பச்சை நீக்கப்பட்ட விவாதம்.

அண்மையில் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளைத் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்டிருந்த அணு ஆயுதத் தாக்குதலைத் தடுக்க நாயகன் தலைமையிலான அமெரிக்கக் காவல்துறை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அப்போது தங்கள் உடலையே ஆயுதக் களமாக மாற்றிக்கொண்ட தற்கொலை தாக்குதல் குழு தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகத் தொழுகிறார்கள். அடுத்ததாக, அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு வீட்டில் தீவிரவாதியொருவன் சமைத்துக்கொண்டிருக்கிறான். அறை நடுவே வெடிக்கக் காத்திருக்கும் குண்டு. ஒருகட்டத்தில் அவனும் தொழுகிறான். வீட்டுக்கு வெளியே நாயகன் தலைமையிலான அமெரிக்கக் காவல்துறை காத்திருக்கிறது. அச்சமயம் நாயகனும் தொழுகிறான். அதைப் பார்க்கும் காவலாளி ஒருவன், “இவன் என்ன செய்கிறான்?” என்று தலைமைக் காவலரிடம் ‘புரியாமல்’ கேட்கிறான். அதற்கவர், “நமக்காகத்தான் தன் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறான்” என்று ‘விளக்குகிறார்’. இக்காட்சித் தொகுப்புகளில் ஒலிக்கும் பின்னணி இசைதான் இக்கட்டுரையை எழுதுவதற்கான தூண்டுகோல். கொடூரமான வில்லனுக்குக் கூட இப்படியான அச்சுறுத்தும் பின்னணி இசையை அமைத்திருக்க மாட்டார்கள். அதுவும் கூட்டு மன உணர்வைத் தூண்டக் கூடிய கோரஸ்  பாணியில் அமைக்கப்பட்டிருப்பதுதான் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அக்காட்சியைப் பார்க்கும் சாமானியர், “ஒருசிலர் நல்லவர்களாக, தேசப் பற்று உள்ளவர்களாக இருப்பார்கள். மற்றபடி இஸ்லாமியர்கள் ஆபத்தானவர்களே.” என்ற மனநிலைக்குதான் தள்ளப்படுவார். இது இறுதிக்காட்சி என்பதால் இவ்வெண்ணம் மேலும் வலுப்படும். யோசித்துப் பார்த்தால், தொடக்கத்திலிருந்தே இஸ்லாமியர் குறித்த இத்தகைய சித்திரிப்புகளே நிறைந்துள்ளன. இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். இஸ்லாமியத் தொழுகை என்பது பல நிலைகளைக் கொண்டது. அதற்கென ஒரு வரிசைமுறையும் உண்டு. அந்த வகையில் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தொழுகையைச் சரியாகக் காட்சிப்படுத்திய படமென்று ‘விஸ்வரூப’த்தைதான் சொல்ல முடியும். ஆனால், அதில் எந்தப் பெருமையும் இல்லை.

மேலும், இப்படத்தில் வரும் ‘துப்பாக்கி எங்கள் தோளிலே…’ என்ற பாடலின் வரிகள் படத்தின் அரசியல் தன்மைக்கு எதிராக இருக்கும்.

“போரை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை
 போர்தான் எம்மைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது
 எங்களின் கையில் ஆயுதங்கள் இல்லை
 ஆயுதத்தின் கைகளில் எங்கள் உடல் உள்ளது
 ஊரைக் காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்
 சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்
 ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
 டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது”

என்பதாக வரிகள் (இயற்றியவர்: வைரமுத்து) இடம்பெற்றுள்ளன. தாலிபான்களின் பார்வையில் இப்பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் இப்படியாக எழுதப்பட்டிருக்கலாம் என்று யோசிக்க வேண்டாம். படத்தின் எந்த இடத்திலும் தாலிபான்கள் போராட வேண்டிய தேவை என்ன என்பது எடு்த்துரைக்கப்பட்டிருக்காது. மாறாக, தாலிபான்களுடனான போரில் தவறுதலாக பெண்களைச் சுட்டதற்காக அமெரிக்க இராணுவம் வருந்தும் காட்சிதான் இடம்பெற்றிருக்கும். இஸ்லாமியரின் ஒவ்வொரு அசைவையும் வன்முறை நிறைந்ததாகக் கட்டமைத்திருப்பது மிகவும் வக்கிரமானது. இதில் கதாநாயகனும் முஸ்லிம்தான் என்ற சித்திரிப்பு அதைவிட மோசமானது. நல்ல முஸ்லிம் x கெட்ட முஸ்லிம் என்ற எதிர்மையை இது மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.

