“நான் தீக்குச்சி தான். ஆனால்,பத்திரமாகப் பெட்டிக்குள் இருப்பேன் என்றால் எப்படி…”

“இன்று பெண்களிடம் அடுக்களைப் பற்றிய வருத்தங்கள் நிறைய இருக்கு…”

“அடுத்த பிறவியிலும் இவரே உங்கள் கணவராக வர விருப்பமா.. என்றால்…”

“கிரண் பேடி அவர்களை, ஒரு ஆண் முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தானாம். ‘பிறகு, நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று அவரைக் கேட்டதற்கு…”

இப்படியாக, பல சுவாரசியக் கருத்துக்களை, “புழுதி” மின் பத்திரிக்கையின் ‘பெண்ணியம்’  சிறப்பிதழுக்காகப் பகிர்ந்து கொண்டார், திருமிகு ஜெயந்தஶ்ரீ பாலகிருஷ்ணன்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 35 வருடங்களாக, பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற பின்னும், இன்றளவும் பல லட்சம் மாணவர்களையும் பெண்களையும் தொடர்ந்து தன் மேடைப் பேச்சால் ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பவர் திருமிகு ஜெயந்தஶ்ரீ அவர்கள்.

‘Manchester of South India’ என்று அழைக்கப்படும் கோவை மாநகரத்தில் வசித்துவருகிறார். மதியம் மூன்று மணிக்கு நேர்காணலுக்காக வரச் சொல்லி இருந்தார்.  மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட, அமைதியான பெரிய வீடு. அவருடைய அலுவலகம் (கம்) நூலகத்திற்கு அழைத்துச் சென்றார். கால் பதித்ததும் அசந்து போனேன். இரண்டு அறைகள் முழுவதும், புத்தகங்களாலும் கேடயங்களாலும், நிறைந்திருந்தது. “அம்மா, இதெல்லாம்….” என்ற என் ஆச்சரிய பாவனையைப் பார்த்து, “அமைதி, அமைதி..” என்றபடி, என்னை அமரச்செய்தார்.

சூடான வெந்தய தோசை, சாம்பாருடன் கேரளத்தில் பிரசித்தமான துவரை, சொதி(stew) மற்றும் அருமையான தேநீரையும் தன் கைகளாலேயே சமைத்துப் பரிமாறினார். வயிறு நிறைந்த பின்னர்… தன் மனம் திறந்து, என் மனம் நிறைய, நேர்காணலை ஆரம்பித்தார்.

கே. வணக்கம் அம்மா. உங்களைப் பற்றிய அறிமுகம் ?

. வணக்கம். நான் ஜெயந்தஶ்ரீ. என் கணவர் திரு பாலகிருஷ்ணன். I am his better half and he is my best half. அடுத்த பிறவியிலும் இவரே உங்கள் கணவராக வர விருப்பமா…என்று கேட்டால், ‘இதே குடும்பத்தில் இவர் பிறப்பாரா? பிறக்க வேண்டும்’  என்று சொல்வேன்.

நான் ஒரு ஆசிரியை. இன்னும் நிகழ் காலம் (present tense) தான் உபயோகப்படுத்துகிறேன். ரிட்டையர் ஆகி, 6, 7 வருடங்கள் ஆனபின்னும், டீச்சர் என்ற சொல்லைக் கழட்டிப் போட, அது ஒன்றும் உடையல்ல, என் தோல். கோவை பூ.சா.கோ. கல்லூரியின் ஆங்கிலப் பிரிவின் தலைமைப் பேராசிரியராக தொடர்ந்து 35 வருடங்கள் பணியாற்றினேன். நல்ல குழந்தைகள். ஒரு ஆசிரியர் தான் குழந்தைகளைச் செதுக்குவார்கள் என்று சொல்வதுண்டு. குழந்தைகளும், ஆசிரியர்களைச் செதுக்குவார்கள். முதலில் உள்ளே நுழையும் போது, the teacher will be raw. 35 வருடங்களில், ஆசிரியருக்கு ஒவ்வாதவற்றையெல்லாம், அக்குழந்தைகள் செதுக்கிச் செதுக்கி வெளியே எடுக்கும்.

