என்னுடைய உரைகளில், தொடர்ந்து  நான் சொல்லும் கருத்து என்னவென்றால், சுய உரிமை பெற்ற ஒரு பெண், தானும் உயர்ந்து, தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் உயர்த்த உதவ வேண்டும், என்பதாகும். இதற்கான மிக சரியான உதாரணமாக இருப்பவர், திருமிகு டாக்டர் மது சரன் வேல் அவர்கள். நம் ஊரைச் சேர்ந்த சாதனைப் பெண்ணை, நாம் அடையாளம் கண்டுகொள்ளும் முன், ஐக்கிய நாட்டு தூதரகம் அடையளம் கண்டு கவுரவித்தது,  என்பது, ஒரு மகத்தான விஷயம். 

‘எல்லாம் சின்ன வயசுலேயே பார்த்தாச்சு’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார். தன் எதிர்காலத்திற்கான அஸ்திவாரத்தைப் பலப்படுத்தவே  உழைக்கிறார், என்பதை உணராத வயதிலேயே, கடுமையாக உழைத்திருக்கிறார். இதற்குக் காரணம், அவருடைய தாயார். அவர் பெற்ற சுய நிர்ணய உரிமையை, மகளின் முன்னேறத்திற்கு சரியாகப்  பயன்படுத்தி உள்ளார். 

புதிதாக பார்க்கும் ஒரு பெண் என்ற உணர்வே இல்லாமல், மிக சகஜமாக பழகக் கூடியவராக இருந்நார் மது சரன் அவர்கள். வசதியற்ற பெண்களுக்காகக் குரல் கொடுத்து, அவர்கள் தொழில் தொடங்க உழைத்துக் கொண்டிருப்பார். மறு நாள் பார்த்தால், ஒரு பிரபலத்தின் இல்லத் திருமணப் புகைப்படத்தில் காட்சி அளிப்பார். சிறியவர் பெரியவர், ஏழை பணக்காரர் என்ற பாகுபாடே இல்லாமல், அனைவருடனும் அன்போடுப் பேசிப் பழக கூடிய நபர் தான் மது சரன். 

‘அனைவரின் மனதிலும் நான் இருக்க வேண்டும்’ என்பது திருமதி மது சரனின் ஆசை. சொல்லுக்கு ஏற்றவாறே, செயலிலும் இருக்கிறார் என்பது தான் இவருடைய சிறப்பம்சம். 

அழகான, அமைதியான வீடு. சென்று அமர்ந்தவுடன் சூடான காபி.  பல விருதுகளும் பாராட்டும் பெற்றவர் என்ற சாயல் துளியும் இல்லாதவர்.கல கல வென பேசி சிரித்து, பல கருத்துக்களை பரிமாறிக் கொண்டார். விடை பெறும் போது, தன் புத்தகத்தையும், இனிப்பு பலகாரங்களை, அன்பு பரிசாக கொடுத்தனுப்பினார். 

பல நூறு பெண்களுக்கு உதவிய திருமதி மது சரனின் வாழ்க்கைப் பயணம், நம் புழுதி – ‘பெண்ணதிகாரம்’ இணைய வழி இதழில்.

கே. வணக்கம், உங்களைப் பற்றிய அறிமுகம்.? உங்களுடைய UN பயணம்.

ப.  வணக்கம். என் பெயர் மது சரன். ஒரு பெண்ணாய், என்னை எப்படி அறிமுகப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்றால், என் வேலையைத் தாண்டி, குரலற்ற பல பெண்களின் குரலாக இருக்க விரும்புகிறேன். அவர்களுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பை அமைத்துத் தர வேண்டும் என்பது என் ஆசை மற்றும் கனவு. பெண்கள், தாய்மார்கள் மற்றும் பாட்டிமார்களுக்கு, நான் இருக்கிறேன். 

நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். என் குடும்பத்தில் யாருமே தொழில் சார்ந்து இல்லை. அப்பா ஒரு C.A. ரயில்வே துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.  அம்மா இல்லத்தரசி. நான் தான் மூத்தவள். எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை. ரொம்ப பழமைவாத தன்மை கொண்ட, conservative குடும்பம். எனக்கென்று சில குடும்பப் பொறுப்புகள் இருந்தது. பள்ளி முடித்து, உடனே சம்பாதிக்ககூடிய, ஏதோ ஒரு துறையைத் தேர்ந்தெடுக்க  வேண்டிய சூழல். B.Com படிக்க வேண்டும் என்று ஆசை. மெட்ராஸ் பல்கலைகழகத்தில் அப்பா B.Com தபால் தொடர்பில் (correspondence) கொண்டு சேர்த்தார். 

