சுந்தரன்

பிரபஞ்சன் அவர்களின் சிறுகதை தொகுப்பில் இருந்து..

ஜானகிராமன் தெருவில் இருக்கும் சார்மினார் லாட்ஜில் நான் தங்கியிருந்தபோதுதான் சுந்தரத்தைச் சந்தித்தேன். அவன் தன் வயது பதினாறு என்றும், ஆறாம் வகுப்புவரை படித்திருப்பதாகவும் என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

எனக்கு அடுத்த அறை நாராயணனுடையது. நானும் சுந்தரமும் என் ஒற்றைக் கட்டிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை நாராயணன் பார்த்து விட்டான்.

“சித்த, ஒரு நிமிஷம் வரேளா?” என்றான்.

நான் எழுந்து அறைக்கு வெளியே சென்றேன்.

“என்ன சார்! ஒரு தோட்டியைக் கட்டிலில் உட்கார வச்சிப் பேசிண்டிருக்கேள்” என்றான் நாராயணன்.

“அதனால் என்ன?” என்றேன் நான்.

என்ன காரணத்தாலோ நாராயணன் உறவு அன்றோடு முறிந்தது.

சுந்தரத்தின் அலுவல், காலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கும். எங்கள் லாட்ஜ் மூன்று மாடிகளைக்கொண்டது. முதல் மாடியில் தெருவைப் பார்த்திருக்கும் தனியறை என்னுடையது. காலையில் ஆறுமணிபோல் கண்விழித்து உடனே காப்பி சாப்பிடுகிற பழக்கம் கொண்டவன். சுந்தரம் என்னை எப்படியோ அறிந்திருந்தான். காலையில் எழுந்து கதவுத் தாழ்ப்பாளைத் திறந்து பால்கனியில் வந்து நின்று உலகத்தைப் பார்க்கும் பொழுது, சரியாகச் சுந்தரம் காபியுடன் வந்து என் முன் நிற்பான்.

ஒன்பது மணிக்கு, நான் அலுவலகம் புறப்படுவேன். ஜானகிராமன் தெருவில் இருந்து அண்ணா சிலையின் எதிரில் இருக்கும் உடுப்பி ஹோட்டலில் டிபன் சாப்பிட்டு விட்டு, அருகில் இருக்கும் அலுவலகம் செல்வது என் வழக்கம்

சுமார் எட்டரை மணிபோல, சுந்தரத்தின் அலுவலகம் முடியும். ஒவ்வொரு தளத்திலும் பன்னிரண்டு அறைகள் இருந்தன. பன்னிரண்டு அறைகளுக்கும் பொதுவாக இரண்டு குளியலறைகளும், இரண்டு டாய்லட்டுகளும் இருந்தன ஆக மொத்தம் ஆறு குளியல் அறைகளும், ஆறு டாய்லட்டுகளும் அந்த லாட்ஜில் இருந்தன. அதுவுமன்னியில் என் அறையைப்போல மொத்தம் ஆறு அறைகளில் அட்டாச்டு பாத்ரூம்கள் இருந்தன. இந்தப் பன்னிரண்டு டாய்லட்டுகளையும் கழுவி, வீட்டுக்குப் போய்க் குளித்து முடித்துச் சரியாக எட்டரைக்குள் சுந்தரம் என் அறையில் இருப்பான். புரளப் புரளக் கட்டிய கைலியும், புஜம்வரை மடித்துவிட்ட சட்டைக் கையும் அலட்சியமாக நெற்றியில் தீட்டப்பட்ட திருநீற்றுத் துண்டும், நெற்றியில் வந்து விழும் முடியும்தான் சுந்தரம்.

எட்டரை மணிக்கு நான் ஷேவிங் செய்துகொண்டு இருப்பேன். எட்டு முப்பத்தைந்துக்குப் பல் துலக்கல், எட்டு ஐம்பதுக்கு ஸ்நானம் முடிந்து சரியாக ஒன்பது மணிக்கு ஜிப்பா, வேட்டியில் இருப்பேன். என் பையைச் சுந்தரம் எடுத்துக் கொள்வான். அறையைப் பூட்டிக்கொண்டு நான் தெருவுக்கு வந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொள்ளலாமே என்று  நினைக்கும்போது சுந்தரம் ஒரு சிகரெட்டையும், தீப்பெட்டியையும் என் முன் நீட்டிக்கொண்டிருப்பான்.

