நீர் தேடும் வேர்கள்

நூலின் தலைப்பு ஏதோ! ஒரு உரையாடலை நிகழ்த்த முன் மொழிகிறது.ஆம் வேர்கள் நிலைத் செழித்து வளர மூல ஆதாரம் நீர் தான் இந்த மண்ணில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கிறது என்றால் நீர் இல்லாமல் அது சாத்தியமில்லை.நம் உடலில் கூட சராசரியாக 50% முதல் 75% வரை தண்ணீர் உள்ளது, திருவள்ளுவர் எழுதிய ஒரு திருக்குறள் நினைவுக்கு வருகிறது.

“நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.”

கவிஞர் முதல் கவிதையே! மிக அற்புதமான படைப்பாக கொடுத்து இருக்கிறார்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். என்று சொல்வார்கள் அந்த கூற்றை இந்த கவிதை தொகுப்பு மெய்ப்பித்து இருக்கிறது. கிட்டத்தட்ட 80- க்கும் மேற்பட்ட கவிதைகள் இருக்கிறது ஒவ்வொன்றும் அவ்வளவு செறிவாக எழுதி இருக்கிறார் கவிஞர்.இரா.ராமன் அவர்கள்.

முதல் கவிதை:
“கன்னி வெடி போல்
கால் வைக்கும் இடமெல்லாம்
ஆழ்துளை கிணறுகள்
வறண்ட நாவோடு
நீர் தேடும் வேர்கள்..”

சமூக சிந்தனை கொண்ட உயிர்மநேயரிடம் தான் இவ்வகையான கவிதைகள் பிறக்கும் இந்த கவிதை வரிகளின் மூலம் கவிஞர் யார் என்பதை யாரும் அறிமுகம் செய்யாமலே அறிந்து கொள்ளலாம். பூமியை குடைந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி மனிதன் பயன்படுத்துகிறான்.
ஆனால் இந்த பூமி பந்தில் மனிதன் மட்டும் தான் உயிரினமா? என்ற கேள்வி இந்த கவிதையில் இருந்து பிறக்கிறது.

சாதாரண மனிதர்கள் ஒரு காட்சியை சாதாரணமாக தான் பார்க்கிறார்கள் ஆனால் கவிஞர்கள் அப்படி அல்ல என்பதற்கு பின்வரும் கவிதை சாட்சி.

“ஜன்னல் கண்ணாடியில்
அழுது வடிகிறது
மழைச்சாரல்”

நாட்டின் நான்கு தூண்கள் என்பவை ஜனநாயகத்தின் அஸ்திவாரங்களாகக் கருதப்படும் சட்டமன்றம் (Legislature), நிர்வாகத்துறை (Executive), நீதித்துறை (Judiciary) மற்றும் பத்திரிகை/ஊடகம் (Media) ஆகும். இதனை அனைவரும் அறிந்ததே! இந்த ஊடகத்துறை அறமற்று போயி வெகு நாட்கள் ஆகி விட்டது என்பதை பின்வரும் கவிதை உணர்த்துகிறது. மக்களை எந்நேரமும் Breaking News என்ற பெயரில் உளவியல் ரீதியாக அடிமை படித்தியே வைக்கிறது என்பதை மூன்றே வரிகளில் சிறப்பாக சொல்லி இருக்கிறார் கவிஞர்.

“ஒட்டுண்ணியாய்
உறிஞ்சி தின்னுகிறது
ஊடகங்கள் நேரத்தை”

சாலையொங்கும் மரங்கள் என்று இனி வரும் கவிஞர்கள் யாருக்கும் எழுத வாய்ப்பு தரவில்லை இந்த அரசுகள்.
சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலை ஓர மரங்கள் அனைத்து வெட்டப்பட்டுவிட்டன மனிதன் நிழலை தேடி தான் அலைய வேண்டும் என்பதை மிக ஆழ்ந்த வேதனையோடு பின்வரும் கவிதை பேசுகிறது.

“சுட்டெரிக்கும் வெயில்
சாலையெங்கும் மின் கம்பங்கள்
நிழல் தேடும் கால்கள்”

கவிஞர் என்றால் காதல் இல்லாமல் இருக்குமா! என்ன. வாசித்தவுடன் சபாஷ் போட வைக்கும் அருமையான காதல் கவிதையும் மூன்று வரிகளில் சிறப்பாக எழுதி இருக்கிறார்.அந்த வரிகளை நான் விளக்கம் சொல்லாமல் கடந்து செல்கிறேன் வாசிக்கும் உங்கள் கற்பனைக்கு.

“என்ன சொல்லிக் கொண்டிருந்தாய்
இரவெல்லாம் இரவிடம்
எண்ணைப் பற்றி”

ஒருவன் இறந்து போனால் அவனுக்கு அஞ்சலி செலுத்த யார் யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் எங்கள் கவிஞர் எப்படி எழுதி இருக்கிறார் என்று நீங்களே பாருங்கள்.

“கருகியது பயிர்
மாண்டுப்போனான் விவசாயி
மழை அஞ்சலி”

ஆம், வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை, ஏனெனில் அவை நம் எண்ணங்களை வடிவமைத்து, உலகை பாதிக்கின்றன ,அவை உறவுகளை உருவாக்குகின்றன அல்லது உடைக்கின்றன, நம்பிக்கைகளை வெளிப்படுத்துகின்றன, மேலும் “நன்றி”, “மன்னிக்கவும்” போன்ற வார்த்தைகள் மரியாதை மற்றும் அன்பைக் காட்டுகின்றன, எனவே நாம் பேசும் வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுப்பது அவசியம் என்பதை
பின்வரும் கவிதை உணர்த்துகிறது.

“தூக்கி வீசப்படும்
வார்த்தைகள்
யாரோ ஒருவரின் மனதில்
முளைத்து விடுகிறது
மரமாக.

இது போல் கவிதை தொகுப்பு முழுவதும் வாசிக்க வாசிக்க நம் எண்ணங்களை விரிவடைய செய்கிறது.இந்த கவிதை தொகுப்பில் கவிஞர் இரா.ராமன் அவர்கள் இயற்கை,காதல்,அன்பு, நம்பிக்கை, அரசியல்,சாதி , நவீன சுரண்டல், முற்போக்கு, பிற்போக்கு,மூட நம்பிக்கை,இரக்கம்,சாதி, வறுமை, மக்களின் வாழ்வியல் என அத்துனை பொருண்மையிலும் கவிதை படைத்து இருக்கிறார்.

கவிதையின் கரு,காட்சி படிமம்,சொற் சிக்கனம்,மொழி ஆளுமை என அத்துனையும் கவிஞருக்கு வாய்க்கப் பெற்று இருப்பது மகிழ்வை தருகிறது.
தமிழ் இலக்கிய களம் மாபெரும் கடல் அந்த சமூத்திரத்தில் நீந்த அனைத்து ஆற்றலுடன் வரும் பேரன்பு கொண்ட கவிஞரை வாழ்த்தி பாராட்டி வருக வருக என வரவேற்கிறேன்….
நண்பர்களே! நிச்சயம் நூலை அனைவரும் வாங்கி வாசிக்கலாம்..

பதிப்பகம்:பழனம் புக்ஸ்
ஆசிரியர்:இரா.ராமன்
பக்கங்கள்:92
விலை :110

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version