல், நீண்டகால நோய்கள் ஆகியவற்றைத் தூண்டும். கடல் உயிர் சூழலில் 800க்கும் மேற்பட்ட உயிரினங்கள் மைக்ரோபிளாஸ்டிக் விழுங்கும் அபாயத்தில் உள்ளன. உலகில் 93% bottled water மற்றும் 83% tap water மைக்ரோபிளாஸ்டிக் கொண்டுள்ளன. இந்தியா, இண்டோனேசியா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் மீன்களில் 30% மைக்ரோபிளாஸ்டிக் உள்ளது. (Sea salt) பல வகை உப்புகளில் 90% வரை மைக்ரோபிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளது. இப்படியாக மைக்ரோபிளாஸ்டிக்கின் பாதிப்பே இந்தநிலையில் இருந்தால் அதற்கடுத்தப்படியாக நானோபிளாஸ்டிக் பற்றிய ஆய்வுகள் தலைச்சுற்ற வைக்கிறது. (Nanoplastics) நானோபிளாஸ்டிக் என்பது 1 மைக்ரோமீட்டருக்கும் குறைவான அளவுடைய துகள்கள். இவை ரத்தத் தடிமன்கள், மூளை barrier போன்ற உடல் பாதுகாப்புகளை கடந்து செல் உட்பகுதிக்கு செல்லக்கூடியவை. இவை தொடர்புடைய நோய்கள்: Parkinson’s, Alzheimer’s, மற்றும் Cancer பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. பல வகை உப்புகளில் 90% வரை மைக்ரோபிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் தடுப்பது எப்படி ? என்னதான் செய்வது. முதலில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பதிப்புக்களை / விளைவுகளை மக்களிடம் விழிப்புணர்வாக மேற்கொள்ள வேண்டும். அரசு மிக தீவரமான சட்ட திட்டங்களின் வழியாக நிகழ்த்த வேண்டும். மாற்றுப் பொருட்கள் BioPlastic, Filter Technologies – Washing machine filter, stormwater plastic trap, microplastic capture net. Plastic-eating enzymes & bacteria போன்ற பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இத்தகையப் பிரச்சனையை சரி செய்ய முனைய வேண்டும். 2023ஆம் ஆண்டு UNEP (United Nations Environment Programme) – மைக்ரோபிளாஸ்டிக் ஒரு “Planetary Health Crisis” என்று அறிவித்து எச்சரிக்கைவிடுத்திருக்கிறது.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை நாம் கைவிடவேண்டும் இது உடனே சாத்தியமா என்றால் இல்லை தான். ஆனால் வரும் தலைமுறைக்கும் நாம் கையளிக்கும் மிகப்பெரிய சொத்து இந்த பூமி தான்.
உதவிய ஆய்வுக்கட்டுரைகள்
- Leslie, H.A. et al. (2022). Discovery and quantification of plastic particles in human blood. Environment International.
- Jenner, L.C. et al. (2022). Detection of microplastics in human lung tissue. Science of The Total Environment.
- WWF Report (2019). No Plastic in Nature: Assessing Plastic Ingestion from Nature to People.
- Ocean Wise & Patagonia (2021). Microfiber shedding from apparel during domestic laundering.
- https://www.jbtc.com/plant-based-protein/blog/minimizing-microplastics-in-the-food-processing-line/
- https://www.independent.co.uk/climate-change/news/microplastics-blood-health-b2048082.html
- https://www.scientificamerican.com/article/from-fish-to-humans-a-microplastic-invasion-may-be-taking-a-toll/