குறைத்தாலும் மீள்சுழற்சியும்

திருவண்ணாமலை நகரத்தை சுற்றியுள்ளவர்களுக்கு மலைச்சுற்றும் பாதை மனதிற்கு நெருக்கமான இடமாக இருக்கிறது. வார இறுதியிலோ அல்லது பல்வேறு அழுத்ததிலிருந்து விடுபட இந்த மலைச் சுற்றும் பாதை பலருக்கும் இதமாகிறது.  ஆன்மீக நகரமாக இந்த ஊரும் இந்த மலைச்சுற்றும் பாதையும் இருக்கிறது. ஒவ்வொரு மாதந்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் ஆன்மீக பயணமாக இந்த ஊருக்கு வருகின்றார்கள்,  தற்போது வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலே லட்சக்கணக்களில் மக்கள் வருகிறார்கள். இது மிகவும் மகிழ்வை தரக்கூடிய செய்திதான் அதேசமயம் இத்தனை லட்சம் மக்கள் கூடுகின்ற இடத்தில் சேரும் குப்பைகள் சூழலை வெகுவாகப் பாதிக்கவே செய்கிறது என்பதையும் மறுக்கமுடியாது. இந்நகரம் தினசரி சுமார் 52 மெட்ரிக் டன் திடக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இதில், சுமார் 40 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, போக்குவரத்தின் மூலம் அகற்றல் செய்யப்படுகின்றன, இது 75% சேகரிப்பு திறனை குறிக்கிறது. 48% வீட்டு கழிவுகள், 42% வணிக கழிவுகள், 10% கட்டுமான கழிவுகள் அடங்கும் என்று ஒரு ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

புள்ளிவிவரமாக இதைச் சொன்னாலும், தினசரி நமது கண்களில் படும் காட்சியை என்ன வென்று சொல்வது. மலையை ஒட்டிச் செல்லும் சாலையில் மான்கள், காட்டுபன்றி, முள்ளம்பன்றிகள், உடும்பு போன்ற வனவிலங்குகள் சாலையில் வந்துவிடாமல் இருக்க தடுப்புவலை வைத்திருக்கின்றார்கள். ஆனால் அவற்றையும் மீறி அவ்விலங்குகளுக்கு பிஸ்கேட், கேரட் போன்ற உணவுகளை வழங்கி செல்ஃபி  எடுத்துக் கொள்ளும் மக்களிடம் ஒரு வேண்டுகோள், பிஸ்கேட் பாக்கெட்டின் நெகிழிகள்,  பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை  உள்ளே போட வேண்டாம் என்பதே அந்த வேண்டுகோள்.  

நகர்புறத்தில் குறிப்பாக வீடுகளிலோ, அலுவலகங்களிலோ, பொது இடங்களிலோ உருவாகும் குப்பைகளை மக்கும், மக்காத, மற்றும் அபாயகரமான கழிவுகளாகத் தனித்தனியாக பிரித்து சேகரிக்கும் செயல்முறைகள் நடைமுறைப்படுத்த வேண்டும். குப்பைகளை தரம் பிரித்தல் (Waste Segregation) என்பது மிக முக்கியமானது, குப்பைகளை அதன் வகைப்படி பிரித்து மேலாண்மை செய்வதற்கான முதல் முக்கிய செயல், இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமான நடைமுறையாகும்.  இன்றும் பரவலாக பார்க்க முடிகிறது மக்கும் குப்பைகளை எல்லாம் மக்காத பிளாஸ்டிக் பையினுள் திணித்து வெளிவராத அளவிற்கு கட்டி குப்பையாக வீசுகின்றனர் இவை மிகவும் ஆபத்தான பாதிப்பை சூழலுக்கு ஏற்படுத்தும். முதலின் குப்பையின் வகைகளை பார்ப்போம்


வகை



எடுத்துக்காட்டு

மேலாண்மை
மக்கும் கழிவு
(Biodegradable)
உணவுக் கழிவுகள், பழங்கள், காய்கறிகள், பூக்கள்உரமாக மாற்றலாம் (compost)
மக்காத கழிவு
(Non-biodegradable)
பிளாஸ்டிக், தக்காளி பைகளை மூடிய அலுமினியம், கண்ணாடிமறுசுழற்சி செய்யலாம் (recyclable)
அபாயகர கழிவு
(Hazardous)
மருந்துகள், பேட்டரி, மின் சாதனங்கள், வண்ணங்கள்சிறப்பு முறையில் மேலாண்மை தேவை
மீள்சுழற்சி குப்பை
(Recyclable)
பத்திரிகைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், துணிகள்மீண்டும் உபயோகிக்கலாம்

இத்தகைய குப்பைகளை தினசரி நமது வீடுகளிலே பிரித்திடலாம், பிரித்தபின், வீட்டு அருகே வரும் நகராட்சி/ஊராட்சி வாகனங்களில் ஒவ்வொரு வகையும் தனித்தனியாக கொடுக்க வேண்டும். அதேபோல் தினசரி பயன்பாட்டிற்கு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் துணி பைகள் பயன்படுத்துதல் வேண்டும்.

