குறிப்பு: பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், பெண்ணியவாதி எனப் பலவாறாக அறியப்படுபவர் முனைவர் பர்வீன் சுல்தானா. உலகெங்கும் பயணம் செய்து தமிழின் வளத்தை, சிறப்பை, பெருமையை, அழகை தமது பேச்சின் மூலம் நிலைநாட்டி வருகிறார். ‘தமிழ்ப் புயல்’ உட்படப் பல்வேறு பட்டங்களையும் கௌரவங்களையும் பெற்றவர்.

1.ஒரு பெண்ணை எப்படியாக நீங்கள் பார்க்கிறீர்கள்? பெண்கள் எப்படி மேம்பட்டவர்களாக இருக்க வேண்டும்? இந்தச் சமூகம் அவர்களை எப்படி ஏற்றுக் கொள்கிறது?

அனைவருக்கும் வணக்கம். 2024ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள். சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்கள் போராட்டக் களத்தில் நின்று அவர்கள் பெற்ற சில விடுதலைப் புள்ளிகளை இந்த உலகம் முழுக்க வெளிச்சமாக பரப்புவதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் இன்றைக்கு நினைவு கொள்ளப்படுகிறது.

 அந்த விடுதலை விஷயங்களை, அவர்கள் பெற்றுக் கொள்வதற்கு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். 1882வது ஆண்டில் பஞ்சாலைகளில் வேலை செய்யக்கூடிய பெண்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிநிகர் சமமான கூலி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக எழுப்பிய போராட்டம், சர்வதேச அளவிலே மகளிருக்கான பொருளாதாரத்தை முன்வைத்து அவர்கள் நடத்திய, அத்தனை உழைப்பிற்காக பின்புலமாக அது வந்து சேர்ந்தது. 1910இல் சில ஆதிக்கச் சக்திகள் தன்னுடைய இரும்பு கதவுகளைத் திறந்து பெண்ணுக்கும் ஆணுக்கும் சரிநிகர் சமமான கூலியும், ஒரே நேர வேலை வாய்ப்பு அளிக்கலாம் என்று ஒப்புக்கொண்டதன் பெயரில், 1910ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய மாநாடு நடத்தி அதில் வைத்த தீர்மானம் தான் மார்ச் 08 அன்று சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடலாம், இதற்கு பின்னால் பல்வேறு நிலைப்பட்ட அடக்குமுறைகள், அதிகார அத்துமீறல்கள் எல்லாம் நிகழ்ந்திருக்கின்றன. 75க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி, இறந்து போயிருந்தனர். இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் நான் சர்வதேச மகளிர் தினத்தை பார்க்கிறேன். இந்த நாள் கொண்டாடுவதற்கான நாள் அல்ல. நம்முடைய உரிமையை நாம் தக்கவைத்துக் கொள்வதற்கு பறிக்கப்பட்டால், மீண்டும் அதை பெறுவதற்குமான வாய்ப்பாக அந்த நாளை நாம் எப்படி நினைவு கொள்ள வேண்டும் என்கின்ற உறுதிபாட்டை எடுக்கக்கூடிய ஒரு நாளாக தான் இந்த நாளை பார்ப்போம். சாதாரணமாகவே ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடு என்பது உயிரியல் ரீதியாக, உளவியல் ரீதியாக, உடலியல் ரீதியாக உண்டு. இந்த வேறுபாடுகளை எல்லாம் கடந்து தான் சரிநிகர் சமானம் என்கின்ற ஒரு நிலைப்பாட்டிற்குள் ஒரு பெண் தன்னை நிறுத்திக் கொள்கிறார்.

