மாதவிடாயா – அதை விட்டுவிடுங்கள் !

மாதவிடாய் என்பது இயற்கையால் பெண்கள் பிள்ளை பெறுவதற்கு ஏதுவாக படைக்கப்பட்ட ஒன்று. இயற்கையாக இருக்கும் ஒன்றை நாம் இயற்கையாக ஏற்றுக்கொள்ளாததே பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. மாதவிடாயைச் சுற்றி எத்தனை கற்பிதங்கள்? மூட நம்பிக்கைகள்? இத்தனை அறிவியல் முன்னேற்றம் அடைந்த பின்னும்!

இயற்கையாக உடலில் ஏற்படும் மாற்றம், அதை ஏன் ஊருக்கே பறைசாற்றி விழா எடுக்கிறோம்? பெண் பெரியவளானதும் அவளுக்கு உடனடியாக திருமணம் செய்து வைத்துக்கொண்டிருந்த காலகட்டங்களில் (இப்பொழுதும் இவை அங்கும் இங்குமாக சட்டவிரோதமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது என்பது வேறு கதை!) எங்கள் வீட்டில் ஒரு பெண் திருமணத்திற்குத் தயாராகிவிட்டாள் பெண் கேட்டு வருபவர்கள் வரலாம் என்று அனைவருக்கும் தெரிவிக்கும் பொருட்டு இதை ஒரு விழாவாக நடத்தியிருக்கலாம். அது அன்றைய காலகட்டத்தின் அவசியமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றும் இந்த சம்பிரதாயம் வழக்கத்தில் இருப்பது எதற்காக என்று சிந்திக்கலாமே! பெண்களுக்கான திருமண வயது சட்டப்படியே 18 என்று இருக்கும்போது ( ஏன் பெண்ணிற்கு மட்டும் 18 ஆணுக்கு 21 என்பது இன்றும் இது ஆணாதிக்க சமூகம் தான் என்பதையே வலியுறுத்துகிறது) எதற்கு ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஏற்படும், ஏற்படவேண்டிய ஒரு உடல் மாற்றத்தை ஊருக்கே ஒளிபரப்ப வேண்டும்? ஏற்படாவிட்டால் கவலை கொள்ளலாம். இல்லையெனில் இதை சாதாரணமாக கடக்கக் கற்றுக்கொள்ள வேண்டாமா? இந்த விழா எடுப்பதை நிறுத்திவிட்டு, அந்தப் பெண்ணை உட்காரவைத்து இது எதற்காக ஏற்படுகிறது, அந்த நாட்களில் எப்படி தன்னை அவள் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், இதற்குப் பிறகு அவளுக்கு ஏற்படப்போகும் எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு, அதை எப்படி கையாள வேண்டும் என்று கற்றுக்கொடுக்கலாமே! 

இதில் வியப்பு என்னவென்றால் முதல் முறை மாதவிடாய் வந்தவுடன் ஊருக்கே அதை அறிவித்துவிட்டு, அதற்குப் பிறகு ஒவ்வொரு மாதவிடாயும் அவள் குடும்பத்தில் இருக்கும் ஆண்களுக்கே தெரியாமல் அவள் ரகசியம் காக்க வேண்டும். (இன்றும் தனியாக அமர்த்தி வைப்பதும், விசேஷங்களுக்கு, கோவிலுக்கு போகக் கூடாது என்று செய்து ஊருக்கே தெரியவைக்கலாம்!) ஆனால், அவள் நேப்கின் வாங்குவது ரகசியமாக இருக்க வேண்டும், தப்பித்தவறி ரத்தப்போக்கு உடையில் தெரிந்துவிடக்கூடாது.  முதல் முறை பெருமையாக விழா ஆனால் அதற்கு பிறகு வரும் ஒவ்வொரு மாதவிடாயும் அவளைத் தீண்டத்தகாதவளாக்கி, தப்பித்தவறி ரத்தப்போக்கு வெளியில் தெரிந்துவிட்டால் அதற்கு அவளை கூனிக்குறுகச் செய்து, அவள் தன்னைத்தானே ஓர் அவமானச் சின்னமாக ஆக்கிகொள்ள வேண்டும்! இதுவே ஆறாம் அறிவின் சிறப்பு! 

ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் என்றால், வீட்டில் இருக்கும் அவள் சகோதரனுக்கோ, அவள் தந்தைக்கோ அது தெரிவதில் என்ன தவறு? அவளுக்கு தேவைப்படும் நேப்கினை அவர்கள் வாங்கிவருவதில் என்ன பிரச்சினை? ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் இந்த உலகம் சுழன்று கொண்டிருக்கையில் ஒருவரைப்பற்றி ஒருவர் முழுவதும் அறிந்து வாழ்தல் தானே சரியாக இருக்க முடியும்? இதில் மூடி மறைக்கவோ, அவமானப்படவோ என்ன இருக்கிறது? வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சிரமம் எதுவும் இருந்தால் அவர்களுக்கு ஆதரவாக ஆண்கள் இருக்க வேண்டுமானால், அவர்களுக்கும் பெண்ணின் பிரச்சினை புரியத்தானே வேண்டும்? எல்லாவற்றையும் ஏதோ அவமானம் போல் மூடி மறைத்துக்கொண்டு ஆண்களுக்குப் பெண்களை புரிந்துகொள்ளவே தோன்றுவதில்லை என்ற புலம்பலுக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்? 

நேப்கினை எதற்கு ஒரு பெண் மறைத்து வாங்கி வரவேண்டும்? ஒவ்வொரு ஆண் இருக்கும் வீட்டிலும் அவனுக்கு ஓர் அம்மாவோ, சகோதரியோ, மனைவியோ, மகளோ இருக்கத்தானே செய்வார்கள்? 

ஏற்கனவே மாதவிடாய் நேரங்களில் சிலருக்கு ரத்தப்போக்கு அதிகம் இருக்கையில் ஒருவிதமான எரிச்சல் மனநிலையோ அல்லது வயிற்று வலிகளோ இருக்கும். அப்படி இருக்கும் ஒரு பெண்ணிற்கு ஆதரவாக உடன் இருப்பது மனிதாபிமானமா இல்லை அவளை தனிமைப்படுத்துவதும், மனதாலும் அந்த நாட்களை அவமானமாக கழிக்கவைப்பதும் தான் சரியா?

இதெல்லாம் போக நம் உடல் பிரச்சினைகளுக்கு பலநேரங்களில் நம் மனமே காரணம் என்பதை நம்மில் பலர் உணர்வதேயில்லை. இயற்கை ஒரு செயலை நம்மிடம் அளித்திருக்கிறது என்றால் அதை நம்மால் செய்யமுடிவதற்கான சாத்தியங்களுடன் தான் நம்மை படைத்திருக்கிறது என்பதே உண்மை. 12/13 வயது தொடங்கி 45/50 வயதுவரை மாதாமாதம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்வை நாம் ஏன் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? இங்கு அனைவருக்கும் ஒரே போல் உடல்வாகு அமைவதில்லை. மாதவிடாய் நேரத்தில் சிலருக்கு அதிகமான ரத்தப்போக்கு இருக்கும். சிலருக்கு மிகவும் குறைவாகவும் இருக்கும். சிலருக்கு வயிற்று வலிகள் இருக்கும், சிலருக்கு ஒரு வலியும் இருக்காது. ஆனால் ஏனோ பெருவாரியான பெண்கள் மாதவிடாய் என்பதையே ஒரு பெரிய பிரச்சினையாக்கிக்கொள்கிறார்கள் மனதால். உடல் சோர்வாக இருந்தால் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். இல்லையெனில் எப்பொழுதும் போல் அவரவர் வேலையைப் பார்க்கலாம். அதைவிடுத்து எதோ நோய் வந்தது போல் எதற்கு அதை குறித்து இத்தனை புலம்பல்கள்! எரிச்சல்கள்! எல்லோரிடமும் கோபங்கள்! இதனை இத்தனை பொருட்படுத்த வேண்டுமா? 

ஹார்மோன் பிரச்சினை இருக்கும், அது இது என்று ஆயிரம் காரணங்கள் கூறலாம். ஆனால் எல்லாவற்றையும் சமாளிக்கும் திறன் நம் மனதிற்கு உண்டு. உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் மாதாமாதம் நம்மை சந்தித்துச்செல்லும் மாதவிடாயெல்லாம் ஒரு பிரச்சினையா என்ன? பெண்கள் தான் பலவீனமானவர்கள் உடலால் என்று நினைத்து தன்னைத்தானே குறுக்கிக்கொள்கிறார்கள். கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் புரியும்.  

மாதவிடாயோ பிள்ளை பெறுவதோ அப்படியொன்றும் கடினமான விஷயமேயில்லை. பெண்கள் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டையும் சரிவர கவனித்துக்கொள்ளும் பட்சத்தில் இவை இரண்டுமே சாதாரண இயற்கையின் செயலே. எத்தனை விளையாட்டு வீராங்கனைகள் இதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் சாதிக்கிறார்கள்? பொறுப்பான, பெரிய பதவியில் இருக்கும் பெண்கள் இதை ஒரு பிரச்சினையாக பார்த்தால் அவர்களால் தொடர்ந்து முன்னேற முடியுமா? எப்படி ஒரு பெண்ணால் முடிவது இன்னொரு பெண்ணால் முடியாமல் போகும்? ஏதாவது தடை என்றால் அது நம் எண்ணங்களால் ஏற்படும் பலவீனமே. 

எல்லாத் தடைகளையும் உடைத்து வெளிவருவது ஒவ்வொரு பெண்ணின் பொறுப்பில் தான் உள்ளது. மாதவிடாய் அவமானச் சின்னமும் அல்ல, ஒரு நோயும் அல்ல. இதை உணர்ந்தால் போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version