டி டி பொதிகை சேனலின் ‘மங்கையர் சோலை’ நிகழ்ச்சியில் கலந்தது கொள்ள சென்றிருந்தேன். அதே நிகழ்விற்காக வந்திருந்த மற்ற தொழில் முனைவோர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒருவர், அமைதியாக, ஆடம்பரம் இல்லாத ஒரு பட்டுப் புடவை உடுத்தியபடி, அறைக்குள் நுழைந்தார். என்னைப் பார்த்து புன்சிரிப்புடன் ‘ஹலோ’ என்று அருகே அமர்ந்தார். எங்களுடன் சற்று பேசிவிட்டு அவர் வெளியேறிய பின், “இவர் யார் தெரியுமா? இன்றைய நிகழ்ச்சியின் நடுவர் திருமதி வீனா குமாரவேல். நேட்சுரல்ஸ் சலூன் உரிமையாளர்” என்று தெரிவித்தனர். உண்மையிலேயே அசந்து போனேன்.
செய்த சாதனையும், வென்ற பரிசுகளும், அடைந்த புகழும் பிரம்மாண்டமாய் இருக்க, இவரிடம் அதற்கான எவ்வித சாயலும் இன்றி, இத்தனை அமைதியா?
மெல்லிய பேச்சு
அளவான வார்த்தைகள்
பெண்ணியத்தின் மீது அக்கறை
இது தான் திருமிகு வீனா குமாரவேல்.
ஒரு வாரம் கழித்து, தொலைபேசியில் நேரில் சந்திக்க அனுமதி பெற்று, சென்னை ‘இஸ்பகானி சென்டர்’ல் உள்ள அவருடைய அலுவகத்தில் சந்தித்தேன். பெரிய அலுவலகம். ஏறத்தாழ 45 முதல் 50 ஆட்கள் பணியில் தீவிரமாக இருந்தனர்.
அவருக்கென்று, அவரைப் போலவே எளிமையானதொரு அறை. தன்னைச் சார்ந்த அல்லது, தன்னைச் சுற்றி உள்ள பெண்களை முன்னேற்றும் விதமாகவே, இவருடைய தொழில் முறைகள் இருந்து வருகிறது. இந்த நேர்காணலின் ஒவ்வொரு பதிலிலும், நீங்களே உணருவீர்கள்.
காபியுடன் சூடானா மினி சமோசா பரிமாறப்பட்டது. ஆவி பறக்கும் காபியை சுவைத்தபடி, நான் கண்ட இந்த நேர்காணல், சுடச் சுட… இதோ உங்கள் கைகளில்.
கே. வணக்கம். உங்களைப் பற்றிய அறிமுகம்.
ப. வணக்கம். நான் வீனா குமாரவேல். பிறந்து வளர்ந்தது சென்னையில். பள்ளிப் படிப்பு, ‘சேக்ரட் ஹார்ட்ஸ்’ (Sacred Hearts) கான்வென்டில் முடித்தேன். B.Com பட்டப் படிப்பை எத்திராஜ் கல்லூரியில் முடித்தேன். அப்பாவின் குடும்பம், ஃபவுன்டரி (foundry) தொழில் நடத்தி வந்தனர். சில மாதங்கள் நானும் அதில் இருந்தேன். பின் திருமணம்.
என் கணவர் FMCG வியாபாரத்தில் இருந்தார். கூந்தல் பராமரிப்பு பொருட்களை விற்பனை செய்துகொண்டிருந்தார். இயற்கைப் பொருட்களை உபயோகிக்கும் ஆர்வம் எனக்கிருந்தபடியால், நானும் அதில் ஈடுபட்டேன். இப்படியாகத் தான் என் பயணம் ஆரம்பமானது.
கே. Naturals salon எப்படி துவங்கப் பட்டது?
ப. என்னுடைய ஆர்வமும் கவனமும் இயற்கை சார்ந்த பொருட்களை உபயோகிப்பதிலேயே இருந்தது. முகத்திற்கும் தலைமுடிக்கும், இன்று வரை, வீட்டில் தயாரிக்கும் பொருட்களைத் தான் உயபோகித்து வருகிறேன். அதையே இன்னும் பலருக்குப் போய் சேரும் விதமாக, ‘ராகா’ என்ற பெயருடன் கேசப் பராமரிப்புப் பொருட்களைத் தயார் செய்து வினியோகித்து வந்தோம். இதன் அடுத்த கட்டம் தான் பியூட்டி பார்லர். அழகு நிலையங்கள்.
சில வருடங்கள் முன், அந்த சமயத்தில் நீங்கள் சிந்தித்துப் பார்த்தால், அழகு நிலையங்கள் பெரும்பாலும் வீட்டிலேயே நடத்தப்பட்டது. அல்லது, ஒரு சின்ன அறையை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். இயற்கை மூலிகைப் பொருட்களை உபயோகித்து, சருமம் மற்றும் கேச பராமரிப்பிற்கான ஒரு முழுமையான அழகு நிலையம், அப்போது இல்லை. இந்த இடைவேளையை நான் நிரப்ப எண்ணினேன்.