எனக்கொரு மகன். சென்னையில் வசிக்கிறார். மருமகள், எதையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய அருமையான தோழி, ஒரு பேரன். கேட்க  எதுவும்  இல்லை. கோவிலுக்குச் சென்றால், நன்றி சொல்லவே நேரம் சரியாக இருக்கும்.

கே. பெண் என்று வந்துவிட்டால், நாடு, மொழி, சாதி, எல்லாம் கடந்து தனித்து விடப்பட்டவளாக இருக்கிறாள். பெண்ணைப் பற்றிய உங்கள் புரிதல் ?

. முதல் வரி எனக்கு ஏற்றுக் கொள்வதாக இல்லை. பெண் தனித்துவிடப் படலாம் அல்லது, அவள் தனிமையை விரும்பும் பெண்ணாகவும் இருக்கலாம். ஒரு குடத்திற்குள் தண்ணீர் ஊற்றினால், குடத்தின் வடிவத்தில் தான் தண்ணீர் இருக்கும். சில வருடங்கள் கழித்து, அத்தண்ணீரைக் கொட்டினால், தண்ணீர் குடத்தைப் போல் இருக்காது. தண்ணீர் என்றைக்கும் அதன் தன்மையை இழக்காது. அதன் நினைவும் மறந்து போகாது.  பெண்ணும் அப்படித் தான். அந்த உருவத்திற்குள் வார்க்கப்பட்ட ஒர் உயிர். அந்த உருவம், அவளுக்கு உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்வு ரீதியாக, எல்லைகளைக் கொடுக்கிறது. கலாச்சார ரீதியான எல்லைகளும் உண்டு.

ஆனால், அவளுக்கு அந்த உடல், உணர்வு ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் எவ்விதமான வரையறையும் கொடுக்க வில்லை என்பதை நம்பக்கூடியவள் நான். பெண் என்பவள் ஒர் ஆச்சரியம் என்றோ, ‘மாதராய்ப் பிறப்பதற்கே தவம்’  என்றோ, நான் பார்க்க வில்லை. அதனால், தனித்துவிடப்பட்டாலும், தனியே இருந்தாலும், பெண்ணாய் இருப்பதே,எனக்கொரு அனுபவம். இப்படி இல்லாமல் போகும் போது, இந்த அனுபவத்தை நான் இழந்திருப்மேன். It is a costly experience.  I enjoy being a woman.

கேதாங்கள், தமிழ் ஆங்கிலம் என்று இரண்டு மொழியிலும் முனைவர் பட்டம் பெற்றவர். மொழி ஆளுமையின் அவசியத்தைக் குறித்து, தங்களின் பார்வை ?

. ஒன்று தாய் மொழி. அம்மாவின் கர்ப்பத்தில் நான் இருக்கும் போது, அவருடைய அச்சத்தையும், அபிலாஷைகளையும், ஆசைகளையும், கனவுகளையும், அந்தரங்கமாக, உதடு அசைவது கூட யாருக்கும் தெரியாமல், தன் மனத்தில் பேசுவதெல்லாம், என் காதுல ஒலிச்சிருக்கும். அதுதான் தாயோட மொழி. அப்போ, இயல்பாகவே அதுல பற்றிருப்பது, ஆச்சரியமே அல்ல.

ஆங்கிலத்தைப் பொறுத்த வரை, ஒரு மொழி மீது பிரேமை, அன்பு, பற்று இருந்தால் (வெறி அல்ல), அந்த மொழியும்  உங்களுக்குப் பிடிக்கும். அந்த வகையில், எனக்கு ஆங்கில மொழி பிடிக்கும். எனக்கு புலமை இருக்குன்னு நான் சொல்லல, இரண்டிலும் என்னால் சுலபமாகப் புழங்க முடிகிறது.

கே. பேராசிரியர், பேச்சாளர், இலக்கியவாதி, பெண்ணியவாதி. இவற்றில், எதில் சௌகரியத்தை உணர்கிறீர்கள்?