ஆனால் அம்மா, சமயோசிதமாக என்னை 1995ல் கம்பியூட்டர் பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டார். கம்பியூட்டர் பயிற்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி விடலாம் என்பது அம்மாவின் எண்ணம். இதனால், APTECHல், Higher Diploma in Software Engineering படிப்பை முடித்தேன். கணினி செயல்பாட்டின் ஆரம்ப நிலையை அங்கே கற்றுக் கொண்டேன். அங்கே தான் எனக்கான திருப்பு முனை காத்திருந்தது. 

பயிற்சி முடித்ததும், Air France என்ற பெரிய கார்பரேட் நிறுவனத்தில் வேலைக்குத் தேர்வானேன். பட்டப் படிப்பை இன்னும் முடிக்காததால், நிரந்தர வேலை கிடைக்கவல்லை. குறைந்த சம்பளத்தில் (trainer) பயிற்சியாளர் வேலை கிடைத்தது. 18 வயசு, ஆங்கிலம் சரியாகப் பேச வராது. ஆனால் கிடைத்த வேலை.. Air France கம்பெனியின் ஜீ.எம் மிற்கு, M S office  பயிற்சி அளிக்க வேண்டும். என் வேலையும் திறமையும் அவருக்குப் பிடித்திருக்கவே, என்னை ஊக்கப்படுத்தினார். 

இதனுடன் டைப்பிங் வகுப்பிலும் சேர்ந்தேன். என்னுடைய அன்றைய ஒரு நாள் எப்படி இருந்ததென்றால், காலை 6மணி முதல் 7மணி வரை டைப்பிங் வகுப்பு. 7 1/2  முதல் 9மணி வரை கம்பியூட்டர் வகுப்பு. பின் Air France நிறுவனத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும். மாலை வீடு திரும்பிய பின், B.Com படிப்பைத் தொடர வேண்டும். சனிக்கிழமைகளில், பல்கலைக்கழத்தில் நடத்தப்படும் வகுப்பிற்குச் செல்ல வேண்டும். உண்மையிலேயே, அந்த நாட்களில் முழு ஈடுபாட்டுடன் இருந்தேன். 

நண்பர்கள் என்று யாரும் இல்லை. பள்ளித் தோழிகள் அனைவரும் எத்திராஜ், ஸ்டெல்லா என்று போய்விட்டனர். என்னை எங்கேனும் கூப்பிட்டாலும் போக முடியாது. சின்ன வயசுலயே எல்லாம் பட்டாச்சு. எதையோ இழந்ததைப் போல உணருவேன். இப்போது அந்த எண்ணம் இல்லை. No regrets.

கே.  ஐ.டி பணி, உங்களுடைய முதல் தொழில்நிறுவனம் எப்படி சாத்தியமானது?

ப.  கண்டிப்பாக தொழில் தொடங்கும் எண்ணமே எனக்கு இல்லை. முன் சொன்னது போல, என் குடும்பத்தில் யாரும் தொழில் செய்தவர்கள் கிடையாது. திருமணம் நடக்கும் போது நல்ல வேலையில் இருந்தேன். சில மாதங்களில் கர்ப்பமானேன். அலுவலகம் சென்று வேலை செய்ய வேண்டிய சூழல். வீட்டில் வேலைக்குச் செல்ல தடை.  அலுவகத்தில், “மூன்று மாத சம்பளம் மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள். குழந்தை பிறந்து வேலையில் சேர்ந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றனர். அங்கு செயல்படும் projectகாக நான் நிறைய வேலை செய்திருக்கிறேன் அதெல்லாம் வீணாகுதே என்ற கவலை எனக்கு. 

இனி அந்த வேலை வேண்டாம், அவர்கள் கொடுக்கும் மூன்று மாத சம்பளமும் வேண்டாம் என்று ராஜினாமா செய்துவிட்டேன். ஆனால், ‘இனி என் நிலை என்ன? எனக்கானப் பின்னணி என்ன? எனக்கானப் பாதை என்ன?’ என்ற சிந்தனை தொடர்ந்தது. பிற கம்பெனியில் வேலை செய்வதை விட, நாமே ஒரு பயிற்சி நிறுவனத்தை ஆரம்பிக்கலாமே என்று எண்ணினேன். அந்நாளில், மென்பொருள் பரிசோதனை செய்பவர்கள் மிகக்குறைவு. என் நண்பருக்கு அந்த வேலை தெரிந்திருந்தது. 2002ல், குழந்தை பிறந்த பின், ஐந்தே கம்பியூட்டர்களை கொண்டு, நண்பருடன் சேர்ந்து, STC என்ற நிறுவனத்தை தொடங்கினேன்.  மூன்றே வருடங்களில், 60 கிளைகளாக வளர்ந்தது. டெல்லி, மும்பை, கேரளா என்று எல்லா இடங்களிலும், STC நிருவனம் தொடங்கப்பட்டது. 