தாஜ் ஹோட்டலில் வேலை செய்துகொண்டிருந்த அழகுக் கலை நிபுணர் ஒருவர் தன் வேலையை விடும் சூழலில், அவரை நான் சந்தித்தேன். என் திட்டத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்தார். “வழிமுறைகளை நான் கற்றுத்தருகிறேன், பொருளாதார ரீதியாக நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார். இந்த கூட்டணி ஆரம்பமானது. தினமும் அவர் நிலையத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பார்த்துக் கொண்டார். நான் அலுவலக நிர்வாகத்தை கவனித்து வந்தேன்.
பின் ஒரு வருடம் கழித்து, அவர் தன்னுடைய சொந்த நிலையத்தைத் தொடங்கினார். நான் இதைத் தனியே கவணிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். தொழிலுக்குப் புதிது. அனுபவம் இல்லை. தரமான பொருட்களை வாங்குவது. சரியான ஆட்களை வேலைக்குத் தேர்வு செய்வது என்று, பல சவால்கள் என் முன்னே இருந்தது. கணவரும், அவர் வியாபாரத்தை விட்டு, என்னுடன் சேர்ந்து இந்தத் தொழிலை கவனிக்க வந்தார். Man power மற்றும் பொருளாதார ரீதியாக சில பின்னடைவுகளைச் சந்தித்தோம்.
கே. ‘ராகா’விற்கு நல்ல பெயரும் விற்பனையும் இருந்ததல்லவா?
ப. ஆமாம், நல்ல பெயரிருந்தது. ஆனால், ஆரம்பத்தில் நாம் செய்யும் சில தவறுகளிலிருந்து, நாம் கற்றுக்கொள்கிறோம். ‘ராகா’ தொடக்கத்தில் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தாலும், அதை விரிவுப் படுத்தும் முயற்சியில் பின்னடைவை சந்தித்தோம். அந்த ‘ராகா’ பிராண்டையே விற்க வேண்டிய சூழல் உருவானது.
நான் மட்டுமே இந்த வியாபாரத்தை கவனித்து வந்தபோது, மூன்று அழகு நிலையங்கள் மட்டுமே இருந்தன. இதில் முழு கவனம் செலுத்தி, வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதில் ஆர்வம் கொண்டிருந்தேன். என் கணவர் உள்ளே வந்தபிறகு, இதை விரிவுப் படுத்த எண்ணினார். அப்போது தான், franchise (அதிகாரபூர்வமான வணிக விற்பணை உரிமை) என்ற எண்ணமே உருவானது.
கே. பெண்கள் ஏன் தொழில் முனைவோராக வேண்டும் என்பது பற்றி, உங்கள் பார்வை?
ப. பெண்கள் ஒரே நேரத்தில், பல வேலைகளைச் செய்யக்கூடியவர்கள். வீட்டையும் வேலையையும் சரியாக நிர்வகிக்கும் திறமை கொண்டவர்கள். அதையும் தாண்டி, நம்மை சுற்றி உள்ள மனிதர்களைச் சரியான முறையில், பெண்களாகிய நாம், கையாள்கிறோம். நான் இருக்கும் இந்த துறைக்கு, hospitality ரொம்ப முக்கியம். Service industryல, பிறரை வரவேற்பதாகட்டும், கவனித்துக் கொள்வதாகட்டும், பணிவிடை செய்வதாகட்டும், பெண்களுக்கு இது ஒரு கைதேர்ந்த கலை.
அதற்கும் மேலாக, பெண்கள் சம நிலையுடன் இருக்கக்கூடியவர்கள். Women are more level-headed. நாம உணர்ச்சி வசப்படுபவர்களாக, emotional ஆக இருக்கலாம். ஆனால், அடுத்தவரின் நிலையை, ஒரு பெண்ணால் உணர முடியும். தலைமைப் பொறுப்பு வகிக்க இது ரொம்ப முக்கியம். ‘அடுத்தவர் ஏன் இப்படிச் செய்கிறார்’ என்பதை பொறுமையுடன் ஆலோசிக்கும் மனப்பக்குவம் பெண்களிடம் உண்டு. அடுத்தவர் நிலை அறிந்து, முடிவுகள் எடுப்பது, தலைமைப் பண்புக்கு முக்கியமான தகுதியாகும். அந்த வகையில், பெண்கள் சிறந்த தொழில் முனைவோராக இருக்க முடியும்.
அடுத்து, வேலையில் அதிக கவனம் செலுத்துவார்கள். வீட்டில் பொருளாதாரத்தை பார்த்துக்கொள்ள தெரிந்த பெண்களுக்கு, வியாபாரத்திலும், பொருளாதாரத்தை சிறப்பாகக் கையாள்வார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்கள் சிறந்த team leaders (அணி தலைவர்)ஆக இருப்பார்கள்.
கே. வெற்றியை தக்கவைப்பதற்கான முன்னெடுப்புகளாக நீங்கள் முன்வைப்பது?