வீட்டுக்குப்பையை மேலாண்மை செய்வதில் மிக முக்கியமானவையாக நான் பார்ப்பது மக்கும் குப்பைகலைக் கொண்டு வீட்டு தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு உரமாக கொடுப்பதே.

வீட்டில் தினமும் ஏற்படும் உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் பழத் தோல்கள், இலைகள் போன்ற இயற்கைப்பொருட்களை உரமாக மாற்றுவது மிகவும் எளிமையானதும், பயனுள்ளதும். இதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாத்தும், செடிகளுக்கு தேவையான இயற்கை உரத்தை வீட்டிலேயே தயாரித்தும் கொள்ளலாம். முதலில் ஒரு உரக்கிணறு (compost bin) அல்லது பிளாஸ்டிக் ட்ரம் ஆகியவற்றில் கீழே காற்று செல்லும் holes வைக்க வேண்டும். தினசரி உணவுக் கழிவுகளை அதில் போட்டு, அதன் மேல் வாடிய இலைகள், பழைய செய்தித்தாள் போன்ற உலர்ந்த பொருட்களைச் சேர்க்க வேண்டும். ஒரு தடவை போடப்பட்ட கழிவுகள் நாள்தோறும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குச்சி கொண்டு கிளறி, ஈரப்பதத்தை பரிசோதிக்க வேண்டும். அதிக ஈரப்பதம் இருந்தால் உலர்ந்த இலைகள் சேர்க்கலாம். சுமார் 30 முதல் 45 நாட்களில், அந்த கலவை கரும்பச்சை நிறத்தை இழந்து கருமையான மணமுள்ள இயற்கை உரமாக மாறும். இதனை தோட்ட செடிகளுக்கு நேரடியாகப் பயன்படுத்தலாம். இந்த முறையில் குப்பையின் அளவு குறையும், இயற்கை வளம் வீணாகாமல் பயன்படும். நகர்புறங்களில் மாடி தோட்டத்திலும் இவற்றை செயல்முறைபடுத்துகின்றன.

பொதுவாக குப்பை மேலாண்மை / சுற்றுச்சூழல் பாதுகாப்பில் RRR முக்கிய பங்கை வகிப்பதாக சொல்வார்கள். Reduce (குறைத்தல்), Reuse (மீண்டும் பயன்பாடு), Recycle (மறுசுழற்சி)

  • Reduce – குறைத்தல்: குப்பை உருவாகாமல் தடுக்கும் வகையில் பொருட்களின் பயன்பாட்டை குறைத்தல். (தேவையில்லாமல் பிளாஸ்டிக் பைகள் வாங்காமல் இருப்பது)
  • Reuse–மீண்டும்பயன்படுத்தல்: ஒரு பொருளை ஒரு முறைக்கு மேல் பலமுறை பயன்படுத்துவது. உதாரணமக, கண்ணாடி பாட்டில்களை மீண்டும் பயன்படுத்துவது, பழைய ஆடைகளை தூள் துணியாக மாற்றுவது, பழைய தண்ணீர் பாட்டில்களை பூச்செடிக்காக மாற்றுவது இத்ன் விளைவாக வளங்களை சேமிக்கலாம், குப்பை குறைக்கலாம்.
  • Recycle – மறுசுழற்சி: பயன்பாட்டிற்குப் பிந்தைய பொருட்களை மீண்டும் புதிய பொருட்களாக மாற்றுவது.உதாரணமாக காகிதங்களை மீண்டும் புதிய காகிதமாக மாற்றுதல், பிளாஸ்டிக் பாட்டில்களை உருக்கி புதிய பொருட்களாக மாற்றல், உலோகங்களை உருக்கி புதிய உபயோகப் பொருளாக மாற்றல் இதன்விளைவாக புதிய பொருட்கள் தயாரிக்க இயற்கை வளங்களை தேவைப்படாமல் பாதுகாக்க முடியும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எதிர்கால தலைமுறைகளுக்கான வளங்களை பாதுகாக்கவும் 3R முறைமைகள் – Reduce, Reuse, Recycle ஆகியவை மிக முக்கியமானவை. நாம் தினசரி வாழ்க்கையில் இந்த நடைமுறைகளைச் சிறுசிறு வழிகளில் நடைமுறைக்கு கொண்டு வந்தால், குப்பையின் அளவை கணிசமாக குறைக்கலாம், இயற்கை வளங்களை சிக்கனமாக பயன்படுத்தலாம் மற்றும் சுற்றுச்சூழலின் நலனை மேம்படுத்தலாம். பசுமையான எதிர்காலம் நம்மை சார்ந்தது என்பதை உணர்ந்து, ஒவ்வொருவரும் தன் பங்கை மேற்கொள்வது அவசியமாகும். 

  1. SOLID WASTE MANAGEMENT IN TIRUVANNAMALAI MUNICIPALITY, K. PUGANRAJ , https://ipindexing.com/article/10003 

Recycling of Plastic Wastes in Tiruvannamalai City: Thermal Cracking of Waste Plastic into Gasoline Products under Various Operating Conditions. Selvaganapathy T , Muthuvelayudham R Applied Ecology and Environmental Sciences2021, 9(1), 47-52. DOI: 10.12691/aees-9-1-6.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version