தொழிலதிபர் என்ற பெயர் அங்கேதான் உருவானது.  தொழில் பற்றியெந்த ஒரு முன் அனுபவமும் இல்லாததால், சில பிரச்சனைகளைச் சந்தித்தோம். ஆனால் எப்படியோ சமாளித்தோம். 

கே.  பொதுவாக ஒரு தொழில் நிறுவனத்தை வைத்திருப்பவர்கள் வெளிப்படையாக புதியதாக தொழிலுக்கு வருபவர்களை ஆதரிக்கவும் ஊக்கப்படுத்தவும் தயங்குவார்கள். ஆனால் நீங்கள் அறைகூவல் இட்டு பல பெண்களுக்கு தொழில்முனைப்பும் எண்ணத்தை வழங்கி வருகின்றீர். இப்படியான செயலுக்கான ஊக்கம் எங்கிருந்து கிடைத்தது?

ப.  நான் மறுபடியும் என் தொழிலைப் பற்றி தான் இங்கே பேச வேண்டும். எங்கள் நிறுவனம் சிறப்பாக இயங்கி கொண்டிருந்த சமயத்தில், வங்கியில்  அதிகப்படியான FD, Mutual funds என்று நிறையப் போட்டு வைத்திருந்தோம். 2005ல் recession ஆரம்பமாச்சு. எங்களுடைய 60 கிளைகளை பெருமளவுக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம்.  அழகு சார்ந்த நிறுவனம் ஒன்றைப் புதிதாக தொடங்கலாம் என்ற நோக்கத்தில், கடன் கேட்டு வங்கியை அணுகிய போது தான், வெளி உலகின் நிதர்சனம் புரிய வந்தது. 

எவ்வளவு தான் பணம் போட்டு எடுத்திருந்தாலும், கடன் என்று போனால் collateral, அடமானம் போன்றவற்றில் தான் அவர்கள் கவனமாக இருப்பார்கள். என்னுடைய turn over அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. அப்போது Mudra போன்ற, பெண்களுக்குக் கடன் உதவி தரும் திட்டங்களும் இல்லை. Non collateral ஆக 10 லட்சம் கூடப் பெற முடியாது. பின் எப்படியோ கடன் வாங்கி, அழகு நிருவனம் ஒன்றை ஆரம்பித்தேன். அன்று நான் தொடங்கியது தான் இன்று ABC clinic,  Advanced Beauty and Cosmetic clinic, என்று பல கிளைகளுடன் வளர்ந்து நிற்கிறது. 

இந்த கடன் பெற்று தொழில் தொடங்கிய இந்த போராட்டத்தை என் வாழ்நாளில் நான் மறக்க மாட்டேன். வங்கியில் அவர்கள் கேட்ட கேள்விகள் கொடுமையாக இருந்தது. “குழந்தை பெற்றுக் கொண்டாய், நாளை குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று நீ தொழிலை விட்டால், என்ன செய்ய?”

“இன்று உன் கணவருடன் இருக்கும் நீ, நாளை தனி ஆளாய் நின்று போனால் எப்படி?”  “உன் கணவர் உன்னுடன் இல்லாமல் போனால் எப்படி சமாளிப்பாய்?” அடுத்த நொடியே இடத்தை விட்டு ஓடிவிட வேண்டும் போல இருந்தது. 

ஆக, ஒரு பெண்ணிற்கு, தன்னுடைய ஆசையைத் தொடரவும், கனவை நினைவாக்கவும், பல தடைகளை தாண்ட வேண்டி இருக்கு. அத்தனை சுலபம் அல்ல, என்பதை முழுமையாக உணர்ந்தேன். நான் சந்தித்த இந்த நிலையை வேறொரு பெண் சந்திக்கக் கூடாது. இதில் மற்ற பெண்களுக்கு நாம் ஏன் உதவக் கூடாது என்று சிந்தித்தேன். நானே அனைவருக்கும் பணம் கொடுக்க முடியாது. ஆனால், அதற்கான வழியை, நான் காண்பிப்பேன். 

என்னால் முடிந்த அளவிற்கு, ஒரு சின்ன கடையோ வண்டியோ, நான்  வைத்து தருவேன் வியாபாரத்தை அவர்கள் நடத்த வேண்டும். இப்படி உருவானது தான் ‘மாமீஸ் காபி ஹவுஸ்’. இப்படியாக, நாடு முழுவதிலும் சுமார் 5,000 பெண்களுக்கு நான் உதவியிருக்கேன். 

