
அடர்த்தி மிகுந்த செறிவான மொழியில் இயங்கும் நந்தாகுமாரனின் பெரும்பாலான கவிதைகள் இருத்தலில் இருந்து இல்லாமல் போகும் அல்லது துண்டித்துக் கொள்ளும் இடத்தைத் தேடுகின்றன. அதனாலேயே ‘காலம் கடந்தது’ என்றொரு கவிதையில் அவர் பயன்படுத்திய சொல்லாடலையே இந்த மதிப்புரைக்குத் தலைப்பாக எடுத்துக் கொண்டேன். ஒரு குத்துச்சண்டை வீரன் ஓங்கிக் குத்துகையில் எவ்வளவு ஆக்ரோஷத்துடன் அவனது முகம் இருக்குமோ அதுபோல நந்தாவின் கவிதைகள் வார்த்தைகளால் தளும்பிக் காட்டு நெருப்பின் வேகத்தோடு நிரம்பிக் கட்டற்று ஓடுகின்றன. அவராக நினைத்தால் மட்டுமே அதை நிறுத்தி வைக்க முடியும் என்பது போலான பாவனைகள் பல கவிதைகளில் காணக்கிடைக்கின்றன.
புதிய சொற்களைக் கவிதை வெளிக்கு அழைத்து வருதல், நடுநடுவே ஆங்கில வார்த்தைகளின் பயன்பாடு, அறிவியல், விஞ்ஞானம், இயற்பியல் போன்ற விஷயங்களின் தற்கால பயன்பாடுகளை எங்கெல்லாம் கடத்த முடியுமோ அதை ரசனையோடு கடத்துதல், சங்ககால மொழிதலை ஆங்காங்கே தூவுதல், அவற்றை ஒரு வாசகரால் எளிதில் கண்டடைய முடியாது என மீள் வாசிப்புக்கு உள்ளாக்குதல், திடீரென சாதாரண வார்த்தைகளில் உணர்ச்சி புனைதல், சந்த, எதுகை, மோனை விளையாட்டுகளைக் கவிதை இயல்பின் வேகத்தை மீறி ஓடவிடுதல், பின்பு நேரெதிரான கால அளவீட்டு ஜோதிட விஷயங்கள் பற்றிக் கூறுதல், கரடுமுரடான யதார்த்தம், யதார்த்தம், மாய யதார்த்தம் என இப்படி ஒரு ‘ட்ரம்ஸ்’ இசையின் சாயலில் முன்னும் பின்னும், மேலும் கீழும், பறந்தும் தாழ்வுமான தடதடதடவென்கிறதைத் தாண்டிய மீயதிர்வோடு கவிதைகளை ஓட விடுகிறார் நந்தா. இந்த மொழிக் கட்டமைப்பைத் தொடர் வாசிப்பு மற்றும் எழுத்தின் வழியே அவர் கண்டடைந்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்.
‘கடலுக்குள் வாழும் கடல்’ எனும் முதல் கவிதையே நம்மை வசீகரிக்கிறது. அது எழுந்து நீந்தி வந்து சேர்ந்து இடறி விழுந்து சாலையோரக் கடையில் காரப்பொறி சாப்பிடுகிறது என்கிறார். கொஞ்சம் கற்பனையை விரித்தால் அப்படி ஒரு கடல் ஊர் சுற்றும் காட்சி எவ்வளவு அழகானது. இந்தக் கற்பனைகளின் உச்சம் தான் ஒரு சாதாரண மனிதனைக் கவிஞனாக மாற்றுகிறது. அவர் கட்டில் மெத்தையில் படுத்துத் தூங்கி விடிந்ததும் அதன் வீட்டிற்கு இவரையும் கூட்டிச் சென்றதாம் கடல். கவிதை முடிகையில் நம் உதடுகள் மலர்கின்றன.