 ஒரு ஆணை போல் வளர்வது அல்ல பெண்ணினுடைய இலக்கு பெண்ணிற்கு என்கின்ற இலக்கு எப்படி சாத்தியமானது ஆண்களுக்கும் அப்படித்தான் சாத்தியமானதா ஆனால் இந்த சமூகம் எப்பொழுது ஏதேனும் ஒரு அடக்குமுறையை கையில் எடுக்கக்கூடிய ஒரு வாய்ப்பை பெற்றிருப்பதனால் அந்த அடக்குமுறைக்கு பலியாக கூடிய ஒரு நிலையிலே உடைமை தன்மைக்கு உரியவளாக பெண் பண்ணெடுங்காலமாக இருக்கிறது.

எவ்வளவுதான் அவளுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டாலும் தன்னை நிருவிக் கொள்வதற்கு இரட்டிப்பான ஒரு வேலையை இரட்டிப்பான முயற்சியை அவள் செய்ய வேண்டியதாக இருக்கிறது.

ஒரு பேச்சாளராகவோ அல்லது ஒரு அரசியல் தலைவராக அல்லது ஒரு கலைஞராகவும் ஒரு பெண் வருவதற்கும் ஒரு ஆண் வருவதற்கும் நடுவிலே இருக்கக்கூடிய வித்தியாசம் என்னவென்றால், என்னைப் பொறுத்த அளவில் ஒரு 20 ஆண்டு, 25 ஆண்டு, 10 ஆண்டு, 15 ஆண்டு, 5 ஆண்டு அல்லது 40 ஆண்டு, 50 ஆண்டுகள் காலகட்டத்திலே ஒருவர் இந்த எல்லையை அடைந்துவிட முடியும். ஆணால் ஆனால் பெண் அடைய வேண்டும் என்றால் அதற்குப் பின்னால் அவளுக்கு ஆயிரம் ஆண்டு கால போராட்ட வரலாறு தேவைப்படுகிறது.

 முதலில் நாம் இதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையை இது யார் மீதும் குற்றம் சுமத்துவது அல்ல. சமூக சூழ்நிலையை கடந்து இன்றைய சூழ்நிலையில் அவளுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு என்பது அபரிமிதமான வாய்ப்பு. அந்த வாய்ப்பை அந்தப் பெண் சரியாக பயன்படுத்திக் கொண்டால் இனி வரும் ஒரு 500, 1000 ஆண்டுகளுக்கு அந்த விடுதலை தக்கவைக்கப்படும். இல்லை என்றால் மீண்டும் அவள் அடிமைத்தனத்திற்குள் போவதற்கான சூழலை உருவாக்கக்கூடிய சக்திகள் இன்றைக்கு நிறைய இருப்பதாக நான் கருதுகிறேன். அதனால் ஒரு ஆணுக்கு தன்னுடைய வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்வதை விட ஒரு பெண் தன்னுடைய வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்வதில் இரண்டு நிலையில் போராட்டம் உண்டு. ஒன்று அவள் தனக்குள் போராட வேண்டும். இன்னொன்று இந்த சமுதாயத்திற்குள்ளும் போராட வேண்டும். ஆனால் ஆணுக்கு இந்த நிலை இருப்பதாக நான் கருதவில்லை.

2. உருது மொழி பேசும் சூழல் கொண்ட ஒரு குடும்பத்திலிருந்த போதும் தமிழ் மொழி  மீது ஆர்வம் எப்படி ஏற்பட்டது.?

என்னுடைய தந்தையார் என்னிடத்தில் ஒரு வார்த்தையை சொல்கின்றார். நான் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வை முடித்துவிட்டு அவரிடம் வந்தபோது சுல்தானா உன்னுடைய இந்த பட்டப்படிப்பு என்பது நீ இன்றைக்கு பெற்றுக் கொண்டிருக்கிறாய். ஆனால் இது எப்படி நீ பயன்படுத்த வேண்டும் என்றால் பட்டப்படிப்பு படிக்க முடியாத பல லட்சம் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சேர்த்துதான் நீ படித்திருக்கிறாய் என்கின்ற பொறுப்புணர்வோடு நீ நடந்து கொள் என்று சொன்னார். உருது சூழ்நிலை என்பதோ, என்னுடைய மார்க்கம் சார்ந்த சூழ்நிலை என்பது ஒருபோதும் எனக்கு தடையாக இருந்ததில்லை. ஏனென்றால் எதையுமே உடைத்து விட்டு வர வேண்டுமென்று அவசியமே கிடையாது. நாம் எல்லோரும் என்ன நினைக்கிறோம், ஒன்றை அடைய வேண்டும் என்றால் ஒன்றை உடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். கிடையாது அதை சரியாக புரிந்து கொண்டால் போதுமானது.