. இவை தனித்தனியான விஷயங்கள் அல்ல. ஒரே நபரைப் பல கோணங்கள்ல நீங்க பார்க்குறீங்க. அவ்வளவே. வகுப்பறையில், நான் ஆசிரியை, ஆனால் அதற்குள்ளும் பெண்ணியம் இருக்கும். நான் பேச்சாளர் அல்ல. நான் உரையாடும் நபர். I don’t speak. I communicate. உரையாடும் போது, எதிரே உள்ளவர் முக்கியம். அவருடைய உடல் மொழி முக்கியம். ஆனால், பேச்சாளருக்கு எதிரே உள்ளவங்க முக்கியமா, இல்லையானு எனக்குத் தெரியாது. என்னுடையது, பெரும்பாலும், பகிர்ந்துகொள்வது. வகுப்பறையாக இருந்தாலும், தனியாக இருந்தாலும், ஆசிரியை, பெண்ணியம், உரையாடுபவர், இலக்கியவாதி ஆகிய நான்கும், என்னுள் இருக்கும். It’s not compartmentalised. Over lapping கூட கிடையாது. தேவைக்கேற்றாற் போல, கோணங்களை மாற்றிக் கொள்ளவேண்டும்.

கே. மேலே குறிப்பிட்ட நான்கில், எவற்றைக் கவத்துடன் கையாள்கிறீர்கள்?

ப. எல்லாவற்றிலுமே கவனம் தேவை. I enjoy being a woman என்று சொல்லக் காரணமே, I go by my instincts. என் உள்ளுணர்வின் படி நடப்பேன். உள்ளுணர்வு என்பது விலங்குகளுடன் சம்பந்தப்பட்டது. அதைவிட உயர்வான நமக்கு, intuition என்று சொல்வார்கள்.  But I go by animal instinct. தூங்கும் போது காதை அசைத்துக் கொண்டே இருக்கும் பூனை மாதிரி, தூங்கும் போது மோப்பம் பிடித்துக் கொண்டே இருக்கும் நாய் போல. யாராக இருந்தாலும், கவனத்துடன் இருக்க வேண்டும். எங்கே நிற்க வேண்டும், எங்கே நிற்கக் கூடாது என்று தெரிய வேண்டும்.

கே. ஒரு பெண்ணின் வெற்றி என்பது ஒவ்வொருவருக்கும் வேறு படலாம். ஆனால், பெண்ணின் பொதுவான வெற்றி எவையாக பார்க்கப்படுகிறது ?

. முதலில், புலம்பாமல் இருப்பது. No complaints. அனைவரின் வெற்றியாகவும் இது இருக்கும்.  When I start complaining, எனக்கு என் மேலே மரியாதை இல்லைன்னு அர்த்தம். என்னைப் பற்றி நானே புலம்பிக்கொண்டிருந்தாலும், அது self pity, சுயபச்சாதாபம் என்ற கழிவிறக்கத்திற்குள் போய் விடுவோம். அது ஒரு புதைக் குழி. மீண்டு வருவது மிகக் கடினம்.

அடுத்த வெற்றி, புறம் பேசாமல் இருப்பது. Not to gossip. மற்றவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போனால், புறம் பேசுவோம். மற்றவர்களைப் பற்றி பேசும்போது, அவர்கள் வாழ்க்கைல என்ன இருக்குன்னு நமக்குத் தெரியாது. தெரியாததைச் சுவை கூட்டி, கரம் மசாலா சேர்த்து புதிய ரெசிபியாக… இல்லை, மலினப்பட்டு விடுவோம். ஆக, என் மீது மரியாதை இல்லைன்னா புலம்புவேன். மற்றவர் மீது நம்பிக்கை இல்லைனா புறம் பேசுவேன்.

இவ்விரண்டையும் செய்யாது இருந்தால், 24 மணி நேரத்தை, 48 மணி நேரமாக இழுக்க, என்கிட்ட சக்தி இருக்கும்.  இவ்விரண்டையும் செய்யாத பெண்கள், வெற்றி அடைந்த பெண்கள் தான்.

கே. பல நாடுகளுக்குப் பயணம் செய்து, பல சூழலில் இருந்து இயங்கும் சர்வதேச பெண்களைப் பார்த்து, எப்படி உத்வேகப் பட்டீர்கள்அவற்றிலிருந்து நம் தமிழ்ப் பெண்களுக்கு நீங்கள் உணர்த்த விரும்புவது?