அடுத்த கவிதையாக வரும் (உரைநடைத் தோற்றம்) ’நண்பகற் கனவில் வரும் நள்ளிரவின் கனவு’ காமத்தின் சுவையை, விரகத்தை, சிற்றின்ப காட்சிகளை ஊடுபரவல் வார்த்தைகளில் மறைமுகமாகவும் நேரடியாகவும் மாறிமாறிச் சொல்லிச் செல்கின்றது. ‘ஸ்தூல இருளின் சூட்சுமச் சொல்’ கவிதை ‘சலனச்சொற்களின் சதங்கை ஆட்டம் மனப்பரண் ஏறுகிறது’ என்கிறது. மனதில் கிடந்து உழலும் சலனங்கள் சொற்களாக உள்ளே உருள்கின்றன. ஓர் இரவில் காமத்தை அடக்கப் போராடும் தனிமை உணர்வுகளைப் பேசுகிறது. ‘சாம்பலாகிறது கூதல், இடைக்கால விரதம், வயிற்றின் குரல் அப்பவளை, இயலாமையின் கோபம், ஹெலிகாப்டர் உடல்’ போன்ற சொற்கள் வழி அதனைச் சொல்கிறார். ‘நாளை வேறு நாள்’ என்றொரு கவிதை ‘எல்லா நாளும் மற்றுமொரு நாளே’ எனும் வாக்கியத்தை நினைவு படுத்துகிறது. ‘இருளின் கில்லட்டீன்’ ஒளியின் தலைகளைக் கொய்து கொண்டிருக்கிறது எனத் தொடங்குகிறது. கில்லட்டின் பொருள் தெரிந்தால் மட்டுமே இருள் எவ்வளவு கொடூரமானது என்பது புரியும். ‘உங்கள் தூக்கத்தின் கடவுளுக்கும் விழிப்பின் கடவுளுக்கும் இப்போது போர் துவங்குகிறது’ எனும் வரிகள் தூக்கம் வராமல் தவிக்கும் ஒரு வித எரிச்சலூட்டும் மயக்க நிலையை உணர்த்துகிறது. ‘உங்கள் செல்பேசியின் திரையில் சூரியன் உதிக்கிறது ஆனந்தமாகப் பார்க்கிறீர்கள்’ – அங்கத வார்த்தைகள். எழும் போதே கைகளால் துழாவி செல்பேசியைத் தானே முதலில் எடுக்கிறோம். பின் ‘நாட்காட்டியில் அன்றைய தினம் வெற்றுத் தாளாக இருக்கிறது’ என்று முடிக்கிறார். இன்றைய தினசரிகளின் ஆனந்தமும், சலிப்புறுதலுமாக மாறிமாறி அலைபாயும் மனதை அழகாக ஒரு நாள் வழி சொல்கிறார். தொகுப்பில் மிகவும் பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று.
‘காலத்துக்கு ஒருநாள் பிந்தி’ என்றொரு கவிதை கோடைக் காலத்தின் வெம்மையை அதன் நேர்மையோடு விவரித்துப் புலம்பலோடும், யதார்த்தத்தோடும் முடிவதைப் போலக் கட்டமைத்த விதம் இயல்பான பாட்டி கதைகளின் அழகியலை நினைவு படுத்துகிறது. வேதங்களில் வரும் விடியலின் பெண் கடவுளான ‘உஷாஷி’ன் இரவு கவிதை அவளின் இரவு நேரத் தனிமைத் துயரை விவரிப்பவர் ராத்திரி எனும் இரவின் பெண் கடவுளைத் துணைக்கு அழைப்பது காட்சி ஓவியமாகிறது. ‘போதகம்’ என்கிற கவிதை காமத்தின் உச்சமடையும் தருணங்களைத் தீவிர ரசனையோடு விவரிக்கின்றது. ‘சிரிப்பான் முகம் கிடைத்த வெட்டிய இளம் நுங்கின் கண்களைப் பெருவிரலால் தோண்டித்தின்னும்’ என இப்படி. மேலும் அதே கவிதையில் எதிரெதிர் முரண் சொற்களாக ‘ஆரவாரத்திற்கும் அமைதிக்கும் இடையே’, ‘ஆசீர்வாதத்திற்கும் அலங்கோலத்திற்கும்’ என்று வருகின்றது. இதைப் போன்ற முரண் சொற்கள் நிறையக் கவிதைகளில் காணக் கிடைக்கின்றன.
அங்கதச் சுவை கூடிய ‘சூப்பர் ஹூரோயின்’ கவிதை பெண்களின் ஏதும் செய்ய இயலாது சில இயலாமைகளைக் கவிதை வழியே தணித்துக் கொள்கிறது. குறிப்பிடும் படியாக நிறைய எதிர் கவிதைகளையும் பரீட்சித்துப் பார்க்கிறார். பிரமிள், அப்துல் ரகுமான், பெருந்தேவி கவிதைகளின் மூலம் எதிர் கவிதைகள் தோன்றுகின்றன. ‘நான் எனும் போதை’யெனும் தலைப்பில் நான்காவது கவிதை அலுவலக மேலாளருக்கு மனைவிக்கு மகனுக்குப் பெற்றோருக்கு உற்றோருக்கு மற்றோருக்கு தெய்வத்திற்கு நன்றி, இன்றைக்கும் என்னை வாழ விட்டீர்களே’ – என்கிறது.
பார்ப்பதற்கு சாதாரணம் போலத் தோன்றும் இந்தக் கவிதை அசாதாரண உணர்வின் ஆழத்தில் போய் நின்று கொள்கிறது. மரணத்தத்துவக் கவிதைகள் எனும் தலைப்பில் ‘மரணம் சரணம் சம்பூதம்’ உபதலைப்பு கொண்டு அப்பாவின் அஸ்தி குறித்து பேசுகையில் ‘நானா உங்களை எரித்தது, நானா உங்களை மரித்தது, என் குற்ற உணர்வுகளை எதில் கரைக்க’ எனும் வரிகள் நம்மை உலுக்குகின்றன. குண்டலகேசியின் பாடலுக்கு எதிர் கவிதையாக மனம் அழுந்தச் செய்யும் கவிதைகளில் இது ஒன்று. அதில் மூன்றாவது ‘தெள்ளிருள்’ தலைப்பிலான கவிதை மேலும் ‘ஓர் ஆற்றில் கொண்டு சென்று கரைத்தோம் உம் அஸ்தியை நீர் திரும்பாதீர் திரும்பி வந்தால் எமது இழப்பின் கேள்விகள் உம்மை மீண்டும் கொன்று விடும் ‘ என்கிறார். எவ்வளவு வேதனையை வெளிப்படுத்தும் வலிமிகு வரிகள்.
‘கள்ளநெறி’ என்ற ஒரு கவிதையில் ‘உன் திசைகாட்டிப் புருவமுட்கள்’ என அழகியல் ஆராதனை செய்கின்றது. மேலும் ‘காம அந்தாதி’ எழுதிப் பார்க்கிறார் கவிஞர் ரசத்தோடு. எடுத்துச்சொல்ல நிறையக் கவிதைகள் இருக்கின்றன. இருப்பினும் ஒரு வாசகியாக மற்றவரும் அதை உணரவேண்டும் என்பதற்காக நிறுத்துகிறேன்.
பிழையென்றில்லை எனினும் ஒரு கருத்துச் சொல்லத் தோன்றுகிறது. ஒரு கவிதையில் புதிய சொற்கள், எதிரெதிர் முரண் சொற்கள், சந்தவரிசை, எதுகை மோனை அழகியல் எல்லாம் கூடி வருகையில் பழைய தேய்வழக்கோ அல்லது பழைய வார்த்தைகளோடு கூடிய வடிவமைப்போடு ஒன்றிரண்டு சொற்றொடர்களோ பல்லிடுக்கில் மாட்டிய இறைச்சியின் பிசிறு போல உறுத்தியபடி நிற்கின்றன. அவர் கொண்டிருக்கும் புதுமைகளின் வசீகர முயற்சிகளை சட்டென்று இறக்கிப் போடுவது போலிருக்கின்றன. அது திட்டமிட்டுக் கட்டுடைக்கப்பட்டதாக இருப்பின் இந்தக் கருத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. இயல்பாக வந்ததென்றால் கவனிப்பது நலம். மீள் வாசிப்புக்கு உட்படுத்தும் அதன் மூலமே கண்டடைய முடியும் நிறைய அற்புதமான கவிதைகளைப் பிரதியாகத் தந்தமைக்கு ஆசியருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.
கவிதை தொகுப்பு: ‘ஏ.ஐ.’ எழுதிய உதிர்-கவிதை
ஆசிரியர்: நந்தாகுமாரன்
பதிப்பகம்: யாவரும் பப்ளிஷர்ஸ்
விலை: ரூ.179
முழுமையாக வாசித்தேன் நூல் அறிமுகத்திற்கு ஒரு விசில் போட வைக்கிறது மிக ஆழமான வாசிப்பு.
நிச்சயம் நூலை வாசித்துவிட வேண்டும் என்ற எண்ணம் மேலெழுகிறது.. இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 👏💐💐💐