ஒருபோதும் நான் என்னுடைய கவிதை மரபையோ என்னுடைய தகப்பனார் மரபையோ எதிர்த்தவள் இல்லை. ஒருபோதும் அதை குறை என்று சொன்னதுமில்லை. எனக்குள்ளாக என் தகப்பனார் கவிதைகளை பேசுகின்ற பொழுது, என்னுடைய அனுபவம் உள்ளுக்குள் விரிகின்ற பொழுது, நான் வெளியில் வருகின்ற பொழுது, எனக்கு உருது கிடையாது.

வெளியில் வருகின்ற பொழுது எனக்கு என்ன கிடைத்தது? எனக்கு கம்பன் கிடைக்கிறார். எனக்கு வள்ளுவர் கிடைக்கிறார். எனக்கு பாரதியார் கிடைக்கிறார். எனக்கு தேவார திருவாசகங்கள் கிடைக்கின்றன. எனக்கு நாலாயிர திவ்யப்பிரபந்தம் கிடைக்கிறது. எனக்கு சங்க இலக்கியங்கள் கிடைக்கிறது. நவீன இலக்கியங்கள் கிடைக்கின்றன. அவர்கள் போட்ட அந்த ஆர்வம் என்கின்ற விதை, உள்ளே போய் அது விருட்சமாக வளர்வதற்கு எனக்கு பல்வேறு விதமான சத்துக்களாக எனக்கு தமிழ் வந்து சேருகிறார். இப்படித்தான் நான் அதை எடுத்துக் கொண்டேன்.

எனக்கு உருது எழுத படிக்கத் தெரியும். இன்றைக்கும் உருதை நான் ரசிக்கிறேன். இன்றைக்கும் தாயிடமும் என் குழந்தையிடமும் நான் பேசும் மொழியாக இருக்கிறது. அதில் ஒன்றும் சிரமமில்லை. என்னதான் இருந்தாலும் என் தாய் மொழி தமிழ்தான். என் இனம் தமிழ் தான். என் உணவு கலாச்சாரம் என எல்லாம் தமிழ் தான். தமிழின்படியாக நான் வாழ்கிறேன்.

உருது என்பது என் தந்தை ஒரு 300 வருடத்தின் காலத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம். “என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று பாடியவர் பாரதி அப்படிப்பட்ட ஒரு மொழியாக இருக்கக்கூடிய காரணத்தினால் என் தாய் மொழியாக நான் தமிழை உணர்ந்திருக்கின்ற காரணத்தினால், தமிழ் மொழியில் சிந்திக்கின்ற காரணத்தினால், தமிழ் மொழியில் வாசிக்கின்ற காரணத்தினால் ,அதை பேசுகின்ற ஒரு மொழியையும் எனக்கு அதுவாக இருக்கின்ற காரணத்தினால், நான் என்னுடைய பயணத்தை அடுத்தடுத்த கட்டத்தில் உச்சத்தை நோக்கி நான் நடப்பதற்குத் தமிழ் எனக்கு உறுதுணையாக வந்திருக்கும்.

3. பேராசிரியார், பேச்சாளர், இலக்கியவாதி, பெண்ணியவாதி இவற்றில் எவற்றில் சவுகரியத்தை உணர்கிறீர்கள்? எவற்றை கவணத்துடன் கையாள்கின்றீர்.?