ப. முதலாவதாக, to stay grounded. எதையும் தலைக்குள் ஏற்றிக்கொள்ள கூடாது. வெற்றியை, எவரொருவருமே, பல படிகளைக் கடந்த பின்னர் தான் அடைய முடியும். நாங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் வெற்றி அடைந்த பின், அதை நாம் பார்க்கும் கண்ணோட்டம் ரொம்ப முக்கியம். என்னைப் பொறுத்தவரை, பல பெண்களை தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும். அதற்கு முன்னால், எங்களுக்கான ஒரு லாபகரமான இடத்தை அடைந்து, அதை தக்கவைத்து கொள்ள வேண்டும். ஒரு கட்டத்தில், ‘இந்த அளவு வருமானம் வந்தால் தான் தொடர முடியும்’ என்ற நிலை இருந்தது.
அதற்கு அடுத்த கட்டம், மேலும் பல கிளைகளை உருவாக்குவதில் (franchise), கவனம் செலுத்தினோம். பெண்களுக்கு தான் முன்னுரிமை இருந்தது. தொழில் கட்டமைப்பை உருவாக்ககிக் கொடுத்த பின், அவர்களால் சிறப்பாக வேலை செய்ய முடிந்தது. அவர்கள் முதலீடு, அவர்கள் வியாபாரம் என்று வந்த பிறகு, பெண்கள் ஆர்வத்துடனும் அக்கறைக் கொண்டும் செயல்பட்டனர்.
இதை அடுத்து, வெற்றியைத் தக்கவைத்துகொள்ள, இன்றைய மாற்றங்களை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். புதுப்புது அறிமுகங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்து, நம்மைச் சுற்றி ஒரு நல்ல குழுவை அமைத்து கொள்ள வேண்டும். You must build a strong team.
அடுத்து, man power. நல்ல வேலை தெரிந்த ஆட்களை பணியில் நியமிப்பதும், அவர்களுடன் தொடர்பில் இருப்பதும் மிக அவசியம். ஆரம்ப நாட்களில், நான் என் பணியாளர்களுடனேயே இருந்து வேலை செய்து வந்த காரணத்தினால், 25, 30அழகு நிலையங்களின் உள்ள பணியாளர்களின் அத்தனை பேரையும், தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும். இப்போது இது சாத்தியமில்லை. இந்த rapport ரொம்ப முக்கியம்.
இதெல்லாமே வெற்றியை தக்கவைத்துக் கொள்ள உதவும்.
கே. நேட்சுரல்ஸ், மற்ற சலூன்களை விட, எவ்விதத்தில் தனித்து நிற்கிறது?
ப. எல்லா அழகு நிலையத்திலும் சேவை ஏறத்தாழ ஒரேவிதமாக தான் இருக்கும். நேட்சுரல்ஸைப் பொருத்த வரை, வாடிக்கையாளர்களுடன் நல்ல தொடர்பில் இருப்பதை உறுதி செய்துகொள்வோம். அடுத்த முக்கியமான விஷயம், சுத்தம், சுகாதாரம். இதில் எந்த சமரசத்திற்க்கும் இடமில்லை. உபயோகப்படுத்தும் பொருட்களின் தரத்தில் கனவம் செலுத்துவோம்.
அடுத்ததாக, நாங்கள் கொடுக்கும் பயிற்சி. சமீபத்திய மேம்படுத்தலுடன் (latest updates) வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய, தொடர்ந்து பயிற்சி அளித்து வருவோம். சுகாதாரம், பொருட்களின் தரம், வாடிக்கையாளர் சேவை, இந்த மூன்று விஷங்களில் கனவம் செலுத்துவோம்.
எங்களுடையது ஒரு சங்கிலி வணிகமாதலால் (chain business), பிற அழகு சார்ந்த நிறுவனங்கள், முதலில் எங்களைத் தொடர்பு கொள்வார்கள். பல முன்னனி நிறுவனங்கள் எங்களை தொடர்பு கொள்வதும், அவர்கள் பொருட்களை நாங்கள் அறிமுகப் படுத்துவதும், கூடுதல் அனுகூலமாகப் பார்க்கலாம்.
கே. அழகு சம்பந்தமான, சமீபத்திய மாற்றங்களை தாங்கள் அணுகி, அவற்றை உங்கள் நிலையங்களில் அறிமுகப்படுத்தும் முறைகளைப் பற்றிக் கூறுங்கள்?
ப. நான் முன் சொன்னது போல, பல புதிய நிறுவனங்கள் எங்களை அணுகுவதுண்டு. ஒரு 10 வருடங்களுக்கு முன், இத்தனை புதிய பிராண்டுகளோ ரகங்களோ இல்லை. இப்போது சந்தையில் நிறுவனங்களும் பொருட்களும் நிரம்பி வழிகின்றன. இதற்கென்று expos, கண்காட்சிகள் நடைபெறுகின்றன. அங்கே சென்று நாம் பார்வையிட வேண்டும். புது வகை அறிமுகங்கள் என்ன என்று நமக்குத் தெரிந்து விடும். உள்ளூர்ச் சந்தை மட்டுமின்றி, வெளிநாட்டு பொருட்களுக்கான கண்காட்சிகளும் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும். மிக பிரம்மாண்டமாக இருக்கும்.
அதற்கும் மேலாக, இன்றைய டிஜிடல் காலக்கட்டத்தில், எந்த நிறுவனத்தில், எந்தப் பொருள் அறிமுகமானாலும், உடனே நமக்குத் தெரிந்துவிடுகிறது. அழகு சாதனப் பொருட்களுக்கு, இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தை. எல்லா உலக நாடுகளும், இந்திய சந்தையில் ஒரு பங்கு கிடைக்குமா, என்றே பார்க்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இந்த நிலை இல்லை. சுமார் 25ஆண்டுகளுக்கு முன், நாங்கள் Body Shop என்ற நிறுவனத்தின் பொருட்களை இங்கே அறிமுகப்படுத்த எண்ணிய போது, எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. ‘உங்கள் அரசாங்கம் நிலையாக இருக்காது, இந்நிய சந்தை நிலையானதாக இருக்காது. எங்களுக்கு இந்திய சந்தை வேண்டாம்’ என்றார்கள். ஆனால், நிலமை இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது.
பல கொரியன் நிறுவனங்கள் கண்காட்டசிகள் அமைத்து, அவர்கள் பொருட்களை காட்சிப் படுத்துவார்கள். எங்களை, அவர்களுடைய தொழிற்சாலைக்கே அழைத்து, தயாரிப்பின் தரத்தையும் தயாரிப்பு முறைகளையும் காண்பிப்பார்கள். கொரியன் தூதரகமே இதை ஏற்பாடு செய்து, தங்களின் பொருட்களுக்கான வர்த்தகத்தை, உலகெங்கிலும் வளரச்செய்வார்கள்.
இப்போது, மேஜிக் மிரர், என்று புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளனர். அதில் நீங்கள் பார்த்தால், உங்கள் முகத்திற்கு எந்த மாதிரியான மேக்அப் பொருந்தும், எந்த மாதிரியான சிகை அலங்காரம் சரியாக இருக்கும், சரும பாதுகாப்பிற்கு, எந்த வகை பொருட்களை உபயோகிக்க வேண்டும், என்று காண்பித்து விடும்.
அடுத்து ஒன்று, உங்களுடைய எச்சிலை பரிசோதனை செய்து(ரத்த பரிசோதனை போல), அடுத்த 15 வருடங்களில் நீங்கள் எப்படி இருப்பீர்கள், உங்கள் சருமம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதற்கேற்ற முன்னெடுப்புகளைத் தொடங்கிவிடலாம். இப்படியாக, சமீப மாற்றங்களை நாங்கள் தேர்வு செய்து, சிறந்த முறையில் அறிமுகப்படுத்தி வருகிறோம்.
கே. உங்கள் பெண் ஊழியர்களை எவ்விதங்களில் ஊக்கப்படுத்தி, கையாள்கிறீர்கள்?
ப. ஊழியர்கள் என்பதை விட, எங்கள் கிளை உரிமையாளர்களைப் பற்றி நான் சொல்லி ஆக வேண்டும். எங்கள் தேர்வு, பெரும்பாலும் பெண்கள் தான். பல பெண்கள் IT வேலையிலிருந்து விடுபட்டவர்களாக அல்லது, ஓய்வு பெற்றவர்களாக இருப்பார்கள். அதிக வேலை பளு இல்லாமல், அவர்களுக்கென்று ஒரு அமைதியான தொழிலாக இருக்க வேண்டும், என்று நினைப்பார்கள். சில இளைஞர்களும் வருவதுண்டு.
நாங்கள் தொடர்ந்து workshops, seminars, மீட்டிங் வாயிலாக அவர்களைச் சந்திப்போம். வருடத்திற்கு ஒரு முறை, அனைவரும் ஒன்றாக கூடும்படி ஏற்பாடு செய்வோம். அங்கே அனைவரும் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொள்வார்கள். தொழில் முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவோம். அனைவரையும் உற்சாகப் படுத்தும் வகையில் motivational speakersஐ அழைத்து, பேசவைப்போம்.
கே. உங்கள் துறை சார்ந்த பயிற்சியை, பெண்களுக்கு அளித்து வருகிறீர்களா?
ப. ஆமாம். எங்களுக்கு பல இடங்களில் பயிற்சி நிறுவனங்கள் உண்டு. வேறெங்கேனும் பயிற்சி எடுத்து வந்தவர்கள், இங்கே இன்னும் சிறப்புப் பயிற்சி பெறுவார்கள். அடுத்து, புதிதாக வேலை கற்றுக்கொள்ள வருபவர்கள். North East பகுதியிலிருந்து நிறைய பெண்கள், புதிதாக வருவார்கள். பயிற்சி முடிந்த பின்னர், எங்கள் நிறுவனங்களில், வேலைக்காக தேர்வு செய்யப் படுவார்கள்.
கே. உங்கள் நிறுவனங்களில் பணி செய்ய மட்டுமே இவர்களுக்கு அனுமதி உண்டா, அல்லது வெளியே சென்று இவர்கள் தொழில் தொடங்கலாமா?
ப. வெளியேயும் செல்லலாம். இதிலும் இரண்டு வகை பயிற்சிகள் உண்டு. வரும் பெண்களுக்குப் பயிற்சி, தங்கும் வசதி, உணவு என, அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். அத்துடன், எங்களிடம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம். சம்மதம் தெரிவிப்பவர்கள், இந்த பயிற்சியைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்தது, கட்டண முறையில் பயிற்சி வழங்கப்படும். இவர்கள் எங்களிடம் வேலை செய்ய நினைத்தாலும், செய்யலாம். அல்லது, வெளியே வேலைக்கும் போகலாம். அல்லது, சொந்தமாக நிறுவனத்தையும் ஆரம்பிக்கலாம். எங்களுக்கு நாடு முழுவதும் ஏறத்தாழ 35 – 40 பயிற்சி நிறுவனங்கள் உண்டு.
கே. தற்போதைய சூழலில் பெண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதாக நீங்கள் நினைப்பது?
ப. இன்றைய சூழலில் எல்லாமே டிஜிடலா வந்தாச்சு. அதைப் பற்றிய அறிவும் தெளிவும் நமக்கு இருக்க வேண்டும். பெண்களுக்கு அவற்றை கையாளத் தெரியவேண்டும். பல வகை தொழில் இன்று வலைதளம் மூலமாக நடைபெற்று வருகிறது. பணப்பட்டுவாடா onlineல் நடை பெறுகிறது. ‘Homepreneurs Awards’ என்ற விருது வழங்கும் விழாவைத் தொடர்ந்து நடத்திவருகிறோம். அதில் நான் பல பெண்களைப் பார்க்கிறேன். பெயர் தெரியாத கடைக்கோடி கிராமத்திலிருந்து ஆன்லைன் வியாபாரம் செய்து சம்பாதிப்பவர் நிறைய பேர் உண்டு. ஒரு கைப்பேசி கொண்டு, ஆன்லைன் வாயிலாக, தேவையான பொருட்களை வாங்கி, தயாரித்து, விற்பனை செய்து சம்பாதிக்கிறார்கள்.
கைப்பேசியை பல விதங்களில் பயன்படுத்துகிறோம். அதை உங்கள் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துங்கள். இன்று எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த பெண்கள் பலர், யூ டியூப் வாயிலாக, பல புதிய மேக் அப் முறைகளைக் கற்று வருகிறார்கள். பின் அதை அழகாகப் படம் பிடத்து, அதை எடிட் செய்கிறார்கள்.
அடுத்து பொருளாதாரம். பெண்கள் சிலர் இதில் கவனம் செலுத்துவதில்லை. பொருளாதார முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். வியாபாரத்திலும் சரி, குடும்பத்திலும் சரி, வருமான விவரமும், சேமிப்பு விவரமும் பெண்களுக்குத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இது ஒரு ஆணின் வேலை என்று விட்டுவிட வேண்டாம். நமக்கென்று ஒரு வருமாணம் நிச்சயம் தேவை.
கே. அழகு நிலயம் என்ற இத்துறையில், எதை நோக்கிய பயணமாக, உங்களுடை நெடுங்கால கால திட்டமிடல் அமைகிறது?
ப. உலகம் முழுவதும் எங்கள் நிறுவனம் சென்றடைய வேண்டும். இது என்னுடைய long term plan. இரண்டு முக்கிய காரணங்களைச் சொல்வேன். இன்று பல நிறுவனங்கள் இத்துறைக்குள் வந்தாகி விட்டது. ஆனால், நம்முடைய ஆயூர்வேதமும், இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் அழகு சாதனப் பொருட்களும், நமக்கே உரிய ஒரு சிறப்பம்சம். இதை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லவேண்டும். வெளிநாட்டுப் பொருட்கள், நம் நாட்டில் வரும்போது, நம் பொருட்கள் அங்கே செல்ல தடை என்ன?
அத்துடன் சேர்ந்து வருவது, பல பெண்களுக்கு வேலை கொடுப்பதாகும். ஒவ்வொரு நிலையத்திலும் இருபது பெண்கள் நியமிக்கப்படுகிறார்கள். இன்னும் அதிக கிளைகள் என்றால், அதிக வேலை வாய்ப்பு. இதை தொடர்ந்து, அதிக பெண் தொழில் முனைவோர்கள் உருவாக ஒரு வாய்ப்பாக அமையும்.
கே. பின்னடைவுகளை சமாளிக்க, தங்களுடைய அணுகுமுறை?
ப. எங்கள் வியாபாரம் set backஓட தான் ஆரம்பமாச்சு. ஆனால் நாங்கள் சோர்ந்து போகவில்லை. அடுத்து என்ன, என்று முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில் போதுமான நிதி வசதி இல்லை. நாங்கள் எதிர்க் கொண்ட மிகப் பெரிய சவால் இது. நண்பர்கள், உறவினர்களிடம் கடன் பெற்று தொழிலைத் தொடங்கினோம். அந்த சமயத்தில் வங்கிகளின் ஆதரவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இன்று பெண் தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதியெல்லாம் அப்போது இல்லை.
அடுத்த சவால், man power. சரியான ஆட்களை வேலைக்கு நியமிப்பது. இன்று அதைத் தீர்க்கும் விதமாக, நாங்களே பயிற்சி நிலையங்கள் அமைத்து, ஆட்களைத் தேர்வு செய்கிறோம்.
அடுத்த சமீபத்திய set back, digital marketing. அதை மெல்ல வென்று வருகிறோம். பல வருடங்களாக நாங்கள் தொலைகாட்சி, நாளிதழ்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தோம். ஆனால், இன்றைய இளைஞர்கள் இது எதையுமே பார்ப்பதில்லை என்பதைத் தாமதமாகத்தான் உணர்ந்தோம். இளைஞர்களுக்கு இன்று எல்லாமே கைபேசி தான். ஆக, தற்சமயம், எங்கள் கவனம் முழுவதும், digital marketing மீது தான் உள்ளது.
கே. வேலை, குடும்பம், இவற்றை சமன் படுத்த, உங்கள் உத்திகள் சில?
ப. சொந்தமாக தொழில் செய்வது பல விதங்களில் நமக்கு நன்மையாகவே அமையும். வெளி அலுவலகத்திற்கு 9மணிக்குச் செல்ல வேண்டும். மாலை 5 வரை கட்டாயம் அங்கே பணி செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. Your timings are flexible. வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்றால் கூடுதல் நேரம் ஒதுக்கலாம். வீட்டில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் இருந்தாலும், அதற்கேற்ற வாறு, பணியை அமைத்து கொள்ளலாம். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைப் பொறுத்தது.
குடும்பத்தாரின் உதவி இருந்தால் சிறப்பாக இருக்கும். ஆரம்ப நாட்களில் என் பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்துக் கொண்டார்கள். அடுத்து, சில பெண்கள் வேலை விஷயமாக வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, ஒரு வித குற்ற உணர்வுக்கு ஆளாகிறார்கள். இது தேவையில்லை. நீங்கள் உங்களுக்காகவும் அவர்களுக்காவும் சேர்த்துத் தான் வேலை செய்கிறீர்கள்.
அதுமட்டும் அல்ல, செய்ய வேண்டிய காலத்தில் நீங்கள் நினைத்ததைச் செய்யாமல், குழந்தைகள் வளர்ந்து, அவர்கள் வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுத்தப் பின், எதையாவது செய்ய நினைத்தால், அந்த சமயத்தில், நமக்குச் சரிவராமல் போலாம். சந்தை நிலவரம் என்ன, சமீபத்திய உத்திகள் என்ன, மக்களின் தேவை என்ன, எந்த விவரமும் நமக்குத் தெரியாமல் போக வாய்ப்பு உண்டு. இறுதியில், நம்மால் எதையும் செய்ய முடியவில்லையே, என்ற மனச்சோர்வும் மன அழுத்தமும் தான் மிஞ்சும்.
சுமை அதிகமாக இருக்கும் காரணத்தினால் சிலர் வேலையை விட்டு விடுவார்கள். அவர்கள் கூட, அதிக வேலை பளு இல்லாமல், தங்களுக்குப் பிடித்தமான ஒரு வேலையைச் செய்யத் தொடங்கலாம். ‘பிள்ளைகள் வளர்ந்தபின் பார்த்து கொள்ளலாம்’ என்ற இடைவேளை வேண்டாம். பிள்ளைகள் நிச்சயம் நம்மைப் புரிந்து கொள்வார்கள். நாம் அவர்களுக்கு role modelஆக (முன் உதாரணமாக) மாறிவிடுவோம்.
‘நேட்சுரல்ஸ்’ கிளை உரிமையாளர்கள் பலரை நான் பார்க்கிறேன், அப்பெண்களின் வீட்டில், அவர்களுக்கு நல்ல மதிப்பு உண்டு. அம்மா திறமையாக வேலை செய்து சம்பாதிக்கிறாள் என்ற பெருமிதம் அவர்களுக்கு உண்டு. ஆக, வீட்டையும், வேலையையும், பெண்கள் நிச்சயம் நிர்வகிக்கலாம். தேவையில்லாத பல விஷயங்களைச் செய்ய முடியும் போது, நாம் முன்னேறுவதற்கான நேரம், நிச்சயம் உண்டு.
கே. இன்றைய சூழலில், ஒரு பெண்ணின் அழகுக்கான இலக்கணம் என்னவாக இருக்கு?