. இங்கிருந்து தொலைந்து போனவற்றைத் தான் நான் அங்கே பார்த்தேன். ஔவையார்,  ‘வினைச்சி’ என்று சொல்வார். வினை ஆற்றிக்கொண்டே இருப்பவள். என் கொள்ளுப் பாட்டி, பாட்டி மற்றும் அம்மாவை, தொடர்ந்து வினை ஆற்றிக்கொண்டிருப்பவர்களாகத் தான் நான் பார்த்தேன்.

சூரியன் உதித்து அஸ்தமனம் ஆகுற மாதிரி, காற்று வீசி, அலை அடிக்கிற மாதிரி, யாரையும் சார்ந்திருக்காமல், இப்படிச் செய்யலாமா, நிமிரலாமா, நிற்கலாமா, என்று கேட்காமல், இயங்கிக் கொண்டிருந்தனர். தெளிவாகச் சொல்லப் போனால், they never wanted validation. வேலையைப் பாராட்டணும், கை தட்டணும் என்ற எண்ணமெல்லாம் அவங்களுக்கு இருந்ததில்லை. இந்த உணர்வு இப்போ, இங்கே காணாமல் போனது.

வெளிநாட்டில் பெண்கள் தொடர்ந்து வினையாற்றிக் கொண்டே இருப்பதைக் காணும் போது, ரொம்ப அழகா இருக்கு. யாருக்காகவும் இல்லாமல் அவரவர்களுக்காக. எனக்கு, என் செயல் அல்லாமல், என்னை அடையாளம் காட்ட வேறு எதுவும் இல்லை… இல்லையா? என் கண்ணாடி, என் செயல் மட்டும் தான். வேலையை, பெண்கள், புன்னகையுடனும் புரிதலுடனும், செய்த காலம் உண்டு. விடுமுறைக்குப் பாட்டி வீட்டிற்குச் சென்றால், என் பாட்டி, அத்தனைச் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார். I have seen her always happy.  அவங்க எம்பவர்மென்ட் பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.

எங்கேயோ ஓர் இடத்துல, அங்கிருந்து வெளியே வந்துட்டோம்.  அடுக்களை பற்றிய வருத்தங்கள் நிறையப் பேருக்கு உண்டு. ஏனோ, வினையாற்றுவதைச் சடமா எடுத்துக்க ஆரம்பிச்சோம். உடல் சோர்வா எடுத்துக்க ஆரம்பிச்சோம். ஓய்வு தேவையில்லையான்னு யோசிக்க ஆரம்பிச்சோம். ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குச் செல்வது தானே ஓய்வு ! 

அதேபோல, True empowerment is to feel absolutely adequate. ஒரு 10 பேர் இருக்கும் சபையில் நடந்து போகும்போது, பிறருடன் நம்மை ஒப்பிடாமல், கம்பேர் செய்யாமல் இருப்பது தான் தன்னம்பிக்கை (confidence).  இதை நான் அங்கே பார்த்தேன். ஒரு வேளை, நான் சந்தித்த பெண்கள் அப்படி இருந்தார்களா என்று தெரியவில்லை. It reminded me of our bygone ages.

கே. பெண்களுக்குக் கல்வி அவசியம். கல்வியுடன் சேர்ந்து, இவற்றிலும் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும், என்று நீங்கள் நினைப்பது எது?

. கல்வி என்பது ரொம்ப பெருசு. இரண்டு அட்டைகளுக்கிடையே, பாடப் புத்தகத்துடன்  முடிவதல்ல கல்வி. எல்லாமே கல்வி தான். It is either adequate or inadequate. வட்டமா தோசை சுடுவது கல்வி. எப்போ தீயை அணைக்கணும், எப்போ அதிகப்படுத்தணும்னு தெரிஞ்சிக்கறதும் கல்வி. கம்ப்யூடரில் வேலை கற்றுக்கொள்வதும் கல்வி. தினம் படித்துக் கொண்டேதான் இருக்கிறோம்.