என்னுடைய அடையாளமாக என்னுடைய முகவரி என்பது என்னுடைய கல்வித் தகுதியாக தான் நான் பார்க்கிறேன். கல்வி என்பது எல்லா பெண்களுக்கும் பரவலாக, முழுமையாக அளிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு கொள்வதற்கான மனநிலையும், சூழ்நிலையும் அந்த பெண்ணுக்கு ஏற்படுத்தக்கூடிய முயற்சிகளில் இந்த சமூகம் ஈடுபட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த கல்வியறிவு மட்டும் எனக்கு கிடைக்கவில்லை என்றால் நான் தமிழை இவ்வளவு ஆழமாக தேடிப் படித்திருக்கமாட்டேன். பேச்சாளராக உங்கள் முன் நின்றிருந்தாலும் சமூகத்தின் மீதும் பெண்களின் மீதும் குழந்தைகளின் மீதும் வருங்காலத்தின் மீதும் இந்த நாட்டின் மீதும் உலக சமூகத்தின் மீதும் எனக்கான பார்வை என்பது கல்வியால் விரிவாகப்பட்டது. எனக்கு எதுவுமே இல்லை என்று மறுபடியும் பூஜ்ஜிய நிலையில் இருந்து துவங்கினாலும் நான் கற்ற கல்வியினால் மீண்டும் உச்சத்தை என்னால் பிடிக்க முடியும்.

4. வேதியியல் படிப்பு வேண்டாம் என்ற முடிவை அப்போதே எடுக்கும் உந்துதலும் தைரியமும் எப்படி கிடைத்தது.?

சுயதொழிலாக ஒரு ஆய்வகம் வைக்கலாம். ஆகையால் தான் அறிவியல் எடுத்துப் படித்தேன். மேற்கொண்டு வேதியல் படிக்கலாம் என்றபோது அந்த சூழல் எனக்குப் பிடிக்கவில்லை. நான் வாசிக்கின்ற காரணத்தினால், வீட்டிலும் சரி அப்பன் தோன்றிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணீரை குடிக்க மாட்டேன். எதுவாக இருந்தாலும் நான் அதை மறுத்து பேசுவேன். என்னை ஆசுவாசப்படுத்த முடியாது. அதுவரையில் நான் அவற்றை ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். என்னைப் பொருத்த அளவில் சுதந்திரம் என்பது நாம் செய்ய விரும்புவதை செய்வது மட்டும் அல்ல, நாம் செய்ய விரும்பாததை செய்யாமல் இருப்பதும்.  எனக்கு வேதியியல் படிப்பது பிடிக்கவில்லை. அதனால் நான் படிக்கவில்லை. என் அப்பாவிடம் கேட்டேன், அப்பா நான் தமிழ் படிக்கப் போகிறேன். என்னுடைய அப்பா கைகழுவிட்டார். தமிழ் படிச்சிட்டு என்ன செய்யப் போகிறாய்?. ஆனாள் அவர் மரணமடைவதற்குப் பத்துநாள் முன்பு என்னிடத்தில் பேசுகிற போது,  2017ஆம் ஆண்டு சொன்னார். உனக்கு பர்வீனா சுல்தான் என்று பெயர் வைத்தேன். பேகம் பர்வீனா சுல்தான் இந்தியாவின் இசையின் மூத்தஅரசி. அவர்களுடைய பெயரை அப்பா எனக்கு வைத்தார். அப்பாவிற்கு இசையின் மீதும் கவிதையின் மீதும் ஆர்வம் அதிகம். அப்பா நன்றாக பாடுவார். நான் பாடுவேன் என்று வைத்தார் ஆனால் நான் பேச ஆரம்பித்துவிட்டேன்..

பர்வீன் சுல்தானா அப்படின்ற உன் பேர யூட்யூப்ல போட்டுப் பார்த்தா அதுல பேகம் பர்வீன் சுல்தானா அவருடைய போட்டோவோட உன் போட்டோவும் சேர்ந்து வரும் போது, ஒரு தந்தைக்கு  வேறு என்ன பெருமையும் சந்தோஷம் இருக்கப்போகிறது.

