
கல்வி என்பது ஓர் ஐந்தாண்டு காலத் தொடக்கக் கல்வி, ஆறாண்டுகால உயர்நிலைப் பள்ளிக் கல்வி, இரண்டாண்டு காலப் புகுமுகக் கல்வி, அதன் பின் பட்டப்படிப்பு, மேற்பட்டப் படிப்பு, ஆராய்ச்சி என்ற வரிசையில் நான் படித்த காலத்தில் இருந்தது. அதன் பிறகு, பத்து ஆண்டுகள் பள்ளிப் படிப்பு இரு ஆண்டுகள் மேல்நிலைப் பள்ளிப்படிப்பு அதன் பின் மேலே சொன்ன வரிசை என மாற்றப்பட்டது. ஆனால், உண்மையில் கல்வி என்பது இம்மாதிரியான கால வரம்புகளுக்குள் முடிந்து விடும் ஒன்றல்ல. அது ஒரு மனிதனின் / மனுஷியின் வாழ்நாள் செயல்பாடு. மனித சமூகம், தன்னைப் பிணைத்திருக்கும் அடிமைத்தளைகளில் இருந்து விடுதலை பெறுவதற்குக் கல்வியே முதன்மையானது. இன்றைய இந்தியா, குறிப்பாக நாம் வாழ்கிற தமிழ்நாடு மாநிலம், காலந்தோறும் கல்வியில் பல மாறுதல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மேனாள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்திதேவி அவர்களின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், “ இன்றைய தாழ்வுகள், கேவலங்கள், கொடுமைகள், ஊழல்கள், அநீதிகள், வன்முறைகள் – இவற்றிற் கெல்லாம் ஒரு மாற்று எங்கிருந்தாவது தோன்ற முடியுமென்றால், அது கல்வியிலிருந்துதான் பிறக்க முடியுமென நான் நம்புகிறேன் “ என்றே சொல்ல வேண்டும். இது ஒரு நூறு சதவீதம் உண்மை. இதற்கு இன்னொரு மறுபக்கமும் உண்டு.
அளவுக்கு மீறிய இனப்பற்றும், தனது நாட்டின் தலைமையின் கீழ் இந்த உலகமே மண்டியிட வேண்டு மென்ற அதிகார வெறியும் இன்னபிற ‘தேசீய , சுயநல ‘ வெறிகளும் நிறைந்த ஓர் ஆளுமை – ஹிட்லர் போன்ற ஓர் ஆள் – அந்த நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்து விட்டால் என்ன நடக்கும் ? அந்த நாட்டின் இராணுவம், காவல் துறை, கல்வியாளர்கள், அறிவியலாளர்கள் , எழுத்தாளர்கள், கலைஞர்கள் – என எல்லாத்தரப்பினரும் ஒரே குரலில் அந்த ஆளுமைக்குத் துணையாக நின்று அவனின் எல்லா அட்டூழியங்களுக்கும் துணை நிற்பார்கள். அவன் மேலும் மேலும் யுத்த வெறியனாகி உலகையே ஒரு பயங்கரப் போருக்கு ஆட்படுத்துவான். மனிதர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்து, தனது புகழ் பாடுவோரை மட்டுமே உயிர்வாழ அனுமதிப்பான். இம்மாதிரி இனவெறியும், நமது நாட்டில் மத வெறியும், சாதிவெறியும் அதிகார வெறியும் மிக்க ஒருவனோ அல்லது ஓர் இயக்கமோ ஆட்சிக்கு வந்து விட்டால் என்ன நடக்குமென்பதை நாம் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. அத்தகைய ஒரு சூழலில், கல்வியாளர்கள் என்ன செய்வார்கள் ? ஒரு சில விதிவிலக்குகள் தவிர, மற்ற எல்லாரும் அந்த ஆட்சியாளனின் புகழ் பாடிக்கொண்டு, அவன் இட்ட ஆணைகளை நிறைவேற்றிக் கொண்டு எல்லா அநியாயங்களுக்கும் துணை நிற்பார்கள். இதைக் காலம் காலமாகப் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறோம்..
ஒரே ஓர் எடுத்துக்காட்டு போதும் :
இரண்டாம் உலகப்போர்க்காலத்தில், நடந்த ஒரு நிகழ்வு இது. போர் முடிந்த பின், ஹிட்லரின் நாஜி வதை முகாம் ஒன்றிலிருந்து ஒரு கடிதம் கிடைத்தது. அது, “ அன்புள்ள ஆசிரியப் பெருமக்களுக்கு ..” என்று முகவரியிடப்பட்ட ஒரு கடிதம். அதன் ஒரு பகுதி கீழே :
“ அன்பார்ந்த ஆசிரியர்களே.. ஒரு வதைமுகாமிலிருந்து உயிர் தப்பியவன் நான் .எந்த ஒரு மனிதனும் காணவே கூடாத கொடிய காட்சிகளை என் கண்கள் கண்டன. காஸ் சேம்பர்களைக் கற்றறிந்த பொறியாளர்கள் தாம் உருவாக்கியிருந்தார்கள். நன்கு படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்களால் பல்லாயிரம் குழந்தைகள் விஷ ஊசிகள் போடப்பட்டுக் கொல்லப்பட்டனர். பச்சிளம் சிசுக்கள், மருத்துவப் பயிற்சி பெற்ற செவிலியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். கல்லூரிகள்,பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்களால் பெண்களும்,குழந்தைகளும் இலட்சக்கணக்கில் கொல்லப் பட்டனர். எரித்துச் சாம்பலாக்கப்பட்டனர். .. எனவே, நான் கல்வியைப் பற்றியே கடுமையான சந்தேகத்திற்கு உள்ளாகியிருக்கிறேன்.. என் பணிவான வேண்டுகோள் இதுதான் :
உங்கள் மாணவர்கள், மனிதத்தன்மை உள்ளவர்களாக வளர்ந்து ஆளாக அவர்களுக்கு உதவுங்கள். கற்றறிந்த கொடிய அரக்கர்களை, நுண் நிபுணத்துவம் பெற்ற சைக்கோ கொலையாளிகளை, படித்த முட்டாள்களை உருவாக்குவதற்கு உங்கள் கல்வி கற்பிக்கும் முயற்சிகள் ஒரு போதும் காரணமாகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாசித்தல்,எழுதுதல், கணக்கிடுதல் போன்ற கற்றல் திறன்கள் நமது குழந்தைகளை மேலதிக மனிதம் உடையவர்களாக வளர்க்கும் போதே அந்தக் கல்விச் சேவை முக்கியத்துவம் பெறும்.. “
மேற்கண்ட வரிகளுக்கு விளக்கம் வேண்டுமா என்ன ? எவ்வளவு உயர்ந்த திறன்களைக் கொண்ட கல்வியாளர்களும் அநீதிகளுக்குத் துணையாக நிற்பார்களேயயானால், அது என்ன செய்யும் என்பதை ஹிட்லர், முசோலினி, இன்றைய இஸ்ரேல் பிரதமர், ட்ரம்ப், மோடி போன்ற போர், மத வெறியர்களை, அவர்களின் சர்வாதிகார ஆட்டங்களைப் பார்த்தே உணர முடியும். இத்தகைய ஆட்சியாளர்களைப் புகழ் பாடி வயிறு வளர்க்கும் கல்வியாளர்களை வைத்துக்கொண்டு, இந்த உலகம் என்ன ஆகும் ?
