
குழந்தை கருவாகி உருவானது நாள் முதலான உணர்வுகளை கவிதையாக எழுதியது, அதற்கு நூல் வடிவம் கொடுத்தது, மகனின் பெயரிலேயே தலைப்பிட்டது, உறவுகள் மத்தியில் வெளியிட்டது என ஒரே கல்லில் பல கனிகளை அடித்திருக்கிறார் கவிஞர் கனி.
“இரண்டு பிங்க் நிற
கோடுகளால்
வாழ்வை
வண்ணமயமாக்கியவன்
நீ”
என்ற பொழிலதிகாரத்தின் முதல் கவிதை
குழந்தை பேறுக்காக தயாரான இணையரின் இன்ப உணர்வை எளிதாய் கடத்தும் என்றாலும் அதன் உண்மை பொருளை
தாய்மையை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களால் மட்டுமே உணர முடியும்.
தனது வருகையால் வாழ்வை வண்ணமயமாக்கிய மகன் பொழிலனுக்கு தனது வரிகளால் அவன் வருங்கால வாழ்க்கைக்கு வார்த்தைகளாலான ஒரு வர்ணஜாலத்தை, ஒரு வானவில்லை, ஆயுள் முழுமைக்குமான ஒரு வசந்தத்தை இந்நூலில் உருவாக்கி கொடுத்திருக்கிறார் கனி விஜய்.
செயற்கை கருத்தரித்தல் மையம், வாடகைத் தாய் முறை பெருகிவிட்ட காலத்தில் பொழிலதிகாரம் மிக மிக தேவையானதொரு நூல். தாய்மையின் தூய்மையை வெளிப்படுத்தும் இந்நூலின் உட்கிடையாய் இருப்பதெல்லாம் படிப்போருக்கு எளிமையான வரிகளாக தெரிந்தாலும்,அவை தாய்மையின் வலிமையான வரிகள். ஒரு குழந்தைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவே அலங்காரம் செய்ய வேண்டும்; அலங்காரம் குறைந்தால் குறையில்லை கூடிவிட்டால் நகைப்புக்கு ஆளாகிவிடும். இந்நூலாசிரியர் கனி மிகுந்த கவனத்துடன் அலங்காரத்தை குறைத்து அன்பை கூட்டி ,தனது பொழிலனையும், அவனுக்கான பொழிலதிகாரத்தையும் அழகுபடுத்தியுள்ளார்.
“உன் பேரின்பக் கீறல்கள் பொதிய
இன்னும் நூறு கன்னங்கள்
வேண்டுமெனக்கு”
என்ற கவிதையில் தனது குழந்தையால் நேரும் காயம் கூட மகிழ்வுக்குரியது என்று கூறும் கவிஞர் கனி,
தனது மகனுக்கு காயம் நேர்ந்து விடக்கூடாது என்ற பரிதவிப்பை
குழந்தையின் “மென்விரல் நகம் களைய பூவாலே ஒரு நகவெட்டி” செய்து தரக் கோருகிறார்.
தனது மகன் பொழிலன் பிறந்த பிறகான மழைக்காலத்தை
“இது பொழியும் மழைக்காலமல்ல
பொழிலன் மழைக்காலம்”
என்ற கவிதையில் மட்டுமல்ல இந்நூல் முழுக்க முழுக்க ஒரு தாயின் அன்பு மயம் நிறைந்திருக்கிறது.
இரண்டடியால்
அன்பைச் சொல்லும்
திருக்குறள் நீ
திருக்குறளைப் போல
உன் இரண்டடிக்கு
ஆயிரம் அர்த்தங்கள்
என்ற கவிதைகளில் தத்தித்தத்தி நடைபழகும் குழந்தையை படம்பிடித்து நமது இதயத்தில் இடம்பிடித்துவிடுகிறார் கவிஞர் கனி விஜய்.
பொழிலதிகாரம் நூலில்
திரும்பும் பக்கமெல்லாம் தாயத் தாய்மையின் நேசம்
திகட்டாத தாய்ப்பால் வாசம்.
இந்நூலுக்கு காரணமான கவிஞர் கனி விஜய் மற்றும்
புழுதி பதிப்பகத்திற்கும் ஒரு பூங்கொத்து!
புத்தகம்: பொழிலதிகாரம்
ஆசிரியர்: கவிஞர் கனி விஜய்
பதிப்பகம் : புழுதி பதிப்பகம்
பக்கங்கள்: 76
விலை :₹150