
தலைப்பு சற்று தலை சுற்றவைக்கிறதா? குப்பை என்றாலே பயனற்றது தானே அது எப்படி நம்மை குபேரனாக்கும் ? எதாவது நெகிழி மறு சுழற்சி பற்றியதா ?இல்லை ஏதும் மக்கும் குப்பைகளை உரமாக்குவது பற்றியதா ? என்ற கேள்விகள் இருந்தால், மன்னிக்கவும் இந்த பகுதி அதற்கானது அல்ல. இது, இதுவரை நாம் பெரிதாக கவலைப்படாத பகுதி.ஆனா பாருங்க காலை படுக்கையை விட்டு எழுந்தலில் இருந்து இரவு படுக்கும் வரை நாம் பயன்படுத்தும் , உண்ணும் அத்தனையும் இது சார்ந்ததாக நமக்கு இருக்க வேண்டும். இதற்காக எவ்வளவு செலவு செய்வது சரி என தோன்றும். இன்னும் ஒரு சிலர் இது ஒரு மேல்மட்ட ( ELITE)தானமாக கருதுவதும் உண்டு. அது என்ன ? அது தான் மூலிகைகள். மூலிகைகளை பொறுத்த வரை இது ஒரு பெரிய வணிக சந்தை. ஆனால் அந்த மூலிகைகள் எங்கு இருந்து கிடைக்கிறது என்பது பலருக்கு தெரிவது இல்லை. இன்னும் சொல்ல போனால் அவர்கள் பயன்படுத்தும் மூலிகைகளை பார்த்தும் கூட இருக்க மாட்டார்கள்.ஒரு சில நேரங்களில் சித்த மருத்துவரான நம்மிடமே இந்த மூலிகைகள் இதற்கு நல்லது ,அதற்கு நல்லது என சிலாகிக்கும் சில அதி மேதாவிகளை கண்டு மௌனமா ரசிப்பது உண்டு. இதில் வேடிக்கை என வென்றால் ,சரி ஐயா அந்த மூலிகையை எடுத்து வாருங்கள் பார்ப்போம் என்றால் ஆள் ஜீபூம்பாவாக மறைந்தே விடுவார். சரி இந்த மூலிகைகள் எங்கு தான் இருக்கும்… அத்தனை பற்பசைகள், சோப்புகள், கொசுவர்த்திகள், தரை , கழிப்பறை சுத்தம் செய்யும் பொருட்கள் செய்யவும் ,இன்னும் மூலிகை சூப்கள், மூலிகை தோசை, இட்லி, செய்யவும் எங்கிருந்து அத்தனையும் கிடைக்கிறது? எதாவது மந்திர ஜால வித்தையாக இருக்குமோ ? என்றால் சத்தியமாக இல்லைங்க.. அவை நாம் உணவிற்காக பயிரிடும் பயிர்களினூடே வளரும் களைகள் தான்.இந்த களைச்செடிகள் தான் நாம் களைக்கொல்லிகளை பயன்டுத்தி குப்பைகளாக்கி கொண்டு இருக்கிறோம். இவைகள் தான் குபேர குப்பைகள். இந்த களைச்செடிகளை அளிக்கும் கொள்ளிகளை HERBICIDE என அழைப்பது வேதனையின் உச்சம். அத்தனை HERB களையும் கொன்றுவிட்டு எங்கு போய் நாங்கள் ( சித்த மருத்துவர்கள்) மூலிகைகளை தேட? அதுதான் கற்றாழை, செம்பருத்தி, இதெல்லாம் கெடைக்குதே டாக்டர் என்று சொன்னால் நான் என்ன சொல்ல என்றே விழி பிதுங்கி நிற்கிறேன்.
இந்த கட்டுரை எழுதுவதாக முடிவெடுத்த உடன் நான் சில நபர்களிடம் உங்களுக்கு தெரிந்த மூலிகளைகளை சொல்லுங்கள் என்று கேட்டேன். ஒரு வாய்வழி கருத்துக்கணிப்பு என்றே வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் அனைத்து தரப்பினரும் , அதாவது படித்த படிக்காத , ஆண்கள் பெண்கள்,இளைய வயதினர், நடுத்தர வயதினர், என அனைத்து தரப்பினரும் கற்றாழை ,மஞ்சள் தவிர பெரியதாக அறியவில்லை . சற்று ஆறுதல் என்ன வென்றால் முதிய வயதினருக்கு மூலிகைகளை பற்றிய அறிவு இவர்களை காட்டிலும் அதிகம். சரிங்க எங்களுக்கு ஏன் இது தெரியணும் ?என்றால் நீங்கள் தான் இங்கு மிகப்பெரிய மூலிகை வணிகத்தின் நுகர்வோர்கள் .
இக்கட்டுரையை எழுதுவதற்கான என் நோக்கம் , நான் என் சித்த மருத்துவ பயிற்சியில் எதிர்கொள்ளும் சில சவால்களே. நாங்கள் சித்த மருத்துவர்கள் எங்கள் பயிற்சியில் மருந்து கம்பெனிகளின் மருந்துகளை மட்டும் நம்பி இருப்பது இல்லை. சில நோய்நிலைகளை தீர்க்க அருகில் இருக்கும் சில குறுஞ்செடிகளையோ , மரப்பட்டைகளையோ நாடவேண்டி உள்ளது. இவை பெரும்பாலும் விவசாய நிலங்களில் விளையும் களைச்செடிகளாகிய விவசாயிகள் வேண்டாம் என்று ஒதுக்கும் குப்பைகள்.
ஒரு கர்ப்பிணி தாய் தன் கர்ப்பகாலத்தில் வயிற்றில் இருக்கும் சிசுவின் சிறுநீரகம் சார்ந்த நோய் போக்க ஆங்கில மருத்துவம் முடியாத நிலையில் சித்த மருத்துவம் நாடி வந்தார். அவர்களின் குறையை கரும்பு நடவு செய்யும் வயலில் விளையும் ஒரு குறுஞ்செடியின் வேர் சரிபண்ணுவதாக கிடைத்த தரவுகளைக்கொண்டு அந்த வேரை தேடி கிட்டத்தட்ட ஒரு மாதம் அலைந்து கண்டு பிடித்தோம். கண்டுபிடுத்தும் பண்படுத்த முடியவில்லை. ஏனென்றால் அந்த நிலத்தில் களைக்கொல்லி சமீபத்தில் அடித்ததாக கூறினார்கள். ஒரு களைக்கொல்லி அடித்த நிலத்தில் இருந்து குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை அதில் மூலிகைகள் வளராது. அப்படி அதையும் மீறி வளரும் மூலிகையில் அந்த களைக்கொல்லியின் தாக்கம் இருப்பதால் அதனை மருந்திற்கு பயன்படுத்த முடியாது.இதை பற்றி எழுதுவதே என் நோக்கம் . நம் மண்ணின் உணவுகளை மீட்க, கலைகளை மீட்க, மரபுகளை மீட்க போராடும் அளவிற்கு மருத்துவத்தை கொண்டாடவும், பயன்படுத்தவும் தயங்குகிறோம். தரமான மருந்துகள் தான் சித்த மருத்துவத்தின் உயிர் நாடி. தரமான மருந்துகளுக்கு பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் அற்ற மூலிகைகள் அவசியசம்.அதற்கான மன்றாடலே இந்த முயற்சி.
பயிர்களின் வளத்திற்கும் அதிக மகசூல் தருவதற்கும் தானே களைக்கொல்லிகளை பயன் படுத்துறோம் அதில் என்ன தப்பு?எங்க மகசூல் தானே முக்கியம்.. உங்களுக்காக நாங்கள் என் களைக்கொல்லிகளை பயன்படுத்தக்கூடாது ? என்ற கேள்விகள் இருக்கத்தான் செய்யும். குப்பைகளாக நாம் கொன்று குவிக்கும் அத்தனையும் நம் உயிர் காக்கும் மூலிகைகள் .அவைகளும் உங்களுக்கு பொருளாதாரத்தை ஈட்டித்தருவன.அதை போய் யார் வாங்குவா ? என்றல் அதற்கான இணைய தளங்கள் சென்று பாருங்கள் நீங்கள் களைகளாக , குப்பைகளாக கழித்து ஒதுக்கும் மூலிகைகள் என்ன விலைக்கு விற்பனை ஆகின்றன என்று.உங்களிடம் உள்ள நிலங்களில் பத்தில் ஒரு பகுதியில் அவற்றை கொள்ளாமல் வளர விட்டு முயன்று பாருங்கள். அதுவும் பயிர் செய்யாமல் உழைப்பை கொட்டாமல் வரும் லாபம். சரி என்ன வயலில் என மூலிகைகள் பெருவாரியாக வளரும் என்பதைப்பற்றியும் சொன்னால் தானே தெரியும்.அதைப்பற்றி சற்று விரிவாக காண்போம். எனக்கு தெரிந்தவரை, நான் சேகரித்தவரை இங்கு பட்டியலிடுகிறேன்
வ.எண் | களை | பொது பெயர்கள் | பயிர் வகைகள் | பயன்கள் |
1. | DANDELION | காட்டு முள்ளங்கி/சீமை முள்ளங்கி | சோளம் , பருத்தி, அவரை | சிறுநீர் பெருக்கி, கல்லீரலை சுத்திகரிக்கும், நீரிழிவு நோய்க்கு உணவாக பயன்படுத்தலாம் |
2. | CLOVER | மணப்புல் | சோளம் , பருத்தி, அவரை | மாதவிடாய் நின்ற பின்பு(POST MENOPAUSAL) வரும் உடல் சிக்கல்களை சரி செய்யும் ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சனைகளை சரி செய்யும் எலும்புகளில் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்து |
3. | OXALIS | புளியாரை | சோளம் , பருத்தி, அவரை | கால் ஆணிகள் , மருக்கள் போக்கக்கூடியது பசித்தூண்டி ,தொற்று நீக்கி, ஜீரணத்தை சீராக்கும். |
4. | CHICK WEED | மூக்குத்திப்பூ | சோளம் , பருத்தி, அவரை கரும்பு , உருளை, வெங்காயம், பூண்டு,கோதுமை | பறவைகள் விரும்பி உண்ணும் ,பல்வேறு தோல் நோய்களை போக்கக்கூடியது |