இன்னொரு விஷயம்,  கல்வி என்றால், it’s not only learning, it’s about unlearning also, which you have wrongly learnt.  தப்பை மாற்றி relearning செய்வதும் கல்வி தான். ஆக, கல்வியும் வினைச்சியுடன் தொடர்புடையது தான். மீண்டும் மீண்டும் செய்து, மீண்டும் மீண்டும் செய்து, புலம்பாமல் பழகுவது.

சச்சின் தன் மட்டையால் பந்தை விளாசினால், ‘சூப்பர்’  என்று கை தட்டுகிறோம். Genius என்று பாராட்டுகிறோம். அதற்கு முன், to become a genius, அவர் எவ்வளவு பயிற்சி எடுத்திருப்பார்! எந்தச் சூழ்நிலையிலும், பதற்றம் இல்லாமல், தரையில் கால் பதித்து (grounded), அமைதியுடன், தன் நிலை உணர்ந்து இருப்பது தான் கல்வி. கூடுதலாக இதைச் சேர்க்கலாமா, அதைச் சேர்க்கலாமா என்ற யோசனை வந்தாலே, சேர்த்துக்கணும். பின்னமாக இருக்க கூடாது. It has to be holistic. It doesn’t stop with an age. It is always learning and relearning.

கே. புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து ?

. மூச்சு விடுவதின் அவசியம் குறித்துக் கேட்டால் எப்படி இருக்கும்! மூச்சு விடும் வரை, மூச்சு விடுவதே நமக்கு தெரியாது. சில சமயம், பெரு மூச்சு கூட வரும். புத்தகங்களை என்னிடமிருந்து பிரித்தால், எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். Every book is an extension of my anatomy என்று சொல்வேன். பாரதி தீக்குள் விரலை வைத்தால் தீண்டும் இன்பம்னு சொல்றார். எனக்குப் புத்தகத்தைத் தொட்டால், தீண்டும் இன்பம்.

உடனடியாக எனக்கு இன்பம் தரக்கூடியது, புத்தகம் தான். புத்தகத்தைத் தொடணும். மீண்டும் மீண்டும் தொடணும். நான் எந்தப் பரிசையும் உடனே பிரிச்சுப் பார்க்க மாட்டேன். ஒரு புத்தகத்தைக் கொடுத்தால், அது மேடையாக இருந்தாலும், அவசரமா அங்கேயே பிரிச்சுப் பார்ப்பேன். எனக்கு அது ஒரு போதை தான். ஆரோக்கியமான போதை.

கே. இறுதியாக, Women Empowerment, பெண் சுய அதிகாரம் பற்றிய உங்கள் கருத்து ?

. Unfortunately, we mistake entitlement ( உரிமை பெற்ற)  for empowerment (சுய நிர்ணய உரிமை கொண்ட). யாரோ எனக்காக பாடு பட, யாரோ எனக்காக போட்டி போட, யாரோ எனக்காக சிறை செல்ல, யாரோ எனக்காக உதை வாங்க, பின் சட்டங்கள் இயற்றப்பட்டு, அதன் பின் என் கைக்கு வரும் போது, I am not an empowered woman. I am an entitled woman. நான் உரிமை பெற்ற ஒரு பெண்ணாக உள்ளேன்.

நாம, entitlementஐ empowermentஆ, தப்பா எடுத்துக்கறோம். அப்பா சொத்துல பையனுக்கும், பெண்ணுக்கும் உரிமை இருக்குனு போராட இறங்கும் முன்னரே, வேறு யாரோ இறங்கியாச்சு. ஒவ்வொரு காலகட்டத்திலேயும், அவங்களுக்காகச் சிந்திக்க ஒருவர் இருந்திருக்கார். கல்லும் முள்ளும் இருக்குற பாதைல, ரத்தம் கசிய, அவங்க ராஜபாட்டையை உருவாக்கிக் கொடுத்திருக்காங்க. இந்த ராஜபாட்டைல நடந்து போய்ட்டு, நான் பெண் விடுதலை அடைந்து விட்டேன் என்று சொல்வது, it’s immature, முதிர்ச்சியற்ற நிலையைக் குறிப்பதாகும்.

அப்போ, Empowered woman – சுய நிர்ணய உரிமை கொண்ட பெண் யார்?

1.நான் தீக்குச்சி தான், ஆனால் பத்திரமாக பெட்டிக்குள் இருப்பேன் என்றால் எப்படி?  தீக்குச்சியின் உண்மையான பயன் என்ன? தன்னை விட்டுக் கொடுத்து, அடுத்தவருக்கு வெளிச்சம் தருவது. கிடைத்த படிப்பு மற்றும் கிடைத்த எல்லாவற்றிற்கும் முழுப் பயன் என்பது, when you help somebody else, who had no chance of getting what you have got. அதாவது, உங்களுக்குக் கிடைத்த நன்மைகளைக் கொண்டு, அவற்றைப் பெற இயலாதவர்களுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்ளும் போது தான், கிடைத்த நன்மைக்கு உண்மையான பலன் உண்டு. 

2.வீட்டில் உதவிக்கு வரும் வேலைக்காரியின் தட்டில், நீங்கள் சாப்பிடும் அதே உணவைப் பரிமாறினால், உங்களுக்கு ஒவ்வாத உணவு, அவளுக்கும் ஒவ்வாது, என்பதைப் புரிந்து கொண்டால், நீங்கள் சுய நிர்ணய உரிமையைச் சரியாக புரிந்து கொண்ட பெண்மணி. ஒரு ஏழை மாணவியின் கல்விக்கு உதவ முடிந்தால் , you are empowered than, even a CEO of a company.

3.சகதர்மம். We don’t want empowered women, we need empowering women. என்னுடைய வார்த்தைகளாலோ, சொல்லாலோ, செயலாலோ, புரிதலாலோ, புன்னகையாலோ, இன்னொரு பெண்ணின் மனதிற்கு அமைதி கொடுக்க முடியுமேயானால், இது தான் மிகப் பெரிய empowerment.

4.எல்லாத்துக்கும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், சொல்லிட்டுச் செய்யணும் என்கிற மரியாதை இருக்கணும். சொல்லாமல் செய்யும் போது, எங்கேயோ ஒரு அச்சம் இருக்கு. அந்த அச்சத்தைத் தன்னிறைவா, தப்பா புரிஞ்சிக்கறோம்.

5.கத்தாமல், கூப்பாடு போடாமல், கதவை அறைந்துச் சாத்தாமல், பத்து நாள் சோறு திங்க மாட்டேன் என்று மிரட்டாமல், நம் கருத்தை உணர்ச்சி ரீதியான மிரட்டல்கள் இல்லாமல் பகிர முடிந்தால், நீங்கள்,  உரிமையைச் சரியாக உணர்ந்து செயல்படும் ஒரு பெண்மணி.

6.அதேபோல, No, இல்லை, என்று சொல்லத் தெரிய வேண்டும். கத்திக் கூப்பாடு போட்டு சொல்லத் தேவை இல்லை. அமைதியாக, அழுத்தமாகச் சொன்னாலே போதும்.

7.சமயோசிதச் சிந்தனை வேண்டும். எங்கே நிற்க வேண்டும், எங்கே நிற்கக் கூடாது என்று தெரிய வேண்டும். முன் சொன்னது போல, animal instinct. கவனத்துடன் செயல்பட வேண்டும். ஒரு முறை கிரண் பேடி அவர்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு ஆண், அவரை உற்றுப் பார்த்தபடியே இருந்தானாம். ‘பிறகு நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்று அவரிடம்  கேட்டதற்கு, ‘வெரி சிம்பிள்… நான் இடம் மாறி அமர்ந்து கொண்டேன்’ என்றாராம். இது தான் சமயோசிதச் சிந்தனை. அவனிடம் போய்,  ‘நான் யார் தெரியுமா… உன்னை என்ன செய்வேன் தெரியுமா.. என்று சட்டையை உலுக்குவதெல்லாம் தேவையற்ற செயல்.

இறுதியாக,  ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று விவிலியத்தில் சொல்லப்பட்டிருக்கு. பத்திரமா, ஜாக்கிரதையா தட்டுங்க. எந்த கதவைத் தட்டினாலும், அது திறந்து கொள்ளும், என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

நன்றி.

WhatsApp Image 2024-03-08 at 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *