1. உங்களைப் பற்றிய அறிமுகம்? பிறந்தது, பள்ளி, கல்லூரி…
பிறந்தது சிங்காரச்சென்னை. பள்ளி, கல்லூரி அனைத்துமே சென்னை மாநகரத்தில்தான். சென்னையின் சகதி, புழுதி எல்லாமே என்னைப் பொறுத்தவரை எனக்கு சொர்க்கம். கூவம் நதிக்கரை தாண்டித்தான் கல்லூரிக்குப் போக வேண்டும். சென்னைத் தமிழில் பெரிய ரசனை உண்டு. உள்ளன்போடு உதிர்க்கையில் சென்னைத் தமிழும் செந்தமிழ் தானே!
2. கல்வி, அரசியல், பொருளாதாரம் இந்த மூன்றிலும் பெண்கள் மிளிர வேண்டியதன் அவசியம் குறித்தும், அவற்றிற்கு எவை தடையாக உள்ளது என நினைக்கிறீர்கள்?
கல்வி, அரசியல், பொருளாதாரம் மூன்றும் முத்தமிழ் போன்றவை. கல்வியெனும் இயல் இன்றி முன்னேற்றம் பிறப்பதில்லை. அரசியல் இசைவின்றி பெண் ஆளுமையில் அமர இயலாது. பொருளாதாரம் மேம்பட்டால்தான் வாழ்க்கை நாடகம் வசதி படைத்ததாக இருக்கும். பெண்களின் பலவீனம் எளிதில் ஏமாறுவது. ஏமாறுபவன் ஏற்றம் பெறுவதென்பது பெரும் சவால்தானே.
3. ஒரு பெண் தன்னை நிலைநாட்டிக் கொள்ள, தன்னை உறுதிப் படுத்திக்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
ஓரு பெண் தன்னை விரும்ப வேண்டும். தானே தனக்குத் தாயாக வேண்டும். தன் மனக் குழந்தைக்குத் தாயாக, ஆசானாக, கண்டிக்கும் தந்தையாக, அறநூல் வழி அறிவுரையாளனாக என்று தன் முதல் தோழியாக ஒவ்வொரு பெண்ணும் தனக்கு அரணாக வேண்டும். பின்பென்ன வாழ்க்கை வரம் தானே.
4. பொதுவாழ்வில் ஏற்படுகின்ற சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்? ஒரு பெண் என்பதால், தடைகளை அதிகமாக உணர்கிறீர்களா?
சிக்கல்களும் தடைகளும் சூழலில் பிறப்பதில்லை. மனிதன் தன் பார்வையில், பார்க்கும் கோணத்தில் பிறப்பிக்கின்றான். குறிப்பாகப் பெண் என்று வருகையில் எளிதில் உடைந்து விடுவதும், அழுதுவிடுவதும் பார்வையின் பிழை. வாழ்க்கைப் பயணத்தின் பிழையல்ல. தடைகள் தடைகள் அல்ல தாண்டத் தெரிந்தவனுக்கு! தோல்விகள் தொய்வுகள் அல்ல தன்னைத் தூண்டத் தெரிந்த பெண்ணிற்கு!
5. தமிழ் மொழியின் மீதான ஆர்வம், பிற நாடுகளில் எப்படி இருக்கு? பற்று இருந்தாலும் மொழியை வளர்ப்பதில் தமிழர்கள் எதைக் கவனிக்கத் தவறுகிறார்கள்?
பிற நாடுகளில் தமிழ் மொழி ஆர்வம் என்பதைவிட அலங்காரம் என்று சொன்னால் பொருந்தும். தமிழன் தமிழ் என்று மார்தட்டிக் கொள்வது ஒப்பனையாகி வருகின்றது. குறைவானவரே தமிழ்க்கல்வி கற்கின்றனர். அலங்காரம் தாண்டி அக்கறை கொண்டால் ஒழிய இந்நிலை மாறாது. மேலும் இருபது, நாற்பது வருடங்கள் கழித்து பிறநாடுகளில் தமிழ் அமைப்புகளின் நிலை என்ன? விழிப்புணர்வு கொள்ள வேண்டிய அபாயநிலை நிலவுகின்றது.
6. இளைய சமுதாயப் பெண்களுக்குத் தாங்கள் சொல்ல விரும்புவது?
கடந்து போக கற்றுக் கொள்ள வேண்டும். மறந்துபோக பழகிக் கொள்ள வேண்டும். மாற்றிக் கொள்ளத் தெரிந்து கொள்ள வேண்டும், தன்னைத் தேற்றிக் கொள்ளத் தலைப்பட வேண்டும். இருப்பதைப் போற்றும் மனம் கொள்ள வேண்டும். அன்பின் ஊற்றாக விளங்க வேண்டும். பிறகென்ன நித்தம் பிறந்தது போன்ற பெருநிம்மதி பிறக்கும்.
7. உங்களைச் சிந்திக்க வைத்த எழுத்தாளர்கள், மற்றும் புத்தகங்கள்?
எல்லோரிடமும் பெரிய மரியாதை உண்டு. ஆனால் எவருடையதையும் பெரிதாகப் படித்ததில்லை. புத்தகம் வாசிப்பதென்பது அரிதிலும் அரிது. யான் ஒரு பிரபஞ்ச வாசிப்பாளினி. இயற்கை எடுத்துரைப்பதை உள்வாங்குபவள், காற்றில் கணக்கற்ற செய்திகள் வந்து காதில் விழுகிறது. மொழிகின்றேன்! எழுதுகின்றேன் அவ்வளவே.
8. “இன்றளவும் இந்த விஷயத்தில் பெண்கள் மாறவில்லையே” எனத் தாங்கள் வருந்துவது?
அழகை அதிகமாகச் சார்ந்து இருப்பது, அழகு நிலையம் செல்லாதவர்களை விரல்விட்டு எண்ணுவது போன்ற நிலைமை. ஆண்களுக்கு இருக்கும் நம்பிக்கை தன் தோற்றத்தின் மேல் நமக்கும் வரவேண்டும். ஒப்பனைக்கு உள்ளிருக்கும் உயிரோட்டம் தான் உண்மை அழகின் நாதம் என்பது எப்போது புரியுமோ..!
9. உங்களுடைய பொழுதுபோக்கு அம்சங்கள்?
ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலை. எல்லா வேலைகளையும் வேலைகளாக எண்ணுவதில்லை. ஆழ்ந்து ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் செய்யும் எல்லா வேலைகளும் பொழுதுபோக்குதானே… பொழுதுபோக்கே உவகை உழைப்பாகிப் போனது.
10. பெருமிதம் அடைந்த தருணம்? தாங்கள் கடந்து வந்த மைல் கற்கள்?
என் தந்தை எனக்காக உயிரைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தது. நான் சென்ற சில நிமிடங்களில் உயிர்விட்டது நெகிழ்ச்சியான தருணம். அய்யா அப்துல்கலாம் அவர்களின் தொடர்பும், பாராட்டும் பெருமிதம் கொள்ள வைத்தன.
11. புழுதியின் ‘பெண்ணதிகாரம்’ பத்திரிக்கையின் மூலம் தாங்கள் சொல்ல நினைக்கும் கருத்துக்கள்?
ஆணோ பெண்ணோ மனநிறைவும், மகிழ்ச்சியும், நிம்மதியும், அமைதியுமே வாழ்வின் வெற்றி. சமூகம் வரையறுத்திருக்கும் வெற்றி வெற்று வெற்றி. தோல்வி உண்மையில் தொய்வும் இல்லை. தொய்வு தோண்டித் தோண்டி ஆழப்படுத்தி ஊற்றெடுக்கச் செய்யும். வற்றாத நதியாகிப் போனால் வெற்றிக்காக ஏங்கி வானம் பார்த்த பூமியாக இல்லாமல் வினையில் திளைத்து மகிழ்பவராகப் பவனி வரலாம்.