5. | CRAB GRASS | கீரைப்புல் | சோளம் , பருத்தி, அவரை கரும்பு , உருளை, தக்காளி | வலி நிவாரணி , நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு |
6. | CUT WEED | வெட்டுக்காய பூண்டு | சோளம் , கோதுமை, உருளை , மக்காசோளம் | உடலின் காயங்களை விரைவில் ஆற்றக்கூடியது |
7. | VIRIDIS | குப்பைக்கீரை | நெல்,வேர்க்கடலை, பருத்தி | குப்புழுக்களை நீக்கவல்லது , சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமலை போக்கும், பல்வேறு தோல் நோய்களை போக்கும் |
8. | TRIANTHEMA | சக்தி சாரணை, | நெல்,வேர்க்கடலை, பருத்தி ,கரும்பு | சூலை பின்னப்படுத்தும், வீக்கங்களை கரைக்கும். |
9. | LAMB QUARTES | சக்கரவர்த்தி கீரை , | கோதுமை, அவரை, உருளை, தக்காளி, கரும்பு, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை | தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்த சிறந்த கீரை |
10. | VELVET LEAF | வட்டத்திருப்பி (அ ) பொன்முசுட்டை | கோதுமை, அவரை, உருளை, தக்காளி, கரும்பு | முடக்குவாத்தை போக்கக்கூடியது , ரத்தத்தை சுத்திகரித்து, |
11. | FOXTAIL | தினை | கோதுமை, அவரை, உருளை, தக்காளி, கரும்பு, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை | எலும்பு , மூளை இவற்றுக்கான சிறந்த ஊட்டச்சத்து , மலக்குடல் புற்று நோயை தடுக்க வல்லது,அதிக நார்சத்து நிறைந்தது. |
12. | BRANYARD GRASS | வரகு | கோதுமை, அவரை, உருளை, தக்காளி, கரும்பு, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை | இதனை அழிக்காமல் இருந்தால் மண்ணை நிலைப்படுத்தி மண் அரிப்பை தடுக்கும் |
13. | DOLLAR WEED | வல்லாரை | மக்காசோளம் , கரும்பு, உருளை | மனஅழுத்தத்தைபோக்க கூடியது, மூளைக்கு சிறந்த டானிக் |
14. | COCKLE BUR | மருளூமத்தை | மக்காசோளம் , கரும்பு, உருளை | முடக்கு வாதம், வெண்புள்ளி நோய் , வலிப்பு இவற்றுக்கு செய்யும் சித்த மருந்துகளில் சேருகிறது |
15. | CYPERUS ROTUNDUS | கோரைக்கிழங்கு | நெல்,பருத்தி , கருவேப்பிலை, கத்தரி, வெண்டை, | நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவல்லது,கர்ப்பப்பை சார்ந்த வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள் , கட்டிகள் போன்றவற்றுக்கு சிறந்த மருந்து |
16. | AMARANTHUS | தண்டுக்கீரை | நெல் , பருத்தி. வேர்க்கடலை | தாது உப்புகளின் செறிவு நிறைந்தது, சிறுநீர்பெருக்கி, கால்நடைகளுக்கு சிறந்த தீவனம். |
குறிப்பு : இங்கு பல்வேறு மூலிகைகளின் பயன்கள் பற்றி சொல்லி இருப்பினும் ,அவை முறையாக மருத்துவர் ஆலோசனை இன்றி எடுப்பது ஆபத்தானது. இவை சரியான முறையில் சுத்தி செய்து தந்த பாகத்தை பயன் படுத்தலாம் என்பது அறிந்து பயன்படுத்த வேண்டும்.
எனக்கு தெரிந்தவை இவை . இவற்றை பட்டியலிட்டு காட்டியுள்ளேன். இன்னும் நிறைய மூலிகைகள் களைகளாக காவு கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். எப்படி அடுத்த தலைமுறைக்கு நம் சொத்துக்களை சேர்த்து வைக்கிறோமோ அதைவிட முக்கியம் நம் பாரம்பரிய அறிவை கடத்துவது. அது கலைகள், கலாச்சாரத்தோடு நிற்காமல் நம் மண்ணின் மகத்துவமான சித்த மருத்துவ அறிவையும் கடத்துவது நம் கடமை. இந்த மூலிகைகள் இல்லாமல் எங்கள் மருத்துவம் இல்லை. சொந்த மருத்துவ அறிவு கொண்ட உலக குடிகளில் தமிழர் இனமும் ஒன்று. அதை மெல்ல காவுகொடுக்காமல் மீட்டெடுக்க ஒன்றிணைவோம்.
Super. We are not aware of our real potential. Let us look for n search for.
Superb Dr.Umera ….
Really informative.
As a siddha doctor am very proud of you.