இதே மாதிரியான திரைமொழைியைத்தான் ‘ஹே ராம்’ திரைப்படத்திலும் பயன்படு்த்தியிருப்பார் கமல்ஹாசன். நாயகனின் முதல் மனைவி முஸ்லிம்களால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்படுவார்; நாயகனின் முஸ்லிம் நண்பரோ இந்து தீவிரவாதிகளால் கொலை செய்யப்படுவார். இவற்றின் காட்சியமைப்பில் உள்ள வேறுபாடே இயக்குநரின் இஸ்லாமோஃபோபியாவை வெளிப்படுத்துகிறது. மனைவி கொல்லப்படும் காட்சியானது வன்புணர்வு செய்யப்படும் கதறலோடும் கழுத்தறுக்கப்பட்டுத் தெறிக்கும் இரத்தத்தோடும் உருவாக்கப்பட்டிருக்கும். அதனாலேயே நாயகனோடு சேர்ந்து பார்வையாளர்களுக்கும் குற்றவாளிகள் மீது கோபமும் அவர்கள் பழிவாங்கப்படும்போது ஆர்ப்பரிப்பும் எழும். இச்சம்பவத்தின் தாக்கமானது நாயகனுக்கு அவ்வப்போது நினைவுகளாக, பிம்பங்களாக தோன்றும் வகையில் திரைக்கதை அமைந்திருக்கும். மறுபுறம், நாயகனின் நண்பர் கொல்லப்படும் காட்சியானது, படத்தின் இறுதி அத்தியாயத்தில் நாயகன் செய்யவிருக்கும் பெரும் கொலையைத் தடுக்கும் வகையில் அவனுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கும்போது இந்து தீவிரவாதிகளால் தாக்கப்படுவதாயும் அதிலிருந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த பின் சிகிச்சை பலனின்றி நண்பர் இறப்பதாயும் காட்சிப்படுத்தியிருப்பார். அப்போது நாயகனுக்கு ஏற்படும் குற்றவுணர்ச்சியின் நீட்சியாய் பார்வையாளர்களுக்கு இருவர் மீதும் பச்சதாபம் ஏற்படும். மனைவி கொலை செய்யப்படும்போது எழும் கோபமானது, நண்பர் உயிரிழக்கும்போது இரக்கமாக மாறும் திரை யுக்தி காந்தியின் அகிம்சையைப் போதிப்பதற்காக என்று புரிந்துகொள்வது வாசகர்களின் / பார்வையாளர்களின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.

மனைவி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நாயகனின் வாழ்க்கைப் பாதை இந்து தீவிரவாத இயக்கம், பாரம்பரிய வைணவக் குடும்பம், தன்னைப் போலவே பாதிக்கப்பட்டிருக்கும் ‘இந்து’ நண்பனுடனான சந்திப்பு என விரிவாகவும் ஆழமாகவும் பயணித்து கடைசி முக்கால்மணி நேரத்தில் (படத்தின் நீளம் மூன்று மணி நேரம் பதினைந்து நிமிடம்) சோடா ஃபேக்டரியில் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நண்பரை அடைந்து, அவர் தன் உயிரைத் தந்து நாயகனைத் திருத்தி காந்தியிடம் தஞ்சமடையச் செய்யும் இடத்தில் நிறைவடைகிறது. வணிகத் தன்மையில் அல்லாமல் மிகுந்த கலை நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டிருப்பதால் இப்படம் இன்றும் சினிமா இரசிகர்களால் / ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. எந்த அளவிற்கென்றால், இதன் சிறப்பை உணர்ந்தவர்கள் அறிவுஜீவிகள் என்றும், உணராதவர்கள் பாமரர்கள் என்றும் பல அறிஞர்கள் நம்புகிறார்கள்.

இவ்விரண்டு திரைப்படங்களும் மிக கவனமாக இந்திய / தமிழக முஸ்லிம்களின் வாழ்க்கையைத் தவிர்த்திருக்கின்றன. இஸ்லாமியர்களை முழுக்க ஓர் அந்நியத் தன்மையோடு சித்திரிப்பதில் ரொம்பவும் மெனக்கெட்டிருக்கின்றன. இவைபோக நல்ல முஸ்லிம் x கெட்ட முஸ்லிம் என்ற இருமையை இயல்பாக்கம் செய்ததிலும் வெற்றியடைந்திருக்கின்றன.

இஸ்லாமோஃபோபியா என்ற கண்ணோட்டத்தில் இப்படங்களை மட்டும் குறிப்பிட்டதற்குக் காரணம், தற்செயலாக ‘விஸ்வரூபம்’ பார்த்ததன் நீட்சியே. மற்றபடி இவை போன்ற எண்ணற்றத் தமிழ்த் திரைப்படங்கள் இஸ்லாமிய வெறுப்பை விதைத்திருக்கின்றன. முக்கியமாக, கமல்ஹாசன், மணி ரத்னம் போன்றோரின் வணிகமும் கலையம்சமும் கொண்ட இடைநிலைப் படங்களின் தாக்கம் ஆழமானது; அது வணிகத் திரைப்படங்களிலும் எதிரொலித்தது. கெடுவாய்ப்பாய், இப்ராகிம் ராவுத்தர் – லியாகத் அலி கான் ஆகியோரோடு இணைந்து இஸ்லாமிய உறவைப் போற்றும் கதாபாத்திரங்களில் நடித்த விஜயகாந்த் கூட பின்னாட்களில் முஸ்லிம் தீவிரவாதிகளை வேட்டையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இன்றைய ‘பீஸ்ட்’ வரை இது தொடர்கிறது, இனியும் தொடரும். அந்த வகையில் 90களுக்குப் பிறகான தமிழ் திரைப்படங்களையே இக்கட்டுரை விவாதிக்கிறது.

இந்த இடத்தில் ஓடிடி, இணைய தொடர்கள் போன்றவற்றின் வருகையால் பார்க்க நேர்ந்த இரு படைப்புகள் குறித்து விவாதிப்பது பொருத்தமாக இருக்கும். மேற்குறிப்பிட்ட இரு திரைப்படங்களின் தன்மைக்கு நிகராக முழுக்க அந்நிய தேசத்திலும், வட இந்தியாவிலும் உருவான  படைப்புகள்: ஒன்று, ஃபஜர் பஸ்டொமி இயக்கிய ‘புயா ஹம்கா’ (Buya Hamka) என்ற இந்தோனேசிய இணைய தொடர். மற்றொன்று, சௌனக் சென் இயக்கிய ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ (All that Breathes) என்ற ஆவணப்படம்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த மத அறிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், விடுதலைப் போராளி, அரசியல்வாதி, இந்தோனேசிய அரசின் உயரிய விருதைப் பெற்ற அப்துல் மாலிக் கரிம் அம்ருல்லா (புனைபெயர் – ஹம்கா) என்பவரின் வாழ்க்கை வரலாறே ‘புயா ஹம்கா’. அத்தியாயங்களாக (எபிஸோட்) அல்லாமல் மூன்று பாகங்களாக (வால்யூம்) வெளிவந்துள்ள இத்தொடரின் முதல் பாகம் மட்டும் 2023ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியானது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இரு பாகங்கள் காணக் கிடைக்கின்றன. இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா, காலனிய காலகட்டத்தில் நெதர்லாந்தின் ஆதிக்கத்தில் இருந்தது. பின்னர் ஜப்பானின் ஆளுகைக்குள் வந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்தவுடன் மீண்டும் நெதர்லாந்து கைப்பற்றவிருந்தபோது மக்களின் தீவிரமான போராட்டத்தால் விடுதலையடைந்தது. இந்த வரலாற்றோடு தொடர்புடையதுதான் ஹம்காவின் வாழ்க்கை. செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்த ஹம்கா, கவிஞராக, பத்திரிகையாளராக இருந்து பின்னர் மதகுருவாக உயர்ந்து, ஜப்பானிய ஆதிக்கத்தின்போது அவ்வரசை நிர்பந்தித்து தம் மக்களுக்குச் சில உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். அதனாலேயே ஜப்பானிய விசுவாசி, தேசத் துரோகி போன்ற எதிர்ப்புகளும் இருந்திருக்கின்றன. ஜப்பான் வெளியேறிய பிறகு இவரும் மதகுரு என்ற அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டார். பின்னர் நெதர்லாந்து ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடுகிறார். நாடு விடுதலையடைந்ததும் அரசியல்வாதியாகிறார். கட்சிகளுக்கிடையிலான முரண்களில் சிறை வைக்கப்படுகிறார். இப்படியான எளிய வரலாற்றுக் கதையே ‘புயா ஹம்கா’.

உருவாக்கத்தில்தான் முக்கியமான படைப்பாக மாறுகிறது (தமிழ்ச் சூழலோடு ஒப்பிடும்போது). அந்நியமான நிலப்பரப்பு என்றாலும் திரைமொழி நெருக்கத்தை ஏற்படு்த்திவிடுகிறது. தமிழ்த் திரைப்படங்களில் வரும் பெரும்பாலான முஸ்லிம் வீடுகளுக்கு மாறாக, புத்தகங்களும் தட்டச்சு இயந்திரமும் அழகிய வேலைப்பாடுகளமைந்த பொருட்களும் உள்ள வீட்டைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும் ஆசுவாசமாகவும் இருக்கிறது. காட்சி சட்டகமும் இறுக்கமாய், அச்சுறுத்தும் தன்மையில் இல்லாமல் அழகியலோடும் இலகுவாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ‘விஸ்வரூபம்’, ‘ஹே ராம்’ படங்களின் க்ளோஸ் அப் காட்சிகளையும் இத்தொடரின் க்ளோஸ் அப் காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும்.

மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது கலாச்சாரச் சொற்கள். முஸ்லிம்கள் எந்தெவாரு செயலையும் தொடங்கும் முன் “பிஸ்மில்லா” என்பார்கள். உத்தரவாதமாக ஏதேனும் சொல்லும்போது, உதாரணத்திற்கு “நாளை சந்திக்கலாம்” என்று சொல்வதாக இருந்தாலும் கடைசியில் “இன்ஷா அல்லா” சேர்த்துக்கொள்வார்கள். மகிழ்ச்சிகரமான செய்தி கேட்டால் “அல்ஹம்துலில்லா”, இப்படி நிறைய. இத்தொடரில் இச்சொற்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. புனைவாக அது அவசியமானதல்ல என்றாலும், அரசியல் செயற்பாடாக அது தேவை என்று கருதுகிறேன். தமிழ்ச் சூழலுக்கு வாருங்கள். இங்கு இஸ்லாமிய கதாபாத்திரங்கள் உள்ள பெரும்பான்மை திரைப்படங்களில் இத்தகைய சொற்கள் இடம்பெறுவதே இல்லை. விதிவிலக்காக, முஸ்லிம்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும்போது “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்வதை மட்டும் ஓரளவு பதிவு செய்திருக்கிறார்கள். அதிலும் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘லால் சலாம்’ படத்தின் ஒரு காட்சியில் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்கான பொருளை ரஜினிகாந்த் சொல்வார் (தமிழின் வேறெந்த படத்திலும் இத்தகைய காட்சி இடம்பெறவில்லை என்பது என் கணிப்பு). முஸ்லிம்களின் இருப்பை எந்த உறுத்தலும் மிகை தன்மையும் அற்ற வகையில் காட்சிப்படுத்தியுள்ளது என்ற அளவில் மட்டும் ‘லால் சலாம்’ படத்தைக் கருத்தில் கொள்ளலாம்.

‘புயா ஹம்கா’ தொடரின் நாயகன் தன் இயல்பில் இருக்கிறார். அவருடைய வாழ்க்கை வரலாறுதான் என்றாலும், அவர்மீது எந்த நெருக்கடியும் வலிந்து திணிக்கப்படவில்லை. தமிழ்த் திரைப்படங்களில் இஸ்லாமிய கதாநாயகன் என்பது மிக அரிது. துணைக் கதாபாத்திரங்களாகவும் சில படங்களில் மட்டுமே வருகிறார்கள். அவற்றிலும் தம் மீது சுமத்தப்படுகிற தீவிரவாத முத்திரையை அகற்றுவதே அவர்களது இலக்காகச் சித்திரிக்கப்படுகிறது. இது சூழலை மேலும் மோசமாக்கும் யுக்தி. சிறுசிறு விஷயத்திற்கும் ஒருவர் தன்னை நிரூபிக்கும்படி வற்புறுத்தப்படுவது எந்த மாதிரியான அதிகாரம் என்பது புலப்படவில்லை.   இது பார்வையாளர்களிடையே எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்த சிறு அக்கறையுமின்றியே இவ்வாறான திரைக்கதைகள் உருவாக்கப்படுகின்றன. வெகுசில திரைப்படங்களே முஸ்லிம்களை இயல்பாகச் சித்திரித்துள்ளன. பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான ‘ராமன் அப்துல்லா’, கோகுல கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான ‘உதவிக்கு வரலாமா’ போன்ற படங்கள் நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டிருக்கின்றன.

இஸ்லாமிய வாழ்க்கை முறைகளை, அன்றாடங்களை பிரச்சாரத் தொனியின்றி யதார்த்தமாகப் பதிவு செய்வது முக்கியம். அதுவே நல்லிணக்தை உருவாக்கும். ஐவேளை தொழுகை, வெள்ளிக்கிழமை சொற்பொழிவுடன் கூடிய ஜும்மா தொழுகை, பின்னிரவு தொழுகை, ரம்ஜான் நோன்பு, திருமணம், பிறப்பு – இறப்புச் சடங்குகள், ஹஜ் புனித யாத்திரை என யாவற்றையும் ‘புயா ஹகாம்’ கதைப் போக்கில் காட்சிப்படுத்தியுள்ளது. கோலிவுட்டில் பெண்கள் தொழுவதைப் பார்க்கவே 2023இல் ‘ஃபர்ஹானா’, ‘புர்கா’ ஆகிய படங்கள் வரும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், உள்ளடக்க ரீதியில் இவை ஆபத்தான படங்களே. அதிலும் ‘புர்கா’வில் கதாநாயகி வரும் காட்சிகளிலெல்லாம், அவர் சிறையில் இருப்பதாகப் பார்வையாளர்கள் உணரும் வகையிலேயே ஒளிப்பதிவு கோணம் அமைக்கப்பட்டிருக்கும். திரைமொழியில் க்ளோஸ் அப், வைட் ஆங்கிள், மிட் ஆங்கிள் என எல்லா காட்சிக் கோணத்திற்கும் அரசியல், உளவியல் காரணங்கள் உள்ளன.

முஸ்லிம்கள் மீதான அக்கறையானது தமிழ்ச் சூழலில் அச்சமூகப் பெண்கள் மீதே குவிந்திருக்கிறது. எப்பாடுபட்டாவது முஸ்லிம் பெண்களை ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளிலிருந்து மீட்க முற்போக்கு இயக்குநர்கள் துடிக்கிறார்கள் (‘ஜிப்ஸி’ படத்தையும் கணக்கில் கொள்ளுங்கள்). சுதா கொங்கரா இயக்கிய ‘இறுதிச்சுற்று’ படத்தின் இறுதியில் நாயகியின் வெற்றியைக் கொண்டாடும் பார்வையாளர்களில் இரு முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்திரையை விலக்கியபடியே மகிழ்ச்சியோடு கை தட்டுவர். இச்சித்திரிப்பு இல்லையென்றாலும் அக்காட்சிக்கு எந்தப் பாதகமும் நேர்ந்திருக்காது. இவர்களின் புரட்சிகர சிந்தனையெல்லாம் இப்படிதான் இருக்கின்றன.

இஸ்லாத்தின் கொள்கைகளும் சட்டங்களும் அப்பழுக்கற்றவை என்பதோ, அச்சமூகத்தில் எவ்வித ஒடுக்குமுறையும் இல்லை என்பதோ இதன் அர்த்தமல்ல. மலையாளம், இந்தி திரைப்படங்களைப் போல் முதலில் இங்கு இஸ்லாமிய வாழ்க்கை ஓரளவுக்கு முறையாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அதன் உள்முரண்கள் சொல்லப்படுகையில் அது ஓர் ஆரோக்கியமான உரையாடலுக்கு இட்டுச் செல்லும். அப்படியில்லாத பட்சத்தில் பொது புத்தியில் அது மேலும் மேலும் அடிப்படைவாதச் சிந்தனைகளைத்தான் கிளர்த்தும்.

தர்கா வாசலில் பிள்ளையார் சிலைகள் விற்கப்படும் புகைப்படத்தைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, “இதுதான் தமிழ்நாடு, வடக்கில் இது சாத்தியமில்லை” என்று பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால், யதார்த்தம் வேறாக இருக்கிறது. முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்குக் கிடைப்பதில் சிக்கல், குறிப்பிட்ட சில துறைகளில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு, பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல், கலையிலக்கியத் துறைகளில் வேறு பெயரில் இயங்க வேண்டிய நிலை… இப்படி நிறைய இருக்கின்றன. பிரியாணி, தர்காவைத் தவிர பொதுச் சமூகம் ஏற்றுக்கொண்ட இஸ்லாமிய அடையாளங்கள் இருக்கின்றனவா? ரம்ஜான், தொழுகை, பக்ரீத், அல்லா, நபி, நிக்காஹ் இவற்றைத் தவிர வேறு இஸ்லாமியச் சொற்கள் பொதுச் சமூகத்திற்குத் தெரியுமா? வாப்பா, அத்தா, உம்மா, பாய் தவிர வேறு உறவுமுறைப் பெயர்கள் தெரியுமா? இஸ்லாமிய பக்திக் கதைகள், நபி வரலாறு ஏதாவது தமிழ்ப் பொதுச் சமூகம் அறிந்துவைத்திருக்கிறதா? (விதிவலக்குகள் இருக்கலாம்.) ஆனால், பொதுச் சமூகத்தின் அத்தனைக் கூறுகளும் மத / இனச் சிறுபான்மையினருக்குத் தெரியும். பண்டிகைள், புராணங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள் என எல்லாமே ஓரளவுக்கேனும் மாற்றுச் சமூகத்தினருக்குத் தெரியும். பெரும்பான்மை பொதுச் சமூகத்திற்கு இவை குறித்து புரிதலோ, அக்கறையோ இருப்பதாகச் சொல்ல முடியுமா? அதேசமயம், இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார் என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டும். நிச்சயமாக தமிழ் எழுத்தாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் ஆகியோரே சிறுபான்மை மக்கள் குறித்த புரிந்துணர்வை மக்களிடம் ஏற்படுத்தியிருக்க வேண்டும், அவர்கள் செய்யத் தவறியது மட்டுமல்லாமல் பொது புத்தியையே பிரதிபலிக்கின்றனர் என்பது பெரும் வெட்கக்கேடு.

‘இது இயல்பான ஒன்றுதானே, எல்லா நாடுகளிலும் இத்தகைய சூழல் இருக்கிறதே’ என்ற வாதமும் எழலாம். ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால், குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிப் பொதுவெளியில் ஒரு படைப்பையோ கருத்தையோ முன்வைக்கும் முன்பாக அவர்களின் அடிப்படைச் சமூகக் கட்டமைப்பை மட்டுமாவது அறிந்திருக்க வேண்டியதும் முக்கியம்தானே. நம் அன்றாட வாழ்வில் தினமும் குறைந்தபட்சம் ஒரு இஸ்லாமியரையாவது சந்திக்கிறோம். பேருந்து, இரயில், பணியிடம், தேநீர் கடை, வணிக வளாகங்கள், சாலை, திரையரங்கு, பள்ளி, கல்லூரி என எங்காவது குறைந்தது ஒரேயொரு இஸ்லாமியரையாகிலும் பார்க்கிறோம். ஆனால், முஸ்லிம்களே இல்லாத எத்தனையோ திரைப்படங்கள் இங்கு வருகின்றனவே, எப்படி? துணைக் கதாபாத்திரம், கூட்டத்தில் ஒருத்தர் என்று கூட வருவதில்லை. உங்களுக்குச் சட்டென்று ஞாபகம் வருகிற இஸ்லாமியக் கதாபாத்திரமொன்றைச் சொல்லுங்கள். அதிகபட்சம் பாட்ஷா, வாசிம் கான் இரண்டு பெயர்கள்தான் நினைவில் வரும். இன்னும் கொஞ்சம் யோசித்தால் ‘சார்பட்டா பரம்பைர’ மீரான், ‘சிங்கம் 2’ பாய் என்று சொல்லலாம். ‘மாநாடு’ அப்துல் காலிக் பெயரைச் சொன்னால் ஆச்சரியம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி இரசிகர்களைக் கேட்டால் இன்னும் இரண்டு பெயர்கள் கிடைக்கலாம். ஆனால், ஜான், பீட்டர், டேவிட், மைக்கேல், கிறிஸ்டோபர், சிலுவை, சூசை, ஜெனிஃபர், மேரி, ஸ்டெல்லா என்று கிறிஸ்தவ கதாபாத்திரங்களைக் கூட சற்று அதிகமாகச் சொல்லிவிட முடியும். சரி, இலக்கியத்தில் உங்களுக்குத் தெரிந்த இஸ்லாமிய கதாபாத்திரங்களைச் சொல்லுங்கள், பார்க்கலாம்!

இது சமூகவியல் அடிப்படையில் விரிவான ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒன்று. திராவிட – கம்யூனிஸ – தலித்திய இயக்கங்களும் தலைவர்களும் தீவிரமாகச் செயற்பட்ட, மாற்று உரையாடல்களை உருவாக்கிய வரலாறுகள் இருந்தும் இந்த இடைவெளி ஏன் தொடர்ந்து இருக்கிறது? காலனியாதிக்கம், கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மத போதகர்கள் போன்ற காரணங்களால் கிறிஸ்தவம் குறித்த அடிப்படைச் சங்கதியாவது நம் அறிவுக்கு எட்டியிருக்கிறது. தமிழ் உரைநடை வளர்ச்சியிலும் கிறிஸ்தவத்தின் பங்கு இருக்கிறது. அப்படியானால் இங்கு இஸ்லாம் செயற்படவேயில்லையா? நம் சமூக இயங்கியலில் இஸ்லாத்தின் பங்கு ஏதுமில்லையா? இந்த இடைவெளி எப்போது, ஏன் உருவானது? இக்கேள்விகளுக்கான விடைகள் பல திறப்புகளைச் சாத்தியப்படுத்தும்.   

இவ்விவாதத்தை இங்கு முடித்துக்கொண்டு சௌனக் சென் இயக்கிய ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ ஆவணப்படத்திற்கு வருவோம். ‘புயா ஹகாம்’ தொடரின் காட்சியமைப்புள் அழகியல் தன்மையோடும் இலகுவாகவும் இருக்குமென்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு நேர்மாறாக, ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ படமோ டெல்லியின் காற்று மாசு, நடுத்தர வர்க்கக் குடியிருப்பு, நோய்மையில் வீழும் பறவைகள், மக்கள் போராட்டம் என இறுக்கமான தன்மையில் அமைந்திருக்கும். டெல்லியில் காற்று மாசால் பாதிக்கப்படும் பறவைகளைக் குணப்படுத்தும் நதீம் சகோதரர்கள், அதனால் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், டெல்லியின் சூழல் ஆகியவைதான் இப்படத்தின் கருப்பொருள். வழக்கமான ஆவணப்படம் போலல்லாது, பின்னணி குரலைத் தவிர்த்துவிட்டு, சம்மந்தப்பட்ட நபர்கள் தம் அன்றாடப் பணிகளின்போது உரையாடல்கள் வழியே அனைத்து விவரங்களும் சொல்லப்படுவது புதிய அனுபவமாக இருந்தது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தியதையொட்டி டெல்லியில் எழுந்த போராட்டம் பதிவு செய்யப்பட்டிருப்பதும் இதன் கூடுதல் சிறப்பு.

முஸ்லிம்களின் அன்றாடங்களை ‘புயா ஹகாம்’ வரலாற்றுக் காலகட்டத்தில் பதிவு செய்திருக்கும் வேளையில், ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ சமகாலத்தில் வைத்து ஆவணமாக்கியிருக்கிறது. எலிகளும் பூனைகளும் நாய்களும் கழுகுகளும் ஆந்தைகளும் கொசுக்களும் மனிதர்களும் என சுவாசிக்கும் எல்லாருக்குமான படம். டெல்லியின் குறுகலான தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் நதீம் சகோதரர்கள் இதுவரை 20,000 ஆயிரம் பறவைகளைக் குணப்படுத்தியிருக்கிறார்கள். பறவை நோக்குதல் என்பதன் இன்னொரு அர்த்தத்தை இப்படம் புரியவைத்திருக்கிறது.

கடந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், Elephant Whisperers என்ற படம்தான் வென்றது. காட்டில் தன் கூட்டத்திலிருந்து தனியாகப் பிரிந்துவிட்ட யானைக்குட்டியைப் பத்திரமாகப் பாதுகாத்து அதன் கூட்டத்திடம் சேர்க்கும் பழங்குடி பணியாளர்களைப் பற்றிய ஆவணப்படம் அது. காடு, யானை, வன காப்பகம், மனிதருக்கும் யானைக்குமான அன்பு என இயற்கையின் அத்தனை அழகையும் படமாக்கியிருப்பார்கள். ஆனால், மனிதத் தவறுகளால் பாதிக்கப்படும் பறவைகளைப் பாதுகாக்கும் மனிதத்தின் முன் இயற்கையின் அழகியல் தோற்றுவிட்டதாகவே தோன்றுகிறது. இதுகுறித்து விவாதிக்க இது இடமல்ல.

ஆனால், விருது தரப்படாததன் அரசியலை மட்டும் ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. உலக அளவிலும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வே இதிலும் செயற்பட்டிருப்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஏன் உலக அளவிலும் அவர்கள் வெறுக்கப்படுகிறார்கள்? யூதர்கள் தங்களைக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் மிகவும் உயர்வானவர்கள் என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். ஏசு யூதர் என்பதால் கிறிஸ்தவர்களும் யூத மரபின் தொடர்ச்சியே. முகமது நபி தன்னை இறைவனின் இறுதித் தூதர் என்று அறிவித்துக்கொண்டவர். அவர் உருவாக்கிய மதக் கட்டமைப்பு அதுவரை யாரும் செய்யாதது. வாழ்வின் எல்லா அம்சங்களிலும் இடையீடு செய்கின்ற மதக் கோட்பாட்டை அதுவரை யாரும் உருவாக்கியதில்லை. உணவு, உடை, குடும்ப உறவுகள், பொருளாதாரம், அரசியல் என அனைத்துத் துறைகளிலும் தனியான நியதிகளைக் கொண்ட ஒரே மதம் இஸ்லாம் மட்டுமே. மேலும், யூதர்கள், கிறிஸ்தவர்கள் வழிபட்ட உருவமிலா ஒற்றைக் கடவுளையே முகமதுவும் வழிபடச் சொன்னார். ‘யூதர்களும் கிறிஸ்தவர்களும் இறைவனின் சட்டத்தைவிட்டு வழி தவறியவர்கள். ஆதலால், அதைச் சரிப்படுத்தவே நான் வந்திருக்கிறேன், நானே இறுதி தூதன்’ என்றும் அறிவித்தார். தன் வாழ்நாளுக்குள்ளேயே இஸ்லாத்தைப் பிற நாடுகளுக்குப் பரப்பி, ஓர் இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் பணியையும் முடித்துவிட்டார் முகமது. ‘பாலை நிலத்தில் பிறந்த ஒருவன் நமக்கு இணையா?’ என்ற ஆதிக்கச் சிந்தனையே இஸ்லாம் மீதான வெறுப்புக்குக் மூல காரணம்.

நம் நிலத்துக்கு வருவோம். வேத மரபு, சிரமண மரபு என்ற இரு பெரும் தத்துவக் குழாம்கள் கோலோச்சிய காலத்தில், ஒட்டுமொத்தமாக சிரமண மரபை உள்ளிழுத்துக்கொள்ளும் காலம் வேத மரபுக்கு வாய்த்தது. கடவுளை நிராகரித்த சமணத்தையும் பௌத்தத்தையும் சைவ – வைணவக் கூட்டணியைக் கொண்டு உள்ளிழுத்துக்கொண்டது. ஆனால், தன்னைப் போலவே முழு முதற் கடவுளை வணங்கும் ஒரு கூட்டம் வெளியிலிருந்து வந்ததை வேத மரபால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும், தன்னிடம் உள்ளது போன்ற படிநிலைப்படுத்தப்பட்ட சமூக அமைப்பு இஸ்லாத்திடம் இல்லை என்பதால், மக்கள் எளிதாய் அம்மதத்தைத் தழுவியதையும் தடுக்க முடியவில்லை. இதுவே நம் நிலத்தில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்குக் காரணம். இந்த இடத்தில் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ திரைப்படத்தைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். மைய நீரோட்ட வெளியில் இஸ்லாம் பற்றிய அறிமுக உரையாடலை இப்படம் சாத்தியப்படுத்தியுள்ளது. கதைப்படி வேத மரபைச் சேர்ந்த இருவர் தங்களை முஸ்லிம்களாக அடையாளப்படுத்திக்கொண்டு காதலிப்பர். அதனால் இருவரும் இஸ்லாம் பற்றி அறிந்துகொள்ள முற்படும் சிறப்பான கதைக்களம். ஓரிடத்தில் தத்துவார்த்த ரீதியாக வேத மரபின் துவைத தத்துவமும் இஸ்லாமும் ஒன்றுதான் என்று பொருள்படும்படி வசனம் இடம்பெற்றிருக்கும். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் பெரிய விவாதங்களை உருவாக்கியிருக்கும்.

கருத்தியல் ரீதியாக இஸ்லாம் ஏற்படுத்திய மாற்றம் என்னவெனில், தமது தொன்மங்களாக ஆதிக்க மரபு சொல்லிவந்ததையே இஸ்லாமும் பின்பற்றியது. அதற்கான வலுவான பின்னணியையும் அது உருவாக்கியது, ஆதிக்கவாதிகளால் மறுக்க முடியாத வகையில் அது இருந்தது. முஸ்லிம்கள் அந்நியர்களாகக் கருதப்படும் இந்திய நிலத்திலும் தனக்கான தொன்மத்தைக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஏற்கெனவே ஒரு சிறுகட்டுைர எழுதியிருக்கிறேன் (‘குதிரை வீரன் வருகை’, காலச்சுவடு, டிசம்பர் 2019). ஆதிக்க தரப்பிற்கு எதிரான கதையாடலை உருவாக்காமல் அவர்களின் மரபைத் தமதாக்கிக்கொள்ளும் சிந்தனை குறித்தும் விரிவாக ஆராய வேண்டும்.

மீண்டும் இங்கு தெளிவுபடுத்திகொள்வது என்னவென்றால், இஸ்லாமியக் கருத்தியல்களை விமர்சனமின்றி ஆதரிப்பது இக்கட்டுரையின் நோக்கமன்று. சக சமூகத்தவர் பற்றிய சித்திரிப்பில் குறைந்தபட்ச அக்கறையும் சமத்துவமுமாவது வேண்டும் என்பதுதான்.

எடுத்துக்கொண்ட பொருளிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டதாகத் தோன்றலாம். ஆனால், ஒரு படைப்பைப் பற்றி எழுதுவதானது அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் அத்தாக்கத்திற்கான வேரையும் கண்டடைந்து அதுபற்றிய உரையாடல் வெளியை உருவாக்குவது என்ற ரீதியில் இக்கட்டுரை அதைச் செய்திருப்பதாகவே நம்புகிறேன். இணைய தொடர்களின் வருகை பல புதிய பேபொருள்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் இக்கட்டுரை தன் பணியைச் செய்யும் என்று நம்பி முடித்துக்கொள்கிறேன்.

மனிதர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் அவர்களின் உடலியல் கூறுகளில் தொடர் மாற்றங்களை உருவாக்குகிறது. அந்த உடலியல் மாற்றம் தொழில்நுட்பத்தை மாற்றியமைக்க மேலும் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறது. திரைப்படம் என்ற உளவியல் தொழில்நுட்பம் இந்த வகையில் ஒவ்வொரு சமூகத்திலும் மிக அடிப்படையான உருமாற்றங்களை நிகழ்த்தியுள்ளது.

– மெக்லுகன், (‘விலகும் திரைகள்’, பிரேம், ப: 12)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version