அந்த நேரத்தில் தான், நான் வேதியியல் படிக்காமல் தமிழ் படித்தேன் என்கின்ற ஒரு உணர்வு முழுமையடையந்தது.

நான் எல்லா பெண்களுக்கும் சொல்வது ஒன்றுதான். ஆயிரம் தான் நீங்கள் ஏங்கினாலும் உங்களுடைய ஆழ்மனதின் நிலையில் ஒரு வெளிச்சம் கிடைக்கும் அந்த வெளிச்சத்தை பற்றிகொள்ளுங்கள். அந்த உள்ளுணர்வில் நாம் உறுதியாக இல்லாத காரணங்கள் என்ன என்று பார்த்தால் நமக்கு ஏற்படும் கவனச் சிதறல்கள். கவனத்தோடு நாம் இருக்கும்போது நம்முடைய உள்ளுணர்வு நமக்கு மிகச்சரியாக வழிநடத்தும். அந்த வழியை நாம் பற்றிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு இப்போது நாம் செல்லும் பாதையில் முள் இருக்கிறது என்றால், அப்போது மனசு சிறகு கேட்கும், ஆனால் புத்தி செருப்பு கேட்கும். சிறகு கிடைக்காது ஆனால் செருப்பு கிடைக்கும். புத்தியோடு நாம் போக வேண்டும். அதனால் தான் சொல்கிறேன், எல்லாத்துக்கும் அடிப்படை அறிவு அந்த அறிவைத் தருகிற கல்வி. இதை கையில் பற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.

5. இன்றைக்கு இருக்கும் இளைய சமுதாயத்திடம் வாசிப்புப் பழக்கம் இருக்கிறதா? வாசிப்பின் அவசியம் குறித்து தங்களின் பார்வை?

இன்று இருக்கும் இளைஞர்களும் பெண்களும் மொழியுடன் தொடர்போடுதான் இருக்கிறார்கள். ரீல்ஸ் பார்ப்பதிலும் கேட்பதிலும் இருக்கும் ஆர்வத்தை ஆழமாக தியானமாக வாசித்து, அந்தக் காட்சிகளைக் கொண்டு வருவதில் செலுத்துவதில் இல்லை.

உதாரணத்திற்கு  மொழி ஆசிரியராக நான் சொல்கிறேன். Imagination more than knowledge என்கிறார் ஐன்ஸ்டீன். நான் இப்போது அறிவு தான் மேலானது என்று பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் கற்பனை தான் மேலானது என்று சொல்கிறார் ஐன்ஸ்டீன். ஆக அவன் இலக்கியத்தைப் பிடித்துக் கொண்டு  நிற்கிறான். அவன் ஒரு சயின்டிஸ்ட் ஆக இருந்தாலும். இரவிலே இந்த உலகம் வெளிச்சமாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை தான் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு பல்ப் கண்டுபிடிப்பதற்கான ஊக்கத்தை, ஆற்றலை தருகிறது. கற்பனைகள் இன்று அளவில் குறைந்தபடி இருப்பதாக நான் குற்றம் சாட்டுகிறேன்.