வித்தியாசமாக வாழ்வது தினம் தினம் தம்மைப் புதுப்பித்துக் கொள்வது என்கிற நல்ல பழக்கத்தை நாம் மறந்து விட்டோம் போலும்,

ஓட்டலில்கூட அப்படித்தான் மனைவியைப் பிரிந்து வெளியூர்களில் லாட்ஜ்களில் வசித்து, ஓட்டல்களில் தங்கி, உண்டு வருகிற எவருக்கும் அதிகாலையில் தோன்றும் பிரச்சினைகள் பலவற்றில் பூதாகரமானது இது. தமிழர்கள் காலைப் பலகாரம் என்று இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று நான்கு வகையான உணவுகளில் மாத்திரமே தங்களது கற்பனையைக் குறுக்கிக்கொண்டார்கள். நான்கும் சற்றேறக்குறைய ஒரே வகையான ருசியையும் குணநலன்களையும் கொண்டவையாய் இருக்கும். ஒரு நாளில் முதல் பிரச்சினையே இன்று எதை உண்பது என்பதாய் இருக்கும். இந்தப் பலகாரங்களில், அதன் சுவைகளில், அவற்றின் என்றும் மாறாத் தன்மைகளில், மனிதர்களின் மூளை முழுங்கிய கற்பனையில் ஏற்பட்ட வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாய்ப் பரவி, சக மனிதர்கள். சக பயணிகள், சக அலுவலர்கள், சக முதலாளி என்று அனைவர் மேலும் படர்ந்தது. கடைசியில் சூரியனின் மேலும் தொட்டு அன்றைய வாழ்க்கையை நரகமாக்கி விடும். இது போன்ற நேரங்களில் எனக்குக் கை கொடுப்பவன் சுந்தரமாக இருப்பான்.

“நேத்துதான் இட்லி, தோசை தின்னோம். அதுக்கு முந்தா நாள் பூரி, கிழங்கு தின்னோம். இன்னிக்கு சாம்பார், வடை காபிபோதும் என்னண்ணே?”

எனக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும்.

கிருஷ்ணாம் பேட்டைச் சுடுகாட்டுக்குப் போகும் வழியில் இரு சாரியிலும் இடுப்பளவு குடிசைகள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அதில் ஒன்றில் சுந்தரத்தின் குடும்பம் இருந்தது. சுந்தரத்தின் அப்பா தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் டாய்லட்டுகளைக் கழுவி ஜீவித்துக்கொண்டிருந்தார். அம்மா ஓர் ஆங்கிலோ இந்தியனின் வீட்டில் சமையற்காரியாக இருந்தாள். ஆகவே, சோற்றுக்கு அவள் கஷ்டப்படவில்லை. சுந்தரத்தின் அப்பாவுக்கு இருந்த ஒரே கஷ்டம், சுந்தரத்துக்குப் பிறகு பிறந்த ஐந்து பெண் குழந்தைகளே!

“ஐந்து பெண்களைப் பெத்ததிலே உங்களுக்கு என்ன சார் கஷ்டம்? ஆம்பளையாப் பொறந்திருந்தா சந்தோஷப்பட்டிருப்பீங்களா?”

“என்ன பண்றது சார்? இதுங்கெல்லாம் படிச்சா உருப்படப் போவுதுங்க? பன்னெண்டு, பதிமூணு வயசிலேயே கட்டிக்கிட்டுப் போயிடுங்க. அத்தினிக்கும் நானேதானே ஒவ்வொண்ணையும் செய்யணும்.”

