
கடவுள் என்ற அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை உருவான கதையை தான் இந்த புத்தகம் சொல்கிறது. மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரையில் படிப்படியாக கடவுள் அல்லது கடவுளர்கள் எப்படி நம் வாழ்வியலோடு இரண்டற கலந்துவிட்டனர் என்பதை சாத்தியக்கூறுகள் நிறைந்த கற்பனைகள் மூலம் கட்டமைக்கிறார். எழுத்தாளர் அஜய் பன்சால் ஒரு நோய்க்கூறியல் மருத்துவர்.
மருத்துவ உலகமே கைவிடப்பட்ட நிலையிலுள்ள ஒரு நோயாளியின் உறவினர்களுக்கு மருத்துவர் கூட இனி கடவுளின் மீது நம்பிக்கை வையுங்கள் என்று சொல்வது உண்டு தானே. செய்வதறியாது திகைத்து நிற்கும் வாழ்வின் இருள் சூழ்ந்த அந்த நிலையிலும் ஒரு சிறந்த வழிகாட்டியாக மதங்கள் கைக்காட்டிய கடவுளர்களை பற்றிக்கொள்ளத்தானே செய்கிறோம். பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுளை இல்லை என்று மறுப்பவர்களும் உண்டு. பிரபஞ்சத்தை படைத்தவன் இறைவனே என்று எல்லா மதங்களும் உரத்து சொல்லிக் கொண்டிருக்க அறிவியல் துறையோ அதை மறுக்கிறது.
விஞ்ஞானி சார்லஸ் டார்வின் அவர்களின் கோட்பாடு உலகில் தோன்றிய உயிரினங்கள் முதலில் எளிய உயிரினங்களாக இருந்து பின்னர் மெதுவாக படிப்படியாக செடி கொடி மரங்கள் மற்றும் மிருகங்களாக வளர்ச்சி அடைந்தது. எனவே உயிரினங்களை படைத்தது ஆன்மீக சக்தி அல்ல என்று புனித படைப்பு கோட்பாட்டை மறுக்கிறார். ஆனால் மனித சமுதாயத்தில் இவ்வளவு தூரம் வேர்விட்டு வளர்ந்து (வாழ்ந்திருக்கக்கூடிய) கடவுளை வெறும் மூட நம்பிக்கை என்று மட்டும் சொல்லி மறுத்துவிட முடியாது அல்லவா? எனவே கடவுளைப் பற்றிய தேடல்கள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன.
ஆனால் மருத்துவரான எழுத்தாளர் மதங்கள் மற்றும் தெய்வீகம் பற்றிய தனது பார்வையை மனித உளவியலோடு தொடர்புபடுத்தி முன்வைக்கிறார். இயற்கையினால் பேரிடர் நிகழும் போதெல்லாம் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மனித வாழ்வில் கூட்டு சேர்ந்த தெய்வீகம் மற்றும் மதங்களின் தோற்றம் குறித்த ஒரு அறிவியல் பார்வையை செலுத்தி இருக்கிறது இந்த புத்தகம். மனிதனின் சமூக கலாச்சார மற்றும் உளவியல் பரிணாமங்களை ஆராய்கிறது. மனித உளவியல் தேவைகளை மதம் எவ்வாறு பூர்த்தி செய்கிறது என்பது பற்றிய ஒரு கண்ணோட்டத்தை முன் வைக்கிறது.
மனிதனின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக மொழி உருவாகிய பொழுது மனிதன் தமது உணர்வுகள், அனுபவங்கள், கனவுகள், சவால்கள் ஆகியவற்றை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ள உதவியது. இதன் காரணமாக தங்களை வழி நடத்திய தலைவன் அல்லது பூசாரி உருவாகினான். பூசாரியின் சொல்படி இந்த புனித சக்திகளை சமாதானப்படுத்த பல்வேறு வழிபாட்டு முறைகளை தேடத் தொடங்கி, எதுவெல்லாம் தம்மை மகிழ்விக்கிறதோ அவை எல்லாம் இந்த சக்திகளையும் மகிழ்விக்கும் என்று நம்பி பல சடங்குகளையும், உணவு படைத்தல் போன்ற வழிபாட்டு முறை தோன்றியது.இந்த வழிபாட்டு முறையும் சடங்குகளும் தான் மதங்களின் துவக்கம் என்கிறார் ஆசிரியர். இயற்கை பேரிடர்களான நெருப்பு, பெருமழை, இடி, மின்னல் என வானில் காணப்படும் இயற்கை அம்சங்களை வழிபட தொடங்குகிறான். இதனால் உருவானவர்களே வான் கடவுள்கள். யூத மத வேதம் பழைய ஏற்பாடு சொல்லும் கடவுள் வான் கடவுளைத் தான் என்கிறார். அனைத்து தொன் மக்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இயற்கை கடவுள்கள், சடங்குகள், பிரார்த்தனைகளை கொண்டிருந்தனர் என்று விளக்குகிறார்.
அடுத்து குழந்தைப்பிறப்பு பெண்ணின் மூலம் நடைபெறுவதால் தாய் தெய்வ வழிபாடும், தாய் வழிச் சமூகமாகவும், கருவுற்ற காலங்களில் பெண்கள் தாங்கள் தங்கியிருந்த வாழ்விடங்களில் இயற்கையை அவதானிக்க தொடங்கி விவசாயத்தை கண்டுபிடித்து, அவர்களின் வாழ்வாதார தேவைகள் பூர்த்தி செய்வதால் பெண் தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்கின்றனர். ஆனால் ஒரு பெண் கருவுற ஆணுறுப்பிலிருந்து வெளியேறும் விந்து தான் காரணம் என்று என்று கண்டடைந்தானோ அன்று முளைக்கிறது தந்தை வழிச் சமூகம்.
மக்கள்தொகை பெருக்கத்தினால் ஏற்படும் சுற்றுசூழல் கேடும், சுகாதாரமின்மையால் பரவும் பல்வேறு புதிய புதிய நோய்களை களைய அதன் தலைவன் அல்லது பூசாரிக்கு தெரியாமல் போனது கடவுள் குற்றம் என்ற கருதுகோள் உருவாகிறது. இங்கிருந்து தான் பாவப்புண்ணிய கணக்குகளும், மறுபிறவிக் கோட்பாடுகளும் உருபெறுகின்றன. புதிய புதிய கடவுளர்களும் வழிபாட்டு சடங்குகளும் முளைக்கிறது. நரபலி கொடுக்கப்பட்டன. நாளடைவில் அது அவன் சௌகரியத்திற்காக விலங்குகளை பலியிடுவதாக மாறுகிறது.
எழுத்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகே வாய் வழியாக சொல்லி செவி வழியாக கேட்டுவந்த வழிபாடுகளும், சடங்குகளும் எழுத்தில் வடிக்கப்பட்டன. கடவுள் சொல்ல சொல்ல இயற்றியதாக பல்வேறு கடவுள்களின் தோற்றங்களையும் பாடல்களையும் இயற்றுகின்றனர். இந்துக்களின் பழமையான ரிக் வேதத்தில் இயற்கை கடவுளான சூரியன், நெருப்பு மற்றும் வான் கடவுளர்களை குறித்த பாசுரங்கள் தான் உள்ளன. விஷ்ணுவை பற்றிய பாடல்கள் இல்லாததால் அதன் பின் வந்த விஷ்ணுவின் அவதாரங்கள் எல்லாம் பிற்சேர்க்கை எனக் கொள்ளலாம் என்கிறார்.
மாயா மாயா எல்லாம் மாயா !
சாயா சாயா எல்லாம் சாயா !
அருமையான வாசிப்பனுபவம். வாசகர்கள் தவறவிடக் கூடாத புத்தகமாக இதை பரிந்துரைக்கிறேன்.
புத்தகம்: கடவுள் உருவான கதை
ஆசிரியர்: டாக்டர் அஜய் கன்சால்
தமிழில்: கி ரமேஷ்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 256
விலை :₹260
சிறப்பான அறிமுகம் நூலைப் பற்றி… சீர் வாசக வட்டத்தில் சலுகை விலையில் வாங்க எண்ணிய நூலிது. வாசிக்கப்பட வேண்டிய நூல் தங்களது கூர்மையான அறிமுகத்தால்… நன்றி அழகான அறிமுகத்திற்கு
மிக்க நன்றி