தங்கக் கூண்டுகளும் வேண்டாம்!
( மலர் மலர்தலே இயல்பு)
எதை ஒரு சமூகம் புனிதப்படுத்துகிறதோ அதன் பின் நிறைய கட்டமைப்புகளையும் நம்பிக்கையையும் வளர்க்கிறது என்று தான் அர்த்தம். அந்த புனிதத்தில் முக்கியமாக இருப்பது மாதவிடாய்.
மாதவிடாய் பற்றின உரையாடல்கள் தொடங்கி வெகு சில காலங்கள் ஆகியிருந்தாலும் அவ்வளவு விழிப்புணர்வுகளும் எழுத்துக்களும் போதவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த கட்டுரை வாயிலாக மாதவிடாய் குறித்து வெளியான கீதா இளங்கோவனின் மாதவிடாய் என்னும் ஆவணப்படத்தை குறிப்பிட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு மாதவிடாய் குறித்து வேறு ஒரு உலகத்தை காட்டியது. அந்த படம் நமக்குள்ளே ஒரு உரையாடலை தொடங்கும் என்று நினைக்கிறேன்.
மாதவிடாயும் – மனதளவிலான மாற்றம்:
மாதவிடாய் என்னும் போதே உடலில் ஏற்படும் வளர்ச்சியும் அதனை பற்றிய மாற்றத்தை நாம் தனிமனிதராகவும், சமூகமாகவும் பெரிதளவில் கவனிக்கிறோம். ஆனால் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் உணர்ச்சிகளும், தேவை இல்லாத கோபங்களும் நியாயமற்ற எரிச்சல் உணர்வுகளும் இருக்கும். இது வயதை பொறுத்தும், மாதவிடாய் சுழற்சி பொறுத்தும் வேறுபடும். அதனால் உணர்வுகளால் எளிதில் இறுக்கமான, பதற்றமான, மிகவும் மகிழ்வான மேலும் பல உணர்வுகள் எழும். நம்முள் நடக்கும் மாற்றத்தை பற்றி சுய விழிப்புணர்வோடு இருப்பது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன்.
குடும்ப அமைப்பும் மாதவிடாயும்:
குடும்ப அமைப்பு சில நேரங்களில் தெரிந்தும் பல நேரங்களில் தெரியாமலும் ஒரு பக்கம் அம்மாக்கள் மீது திணிக்கப்பட்ட தீட்டையும், புராண பாட்டையும் அவர்களின் மகள்களுக்கு நடத்துவதில் உறுதியாக இருக்கச் சொல்கிறது. மறுபக்கம் அப்பாக்களுக்கும் அண்ணண்களுக்கும் அதனை பற்றின சிறு புரிதல் கூட இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதற்கு அயலி தொடரில் வரும் பல காட்சிகளை உதாரணம் கூறலாம்.
குடும்ப அமைப்பு பற்றி பேசும் பொழுது அதனுள் நடந்த மாற்றங்கள் குறித்து பேசுவது அவசியமாகிறது. முன்பு போல் இல்லாமல் பெண்கள் பொருளாதரத்திலும் பங்களிக்க தொடங்கி இருக்கிறார்கள். அப்போது அந்த குடும்ப அமைப்பு அதனை கவனிக்காமல் வீட்டின் பாரத்தையும் சேர்ந்து சுமத்துகின்றது. இதிலிருந்து விடுபட வழிகளை யோசிக்க கூட தெரியாமல் அவ்வளவு எண்ணங்கள் தேங்கி கிடக்கின்றது. அதுவே பெண்களை மேலும் எமோஷனிலி டிப்படன்ட்டாகவும், எளிதில் எரிச்சல் அடையவும் வைக்கிறது. அது காலையில் என்ன சமைக்க வேண்டும் என்பதில் தொடங்கி வீட்டின் எல்லா தேவைகளிலும் துரத்துகிறது.
சிவா மனசுல சக்தி படத்தில் வருகின்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு பீலிங். மாதவிடாயின் உணர்வு ரீதியான பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான மாற்றங்கள். உடல் அளவில் சோர்வாக இருப்பவரிடம் சென்று சிங்கப்பெண்ணே எழுந்து வா என்று சொல்வதும், என்னால் என்னை பார்த்து கொள்ள முடியும் என்று சொல்பவரிடம் உன்னால முடியாது என்று மட்டம் தட்டுவதும் நானே அடிக்கடி கடந்து செல்லும் நிகழ்வு தான். அதனால் எந்த முடிவாக இருந்தாலும் அது அந்த பெண்ணின் விருப்பமாக இருக்க வேண்டும்.
மாதவிடாயினாலும் குழந்தைப்பேறினாலும் கொடுக்கின்ற தியாகி பட்டங்களையும், புகழ் உரைகளிலும் சிக்காமல் இருப்பதே விடுதலைக்கான வழியாகும்.
மாதவிடாய் பற்றிய கூட்டங்களிலும், கலந்துரையாடல்களிலும் பெண்களை மட்டுமே பார்ப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. மாற்றம் தொடங்குவது எல்லோரிடமும் தொடங்க வேண்டும். அதனால் இந்த கூட்டங்களும், கலந்துரைடயால்களும் எல்லா பாலினத்தினரையும் உள்டக்கினால் மட்டுமே இரு மாற்றத்தை நோக்கி நகர முடியும்.