இந்த சமயத்தில் என் தோழி ஒருவர், என் பெயரை ஐக்கிய நாடு (U N) தூதரகத்திற்குப் பரிந்துரை செய்தார். என் வேலைகளை முழுமையாக ஆராய்ந்த பின், 2016ல், ஐக்கிய நாட்டு சார்பில், ‘இந்திய தொழிலதிபர்களின் தூதர்’ (Ambassador for Women Entrepreneurship) என்ற கௌரவம் வழங்கப்பட்டது. இதன் மூலம், இன்னும் பல துறை சார்ந்த மனிதர்களைச் சந்திக்கவும், இன்னும் பல பெண்களுக்கு உதவவும், வழிவகுத்தது.

கே.   பெண் சுய நிர்ணய உரிமை பெறுவதென்றால் என்ன? உங்களுடைய பார்வை? 

ப.   உண்மையிலேயே, இதற்கு இலக்கணம் என்று எதுவும் இல்லை. Empowerment என்பது,  அந்த சமயத்தில் வருவது. அந்த சமயத்தில் நீங்கள் உணர்ந்து செயல்படுவது. என்னை பொறுத்தவரை, சுய நிர்ணய உரிமை என்றால்,  தைரியத்துடன் இருப்பது. தன்னம்பிக்கையுடன் செயல்படுவது. சுய மரியாதையுடன் வாழ்வது. இதெல்லாமே empowerment தான். 

சுய மரியாதை ரொம்ப முக்கியம். அது வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். வீட்டில் ஒரு பெண், தன்  சுயமரியாதையை இழந்தால், அதை எப்படி எதிர்கொள்வாள்? அதிலிருந்து துவங்க வேண்டும். வெளியே சுதந்திரம், empowerment என்று பேசிவிட்டு, வீட்டில் மரியாதை இல்லை என்றால் எப்படி?  What is the point?  சுய நிர்ணய உரிமை பெற்று வாழ்வதென்பது, பொருளாதாரம் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல. ஒரு பெண்ணாக, எப்படி ஒவ்வொரு விஷயத்தையும் தைரியமாக அணுகி, முடிவெடுக்கறாங்க, என்பது தான் empowerment. 

கே.    யாரைப் பார்த்து உத்வேகம் அடைவீர்கள்? Your inspiration?

ப.    தனித்து நின்று போராடும் அனைத்துப் பெண்களும் எனக்கான inspiration தான்.  சுய மரியாதையின் காரணாக, தன் துணையிடம் எந்த எதிர்பார்பும்  இன்றி, என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம், என்று தைரியமாக வெளியேறும் பெண்கள் எல்லோருமே, எனக்கான உந்து சக்தி தான். 

கே.  பொதுவாக திறமைகள் இருந்தும் ஒரு தொழில் தொடந்த நிதியுதவி என்பது ஒரு போராட்டமாகத் தானே இருக்கு ?

ப.  நம்முடைய மத்திய, மாநில அரசு, பல உதவிகளைச் செய்து வருகிறது. உங்களுடைய தொழில் திட்டம் சிறப்பாக இருந்தால், லாபகரமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால், மத்திய மாநில அரசின் திட்டங்களே போதுமானது. Ministry of MSMEல உங்க projectஐ  கொண்டு போய் கொடுக்கணும். அந்த அமைச்சகம், வங்கிகளுக்கு நிதி உதவி வழங்க பரிந்துரைப்பார்கள். ஒரு கோடி ரூபாய்க்கான வேலையாக இருந்தாலும் கூட, நல்ல திட்டமாக இருந்தால், அரசாங்கம் நிதி உதவி வழங்க தயாரா இருக்கு. 

கே.   அரசாங்கம் பல சலுகைகளை அறிவிக்கிறாங்க. சில பெண்கள், எங்களால் அதை பெற முடியவில்லை என்ற வருத்தத்தைத்  தெரிவிக்கிறார்கள். திட்டங்கள் முறையா போய் சேருதா? மக்களிடம் விழிப்புணர்வு இருக்கா? 

ப.   திட்டங்கள் போய் சேரவும், பின்னடைவுகள் வராமல் இருக்கவும், எங்களைப் போன்ற NGO’s (சுய ஆர்வத் தொண்டு நிறுவனங்கள்) நிறைய வரணும். ஒவ்வொரு வார்டிலும் கால் சென்டர்கள், information desk, இருக்க வேண்டும். தொழில் தொடங்க, பெண்களுக்கு உதவும் படியான உதவி மையங்களை அமைக்க வேண்டும். இது பெண்களுக்கு மட்டும் இல்லை, மாணவர்களுக்கும் ஆண்களுக்கும் கூட, தொழில் தொடங்க உதவும்.  

