
இந்த 2025 இல் ஜென் பீட்டா தலைமுறையில் இருக்கிறோம். என்ன ஒரு வளர்ச்சி ? எத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகள்? இந்த அலைபேசியில்?! போன் பார்க்காத குழந்தைகள் உண்டா? எல்லாமே அதுலயே கத்துக்கலாம்! எல்லாம் சரி கல்வி என்ற ஒன்று இந்த தலைமுறைக்கு சரியாகப் போய் சேறர்கிறதா ?
ஒரு காலத்தில் குரு குலத்தில் மட்டும் தான் படிக்க முடியும். அதிலும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் பாகுபாடு பிரச்சினை. அதில் குருவின் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை. குரு என்பவர் கடவுளைப் போன்றவர். குருவிற்கு தேவையான அத்தனை வேலைகளையும் சிஷ்யர்களே செய்வார்கள்! அது இந்த காலத்தில் இருக்கும் உண்டு உறைவிடப் பள்ளி மாதிரி தான் இருந்தது. மெதுவாக மெக்கல்லே கல்வி முறை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பயன்பாட்டிற்கு வந்தது. அது உண்மையில் வரமா சாபமா என்று இன்றுவரை எனக்கு தெரியவில்லை.
சாதி ரீதியாக இந்த வேலை இவன் தான் செய்யணும். இந்த வேலை எல்லாம் இவன் செய்யக்கூடாது, அப்படி என்று பிரித்து வைத்திருந்தது நம் நாடு. மக்களாட்சி வந்தபின் கல்வி ஒன்று தான் அத்தனைக்குமான விடியல் என்று அதன்பின் வந்த அத்தனை தலைவர்களும் நம்பினார்கள் எனவே அனைவருக்கும் கல்வித் திட்டம் உருவானது.
மாண்டிச்சோரி கல்வி வரும் வரை நாம் சிறந்த கல்விதான் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்று நம்பிக்கொண்டிருந்தேன்.
மரியா மாண்டிசோரி ஒரு கல்வியியல் புரட்சியாளர் என்று தான் நான் சொல்வேன். குழந்தைகளின் உணர்வை நன்கு ஆராய்ந்த பின் அவர் கொண்டு வந்த கல்வி முறை தான் மாண்டிச்சோரி கல்வி. இது செய்முறை வழி கற்றல் கல்வி. விளையாட்டாகவே அவர்கள் கல்வியை கற்கும் முறை.
“ஜன்னலின் வழியே ஒரு சிறுமி” என்று ஒரு ஜப்பானியப் புத்தகம் உண்டு. அதை படித்தவருக்கு நிச்சயம் டோட்டோ சான் – ஐ பிடிக்கும். மிகவும் குறும்புத்தனமான அவள், எப்போதும் வகுப்பறையின் ஜன்னலின் வழியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பாள். அந்த ஜன்னலின் வழியே செல்லும் ஒரு நாடகக் குழுவை தினமும் அவள் வேடிக்கை பார்ப்பாள். மலை, மயில், புறா, கிளி ,மரம் செடி,காடு இவை எல்லாம் அந்த ஜன்னலுக்கு வழியே செல்லும் அவள் கனவுகளில் இடம்பெறும் அற்புதங்கள். எப்போதும் ஒரு மேசை மேலே உட்கார்ந்து கொண்டு ஏதோ ஒன்றை எழுதிக் கொண்டு இந்த நேரத்தில் இதுதான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் அவளை வகுப்பறைக்கு உள்ளே உட்கார அனுமதிக்கவில்லை. அதனால் அவளால் வகுப்புகளை சரியாக கவனிக்க முடியவில்லை. அதன் விளைவாக அவளது ஆசிரியர் அவளைப் பள்ளியை விட்டு நின்று விடும்படி அவர் அம்மாவிடம் அறிவுறுத்தினர். அவரது அம்மா டோட்டோ சானுக்காக வேறு பள்ளிகள் தேடினார். கிட்டத்தட்ட எல்லா பள்ளிகளிலும் இந்த கட்டுப்பாடுகள் வரைமுறைகள் இருந்து கொண்டே இருந்தது. அது டோட்டோ சானுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கடைசியாக அவர் வந்து சேர்ந்த இடம் டோமாயி ஹக்குன்( Tomoe gakuen).
அங்கே பள்ளிக்கூடம் இல்லை. அது ரயில் பள்ளி. அங்கே விதிமுறைகள் இல்லை. இந்த வகுப்பில் இதுதான் படிக்க வேண்டும் என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. எனக்கு இப்போது கணிதம் படிக்க வேண்டும் என்றால் படிக்கலாம். எனக்கு இப்போது வரைய வேண்டும் என்றால் வரையலாம். பெரும்பாலும் வகுப்புகள் எப்போதும் வகுப்பறைக்கு வெளியே தான் இருந்தன. தினம்தோறும் காலார நடத்தல் என்பதே பெரும் வகுப்பாக அவர்களுக்கு இருந்தது. விவசாய நிலங்களுக்குச் சென்று நேரடியாக விவசாயம் கற்றனர். அவர்களின் கற்றல் வெறும் ஏட்டுக்கல்வியாக இல்லாமல், நேரடியாக மனதிற்கு புரியும் படியாக, குழந்தைகளுக்கு ஏற்றவாறு அவர்களின் ஆழ் மனதிற்குள் செல்லும்படியும், அவர்களுடைய திறமையை வளர்த்தெடுக்கும் விதமாக இருந்தது. இதனால் தங்களுடைய சிறு வயதிலேயே தங்களுக்கு எதில் விருப்பம் என்பதை அவர்களே தேர்ந்தெடுக்கும் அறிவும் அவர்களுக்கு இயல்பாக வந்தது. இதை தான் அப்துல் கலாம் , எனது வகுப்புக்கு வெளியே சென்று எனது ஆசிரியர் ஒரு பறவை யை காட்டி, மாதிரி விமான செயல்பாடுகளை குறித்தான அறிவியல் வகுப்பை எடுத்தார் .அது தான் எனது அறிவியல் அறிவின் மீதான ஆர்வத்தைத் தூண்டியது என்றார்.