ப. இன்றைய காலகட்டத்தில், அழகு என்பது, உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அழகு என்பது, உள்ளிருந்து வருவது. நல்ல சருமம், ஆரோக்கியமான கூந்தல், அதைப் பாதுகாக்க supplements, இதிலெல்லாம் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆரோக்கியமான உணவு வகைகளைத் தேர்வு செய்கிறார்கள். அழகு என்பது, வெறும் மேக்கப் என்று இல்லாமல், உடல் ஆரோக்கியத்துடன் பார்க்கப்படுகிறது. நான் இனிப்பு வகைகளை அவ்வப்பொழுது சாப்பிடுவேன். என்னுடையப் பெண், அதை தவிர்த்து விடுவாள். ஒரு பக்கம் ஆரோக்கியமற்ற உணவுகளை மக்கள் சாப்பிட்டு வந்தாலும், many are health conscious.
கே. பல ஊர்களுக்குப் பிரயாணம் செய்திருப்பீர்கள். தாங்கள் வியந்த அழகு நிலையங்களைப் பற்றி எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்?
ப. அழகு நிலையங்கள் பொறுத்தவரை, நம் ஊர்களிலேயே ரொம்ப சிறப்பா இருக்கு. நிலையத்தை அழகு படுத்துவதாகட்டும், பழாமரிப்பதாகட்டும், it has always been the best here. பரப்பளவைப் பொறுத்தவரை, ஹைதராபாத்தில் பார்தீர்களானால், இரண்டு மூன்று மாடிகளுக்கு, அவ்வளவு பெரிதாக ஒரு நிலையம் இருக்கும். அதே மும்பையில் பார்த்தால், இட வசதி குறைவு. ஒரு சின்ன இடத்தை எடுத்து, அதை அழகுப் படுத்தி, நடத்தி வருவார்கள். ஒரு சிலர், பழைய பாரம்பரிய வீட்டை எடுத்து, அதை அழகான ஒரு அழகு நிலையமாக மாற்றி இருப்பார்கள். திரும்ப டில்லியில் பார்த்தால், பிரம்மாண்டமான அழகு நிலையங்கள் உண்டு.
நம் ஊரில் இருப்பவையே எனக்குப் பிடிக்கும். போதுமான இடவசதியுடன், அழகாக பராமரிக்கப்பட்டிருக்கும்.
கே. உங்கள் துறையில் தாங்கள் வியந்த பெண்மணி யார்?
ப. Anita Roddick (அனிதா ரோடிக்) – The Body Shop நிறுவனர். அவருடைய வாழ்க்கையே, எனக்கொரு மிகப் பெரிய inspiration. அவர் எப்படி இயற்கை பொருட்களைக் கொண்டு சருமம் மற்றும் கேசத்திற்கானப் பொருட்களை தயார் செய்தார் என்பதை நாம் அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
உலகெங்கிலும் உள்ள பல பழங்குடியினரை சந்தித்து, அவர்கள் உபயோகிக்கும் இயற்கைப் பொருட்களை தெரிந்து கொண்டு, அதன் படி அனிதா ரோடுக் தன்னுடைய அழகு சாதனப் பொருட்களை தயார் செய்தார். அதுமட்டுமல்ல, franchise (வணிக விற்பனை உரிமை) கொடுக்க ஆரம்பித்தார். அதன் மூலமாக தான், என்னைப் போன்றவர்கள் franchise வணிகத்தை ஆரம்பித்தோம்.
இதைத் தவிர, பல பெண்கள் இத்துறையில் சாதித்துள்ளனர். எங்களுக்கு முன்னரே லக்மே (Lakme’) சலோன் பிரபலமாக இருந்தது. நாங்கள் ஐந்து நிலையங்களை வைத்திருக்கும் போதே, அவர்கள் ஐம்பது நிலையங்களை நடத்தி வந்தனர். ஆனால் இன்று வரை, அவர்கள் 300 சலோன்களே நடத்தி வருகிறார்கள். நாங்கள் 700ஐக் கடந்து விட்டோம். இவர்கள் அனைவருமே எனக்கு ஒரு உத்வேகம், inspiration தான்.
கே. பலருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து, பல பெண்களுக்கு தொழில் அமைக்க வழிவகுத்து, சமூகத்தில் தங்களுக்கான ஒரு நிலையைத் தக்கவைத்துள்ளிர்கள். இந்த பயணத்தில் தாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள்?
ப. நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது. இன்றுவரை ஏதோ ஒரு சவாலை சந்தித்து வருகிறோம். கற்றுக் கொண்ட பாடம் என்று சொன்னால், ஆரம்பநாட்களில், வணிக உரிமை பத்திரங்களை (agreements) நாங்கள் முறையான சட்ட ஆலோசனையின்றி அமைத்து விட்டோம். அதிக கிளைகளை உருவாக்கும் நோக்கத்தில், இதில் கவனம் செலுத்த வில்லை. So there were lot of loose ends in our agreements. நம்பிக்கையின் பெயரில் கொடுத்து விட்டோம் என்று கூட சொல்லலாம்.
ஒரு கட்டத்தில், அவர்கள் எங்கள் வியாபாரத்தை விட்டு வெளியேறும்போது, சில கருத்துவேறுபாடுகள் வந்தது. எங்களால் கேள்வி கேட்க முடியவில்லை. இதெல்லாம் எங்களுக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது.
