
குப்பை என்றவுடன் வீட்டில் சேறும் குப்பைகள் அல்லது பிளாஸ்டிக் பொருட்களில் வரும் குப்பைகள் என்று இல்லாமல் தினசரி நான் காணும் குப்பையாக எலக்ட்ரிக் குப்பைகளை பார்த்து வருகிறேன். நான் கடந்த 15 வருடமாக எலக்ட்ரிக் மற்றும் பிளம்பிங் பணியில் இருக்கிறேன். தினசரி என் பணியின் சூழலில் இத்தகைய குப்பையை பார்த்து வருகிறேன். அவற்றை எல்லாம் எப்படி மக்க செய்வது அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்று எந்த விழிப்புணர்வே இல்லாமல் இருந்திருக்கிறேன். ஒருமுறை ஒயரில் இருக்கும் காப்பர், அலுமியம் ஆகியவற்றை பிரித்தெடுத்து எடைக்கு போடும் பணியில் முதலில் அவற்றை எரிப்பார்கள், அவை எரியும் போது கருப்பான புகை வெளிப்படும் அவை நம் சுவாசிப்பதையே சிதைக்கும், அப்படி ஒருமுறை நடக்கும் போது ஒரு பறவை பறந்து சென்றது, அது தீடீர் என்று கிழே விழுந்து இறந்தது. அந்த சமயம் என் உடல் நடுங்கியது. அன்றில் இருந்து இந்த எலக்ட்ரிகல் வேஸ்ட் பொருட்களை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் இவற்றை எப்படி சரி செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். சாதாரணமான நான் எப்படி இவற்றை சரி செய்ய முடியும் என்று எனக்கு தெரியவில்லை.
தேவை கருதி மட்டும் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன். பிளாஸ்டிக் பொருட்களாக இருக்கும் பொருட்களை மறு சுழுற்ச்சிக்கு பயன்படுத்துவேன். காப்பர் அலுமினியத்தை பிரித்தெடுத்து எரிப்பதை நிறுத்திவிட்டேன். அதேபோல் மற்ற எலக்ட்ரிக் பணியில் இருப்பவர்களையும் எரிக்க வேண்டாம் என்று தடுப்பேன். அதேபோல் பழைய டயரை எரிப்பதையும் பார்த்து தடுத்திருக்கிறேன். வேற என்ன செய்யமுடியும் என்று இன்றும் யோசித்திருக்கிறேன்.
ஒருமுறை திருவண்ணாமலை ஈசான்யம் குப்பை கிடங்கில் தீப்பற்றிக் கொண்டு எரிந்தது. அந்த பக்கம் முழுக்க கரும் புகை சூழ்ந்தது ரோட்டில் எதிரே வருபவர் கூட தெரியாமல் இருந்தது சுவாசிக்கவும் கடினமாக இருந்தது. அந்த வாசனை மூக்கை அடைத்தது அது நிச்சியமாக டயராகத்தான் இருக்கும். மறுநாள் அந்த இடத்தில் சில பறவைகள் இறந்து கிடப்பதை பார்க்க முடிந்தது. மின்னணுசாதனங்கள் பழுதடைந்து அல்லது பயன்பாட்டுக்கு ஒப்பாகாமல் போன பிறகு அவற்றை சரியான முறையில் சேகரித்து, பிரித்து, மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தவோ அல்லது பாதுகாப்பாக அழிக்கவோ செய்ய வேண்டும் என்று மட்டும் தோன்றியது.
தொலைக்காட்சி, வாட்டர் ஹீட்டர், கணினி, மொபைல் போன் வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், பேட்டரிகள், சார்ஜர்கள், கேபிள்கள் என பழைய மின் சாதனங்களை நேரடி குப்பைக்குள் போடாமல், அங்கீகாரம் பெற்ற மறுசுழற்சி மையங்களில் ஒப்படைக்கலாம்.
புதிய பொருட்கள் வாங்கும் போது, பழையதை விற்பனையாளரிடம் மாற்றிக் கொடுப்பது சிறந்தது என்று நினைக்கிறேன்.மின் சாதனங்களைப் பயன்படுத்தும் பொழுது மட்டும் கவனம் வேண்டும் என்றல்ல; அதனைப் பிறகு கையாளும் பொழுதும் கவனம் வேண்டும் என்று நினைக்கிறேன்.