இந்தப் பின்னணியில், நமது நாட்டின் கல்வி என்ன செய்திருக்கிறது, இப்போது என்ன செய்கிறது, இனி என்ன செய்யும் என்று ஒரு பரிசீலனை செய்து பார்க்கலாம்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய ஒரு பாடல். கல்வி பற்றிய செய்தி களைத் தேடிக்கொண்டிருந்த போது தட்டுப்பட்டது. கவிஞரின் புதல்வர், தானும் சிறந்த ஓர் எழுத்தாளர்-கவிஞர் ஆன மன்னர் மன்னன் அவர்களின் ‘ குயில் கூவிக் கொண்டிருக்கிறது ’ தொகுப்பில் இருந்தது. படித்ததும் அசந்து போனேன். நீங்களும் படியுங்கள். பிறகு நாம் கல்வி குறித்த தொடர் சிந்தனைகளுக்குள் பயணிக்கலாம் :
ஒரு பேரன்,தாத்தாவுக்குக் கடிதம் எழுதும் போது, தான் கண்ட களி துள்ள வைக்கும் ஒரு காட்சியைப் படம் பிடித்துப் போட்டதைப் போல் பதிவு செய்கிறான் :
“ தெருவினிலே ஒரு திண்ணைப் பள்ளியுண்டு
தெரிந்திருக்கும் உங்கட்கும் ; அதனை ஊரார்
பெரிதாக நினைப்பதில்லை. வாத்தியாரைப்
பிள்ளைகளும் மதிப்பதில்லை. ஆனால் இன்றோ
தெருத்திண்ணைப் பள்ளிக்கும் வாத்தியார்க்கும்
செப்ப முடியாப் பெருமை ! பள்ளி தன்னில்
ஒரு நூறு மாணவர்கள் சேர்ந்து விட்டார்
எள் விழவும் இடமில்லை பள்ளி தன்னில் ! “
அன்றைய கல்விக்கூடங்கள் வீடுகளிலும்,கோயில்களிலும் திண்ணைக ளில் நடந்தவை என்பதை நினைவு கூர்ந்து, மனக்கண்களில் மேற்கண்ட வரிகள் உருவாக்கும் காட்சியை நினைத்தாலே இனிப்பதாக இருக்கிறது. பள்ளிகளுக்குக் குழந்தைகளை அனுப்பாமல், வீட்டு வேலைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்த பெற்றோரின் மன மாற்றம் அந்தக் காட்சியில் வெளிப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின்,தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் காமராஜர் போன்ற தொலைநோக்குப் பார்வை படைத்த தலைவர்களின் அயராத முயற்சியினால் தொலைதூரக் கிராமங்களில் கூடத் தொடக்கப்பள்ளிகள் அமைந்தன. கல்வி கற்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போயிற்று. கிட்டத்தட்ட நூறு சதவீத அளவுக்குக் குழந்தைகள் தொடக்கக்கல்வி பெறும் பொருட்டுப் பள்ளிகளில் சேரக்கப்பட்டனர். தேசிய அளவில் அமைக்கப்பட்ட ஹண்ட்டர் குழு, கோத்தாரி குழு, டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் குழு போன்ற பலவேறு ஆணையங்களின் ஆய்வுகளும், அவை சமர்ப்பித்த அறிக்கைகளும் தொடக்கத்தில் பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருப்பினும் கால மாறுதல்களின் விளைவாகவும்,ஆட்சிகள் – கொள்கைகள் மாறிக் கொண்டே இருந்ததாலும் போகப்போகக் குப்பைக்கூடைகளில் போடப்படும் நிலைமை உருவானது. அது குறித்து இன்று யாரும் பேசுவது கூட இல்லை.
அவசர நிலையின் போது,அன்று வரை மாநில அரசுகளின் முழுக்கட்டுப் பாட்டில் இருந்து வந்த கல்வி,மத்திய- மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டு விட்டது. அதாவது, ‘பொதுப்பட்டியல்’ என்ற இனத்தின் கீழ் கல்வி மாற்றப்பட்டதால் மத்திய அரசும் கல்வி குறித்த சட்டங்களை இயற்றவும், மாநில அரசின் அதிகாரங்களில் குறுக்கிடவும் முடியும் என்ற நிலை உருவானது. இன்றைய மத்திய அரசு,கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகத் தொடக்கக்கல்வியிலும்,உயர்கல்வியிலும் தொடுத்து வரும் தாக்குதல்கள் அத்தனையும், மேற்கண்ட மாற்றத்தின் விளைவுகளே.