சுந்தரத்தின் ஒருநாள் வாழ்க்கை கட்டுகள் அற்றது. ஆகவே, ஆனந்தமயமானது. காலையில் மூன்று மணி நேரம் சக மனிதர்களுக்காக உழைப்பது, அவனுக்குப் போதுமானதாய் இருந்தது. என்னுடன் டிபன் சாப்பிட்டு ஆபீஸ் வாசல்வரை வந்து, என்னை அலுவலகம் சேர்த்து விட்டு, நான் சிகரெட் வாங்குகையில் அவனுக்கு வாங்கிக் கொடுத்த பீடிக் கட்டோடு, அவன் மீள்வான். மதியம் சாப்பாட்டு நேரம்வரை வீட்டில் இருப்பானாம். சாப்பிட்டு விட்டு ஏதாவது ஓர் எம். ஜி. ஆர். படத்துக்கு மதியக் காட்சிக்குப் போய் விடுவானாம். நான் அலுவலகம் விட்டுத் திரும்பும் மாலை வேளையில் சரியாக ஆஜராகி நிற்பான்.

“காலை பத்து மணிக்கும் சாப்பாடு வேளையான மதியம் ஒரு மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்னதான்டா செய்கிறாய்?” என்று ஒரு நாள் கேட்டேன்.

“காதல்”

“யாரை?”

“என் மாமன் மகளை.”

“எங்கே இருக்கா.?”

“என் வீட்டுக்கு நேர் எதிர் வீட்டில்.”

“எவ்வளவு ஆனந்தமான வாழ்க்கை உன்னுடையது. காலை பத்து மணிக்கு என் கழுத்தில் நுகத்தடி, நீயோ பந்தயக் குதிரை பரவாயில்லை. அடுத்தப் பிறவியிலே நீ நானாகவும், நான் நீயாகவும் பிறப்போம்” என்றேன். அவனுக்கு அதில் ஆட்சேபணையில்லை.

கதவு படபடவெனத் தட்டப்பட்டது. எழுந்து. மணியைப் பார்த்தேன். இரண்டு இருபதாகி இருந்தது. கதவைத் திறந்தேன். சுந்தரம், பாம்பை மிதித்தவன் மாதிரி நின்றிருந்தான்.

“என்னடா! இந்த ராத்திரி நேரத்துல?”

“ஒரு தப்பு நடந்து போச்சு அண்ணே.”

“என்ன தப்பு?”

அவன் உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தார்.

“ஒரு பீடி பத்த வச்சுக்கட்டுமா?”

“செய்”

பற்ற வைத்துக்கொண்டான்.

“என்னோட மாமன் பொண்ணை, யாரோ ஒருத்தன் பரிசம் போட  வந்துட்டான். எம் மாமனும் சேர்ந்து அதுக்கு சம்மதிச்சுட்டான் பூஞ்சோலை வந்து என்கிட்ட அழுதுகொண்டு நின்றது. ராத்திரி ஏழு மணிக்கு அவ பைப் வச்சுட்டேன். இப்போ மாமன் வீட்டுக்காரங்க பத்துப் பவுன் நகையோட பொண்ணைக் கடத்திக்கிட்டுப் போய்ட்டேன்னு எம்மேலே புகார் குடுத்திருக்கங்க. காசு வேற குடுத்திருப்பாங்கபோல இருக்கு. போலீஸ்காரங்க முழு மூச்சோட என்னைத் தேடறாங்க. நான் என்ன பண்றது அண்ணே?”

“பூஞ்சோலை பத்திரமா இருப்பா இல்லியா.”

“இருப்பா”

“அப்ப, கவலைப்படாதே. படு. விடிஞ்சதும் பார்த்துக்கலாம்.

நான் ஒரு பத்திரிகையாளன். ஆகவே போலீஸ் வட்டாரத்தில் எனக்குப் பரிச்சயமான சிலர் இருந்தார்கள். அஸிஸ்டன்ட் கமிஷனர்  ஆறுமுகம் என்னை அறிவார். அவருக்குப் போன் செய்தேன். எடுத்த எடுப்பில் அவர் “ரேப்பா” என்றார். “இல்லை, காதல் விவகாரம்” என்றேன்.

“சரி! திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டருக்குப் போன் பண்றேன். நீங்க போய்ப் பாருங்க” என்றார்.

சுந்தரத்தை அறையில் வைத்துப் பூட்டிக்கொண்டு நான் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றேன். கன்னங்கரிய ஒரு மோட்டா ஆசாமி அவர்தான் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் என்றார்கள். ஆறுமுகத்தின் பேரைச் சொன்னேன். அப்புறமா உட்காரச் சொன்னார். “விவகாரம் என்ன” என்றார். “காதல் விவகாரம்தான் சார். நீங்களே கட்டி வச்சுடுங்க” என்றேன்.

“என்ன விவரந்தெரியாத ஆளாயிருக்கீங்க? இது கிட்நாப் கேசு சார். பொண்ணுக்குப் பதிமூணு வயசு, பையனுக்குப் பதினாறு. இதிலே எங்க கல்யாணம் பண்ணி வைக்கிறது?”

அப்படியானால், “சமரசம் பண்ணி வச்சிடுங்க”

“சமரசமா? எப். ஐ. ஆர் போட்டாச்சு சார். கோர்ட்டுக்கு காப்பி போயாச்சு. இப்ப போய் சமரசம் அது இதுன்னுட்டு.”

பேங்கில் இருந்த என் சேமிப்பைச் செலவிட வேண்டியதாயிற்று. பூஞ்சோலையை நானே ஆட்டோவில் அழைத்து வந்து, சுந்தரம் அவளைக் கடத்தவில்லை என்றும், அவளே இஷ்டப்பட்டுத்தான் வந்ததாகவும், தனக்குப் பிடிக்காத இடத்தில் பரிசம் போட்டதால்தான் அப்படி செய்த்தாகவும் பத்து பவுன் நகையை, தான் பார்த்ததுகூட இல்லை என்றும் சொன்னதன் பேரில் அவள், அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

சார்மினார் லாட்ஜின் உரிமையாளர் நித்தியானந்தம் நான் இருந்த அந்தப் பகுதியின் மக்கள் அனைவரும் அவரை நன்கு அறிவார்கள். ஒரு பக்திமானாக, ஒரு பெரிய மனிதராக வம்பு வழக்குகள் தீர்க்கிற பஞ்சாயத்துக்காரராக, சுப மற்றும் புண்ணிய காரியங்களுக்கு நிதி உதவும் வள்ளலாக நித்தியானந்தம் அறியப்பட்டார். அவரிடம் நூற்றுக்கும் அதிகமான பேர் மாதச்சம்பளம் பெற்று வாழ்ந்தார்கள். அவர்களில் கடைசி ஊழியன் சுந்தரம்.

சுந்தரத்தை நித்தியானந்தம் அறிய வாய்ப்பில்லை. அவன் சம்பளம் மானேஜர் மூலம் பட்டுவாடா செய்யப்படுகிறது. காதல் விவகாரத்தில் அவன் சிக்கிக்கொண்ட பொழுது சுமார் ஒரு வாரகாலம் அவன் வேலைக்கு வரவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. மானேஜர் “அந்த நாயை லாட்ஜில் சேர்க்கக்கூடாது” என்று உத்தரவு பிறப்பித்து விட்டார். மானேஜர் என்பவனை அந்தப் பெயரால் நாங்கள்தான் அழைத்தோம். அவனை நன்கு அறிந்தவர்கள், அவனைக் கூஜா என்றார்கள். சுந்தரத்துக்காகப் பரிந்துக்கொண்டு நான்தான் போனேன். “எல்லாம் புரிஞ்சுக்கிட்டு நீங்க ஏன் வரணும்? சரி இவ்வளவு சொல்றீங்க, நீங்க சொல்லி நான் கேட்கலைன்னு இருக்கக்கூடாது. நாளைக்கு அவனை வேலைக்கு வரச் சொல்லுங்க” என்றான். கையோடு அப்புறம் நான் சம்பந்தப்பட்டிருந்த சினிமா கம்பெனியில் ஒரு சூப்பர் ஸ்டார் நடித்துக்கொண்டிருந்தார். அவர் ஷூட்டிங்கைத் தன் குடும்பத்தோடு வந்து பார்க்க நான் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டான், செய்து கொடுத்தேன்.

சுந்தரத்தின் அப்பா தலைமைச் செயலகத்தில் ஓர் அமைச்சரின் கீழ் வேலைப் பார்த்தார். அந்த அமைச்சர் தென் மாவட்டத்துக்காரர். இவரும் தென்மாவட்டத்துக்காரர். ஆகவே, இருவருக்கும் மனரீதியால் நெருக்கம் இருந்தது. அந்த முகாந்திரத்தால் அமைச்சர் பூஞ்சோலையின் அப்பாவைக் கூப்பிட்டு அனுப்பி அவரிடம் பேசினார்.

“என் குடும்பத்துக்கு எவ்வளவு பெரிய அவமானம் உண்டாக்கி விட்டான் அந்த சுந்தரம்? அவனை வெட்டாம் உடறதாவது” என்றார், சுந்தரத்தின் மாமா!

“உலகத்தில் கத்திகள் அநேகம் செய்யப்படுகின்றன என்றும் சுந்தரத்துக்கும் அவன் அப்பாவுக்கும்கூடக் கத்திகள் கிடைக்குமென்றும் அமைச்சர் மிக நிதானமாக எடுத்துரைத்தார். “தான் நினைத்தால் அடுத்த அரை மணியில் சுந்தரத்துக்கும் பூஞ்சோலைக்கும் முதலமைச்சர் முன்னிலையில் திருமணம் செய்து வைக்க முடியும், இந்தச் சவாலை அந்த மனிதர் ஏற்றுக் கொள்கிறாரா” என்று அமைச்சர் அவரிடம் கேட்டார்.

அவர் சவாலை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ஆனாலும், மானம் போயிற்று” என்று, மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். மானம் என்றால் என்ன என்று கேட்டார் அமைச்சர். அவருக்குப் பதில் தெரியத்தான் இல்லை. என்ன இருந்தாலும் உறவுக்காரர்கள் நீங்கள். அந்த உரிமை பற்றி சுந்தரத்துக்கே பூஞ்சோலையைக் கட்டி வைக்கலாம் என்று தீர்ப்பளித்தார் அமைச்சர். “லாட்ஜில் அந்த மாதிரி வேலை செய்யும் ஒரு பையனுக்குத் தன் பெண்ணை எவ்வாறு கட்டி வைக்க முடியும்?” என்று அவர் கேட்டார். அமைச்சர் சுந்தரத்துக்கு ஏதேனும் ஓர் அரசாங்க வேலை வாங்கித் தருவதாக உத்தரவாதம் அளித்தார்.

பூஞ்சோலையின் அப்பாவுக்குப் போன மானம் என்பது மாப்பிள்ளை அரசாங்க உத்தியோகம் செய்வதில்தான் இருக்கிறது என்கிற அரும்பெரும் தத்துவத்தை அன்றுதான் உலகுக்கு அளித்தார் அவர்.

நித்தியானந்தம் பார்க்க அழகாக இருந்தார். தாடி வளர்த்திருந்தார். வெள்ளையும் கறுப்புமாக சிங்கத்தின் தாடி, காரல் மார்க்சுக்கு இருந்தது போன்ற தாடி, மாலைக் காலங்களில் மாதத்துக்கு ஒருமுறை லாட்ஜை அவர் ‘விசிட்’ பண்ணுவது உண்டு. அந்த வழக்கப்படி அன்று வந்திருந்தார். அவரின் நிழலாக கூஜாவும் வந்திருந்தான்.”

தலையை மட்டும் உள்ளே நீட்டி, “சௌக்கியமா சார்?” என்றார் நித்தியானந்தம்.

என்னைப் போன்றவர்கள் சௌக்கியமாக இருக்க முடியாது. செளக்கியம் நான் என்று சொல்வது அதர்மம். ஆகவே, எப்படியோ ஒரு வகையாகச் சிரித்து சௌகர்யம் என்பதுபோல நிறுவினேன்.

அந்தப் பதிலுக்குக் காத்திருந்தவர்போல சட்டென்று தலையை விலக்கிக்கொண்டு அவர் அறைக்குள் வந்தார். என் பக்கத்தில் அமர்ந்தார். அவரிடம் பழநி விபூதி மணந்தது.

“ஒரு விஷயம்..”

“சொல்லுங்”

“இந்த லாட்ஜை இடித்து நிரவி, இங்கே ஒரு கல்யாண மண்டபம் கட்ட வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. தயவுசெய்து ஒரு மூணு  மாச காலத்துக்குள்ளே காலி பண்ணிடுங்க. அதைச் சொல்லத்தான் நான்  ஒவ்வோரு அறையாகப் போய்க்கொண்டிருக்கிறேன்”

“அதுக்கென்ன, ஒரு மாசத்திலேயே நான் காலி பண்ணிடறேன்” என்று

நான் சொன்னேன்.

அவர், என்னை விட்டு அகன்ற சில நிமிஷங்களுக்குள் சுந்தரம்

வந்தான். “ஏதோ விபூதி வாசனை வருதே அண்ணே. நீங்க பூசையே போட மாட்டீங்களே,”

அவர் கூர்மையான புலனுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தேன், “லாட்ஜ் ஓனர் வந்திருந்தார்”

“என்னவாம்? வாடகைதான் குடுத்தாச்சே!”

“அதுக்கில்லை, இந்த லாட்ஜை இடிக்கப் போகிறாராம். எல்லோரையும் காலி பண்ணச் சொல்றார்”

“இது ஒரு ஸ்டன்ட்! இப்படிச் சொல்லி உங்களை எல்லாம் கிளப்பிட்டுப் புது ஆட்களை வாடகைக்கு வச்சி வாடகையை ஏத்திடுவாங்க.”

இதைத்தான் அசுர வேலை என்று சொல்வார்கள்போல! சரியாக அதே நேரத்தில் நித்தியானந்தமும் கூஜாவும் அறை வாசலைக் கடந்தார்கள். ஒரு பத்தடி தூரம் அவர்கள் நடந்திருப்பார்கள். பாய்ந்து அறை வாசலுக்கு வந்து சுந்தரம் அவர்களைப் பார்த்துக் கூறினான்.

“டேய்! எங்க அண்ணனையா காலி பண்ணச் சொல்றீங்க. ங்கொம்மாளை கீசிடுவேன்” என்றான்.

திகைத்துத் தடுமாற்ற முற்றுத் திரும்பிப் பார்த்த நித்தியானந்தம், உடல் விதிர் விதிர்த்து நடுநடுங்கி வாய் பேசவொண்ணாது கைகால் உதற ஸ்தம்பித்துப் போய் நின்றார். அவரது வாழ்நாளில் இப்படியொரு வார்த்தையை எந்த முனையில் இருந்தும் கேளாதவர் அவர். மௌனமாகப் படியிறங்கிக் காரில் ஏறி டிரைவர் அதைச் செலுத்த சென்றுவிட்டார்.

எனக்குச் சுந்தரத்தின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது. உடனே, அவனை அவனுடைய நண்பன் வீட்டுக்கு ஓடிப் போகச் சொன்னேன் நான் சொன்னதை வேத வாக்காகக் கொண்டு உண்மையில் ஓடினான் அவன்.

சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கூஜா எனப்பட்ட மனிதன் பார்த்த மாத்திரத்தில் அடியாட்கள் என்று சொல்லத்தக்க நான்கு பேருடன் அறை வாசலில் தோன்றினான்.

“எங்க சார் அந்தப் பொறுக்கி?”

“அவன் அப்பவே போயிட்டானே?”

“நீங்க கொடுக்கற எடம்தான் அது. அவனை எல்லாம் சரிக்குச் சமானமா உங்க படுக்கை மேலே உட்கார வச்சிப் பேசறீங்க பாருங்க, அதனாலே வந்த வினை இது. இன்னிக்கு ராத்திரிக்குள்ளே அவனை ரெண்டு கூறாக்கிப் போடலேன்னா, நான் ஓர் அப்பனுக்குப் பொறந்தவன் இல்லே.

” அவர்கள் திபுதிபுவென்று படியிறங்கிப் போனார்கள். தெருவில் ஒரு கார் புறப்படும் சப்தம் கேட்டது.