கல்லூரியில் கூட, மாணவர்கள் ஒருசிலர் சேர்ந்து, கொஞ்சம் பணம் போட்டு (cloud funding), ஒரு சின்ன வியாபாரம் தொடங்கலாம். கல்லூரி வளாகத்திலேயே ஒரு ஆவின் பார்லர் வைக்கலாம், ஐஸ் கிரீம் பார்லர் நடத்தலாம். வியாபாரம் என்றால் என்ன, என்பதை படிக்கும் காலத்திலேயே தெரிந்து கொள்ளலாம். 

கே.  உங்களை மனதளவில் புத்துணர்வோடு வைத்துக் கொள்ள நீங்கள் மேற்கொள்வது?

ப.   நான் எப்பவும் positiveஆன (நேர்மறையான) சூழலை உருவாக்க நினைப்பேன். நண்பர்களோடு நேரம் செலவிடப் பிடிக்கும். என் தோழிகளுடன் இருக்கும்போது கூட, ஒரு positive vibe இருக்கும்படி பார்த்துக் கொள்வேன். அடுத்த நாள், புத்துணர்வோடு இயங்க ஆரம்பிப்பேன். 

கே.  ஒரு பெண், தன்னை நிலை நாட்டிக் கொள்ள, தன்னை உறுதிப் படுத்திக் கொள்ள, எதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்? 

ப.    தன்னை நிலைநாட்டவும், உறுதி படுத்திக் கொள்ளவும், பெண் முதலில் கேள்வி கேட்டுப் பழக வேண்டும். அதன் பிறகு, ‘ No’ (இல்லை, முடியாது) என்று சொல்லத் தெரியவேண்டும்.  முகத்திற்கு நேராக சொல்லும் பெண் தான், ரொம்ப strong. மழுப்பிப் பேச வேண்டிய அவசியம் இல்லை. 

கே.   உண்மை தான். பிறர் என்ன நிணைப்பார்களோ, என்ற எண்ணம் பல பெண்களுக்கு உண்டு. இல்லையா?

ப.    அவசியம் இல்லை. மற்றவர்கள் பாதிக்கக் கூடாது என்று நாம் சிந்தித்தால், we become weak.  ஆனால், மனதளவில் வேண்டாம் என்று எண்ணிவிட்டால், சொல்லிவிடுங்கள். சில இடங்களில், வியாபார ரீதியாக பேசும் போது,  diplomaticஆ, கடினமாகப் பேசாமல், நம் எண்ணத்தை தெரியபடுத்தணும். காரணம், அது நம் வேலை சார்ந்தது. அந்த சமயத்தில், we need to act in a diplomatic way. ஜாக்கிரதையாக நடந்து பொள்ளுங்கள். 

முக்கியமாக, உங்கள் குழந்தைகளுக்கு, ஒரு முன் உதாரணமாக இருங்கள். உங்களைச் சுற்றி உள்ள நண்பர்கள், உறவினர்களுக்கு மத்தியில் ஒரு முன் மாதிரியாக இருங்கள். 10 பேரில், 3 பேராவது, மாதம் தோறும் என்னை அழைத்து, அவர்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். தோழிகளின் பிள்ளைகளுக்கு பிரச்சனை என்றாலும் கூட, ‘மது ஆண்டிகிட்ட பேசு’ என்பார்கள். அப்படிபட்ட நிலைக்கு, உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். 

கே.    Globally, உலகளவில், பெண் முன்னேற்றம் எப்படி இருக்கு?

ப.    Not to the standard Padma.  நம்ம நாட்டை விடுங்க. உலகளவில், 50% கார்பரேட் உலகத்தைப் பெண்கள் ஆள்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?  அது எந்த தொழில் சார்ந்த நிறுவனமாக இருந்தாலும் சரி, ஆண்கள் தான் ஆள்கிறார்கள். தொழில், சினிமா, அரசியல், எல்லாவற்றிலும் ஆணாதிக்கம் தான். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கு. இன்றும் ஒரு ஆண் நடிகர் வாங்கும் சம்பளத்தை, ஒரு பெண் நடிகையால் வாங்க முடியவில்லை. பாலிவுட்டிலும் சரி. Jennifer Lopezன் நிலையும் அதுதான். ஆக, நாம எங்கே இருக்கோம்? 

