
மௌனத்திற்கும் ஓர் ஒலி உண்டு. அது வலியின் நிசப்தம், மனதின் சிதைவுகளில் எழும் இசை. எம்.டி. வாசுதேவன் நாயரின் “இரண்டாம் இடம்” அதைச் சொற்களால் சித்தரிக்கும் நாவல். வியாசரின் மகாபாரதத்தில் ஒதுக்கப்பட்ட பீமனின் குரல் இங்கு உயிர் பெறுகிறது.
இது ஒரு வீரனின் கதை அல்ல, ஒரு மனிதனின் மௌனப் பிரளயம்.
அண்ணனின் கட்டளையில் அடங்கியவன், தாயின் நியதியில் அடிமையானவன், காதலில் இரண்டாமிடம் பெற்றவன் பீமன். அவன் நிஜங்கள் நிழலாக்கப்படுகின்றன. ஆனால் அந்த நிழலின் நிறம்தான் இந்நாவலின் ஒளி.
வாசுதேவன் நாயர் இதிகாசத்தின் தெய்வங்களை அகற்றி, மனித மனதின் மண்ணையும் இரத்தத்தையும் நம் கண்முன் நிறுத்துகிறார். பிரளயம் விழுங்கிய துவாரகையின் துயரமான அடையாளங்கள் இன்னும் கடலோர அலைகளில் பளபளத்துக் கிடக்கின்றன.
கிருஷ்ணன் வேடுவனின் அம்பால் விழுந்து, துவாரகை விழுங்கப்பட்டு, யாதவர்குலம் அழிந்து போனபின், பாண்டவர்கள் வானபிரஸ்தத்தைத் தொடங்குகிறார்கள். பீமன் அங்கே ஒரு வீரன் அல்ல, சிதைந்த மனிதன். திரௌபதி சரிந்து கீழே விழ அவள் மீது அளப்பரிய அன்புடைய பீமன் திரும்பிப் பார்க்கக் கூடாது என்ற நியதியை மீறித் திரும்பிப் பார்க்கிறான்.
அப்போது அவன் வாழ்க்கையையும் அவன் திரும்பிப் பார்க்கிறான்.
நினைவுகள் நதியாய் ,வெள்ளமாய் பெருகுகின்றன .
அவன் “மந்தா” என்று இகழப்பட்ட சிறுவயது, துரோணரால் ஒதுக்கப்பட்ட திறமை, தாயின் கணக்கிட்டு காட்டப்பட்ட அன்பு, காதலின் மௌன தியாகம், போரின் வெற்றி கூட தன் பெயருக்கு வராத சோகம் எல்லாம் புதினம் முழுவதும் பரவி நம்மை ஆட்கொள்கிறது.
திரௌபதியின் ஒரு பார்வை அவனுக்கு ஒரு உலகம், ஒரு மௌனம் அவனுக்கொரு மரணம். அவளுக்காக சௌகந்திக மலர்கள் தேடிச் சென்றதும், அவளால் மறக்கப்பட்டதும் அவனது மொத்த வாழ்வின் உருவகம். சௌகந்தி மலர்கள் வாடும் போது , எத்தனை முறை நாம் நேசித்தும், நேசிக்கப்படாமல் புரிந்து கொள்ளப்படாமல் வாடியிருக்கிறோம் என்ற நினைவு நம்மை வாட்டுகிறது.அதுதான் நாயரின் பீமனின் துக்கம் , அதுவே நம் வாழ்வின் பிரதிபலிப்பு.
போர் முடிந்தபின், புகழ் அர்ஜுனனுக்கே, பட்டம் யுதிஷ்டிரனுக்கே.
ஆனால் போரின் உண்மையான பளுவைச் சுமந்தது பீமனின் தோள்கள் தான்.
மாபெரும் வீரனவன்.
பகனை, இடும்பனை, கீசகனை, ஜராசந்தனை, துரியோதனனை யாரையும் அவன் விட்டு வைக்கவில்லை.
அவன் கைகளில் ரத்தம் இருந்தது, ஆனால் கண்களில் கருணை இருந்தது.தன் தமையன் என்று தெரிந்த பின்
கர்ணனைச் சந்திக்கும் போது இருமுறை மனம் உடையும் அந்த வீரன், மனிதத்தன்மையின் உச்சம்.
வாசுதேவன் நாயரின் பீமன்
“நியதிகளை யார் வகுக்கிறார்கள்?”
“தர்மம் யாரைக் காப்பாற்றியது?” என்று கேட்கிறான்.பீமன் ஒருவனே விதுரனை அரசர் ஆக்கி இருக்க வேண்டும் என்று நீதியோடு நினைப்பவன்.
பீமன் நம்முள் வாழ்கிறான் .
அவனது “இரண்டாம் இடம்” நம்முடையது தான்.
நாமும் பல சமயங்களில்
உழைத்தும் மறக்கப்பட்டவர்களாய்,நேசித்தும் பதில் பெறாதவர்களாய்,
போராடியும் அர்த்தம் காணாதவர்களாய் இருக்கிறோம்.
அன்பில், வேலையில், உறவுகளில் நாம் எல்லோரும் எங்கோ ஒரு இடத்தில் “இரண்டாம் இடம்” பெற்றிருக்கிறோம்.அதனால் பீமனின் வலியை நாம் உணர்கிறோம்.
நமக்கான அங்கீகாரம் மறுக்கப்படும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் பீமனின் நிழலாகிறோம்.
போரிலும் ,தோல்வியிலும், அன்பிலும் மறுப்பிலும், அந்த “இரண்டாம் இடம்” நமக்கு ஒரு கண்ணாடி. நம் வாழ்வின் எல்லா அடங்கிய உணர்ச்சிகளையும் அது பிரதிபலிக்கிறது.
இதிகாசத்தின் மீள் பார்வையாக அல்லாமல்
மனித மனதின் ஆழத்தை நோக்கிய புனிதப் பயணமாகிறது இரண்டாம் இடம்.
தமிழில் குறிஞ்சிவேலனின் மொழிபெயர்ப்பு மலையாளத்தின் நுண்ணிய மணத்தை இழக்காமல், வார்த்தைகளில் கவித்துவம் ஊற்றி, பீமனின் குரலை நம் இதயத்தில் ஒலிக்கிறது.
எம்.டி. வாசுதேவன் நாயர்
கிரேக்க இலியட், பாரசீக ஷாஹ்நாமா ,இவைகள் அனைத்தையும் மிஞ்சும் ஆழத்தில் மகாபாரதத்தை மனித வரலாறாக வாசிக்கச் செய்கிறார்.