இரவு முழுக்க நான் தூங்கவில்லை கண் லேசாக அயரும்போது

பயங்கரக் கனவுகளே வந்தன, தலை துண்டாடப்பட்ட சுந்தரம். மறுநாள் நான் அலுவலகம் புறப்படும்வரை அவன் வரவில்லை. அன்று மாலையும் அவனைக் காணவில்லை. மறுநாள் மாலை கிருஷ்ணாம் பேட்டை இடுகாட்டை ஒட்டியிருந்த அவன் வீட்டுக்குச் சென்றேன். சுந்தரமும், பூஞ்சோலையும் தனிக்குடித்தனம் போய்விட்டதாகவும், அவர்களின் குடிசை சுடுகாட்டுக்கு அந்தப் பக்கத்தில் இருப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள். நான் அந்தக் குடிசைக்குச் சென்றேன். சுந்தரத்தின் மனைவியாக இருக்கும் பூஞ்சோலை என்கிற குழந்தை பாண்டி விளையாட வேண்டிய நேரத்தில், அடுப்பில் பானை வைத்துப் பொங்கிக்கொண்டிருந்தது.

“சுந்தரம் எங்கேம்மா?”

“இப்பதான் வெளியிலே போனார்”

“எங்கேன்னு சொன்னானா?”

“இல்லை”

நான் திரும்பினேன். சைதாப்பேட்டையில் எனக்கு ஒருவரைப் பார்க்க வேண்டியிருந்தது. பார்த்துவிட்டு சாராயக் கடைக்குப் பக்கத்தில் இருந்த பள்ளிக்கூட ஸ்டாப்பில் பஸ்சுக்குக் காத்து நின்றேன். சாராயக் கடையில் கூட்டம் தெரிந்தது. ஒரு பொங்கலை ஒட்டிய தருணம் அது. சாக்கணாக் கடையில் விதம் விதமாக வறுக்கப்பட்டும் மற்றும் பொரிக்கப்பட்டும் அகல அகலத் தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த நண்டுப் பொரியல், ரத்தப் பொரியல், மீன் வறுவல், தலைக்கறி தினுசுகளையெல்லாம் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். காடா விளக்கு வெளிச்சத்தில் நான் அறிந்த ஓர் உருவம் நிழலாடிற்று. உற்றுப் பார்த்தேன் சுந்தரம். அதைவிட ஆச்சர்யம் அவன் பக்கத்தில் அந்தக் கூஜா, நான் விரைந்து அவர்கள் அருகில் சென்றேன்.

சுந்தரத்தின் தோளில் கை வைத்து, “என்னடா! என்ன ஆச்சு! ஏன் நீ ரூம் பக்கமே வரலை?” என்றேன். ‘குப்’பென்று இருவரிடம் இருந்தும் சாராய வாசனை வந்தது.

சுந்தரம் சொன்னான்.

“இந்த அளுக்குப் பயந்து நான் வெளியிலேயே வரலை அண்ணே*

நான் கூஜாவைப் பார்த்துக் கேட்டேன்.

“என்ன சார்! இந்தப் பையனை வெட்டணும் கொல்லணும்னு சொன்னீங்க இப்ப ரெண்டு பேரும் சேர்ந்து தண்ணி போட்டுட்டு வந்து நிக்கறீங்க”

“என் மொதலாளி, என்னை வேலையை விட்டு நிறுத்திட்டான் சார்.

ரூம் வாடகையை என் சொந்த உபயோகத்துக்குத் திருப்பிட்டேன். அவசரம். ஒரு முடை. பிறகு சரி பண்ணிக்கலாம்னு நெனச்சேன். அதுக்குள்ள   முதலாளிக்குக் தகவல் தெரிந்து போச்சு. என்னை வேலையை விட்டு அனுப்பிட்டார். பத்து வருஷமா நான் அவர்கிட்டே வேலையிலே இருந்தேன். ஒரு சின்ன தப்பை அவர் ரொம்பப் பெரிசு பண்ணிட்டார். மனசுக்கு ரொம்பக் கஷ்டமா போயிடிச்சு. அதனாலதான் இப்போ சுந்தரத்துக்கிட்டே வந்து ஏதாவது வாங்கிக்குடுன்னு கேட்டேன். சுந்தரம் நெறைய வாங்கிக் கொடுத்திட்டான்.” என்றான். எனக்குக் கோபம் வரவில்லை. எப்படியோ இந்த வெட்டுப் பழியும் குத்துப் பழியும் தீர்ந்து மனிதர்கள் தங்களை மீட்டுக்கொண்டார்களே என்று நிம்மதியாக அவர்களிடமிருந்து விடை பெற்றேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version