ஒரு ஆராய்ச்சியில் பின்லாந்து குழந்தைகள் மகிழ்ச்சியாக கல்வி கற்க ஏற்ற முதல் நாடாக தேர்வு செய்யப்படுகிறது. கல்வியில் சிறந்த அமெரிக்கா கூட இந்த முதலிடம் பிடிக்கவில்லை. ஏன்? அங்கெல்லாம் கல்வி என்பது இன்னும் ஒரு அழுத்தமாக தான் இருக்கிறது. எப்படியாவது படித்துப் பெரிய ஆளாகி பணம் சம்பாதிப்பது இவ்வளவுதான் கொள்கை.
ஏன் நம் நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தை பிறக்கும் வரை குழந்தை பற்றிய கேள்விகள்! பிறந்தவுடன், எந்தப் பள்ளியில் சேர்க்கிறாய், என்ற கேள்விகள்! என்ன படிக்கிறார்கள், எந்த கல்லூரியில் சேர்த்தால் என்ன வேலை கிடைக்கும் என்று கேள்விகள் அனைத்தும் பணம் சார்ந்ததாகவே இருக்கிறது. நம் சமூகம் அப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
நம்மிடம் விசாரிக்கும் யாவருமே, ஏம்பா என்ன சம்பாதிக்கிற ? என்ன வேலை செய்ற? என்றே கேட்பார்கள் தவிர மனசுக்கு பிடிச்ச வேலையை செய்றியா ? என்று யாருமே கேட்பதில்லை! இப்படியாக கல்வி என்பது வெறும் வேலைக்காகவும் பணத்திற்காகவும் மட்டுமே என்ற அளவில் இருக்கிறது!
சரி நீங்க சொல்ற மாதிரியே செய்கிறோம்! நல்லா படிக்கிறோம். 10th 12th எல்லாத்துலயும் முதல் மாணவனா வரோம். பிதாகரஸ் தியரம், E=mc² , (a+b)²= a²+b²+2ab, thermodynamics, ohms law என எல்லாவற்றையும் கரைத்துக் குடித்து விடுகிறோம். ஆனால் இதெல்லாம் எங்கள் வாழ்க்கையில் நாங்கள் எங்கே பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுங்கள்.
கல்வி என்பது ஒரு சக மனிதனை நேசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவனை மரியாதையாக நடத்த கற்றுக் கொடுக்க வேண்டும். உயர்வு தாழ்வு எதுவும் இன்றி, மனித வாழ்வே நிரந்தரம் இல்லை என்பதை புரிய வைக்க வேண்டும். உன்னைப் போலே நானும் ஒருவன் தான், என்பதை எப்போதும் உணர்த்திக் கொண்டே இருத்தல் வேண்டும்.
கல்வி என்பது என் உரிமையை எனக்கு தர மறுக்கும் பொழுது உரக்க குரல் எழுப்ப கற்றுத் தர வேண்டும். எனது உரிமையை நான்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதை உணர்த்த வேண்டும். எங்கே எல்லாம் சாதி ரீதியாக ஒடுக்கப்படுகிறதோ, எங்கே எல்லாம் நீ பெண் அதனால் கல்வி கற்கக் கூடாது என்று மறுக்கப்படுகிறதோ அங்கே எல்லாம் ஓங்கி உன் குரல் ஒலிக்க வேண்டும் என்று உனக்குள்ளே சொல்ல கற்றுக் கொடுக்க வேண்டும்.
ஒரு பேனாவோ புத்தகமோ இல்லாமல் போயிருந்தால் நிச்சயமாக நாம் இன்று மலாலாவை பார்த்திருக்கவே முடியாது. அவருடைய கல்வியும் வகுப்பறைக்கு வெளியே தான் இருந்தது. அன்று அவர் கற்ற கல்வி இன்று எல்லோருக்குமாக அவரை பேசச் சொன்னது.
அனைவருக்கும் கல்வி நிச்சயம் வேண்டும் தான்.ஆனால் விருப்பம் என்பது ஒவ்வொருவருக்குமாக மாறுபட்டது. விளையாட்டில் அதிகம் ஆர்வம் உள்ள ஒருவனை, படிப்பில் முதல் மாணவனாக வர எதிர்பார்க்க முடியாத ஒன்று. ஆனால் நம் நாட்டு குழந்தைகள் கல்வி என்ற பெயரில் ஒரு வித திணிப்பை தான் அடைகிறார்கள்.
1- முதல் 12 வரை எல்லாரும் இதை தான் படிக்க வேண்டும் என்ற கல்வி முறையை நான் குறைபாடாய்ப் பார்க்கிறேன்.தனக்குப் பிடித்த விஷயத்தை தெரிந்துகொண்டு அதிலே பயணித்ததால் தான் , தான் ஒரு பெரிய செய்தி வாசிப்பாளராக முடிந்தது. அதற்கு டோமாயி ஹக்குன் ஒரு முக்கிய காரணம் என்பார் டோட்டோ சான். அவர் மட்டும் இல்லை அந்த பள்ளியில் படித்த தன் சக தோழர்கள் அனைவரும் தலைசிறந்த வேலைகளில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது திறமை என்னவென்றே தெரியாமல் ஏங்கும் நிறைய *டோட்டா சான்கள் இங்கு உண்டு , ஆனால் *டோமாயி ஹக்குன்கள் தான் இல்லை!