எம்.கே.மணி நினைவலைகள்

சென்னையில் உலக சினிமா விழாக்கள் நடைபெற ஆரம்பித்திருந்த காலகட்டம். ஒரே நாளில் ஐந்து படங்களை அடுத்தடுத்து பார்ப்பது கிளர்ச்சியான அனுபவமாக இருந்தது. ஆனால் அதுகுறித்துப் பேசவோ கலந்துரையாடவோ  யாரையும் எனக்குத் தெரியாது. ஒவ்வொரு படம் முடிந்த பின்னரும் கும்பல் கும்பலாக ஆங்காங்கே நின்றுகொண்டு டீ குடித்தபடி, புகைத்தபடி படு சீரியஸாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். பார்க்கவே மிரட்சியாக இருக்கும். அப்படி ஒரு கும்பலில் தான் மணி சார் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். கொஞ்சம் விலகி நின்று கேட்க ஆரம்பித்தேன். இடைவேளைகளின் போது அவர் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பது எளிது. காரணம் அவருடைய தோற்றம். எப்படி எப்பொழுது நான் அவரோடு பேச ஆரம்பித்தேன்  என்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. அதுவாகத் தொடங்கியது. அதுவாக நீண்டது.

  

மனிதர்கள் குறித்த அச்சம் அவருக்கு இல்லை என்றே தோன்றியது. அத்தனை விதமான மனிதர்களோடு புழங்கியிருக்கிறார். ஏனெனில் பெரும்பாலும் பேசிக்கொண்டிருக்கும்பொழுது சுற்றி யார் நிற்கிறார்கள் என்பது அவருக்கு ஒரு பொருட்டு அல்ல.  அவர் பேசிக்கொண்டே இருப்பார். அவரிடம் தீர்க்கமான பார்வையும், தீர்மானமான கருத்துக்களும் இருக்கும். பேச்சின் சரளம் வசீகரமாய் இருக்கும். 

திரைப்பட விழாக்களில் சந்திப்பதும் ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருப்பதுமாய் அவரோடு நட்பு வளர்ந்தது. பெரும்பாலும் சினிமா தவிர அரசியல், இலக்கியம் என  நீளும். நீளும் என்றால் அது நீண்டுகொண்டே போகும். ஒன்று தொட்டு இன்னொன்று என பேச்சு பேச்சு பேச்சு தான் மணி சார். ஆழத்திலும் அகலத்திலும் அடர்த்தியிலும் ஊடுருவும் பேச்சு. 

அவருக்கென்று ஒரு நண்பர்கள் கூட்டம் இருந்தது. அவர்கள் எல்லோருமே ஏதோவொரு சந்திப்பில் அறிமுகமானார்கள். பிறந்தநாள், திருமணம் என தனிப்பட்ட நிகழ்வுகளிலும் சந்திப்புகள தொடர்ந்தன. எந்த நிகழ்வாயினும், எந்த இடமாயினும் வழக்கம்போல பேச்சு சினிமாவோ இலக்கியமோதான். அவற்றினூடே அரசியலும். 

அவர் எழுதத் தெரிந்தவர் என்பதை மெல்ல உலகுக்கு அறிவித்தார். அவருடைய எழுத்துக்கள் நேரடியானவை. மனதின் எல்லா சந்து பொந்துகளிலும் அநாயசமாக உலவக்கூடியவை. அருவி உருவாக்கிய பாதை ஆறாக மாறுவது போல் உள்ளிருந்து வெளிப்படுபவை. தடங்கலும் கிடையாது. தயக்கமும் கிடையாது,

இலக்கியம் மற்றும் சினிமாவுக்கான எழுத்தை அறிந்தவர். மேலும் அவர் தொலைக்காட்சி தொடர்களுக்கும் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் மற்றும் அவருடைய முகநூல் பதிவுகள் என எழுத்தை அதன் எல்லா பரிணாமங்களிலும் அடக்கத் தெரிந்தவர். அந்த லாவகம் அவரின் இயல்பாகிப் போனது.

 

அவருடைய புத்தகங்கள், திரைக்கதைகளை வாசித்துவிட்டு பல நேரங்களில் நீண்ட உரையாடல்கள் நடந்திருக்கின்றன. 

தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்குமான நெருக்கம் அவர் எழுத்தின் மூலம்தான் நிகழ்ந்தது. அவருடைய எழுத்து எந்தப் புள்ளியிலிருந்து புறப்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து அவரிடம் பேசும்போதெல்லாம் அது பாராட்டாகத்தான் வெளிப்பட்டது. அது எனக்கும் அவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. அவருடைய புத்தகங்கள் குறித்துப் பொதுவெளிகளில் பேசுவதும் எனக்கு பிடித்தமானதாக இருந்தது. குறிப்பாக அவருடைய எழுத்து எந்த சட்டதிட்டங்களுக்குள்ளும் தன்னை பொருத்திக்கொள்ள முயலாது. அவருடைய தனிப்பட்ட வாழ்வுமே அப்படியாகத்தான் இருந்தது என நான் நினைக்கிறேன். 

வாழ்வின் லயத்தில் பொருந்திப்போக சிலரால்தான் முடியும். அவர் பொருந்திப் போனார். அதனால் எழுதினார். அது எழுத்தாகவும் ஆனது. அந்த எழுத்து எனக்குமானது. நன்றி மணி சார் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version