தவறு நம்மகிட்டயும் இருக்கு.  21, 22ல் கல்யாணம் கட்டியேத் தீரணும் என்கிற நிலை எப்போ மாறுதோ, அப்போ தான் மாற்றம் வரும்.  பெண் தனித்து செயல்பட, ஒரு ஆணின் துணை தேவையில்லைங்கற நிலை வரனும். உலகளவில் இந்த மாற்றம் வர வேண்டும். நம் காலத்திலேயே இந்த மாற்றம் வந்தால், நல்லா இருக்கும். 

திருமணம் என்பது, நம்மைக் கட்டிப்போடும் ஒரு அமைப்பாக மாறிப்போகிறது. இருவரும் சக மனிதர்கள். அவ்வளவு தான். கழிவறை மட்டும் தான் வேறாக இருக்க வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு இல்லை, மனிதனுக்கும் ரோபோ வுக்கும் மட்டுமே தான்  வேறுபாடு இருக்க வேண்டும்.

கே.   உங்கள் பணியில் நீங்கள் சந்தித்த இன்னல்கள் (difficulties). பெண் என்பதால், ஏதாவது இடையூறுகள் இருந்ததா?

ப.   நிறையங்க. Too much and too many (என்று சிரித்தவாறே, தன் பதிலைத் தொடர்ந்தார்). வங்கிப் பணியாளரிடமிருந்து வந்த கேள்விகளைப் பற்றி சொன்னேன். இவ்வளவு turn over காண்பித்த ஒரு பெண், லாபத்தைச் சம்பாதித்த ஒரு பெண், அப்பவே, நீங்க சொல்ற empoweredஆ இருந்த ஒரு பெண்ணையே அத்தனை கேள்விகள் கேட்டாங்க. சாதாரண நிலையில் இருந்து, வளரவேண்டும் என்ற  ஆசை, கனவுகளோடு வெளியே வரும் பெண்ணை, இன்னும் எத்தனைக் கேட்பார்கள்? 

எங்கள் RIVER NGOவின் நோக்கமே, இந்த ஆரம்ப நிலை பெண்களுக்கு உதவ வேண்டும் என்பது தான். 

கே.   வெற்றியையும் தோல்வியையும் எப்படி பார்க்கிறீங்க? அவற்றை எப்படிக் கையாள்வீர்கள்?

ப.   வெற்றியாளரா இருக்கணும்னா, நீங்க தோல்வி அடைந்தே ஆக வேண்டும். அது தான் அடிப்படை. முதலில் தோல்வியை சந்தித்து, அதிலிருந்நு பாடம் கற்று, முன்னேற வேண்டும். அந்த முன்னேற்றம், நிலைத்திருக்கும். தோல்வி வேறு, வெற்றி வேறு என்றில்லை. தவறு செய்யும்போது தான் கற்றுக் கொள்வோம். குறிப்பாக வியாபரத்தில். ‘தோல்விகளிலிருந்து கற்றுக் கொண்டேன்’னு டாடா வே சொல்லியிருக்காரு. 

ஆனா, இதில் சொல்ல வரும் இன்னொரு தருத்து, risk எடுக்க நினைச்சீங்கன்னா, சின்ன வயசுலயே அதற்கு முயற்சி பண்ணுங்க.  எந்த துறையானாலும் சரி. ரொம்ப யோசிக்க வேண்டாம். We can revamp soon. நமக்கு மன வலிமை இருக்கும். 

கே.   பெண் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் சில விஷயங்கள்? தனிப்பட்ட முறையிலும் சரி, சமுதாயத்திலும் சரி?

ப.   ஒரு பெண்ணிற்குத் தடை, அவர் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறாள் என்பதை பொறுத்து தான் இருக்கு. கணவருக்கு முன்னுரிமை, குடும்பத்திற்கு முன்னுரிமை, என்று சிக்கிக் கொள்கிறாள்.  என்னதான் CEOவாக இருந்தாலும், என்ன தான் வெளியே ஒரு பெரிய மனுஷியாக உலா வந்தாலும், வீட்டிற்குள் வந்த பிறகு, ஒரு மனைவியாக அடிபணிந்து போகிறாள். 

சமூதாய ரீதியில்னு பார்த்தால், எக்கச் சக்கமா இருக்கு. முதல்ல குடும்பங்கள் பெண்களை தைரியமாக விடுவதில்லை. 28 வயசாச்சு, இன்னும் கல்யாணம் ஆகலையேங்கற கவலை தான் பெற்றோர்களுக்கு இருக்கும். ‘அவள் தேவைக்கு அவ சம்பாதிக்கிறா. அவளைப் பாதுகாத்துக் கொள்ள அவளுக்குத் தெரியும். இருக்கட்டுமே. அவளுக்கு எப்போ ஒரு companion வேண்டும், துணை வேண்டும்னு நினைக்கிறாளோ, அப்போ பண்ணிக்கட்டுமே…” என்று ஏன் பெற்றோர்கள் சிந்திப்பதில்லை? 

கே.   அனைத்து பெண்களும் empoweredஆக இருக்கும் ஒரு சமுதாயத்தை நீங்க எப்படி பார்க்கறீங்க? எப்படி பட்ட மாற்றங்களை நீங்க எதிர்பார்க்குறீங்க?

ப.    இந்த கேள்வியே தப்பு. எல்லா பெண்களும் சுய நிர்ணய உரிமை கொண்ட பெண்கள் தான். நீங்க ஒரு அம்மாவா இருக்கீங்க. உங்க பெண்ணை ஒருவன் தாக்க வந்தால், நீங்க சும்மா இருப்பீங்களா? அம்மாவா என்ன செய்வீங்க?

நான்.   கண்டிப்பாப் போய், அவனைத் தாக்குவேன். எதையாவது எடுத்து, அவன் மீது எரிய பார்ப்பேன். பெண்ணைக் காப்பாற்றுவேன். 

ப.     இது தான் empowerment. ஒரு குக்கிராமத்தில், சின்ன பெண் ஒருத்தி, மாட்டை ஓட்டிக்கொண்டு போகும்போது, மாடு ஓட ஆரம்பித்தால் என்ன செய்வாள்? ஓடி போய் பிடிப்பாள். இல்லையா? பொருளாதாரம் மட்டுமே பெண்ணதிகாரம் இல்லை. நாம அதை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். அடிப்படை தற்காப்பு ரீதியான செயல்பாடு முதற்கொண்டு, எல்லாமே empowerment தான். அந்த சூழலை, நீங்க எப்படி சமாளிக்கறீங்க, என்பது தான் கேள்வி. 

At the same time, we must be polite. பெண்ணுக்கான தன்மையை நாம carry பண்ணனும். Woman represents a beautiful character. நமக்கும், பார்ப்பவர் கண்களுக்கும், நாம நல்லா உடுத்தி, நேர்த்தியானத் தோற்றத்தோடு இருக்க வேண்டும். வெட்கம் நமக்கே உரியது. யாராவது நம்மை சீராட்டினால், துள்ளிக் குதிப்போம். அதெல்லாம் உண்டு. ஆனா, நமக்கு ஒரு கெடுதல், இக்கட்டான நிலை வரும்போது, நாம எப்படி எதிர்கொள்கிறோம் என்பது, முக்கியம். 

ஆண்களை கடவுள் பிரசவத்திற்கா படைத்திருக்கார்?  பெண்களால் மட்டுமே  அதைத் தாங்கிக் கொள்ள முடியும். அந்த பக்குவம் பெண்களுக்கு மட்டுமே உண்டு. இன்னும் எதற்கு ஒப்பிட்டுப் பேச வேண்டும்? அப்படி பெண்ணிற்கு இல்லாத குணாதிசயம், ஆணிடம் என்ன இருக்கு? (கொஞ்சம் சீரிய முகத்துடன்) உடல் வலிமை னு சொல்லுவாங்க. சொல்லப்போனால், ஒரு உயிரைத் தாங்கி, பிறப்பிக்கும் உடல் வலிமை, பெண்ணிடம் தான் உண்டு. We are more stronger. ஆண்கள் ஒரு விதத்தில் மேன்மைப் படுவதென்றால், பணத்திலும், வருமானத்திலும் மட்டும் தான். இவள் என் வீட்டில் இருக்கிறாள் என்ற உணர்வில் தான். அதைத் தான் நான் திருமணம் ஒரு தடை என்று சொன்னேன். 

சம்பாதிக்கும் ஒரு பெண், சேமிக்க ஆரம்பித்தால், ஐம்பது வயதிற்குப் பின், இருக்கும் சேமிப்பைக் கொண்டு, சந்தோஷமாக  வாழ்க்கையை வாழலாம். திருமணத்திற்கான தேவை என்ன?  பின் குழந்தைகள் வேறு. ஏற்கனவே பிள்ளைகளின் நிலைமை வேறு மாதிரி போய்க் கொண்டிருக்கு. 10, 12 வயதிலேயே  தேவையற்ற பல தகவல்களைப் பார்த்தும் கேட்டும் கெட்டுப் போறாங்க. 

கே.   புத்தக வாசிப்புப் பழக்கம் உண்டா? பிடித்த எழுத்தாளர் ?

ப.    இல்லைங்க. ஆனா ஒரு புத்தகம் எழுதிவெளியிட்டிருக்கேன். ‘தயக்கத்தை விடுவோம், தடம் பதிப்போம்’.

கே.   உங்களுடைய  பொழுது போக்கு அம்சங்கள்?

ப.   தனியே இருக்கப் பிடிக்கும். கைபேசியை அணைத்துவிட்டு, காரை ஓட்டிக்கொண்டு, பாட்டு கேட்டபடியே, தெருக் கடைகளில் உணவு வாங்கி சாப்பிட்டு, நேரத்தை செலவிட பிடிக்கும். 

கே.  உங்கள் சாதனைகள். நீங்கள் பெருமிதம் அடைந்த தருணம்?

ப.   பெருமிதம் அடைந்தது, அடைவது, எல்லாமே, மக்கள் என்னை மது சரனாக அடையாளம் கண்டுகொள்வது.  நான் எப்போதும் சரியான முடிவை தான் எடுப்பேன், என்ற நம்பிக்கை, என்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு உண்டு. நான் செய்வேன் என்று சொன்னால், செய்து விடுவேன். வருகிறேன் என்று வாக்களித்தால், நிச்சயம் அங்கே இருப்பேன். 

அதே சமயத்தில், இல்லை, முடியாது என்றால், இல்லை, முடியாது தான். I don’t give fake faces. அனைவரின் மனதிலும் இருக்க வேண்டும், என்று ஆசை படும் நபர் நான். ஆனால், சிலரிடம் முடியாது, என்று சொன்னதால், காயம் அடைந்தவர்களும் இருக்கலாம். என் நிலையை நான் தெளிவாக உணர்த்தி உள்ளேன்.

பெருமிதம் அடைந்த தருணம் என்றால்…. இன்னும் இல்லை. இந்த நாடு, என்னை, என் செயல்பாட்டை அங்கீகரிக்க வேண்டும். அதற்கு இன்னும் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். இப்பவே பெருமிதம் அடைந்தால், அந்த நிலையை என்னவென்று சொல்வது? (சிரிக்கிறார்). 

கே.   இப்போ திரும்பிப் பார்க்கும் போது, உங்க பயணம் எப்படி இருக்கு? 

உங்களின் அடுத்த கட்ட நகர்வு?

ப.  (மெல்லிய பெருமூச்சுடன்) It has been a very long journey. It is full of good and bad experiences.

கே.  அதையெல்லாம் குறிப்பா எழுதி வெச்சிருக்கீங்களா? 

ப.  அதை தான் ஒரு புத்தகமா போட்டிருக்கேனே. அந்த புத்தகத்தைக் கொடுத்தாலே, “என்ன மேம் இப்படி எழுதி இருக்கீங்க”? னு பயப்படறாங்க (என்று பலமாக சிரித்தார்). 

கே.  உங்கள் துறை சார்பாக, உங்களைச் சுற்றி உள்ள தோழிகளுக்கு, ‘பெண்ணதிகாரம்’ சிறப்பிதழ் வாயிலாக, நீங்கள் சொல்ல விரும்புவது?

ப.  Be yourself. உங்களை நீங்களே, தரக் குறைவாக, ஒரு பொழுதும் நினைக்க வேண்டாம். தப்பு நடந்தாலும், வருந்த வேண்டாம். அதற்கான தீர்வு நிச்சயம் இருக்கும். அதை கண்டுபிடித்து முன்னேறுங்க. 

முக்கியமாக, do not share your bad feelings or depressed state to anyone. உங்க கணவரிடம் கூட வேண்டாம். See how you can patch up on your own. நீங்களாகவே அதை சரிசெய்ய முயற்சியுங்கள். 

கே.  ஏன் அப்படி? நாம பலவீனம் ஆகிவிடுவோம் என்றா?

ப.  ஆமாம். Of course. இன்னொருத்தருடைய உதவியை நாடும் நிலையில் இருப்போம். பின் தைரியமாக மீண்டும் வேலை செய்ய முயற்சிக்கும் போது, நம்மை விட மாட்டார்கள். ‘அது தான் சரியில்லையே, திரும்ப எதுக்கு போறே? எதுக்கு இந்த வேலை உனக்கு?” என்ற கேள்விகள் வரும். அதை ஏன் நாம் சொல்ல வேண்டும்? நாமாக முயன்று, வென்று வரவேண்டும். குடும்பம், நண்பர்கள், என்று சொல்ல ஆரம்பித்தால், நம் பலவீனம் வெளிப்பட்டு விடும். 

நான் இவ்வளவு உற்சாகமா உங்க முன்னாடி பேசிகிட்டிருக்கேன். எனக்கு கவலைகளே இல்லைனு அர்த்தம் கிடையாது. எனக்குப் பின்னாலும் எவ்வளவோ இருக்கு. அதை நான் காட்டிக்கொடுக்க விரும்ப வில்லை. I know how to handle it . And I will handle it.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *