தேவதையின் மச்சங்கள் கருநீலம்

கே.ஆர்.மீராவின் எழுத்துகள் எப்போதும் ஒரு போதை தான். சுருங்கச் சொல்லி வாழ்வின் எதார்த்தத்தை விளங்க வைக்கும் எழுத்துகள்; கிரங்கவைக்கும் எழுத்துகள்; வர்ணனையில் வண்ணமாகும் எழுத்துகள்; பெண்களுடைய வலிகளின் குரல்களோடு ஒளிரும் எழுத்துகள். குறைந்த பக்கங்களே உடைய இரு குறுநாவல்களும் உணர்வுகளை கடத்திச் செல்வதில் பெருநாவல்கள் தோற்றுப்போகும். கணத்த கதைகள். குடும்பப்பிளவை 34+29=63 பக்கங்களில் எழிலுற எழுதி ஈர்த்துவிடுகிறார் மலையாள மனக்குயில். தமிழ் மொழிபெயர்ப்பு அற்புதம். //இந்த புத்தகத்தை சதி சாவித்திரிகளும், கண்ணியமான உத்தமபுருஷர்களும் வாசிக்காதீர்கள்// என்று நான் சொல்லவில்லை; நாவலாசிரியரே சொல்லிவிட்டார். வாசித்தப்பின் தான் தெரிகிறது; வலி நிறைந்த உண்மைகள்.

💜 உலகில் காதலர்களாக உலா வருபவர்களில் பெரும்பாலோர் காதலித்து மணமான பின் காதலிப்பதே இல்லை. இதில் யதார்த்தமும் உள்ளது. பிள்ளைகள் பிறந்த பின் அன்பானது பிள்ளைகளிடத்தில் தாவி விடுகிறது இயல்பாகவே; அனிச்சையாகவே. அதில் குற்றமொன்றுமில்லை. ஆனால் காதலித்த போது மானே! தேனே! மயிலே! மன்மதனே! என்ற வர்ணனையான வசீகர வார்த்தைகள் காலவாதி ஆகிவிடுகிறதே இணையரோடு இல்லறத்தில் நுழைந்த பின். பிறரின் மனைவி தான் அழகாக தெரிகிறாள்; மிளிர்கிறாள். நாவலில் 13-வருடம் சுனிதாவோடு இணைந்து இன்புற்று இரு மகன்களுக்கு தந்தையான பின்
நரேந்திரனுக்கு பிறரின் மனைவி மேல் கண் படர்ந்து காதலாகி காமம் தலைக்கேறுகிறது. ஏஞ்சலாவிற்கும் இதே நிலை தான். தன் மகளுக்கு ஒரு துணை வேண்டுமென மூக்கின் ஓரத்தில் உள்ள மச்சம் வேண்டுமென சொல்லியே காதலித்த கணவனை விட்டுவிட்டு காமுகனை கட்டியணைக்கிறாள். எல்லா ஆண்களும் இது போல பெண்களை நேசித்திருந்தால் எவ்வளவு அழகாய் இருக்கும் உலகம். ஆனால் தன் மனைவியும், தன் கணவனும் சுவையற்று போய் விடுகிறார்களே. நாவலின் உச்சபட்ச தாக்கமே இரு பிஞ்சுகள் தான். தாயை இழந்த பின், தந்தையும் சிறைக்கு சென்ற பின் அனாதை தானே அந்த இரு மழலைகளும். அதுவும் விவரமே அறியாத இளம் பிஞ்சான குழந்தையை விடுதியில் விடும்போது என் கண்கள் குளமாவதை தவிர்க்கமுடியவில்லை; தடுக்கமுடியவில்லை. இவர்களின் தவறான நடத்தைகளால் பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகள் தானே. காதலுக்கு ஒன்றும் காமத்திற்கு ஒன்றும் பெற்று விட்டு அனாதைகளை உலகில் அலைய விடுவது தான் அபத்தமான ஒன்று. பிறன்மனை கொள்ளல் பெரும்பாவமே!
குறுநாவலில் மிகவும் ஈர்த்த ரசித்த வரிகள்:

‘மெழுகு துளிகள் போன்று மழை சொட்டியது’

‘காளான் வடிவில் வெட்டப்பட்ட முடி’

‘இருண்ட வானம் மின்னல் மந்திரக்கோலை வீசியது’

‘பால் உறைந்தது போன்று வெளுத்த மெழுகு வர்த்திகள்’

என்ன அழகழகான வரிகளும் வர்ணனைகளும்… 💜💜💜
‘தேவதையின் மச்சங்கள்’ 👌👌👌

💜 துறவியின் மனதையே தூர் வாரிவிடுவது பெண்ணின் விழிகள் தானே! இரண்டாவது கதையும் அப்படித் தான். ஆனால் இங்கே ஒரு அபத்தமுண்டு; அசிங்கமுமுண்டு. மணமான பெண்ணின் கரு விழிகள் அது. கணவன் இழுத்து அணைத்தாலும் காதல் கொண்ட துறவியின் நினைவே மலரும் விழிகளில். விரக்தியும் பெருவிருப்பும் இணைந்தே விடுகிறது. இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்ற பின்பு காமம் என்ன காணாமல் போய்விடுமா? உடலோடு ஒட்டித்தானே இருக்கும். 13- வருடம் கழிந்தாலும் காதலும் காமமும் தொலைந்திடுமா? கணவன்களுக்கல்லவா தெரிய வேண்டும். கூடையில் அடைத்த பாம்பின் அவஸ்தையில் தான் எத்தனைப் பெண்கள். தவறாக பெண்கள் பிறருடன் இணைவதற்கு ஆணும் முக்கிய காரணம் தானே. அதை அப்படியே எடுத்துக்காட்டிவிட்டது கருநீலம் கதையமைப்பில் மீராவின் வரிகள் தான் வசீகரமானவை; வசந்தமானவை. துறவியின் தோற்றத்தை வர்ணித்த விதமே எந்த பெண்ணும் மையல் கொள்வாள் உறுதியாக. பளபளக்கும் பச்சைப் பட்டுப் புடவையோடு தலைமுடியை பின்னால் முடித்த பெண் உருவத்தைக் கண்டால் எந்த துறவியும் துறவை துறப்பான். பாம்பு கடித்த பின் அடி முதல் முடி வரை விசித்திரம் தான். என்னவொரு அழகு நாலுகட்டு வீட்டின் தோற்றமும், அதனைச் சுற்றியுள்ள முல்லை, பாரிஜாதம், மந்தாரை, ஆளுயர துளசிகள், பறிக்காத நூறு பூக்கள் என வாசிக்கையில் வாசனை வாசனை நுகர்ந்து கொண்டே நகர்ந்தது பக்கங்கள் காதலின் பெருவலியோடு. இனிதாய் இனித்த இரு குறுநாவல்களும் சொற்ப பக்கங்களில் சொர்க்கமானது. வாசித்தால் நிச்சயம் உங்களை ஆட்கொள்ளும். கதையமைப்பை விடுங்கள். எழுத்துகள் உங்களை உள்ளிழுத்துக் கொள்ளும்; கொல்லும். மெல்லிய வர்ணனைகள் வசந்தமாய் வருடும்; உங்களைத் திருடும்.
இந்த நூல் தான் என்று கிடையாது, மீராவின் எந்ந படைப்பையும் அயர்ச்சி அடையாமல் வாசிக்கலாம்… 🌹🌹🌹

பேரன்புடன்,
ரசல்🌹

புத்தகம்: தேவதையின் மச்சங்கள் கருநீலம்
ஆசிரியர்: கே.ஆர்.மீரா
தமிழில்: மோ.செந்தில்குமார்
பதிப்பகம் : எதிர் வெளியீடு
பக்கங்கள்: 80. விலை :₹150

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version