இதற்கு அடித்தளமிட்டுக் கொடுத்தவர்கள் முந்தைய ஆட்சியாளர்களே என்ற உண்மையையும் நாம் மறந்துவிட முடியாது. அவர்கள் தொடங்கி வைத்த தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம், உலகமயமாக்கம் என்ற மூன்று தாரக மந்திரங்களின் விளைவாகக் கல்வி என்னவாகியிருக்கிறது என்பதைப் பற்றி ஒன்றிய அரசின் என்சிஇஆர்டி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் கிருஷ்ணகுமார் ஃப்ரண்ட் லைன் ஆங்கில இதழில் எழுதியுள்ள கட்டுரை நமக்குச் சொல்கிறது :
கல்வி பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்ட பின், படிப்படியாக மாநில அரசுகளின் அதிகார எல்லைகள் கடுமையாகக் குறுக்கீடுகளுக்கு உள்ளாகி வருகின்றன. தனியாரின் ஆதிக்கமும், அவர்களின் இலாப வேட்டைகளும் கண்மூடித்தனமாக அதிகரித்துக் கொண்டே போகின்றன. துணைவேந்தர்களை நியமிப்பது, பாடத்திட்டங்களில் மத வெறி,மூட நம்பிக் கைகளைப் புகுத்துவது, பிற மதத்தவர் மேல் வெறுப்பையும் துவேஷத்தை யும் விதைப்பது, புதிய கல்விக்கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு நிதிகளை விடுவிக்காமல் நிர்ப்பந்தம் கொடுத்துக் கொண்டே இருப்பது, திருவள்ளுவர் போன்ற உலகப் பொதுமறையாளர்களுக்குக் கூடக் காவிச் சாயம் பூசுவது என ஒவ்வொரு நாளும் நாம் செய்திகளில் பார்த்துக் கொண்டே வரும் நிகழ்வுகளே மேற்கண்ட உண்மையை நிறுவுகின்றன.
பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ள வரைவுக் கொள்கை அறிக்கையின்படி, இனிமேல் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கோ, முதல்வர்களுக்கோ இல்லை. நம்ம ஆர். என். ரவி போன்றவர்களுக்கே அந்த அதிகாரம். பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனம், பதவி உயர்வுகள் உள்ளிட்ட எல்லா முடிவுகளையும் இனி யு ஜி சி யே நேரடியாக எடுக்கும். இப்படியான முடிவுகளின் மூலம், நாளை கல்லூரிகளிலோ, பல்கலைக் கழகங்களிலோ சுய சிந்தனையுள்ள,அநீதிகளைத் தட்டிக்கேட்கக் கூடிய எந்த ஒருவரும் தொடர்ந்து ஆசிரியராக நீடிக்க முடியாமல் ஒன்றிய அரசும்,அதன் அடிவருடிகளும் பார்த்துக் கொள்வதற்கு ஓர் உத்தரவாதமான ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது என்றுதானே பொருள் ?
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் ( Deemed universities ) என்றொரு வகைப்பாட்டை உருவாக்கி,அந்த நிறுவனங்களுக்குத் ‘தன்னாட்சி’ அந்தஸ்தை வழங்கியபின், அவர்கள் ஆசிரியர்களையே நியமிக்காமல், ஆய்வு மாணவர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்துவது, மாணவர்களிடம் இருந்து எந்த வரையறையுமின்றி இலட்சக்கணக்கில் கட்டணங்களை வசூலிப்பது, யாரேனும் தட்டிக்கேட்டால் அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வெளியே அனுப்புவது போன்ற செயல்களில் எந்தத் தடையுமின்றி ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். ஐ ஐ டி,, ஐ ஐ எம் போன்ற ஒன்றிய அரசுக் கல்வி நிலையங்களில் சாதி ரீதி யான ஒடுக்குமுறைகள்,பாரபட்சங்கள், அநீதிகள் ஏராளம். இட ஒதுக்கீடு போன்று அரசியலமைப்புச் சட்டரீதியான உரிமைகளைக் கூட அந்த நிறுவனங்கள் சட்டை செய்வதில்லை. உச்சநீதிமன்றமே கேள்வி எழுப்பினாலும் அதைப் பொருட்படுத்தாமல் தான்தோன்றித்தனமாக அந்த நிலையங்கள் செயல்படுவது அன்றாட நிகழ்வு. இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம். இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே.
கேடில்லாத ஒரு விழுமியம் கல்வி. கல்வி பயிலாத மனிதர்கள் களர் நிலம் போன்றவர்களே என்று அறநெறி கூறும். கல்வி கற்றிரா மனிதர்களின் முகத்தில் இரு கண்கள் இருப்பினும்,அவை புண்களே எனும் கூற்றையும் நாம் அறிவோம். அன்றிலிருந்து இன்று வரை மனித குலத்தின் நெடிய வரலாற்றில் கல்வி வகிக்கும் இடம்,அது ஆற்றும் வகிபாகம், மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
“ விதைகளை ஊன்றி வைத்தால், சூழல் தேவையானவற்றை வளர்த்தெடுக்கும் “ என்கிறார் எழுத்தாளர், த மு எ க சங்கப் பொதுச் செயலாளரான ஆதவன் தீட்சண்யா. ஊன்றப்படும் விதைகள் தரமானவை யாக, ஆரோக்கியமானவையாக இருந்தாக வேண்டுமென்பதைக் கூறத் தேவையிலை. அதனால்தான் உலக அளவிலும்,உள்நாட்டிலும் எண்ணற்ற சிந்தனையாளர்களும்,கல்வியாளர்களும் தொடர்ந்து குறிப்பிட்ட சில கருத்துகளை ஒன்றுபோல வலியுறுத்திக் கொண்டு வருகின்றனர் ;
இந்தியச் சமூகத்தில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களின் கல்விப் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்த அண்ணல் அம்பேத்கர், அந்த மக்கள் பொதுக்கல்வி, சட்டக் கல்வித்துறைகளில் ஓரளவு திருப்தியான முன்னேற்றம் கண்டுள்ளனர் என்கிறார். ஆனால், அறிவியல்,பொறியியற்கல்வி,வெளிநாடுகளின் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புகளைப் பொறுத்தவரை அவை எட்டாக்கனிகளே என்ற முடிவுக்கு வருகிறார்.
மகாத்மா காந்தியின் பார்வையில்,தாய்மொழி மூலமே கல்வி; அது நம் நாட்டின் வாழ்க்கை நிலைமைகளுடன் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும். மிகவும் ஏழ்மையான இந்தியன் கூட மிகச்சிறந்த கல்வியைப் பெறுவதற் கான நிலைமை உருவாக்கப்பட வேண்டும் ; கல்வித்திட்டத்தை வகுப்பதும், அதை நிறைவேற்றுவதும் இரண்டுமே மக்களின் நிர்வாகத்தில் இருக்க வேண்டும். பணத்தைப் பொறுத்ததாகக் கல்வி இருக்கக்கூடாது !
மகாகவி பாரதி,அன்றைய பிரிட்டிஷ் இந்தியா ஆட்சிச்சூழலிலேயே விடுதலைப் போரையும்,தேசியக் கல்வியையும் இணைத்துச் சிந்தித்தவர். ஆசிரியர்கள் மலைகளாகவும்,அணைக்கட்டுகளாகவும் விளங்கினால்தான் மாணவர்கள் ஆறுகளாகப் பெருகுவார்கள் எனக் கவித்துவ அழகுடன் சொல்கிறார். நூல்களை எல்லாம் பாடசாலைகளில் தமிழ்மொழி வாயிலாகவே கற்பிக்க வேண்டுமென்பது பாரதியின் மொழி.
ரவீந்திரநாத் தாகூரின் குமுறல் இது : “ நமக்கு முதலாவது தேவை, கற்று, பண்பட்ட உள்ளந்தான் ! நாடு சீர்கேடு அடைந்து வரும் நிலையில், மக்கள் எழுத்தறிவின்றி அவல நிலையில் இருக்கும் போது அதைப் பார்த்துக் கொண்டு சும்மா கிடப்பதா என்ன ?“
தந்தை பெரியாரின் கருத்தில், ’ கல்வியால் மக்களுக்குச் சுய மரியாதை உணர்ச்சியும்,பகுத்தறிவும் ஏற்பட வேண்டும். அது மக்களின் மேன்மை யான வாழ்வுக்கு என்றும் பயன்பட வேண்டும்.’
கல்வியாளர் கிருஷ்ணகுமார் : சமுதாயத்தில் பண்பாட்டு வாழ்வியலை நீண்டகால ஒத்திசைவுடன் வைத்திருப்பதில் கல்வி பெரும் பொறுப்பேற் கிறது. அதில்,அறிவியலும் சமுகமயமாக்கலும் இரு உலைகள் “
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவை ஒரு சில துளிகள் மட்டுமே. கல்வியைப் பற்றிய சிந்தனைகளில் இப்போது புழுதிப்படலம் மண்டிக் கொண்டிருக்கிறது. ‘முள்ளை முள்ளால்தானே எடுக்க முடியும் ? ‘புழுதி’ சிறப்பிதழ்தான் அந்தக் கருத்தாயுத முள் என நம்புகிறேன். இதைக் கொண்டே, இது போன்ற வேறு பல கருத்தாயுதங்களைக் கொண்டே மேலே குறிப்பிடப்பட்ட முட்களைப் பிடுங்கித் தூர எறிவோமாக !