 இந்தக் கற்பனையை பிள்ளைகள் வேறு விதமாக, முன்னாளில் ஆங்கிலத்தில் இப்படியாக சொன்னால் எக்ஸ்பிரஷன்தான் முக்கியமே தவிர இம்பிரஸ்   பண்ணவேண்டும் என   நினைக்காதீர்கள். பிரபலம் ஆகணும் என்கிற வெறி நிறைய வந்துகொண்டே இருக்கிறது. பிரபலமாக வேண்டிய அவசியம் கிடையாது. ஒருநாள் வாழ்ந்தாலும் புகழோடு வாழவேண்டுமே தவிர, பிரபலம் ஆக வேண்டுமென்கிற அவசியம் கிடையாது. “தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று”.என்ன நடக்கிறது என்றால் இப்பொழுது நான் பேசுகிறேன் நீங்கள் கேட்கிறீர்கள் இல்லையா அவ்வளவுதான். ஆனால் கேட்டு முடித்த பின்பும் நான் பேசிக் கொண்டே இருப்பேன் உங்களிடத்தில். அதுதான் உங்களை வளர்க்கும். நான் பேசிக் கொண்டே இருந்தால் அது என்னை தான் வளர்க்கும். கேட்பதினால் அடுத்த கட்டத்திற்கு நான் பேசிக்கொண்டே இருப்பதும், வாசித்து முடித்த பிறகு மீண்டும் அதை நீங்கள் வாசிப்பதினால் உங்களை அது வளர்க்கும். வாசிப்பு என்பது எழுத்தாளர்களுக்கு புகழைத் தரும். ஆனால் வாசிப்பவனுக்கு எப்பொழுது புகழைத் தரும்? அதைப் பற்றிய ஞானம், அதைப்பற்றிய  கற்பனை அதைப்பற்றிய  நினைவுகள், அசைவுகள் அதைப்பற்றி இன்னும் தொடர்ந்து அசைபோட்டு கொண்டே இருப்பது. அது தான் “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.” என்னைக் கேட்டால் சங்க இலக்கியங்களையும் மரபு இலக்கியங்களையும் நாம் ஏன் கொண்டாட வேண்டுமென்றால், இந்த உலகத்திலேயே மூத்த குடி நம் குடி என்கிற அறிவு நம் பிள்ளைகளுக்கு  பலத்தை தரும். தற்போது தற்காலத்தில் இருக்கக்கூடிய பல இலக்கியங்கள் தான் நம் பிள்ளைகளுக்கு வரலாறு. அதை இன்றைய தலைமுறை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மரபையோ, ஒரு புதுமையோ ஒன்றுக்கொன்று சாடிக்கொண்டு அதை ஒன்றுமில்லாமல் ஆக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். பாரதி வசன கவிதைகளை எழுதுகிறார்.

“சுவை புதிது,

 பொருள் புதிது,

 வளம் புதிது,

சொற்புதிது

சோதிமிக்க

 நவகவிதை

எந்நாளும்

அழியாத மாகவிதை!” என்கிறான். நவகவிதை என்ற சொல்லை அவர் பயன்படுத்துகிறார். அதனால் அவன் புது கவிஞனாக இருக்கிறான். புது கவிஞனாக இருக்கும் பாரதிக்கு அடி எடுத்துக்கொடுத்தது வள்ளலார். ஆக பாரதிக்கு வள்ளலாரையும் தெரியும், கம்பனையும் தெரியும் வள்ளுவனையும் தெரியும். தெரிந்துவிட்டும் பாரதி புதுமையைப் பேசுகிறான். நாம் நமது மரபையும் புரிந்துகொண்டு உண்மையையும் கையில் எடுத்து கொண்டால் இந்த உலகத்தில் சில விஷயங்களை அசைக்க முடியாத அளவிற்கு நிறுவிக்கொள்ளலாம்.

நான் எப்போதுமே சொல்வது.

PAIN IS INEVITABLE பெண்களுக்கு சிரமங்கள், வலி என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் SUFFERING IS OPTIONAL. நான் அதில் துன்பப்பட வேண்டுமா இல்லையா என்பது என்னுடைய தேர்வு தான். நான் பெண்களுக்கு சொல்வது  feel the pain, உணருங்கள். Don’t suffer துன்புறாதீர்கள். துன்புறாமல் இருப்பதற்கான வழியை நீங்கள் அமைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் இவ்வுலகில் பல்வேறு வாய்ப்புகள் அமைந்துள்ளது அந்த வாய்ப்புகளை சரியாக நீங்கள் அமைத்துக் கொள்ளுங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *