சேத்துமான்கதைகள்

 " வறுகறி " மற்றும் "மாப்பு கொடுக்கோணுஞ் சாமீ" 

என்ற இரு கதைகள் .

வறுகறி கதை குமரேசன் என்னும் எட்டு வயது சிறுவன் மற்றும் அவனது தாத்தனையும் பன்றிக்கறியையும் மையமாகக் கொண்ட கதை. தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படும் ஒரு பிரிவினர் அவர்களின் உணவுப் பழக்கத்தினாலேயே தீண்டத்தகாதவர்களாகிறார்கள் .
குமரேசனின் வாத்தியாரே அவனுடைய உணவுப்பழக்கத்தை ,” ஒடக்கானையும் பல்லியையும் தவிர எல்லாத்தையும் சாப்பிடுவான்டா” என்று கேலி பேசுவார் . அவர்களுக்கு நிலையான வேலையும் வருமானமும் கிடைக்காததால் அணில் , எலி போன்றவற்றைக் கூட பிடித்து உண்ணவேண்டிய சூழல் . பெண்கள் கிலுவை வேலிகளில் படர்ந்து கிடக்கும் கட்டைக் கொடி எடுத்து வந்து கூடை முடைந்து குடியானவர்களிடம் கொடுத்தால் தவசமோ பணமோ …தருவதைப் பெற்றுக் கொண்டு வருவார்கள் . முன்னிரவில் குமரேசனின் பாட்டி ஊருக்குள் சென்று
மீந்த உணவை வாங்கி வந்து அனைவருக்கும் பிரித்துக்கொடுப்பார்.

குடியானவர் வீட்டுப் பெண்கள் பன்றிக்கறி சமைக்க மாட்டார்கள் . அதனால் ஆண்கள் மட்டும் பணம் பங்கு போட்டு தேவைப்படும் போது பத்துப் பதினைந்து கூறு தேறியதும் இளம்பன்றியாகத் (முருவான்) தேடிக்கண்டு பிடிப்பார்கள்.

பின்னர் அதைக் கொன்று எப்படிப் பதப்படுத்துவது , சுடுவதற்கு நெருப்பு தயாரிப்பது , அதில் குமரேசனுக்கான வேலை , அவனுக்கான கறிப்பங்கு என்று போகும் கதை வெள்ளையனுக்கும் செல்லையனுக்கும் ஏற்கெனவே இருக்கும் பூசலால் இங்கும் பங்குக் கறிக்காக நடந்த வாய்த்தகராறு முற்றி கைத்தகராறாக முடிய தாத்தன் பலியாகிறார் .
தாத்தன் குமரேசனுக்காக
பன்றியின் சுட்ட காதை அறுத்துக் கொடுத்து அதை அவன் சுவைப்பது அருமையான காட்சி .

கதை முழுவதும் அநேகம் குறியீடுகள் . இளம் பன்றியைக் கண்டறிந்து அதைத் துரத்திப் பிடித்து கட்டி கொண்டு சென்று அதைக் கொல்லும் போது பாவமாகத் தான் இருக்கிறது. ஆனால் உணவென்று பார்த்தால் இப்படித் தான் இருக்கும் என்று ஏற்றுக் கொள்ளவும் தோன்றுகிறது . குமரேசன் தன் தாத்தனோடு கறி சாப்பிடச் செல்வது அழகான கவிதை .

“மாப்புக் குடுக்கோணுஞ் சாமி” கதை மாட்டுக் கறி பற்றியது. அந்தக் கிராமத்தில் உள்ள மாடுகள் என்ன காரணம் என்று தெரியாமலே ஒவ்வொன்றாக வரிசையாக இறக்க அதே போல் காரணமே இல்லாமல் அவர்களை மிரட்டி முதியவர் , பெண்கள் , குழந்தைகள் , வாயில்லா ஜீவன்களான நாய் பூனைகளைக் கூட விரட்டி அடிக்கின்றனர் . அவர்களும் தாங்கள் ஒன்றும் செய்யவேயில்லை என்று கூறியும் தடிகளால் அடிக்கப் படுகிறார்கள் . இறுதியில் ராஜூவைப் பற்றி விசாரிக்கும் போதும் மாடுகளைக் குறித்துக்கேட்கும் போதும் தான் என்ன காரணம் என்றே தெரியவருகிறது. தவறே செய்யாமல் இருந்தாலும் வேறு வழியே இன்றி மாப்புக் கேட்கும் போது கண்களில் கண்ணீர் துளிர்க்கிறது .

இந்த சாதிய அடக்குமுறை என்றைக்கு மாறும் என்று தோன்றுகிறது. நகர்ப்புறங்களில் இது போன்ற சாதி வேறுபாடு அவ்வளவாக இல்லை என்றாலும் இன்னும் கிராமங்களில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

பேராசிரியரான பெருமாள் முருகன் அவர்களின் கதை சொல்லும் நடை அருமை …இந்த இரண்டு கதைகளும் கொங்குப் பகுதி வாழ்வியலை சார்ந்தவை.

இந்த புத்தகத்தில் இருக்கும் வறுகறி கதையும் மாப்புக் குடுக்கோனுஞ் சாமி கதையும் திரைப்படமாக வளர்ந்த கதையையும் முன்னுரையில் கொடுத்துள்ளார் .

64 பக்கங்களில் எவ்வளவு விஷயங்கள் !! அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version