அடுத்து, man power. இன்றைக்கும் எங்கள் franchiseeக்களிடம் நாங்கள் வலியுறுத்துவது, பணியாளர்களிடம் நல்ல உறவில் இருங்கள். அவர்களை கவனித்துக் கொள்ளுங்கள் என்பது தான்.
கே. பிடித்த புத்தகங்கள்?
ப. நிறைய motivational புத்தகங்கள் வாசிப்பேன். Jim Rohn, Jack Canfield, Brian Tracy, Dennis Weitley, இவர்களுடைய புத்தகங்களை வாசிப்பேன்.
கே. பொழுதுபோக்கு அம்சங்கள்?
ப. வீட்டை அலங்கரிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். புதிய அழகு நிலைய கிளைகள் வாயிலாக, நான் அதைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பேன். எந்த ஒரு புது franchise வந்தாலும், அங்கே நான் சென்று, அமைத்துக் கொடுப்பதில் கவனம் செலுத்துவேன். அதை தவிர ஷாப்பிங்.
தோழிகளுடன் பயணம் செல்ல பிடிக்கும். பழைய கட்டிடங்களை மிகவும் ரசிப்பேன். கோவில் சிற்பங்களை ரசிப்பேன். எந்த ஊரில் புதிய கிளை வந்தாலும், அந்த ஊரில் உள்ள பழமையான கோவில், கட்டிடங்களைப் பார்வையிடுவேன்.
கே. உங்களிடம் வேலை செய்யும் பெண்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவீர்கள்?
ப. தற்சமயம் 775 நிலையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை வணிக வியாபாரத்திற்காக பிறருக்குக் கொடுத்தவை தான். இதைத் தவிர, ‘நேட்சுரல்ஸ் சிக்நேசர்’ (Naturals Signature) மற்றும் ‘பேஜ் 3’ (Page 3) என்ற பிரீமியம் (உயர் தர) அழகு நிலையங்களும் உண்டு. அதில் ஆடம்பரமான வசதிகளுடன், சேவைகள் வழங்கப்படும். எங்கள் பணியாளர்கள் ஒரு சிலர், பல வருடங்களாக பணியாற்றி, திறமைசாலிகளாக மாறியிருப்பார்கள். இவர்களையெல்லாம் upgrade செய்வது போல, இந்த நிலையங்களில் வேலைக்கு அமர்த்துவோம். இவர்களுடைய அனுபவத்திற்கும், திறமைக்கும், கூடுதல் சம்பளம் வழங்கப்படும்.
எல்லாவற்றிக்கும் மேலாக, உடல் குறைபாடு உள்ள பெண்களை, வேலையில் அமர்த்த, அதிக கவனம் செலுத்துவேன். Reflexology (பாதங்களுக்கு மஸாஜ் செய்யும் முறை) என்ற சேவைக்கு, பார்வையற்றவர்களை நியமிக்கிறோம். இவர்களுக்காகவே, இந்த reflexologyஐ, அதிக அளவில் ஷாப்பிங் மால்களில் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். காரணம், அவர்கள் திறமையாக பணியாற்றுவதை அனைவரும் காணவேண்டும். இதைத் தவிர, பேச முடியாதவர்கள், காது கேளாதவர்கள், எல்லா பார்லர்களிலும் இருக்கிறார்கள்.
கே. புழுதி பெண் அதிகரத்தின் மூலமாக நீங்கள் சொல்ல விரும்புவது?
ப. Empowerment is Empowering yourself. சாதிக்க நினைத்தால் அதற்கான வழியைத் தேர்ந்தெடுத்து, வெளியே வரவேண்டும். உங்களுக்குள் ஆற்றலும் எண்ணமும் இருந்தால், யாராலும் தடுக்க முடியாது. சில பெண்கள், அந்த முதல் படியை எடுத்து வைக்கத் தயங்குகிறார்கள். சமயம் வரட்டும் என்கிறார்கள், நிலமை மாறட்டும் என்று காத்திருப்பார்கள், பிள்ளைகள் வளரட்டும் என்பார்கள். ‘செய்தே ஆக வேண்டும்’ என்ற சூழலுக்குத் தள்ளப்படும் வரை செயலாற்றாமல் இருப்பார்கள். It is all up to you. இந்த சமுதாயத்தையோ, குடும்பத்தையோ உடனிருப்பவரையோ, பழி சொல்வதில் அர்த்தம் இல்லை. இதெல்லாமே தப்பிப்பதற்கான வழியாகத் தான் நான் பார்ப்பேன்.
ஆர்வம் உங்களுக்குள் இருக்க வேண்டும். கடுமையான போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதை தாண்டி வந்து சாதித்தப் பெண்கள் பலர் உண்டு. ஒரு பெண் என்ன செய்வேண்டும், எப்படி முன்னேற வேண்டும் என்பதை, அவள் தான் தீர்மானிக்க வேண்டும்.
நன்றி.