என் உறவுக்கார அக்கா, ஒருவர், டச்சஸ் கிளப் உறுப்பினர். யூடியூப்பில் வரும் என் காணொலிகளை பார்த்து, “டச்சஸ் கிளப்பில் சேரலாமே. உனக்கான வட்டத்தைப் பெரிதாக்கிக்கொள்” என்றார். “சரி பார்க்கலாம் அக்கா”  என்றேன். பின் ‘பெண்ணதிகாரம்’ இதழுக்காக எழுத ஆரம்பித்த பின்னர், அக்காவின் நினைவு வந்தது. தொலைபேசியில் தொடர்பு கொண்டு, திருமிகு.நீனா ரெட்டி அவர்களிடம் நேர்காணல் செய்ய வேண்டும், என்ற விருப்பத்தை தெரிவித்தேன். அவரும் தொடர்பு கொண்டு, நேரத்தை ஊர்ஜிதப்படுத்தி கொண்டுச் சென்றேன். 

“பத்து நிமிடம் காத்திருங்கள். மேடம் உங்களை அழைப்பார்” என்றனர். “மேடம் பரிமாறச் சொன்னார்” என்றபடி சூடான காபி பரிமாறப்பட்டது. காபியை குடித்து முடித்ததும், சூட் அணிந்த நபர் என்னை உள்ளே அழைத்துச் செல்ல வந்தார். பெரிய, பிரம்மாண்டமாக அலங்கரிக்கபட்ட அறையாக இருக்கும் என்ற கற்பனையில் சென்ற எனக்கு பெருத்த ஏமாற்றம். 

ரெஸ்டாரன்ட் காலியாக இருந்தது. அங்கேயே ஒரு மூலையில், இரண்டு பணியாளர்களுடன் உட்கார்ந்து, ஜீன்ஸ் சட்டை அணிந்தபடி, கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருந்தார். என்னை கண்டதும் எழுந்து வந்து கைகுலுக்கி வரவேற்றார். 

நீனா  ரெட்டி அவர்களைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும். பல வருடங்களாக நான் அவரை பார்த்து வியந்து வளர்ந்தவள். முக்கியமாக, அவருடைய ஸ்டைல். வசதியும் செல்வாக்கும் இருந்தால், பட்டு பீதாம்பரமும், வைர வைடூரியமும் அணிய வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை நிரூபித்து வருபவர். ஆடைகளில் என்ன இருக்கு? என் வேலையை கவனியுங்கள், ஆரோக்கியத்திற்காக நான் நடத்தி வரும்  சைக்ளிங், மாரத்தான் போன்ற செயல்பாடுகளை கவனியுங்கள், என்று புதுமையுடன் செயல்படுபவர். பார்வையற்றோருக்காக நடத்தி வரும் போட்டிகள், பெண்கள் நலனுக்காக  பல வருடங்களாக நடத்தி வரும் ‘டச்சஸ் கிளப்’ போன்ற முன்னேடுப்புகளை மேற்கொண்டு, சென்னையின் பிரபல பெண்மணியாகத்  திகழ்பவர். 

கொரோனா நிதி உதவியாக முதல்வரை சந்தித்து, ரூ.25 லட்சத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார். என்னுடன் வெளியே வந்தவர், வெளியே ஒரு சிறு அறையில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஊழியரை சிறிது நேரம் வெளியேறச் சொல்லி, அங்கே அமர்ந்து பேசினோம்.  “ஹோட்டல் வேலைக்கு வந்த புதிதில், கற்றுக்  கொண்டே, சுற்றிக் கொண்டே இருப்பேன்” என்றார். அன்று முதல், இன்று வரை, அப்படி தான் இருந்து வருகிறார். 

Truly an inspiring woman. 

இதோ, அவருடைய அழகான நேர்காணல், உங்களுக்காக.

கே:  வணக்கம் அம்மா. உங்களை பற்றிய அறிமுகம் ?

ப:  வணக்கம். என் பெயர் நீனா ரெட்டி. நான் பிறந்தது, பள்ளி, கல்லூரி வரை படித்து வளர்ந்தது, ஹைதராபாத்தில். கல்லூரி படிக்கும் போதே, திருமணமாகி, இந்த குடும்பத்திற்குள் வந்துவிட்டேன். 1979ல் இருந்து நான் ஒரு சென்னைவாசி. பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம் தான். நம் நலனில், பெற்றோருக்கு நிச்சயம் அக்கரை உண்டு என்ற மனநிலையில், கேள்வி ஏதும் கேட்காத காலகட்டம் அது.  வரவேற்பு ஏ.வி.எம். இராஜேஸ்வரியில் தான் நடந்தது. “வரவேற்பு நிகழ்ச்சி முடிஞ்சதும், “எங்கள திரும்பி கூடப் பார்க்காம அப்படியே போய்டியே மா” என்று என் தந்தை சிரித்துக் கொண்டே சொன்னது, இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. I think you have to do that. பிறந்த வீட்டு அத்தியாயம் முடிந்து, அடுத்த அத்தியாயத்தை துவங்க வேண்டிய சூழல். 

கணவரின் வீட்டில் மிகவும் அனுசரனையாய இருந்தார்கள். அடுத்த இரண்டு வருடங்கள், சென்னையை பற்றித் தெரிந்து கொள்வதில் தீவிரமானேன். முற்றிலும் வேறு இடம். முற்றிலும் வேறு சூழல். A kind of culture shocked too. நான் சென்னை வந்த சமயம், முன்னேற்றம் என்பது, சிந்தை அளவில் மட்டுமே இருந்தது. செயல்பாட்டில் இல்லை.  எக்காரணத்தைக் கொண்டும், என்னை நான் மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். 

கல்ச்சுரல் அகாடெமியில் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டேன். நண்பர்கள் சேர ஆரம்பித்தனர். தினமும் நாளிதழில், புதிதாக எங்கு என்ன கற்றுக் கொடுக்கிறார்கள் என்று பார்ப்பேன். கண்ணாடி பெயிண்டிங், சமையல் வகுப்பு, அழகுக் கலை,  உள் அலங்கரிப்பு வகுப்புகள் (interior decoration), என்று ஒன்று விடாமல் கற்றுக் கொண்டேன். என் மாமியார் எனக்கு உற்ற தோழியாக இருந்தார். ஒன்றாகச் சேர்ந்து பியூட்டி பார்லருக்குச் செல்லும் அளவிற்கு. 

எனக்கு, 21 வயது. மைத்துனருக்குத் திருமணம். என் மாமனார், எனக்குள் ஏதோ ஒரு திறமையை கண்டார். ஒரு புரோஜெக்டைப் போல, இந்த திருமண ஏற்பாட்டை முற்றிலும் நீ தான் கவனிக்க வேண்டும் என்று கூறிவிட்டார். எதுவும் தெரியாது. ஆனால், சவாலாக, ஒரு சந்தோஷத்துடன்,  சிறப்பாக எடுத்துச் செய்தேன். பின் இரண்டு குழந்தைகள். முழு கவனமும் அவர்கள் மீதே இருந்தது. அவர்கள் பள்ளியிலும், சுறு சுறுப்பான தாயாக, பல நிகழ்வுகளில் பங்கேற்பேன். என்னை அனைவருக்கும் தெரியும். ஆசிரியர், பெற்றோர் குழுவில், நான் இருப்பேன். 

அதாவது, நான் எங்கே இருந்தாலும், கவனிக்கப்படுவேன். எந்த வேலை செய்தாலும், முழு ஈடுபாட்டுடன் செய்வேன். போனோம், வந்தோம் என இருக்கமாட்டேன். சரியாக அந்த சமயத்தில், சவேரா ஹோட்டல், ஒரு மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. மற்ற இரண்டு பார்ட்னர்களின் பங்குகளையும், என் மாமனாரே வாங்கிக் கொண்டார். ‘லையன்ஸ்’ , ‘ரோட்டரி’ என, எனக்கான நண்பர்கள் வட்டம் வளர்ந்தது. பார்டி செல்வதும், லேடீஸ் கிட்டி போவதும் எனக்கானவை அல்ல, என்பதை உணர்ந்தேன். 

மாமனாரிடம், ஹோட்டல் நிர்வாகத்தில் ஈடுபடுவதற்கான விருப்பத்தை தெரிவித்தேன். அவரும் என் திறமை மீது நம்பிக்கை வைத்து ஒப்புக் கொண்டார். ஹவுஸ் கீப்பிங் (house keeping) துரையில் உஷா ராமலிங்கம் என்று பெண் ஊழியர் இருந்தார். முதலில், அவரிடமிருந்து பணியைக் கற்றுக் கொள்ளச் சொன்னார். அதன் பின் ராதிகா என்ற செக்கரட்டிரி. இவர்கள் இருவரும் தான் இங்கே எனக்கான முதல் தோழிகள். இன்றுவரை, இவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். 

மெதுவாக, ஹோட்டலின் எல்லா துறைகளையும் கற்றுக் கொண்டேன். எனக்கென்று ஆரம்பத்தில் மேசை நாற்காலியோ, தனி அறையோ கூட இல்லை. சுற்றிக் கொண்டே.,கற்றுக் கொண்டே  இருந்தேன்.

கே: இந்த விருந்தோம்பல் துறையை (hospitality industry) நீங்கள் கையாளும் முறையை பற்றி சொல்லுங்கள்?

ப:   அன்றும் சரி, இன்றும் சரி, எங்கள் பணிவிடைகளில் எந்த மாற்றமும் இல்லை. வரும் விருந்தினர்கள், சவுகரியமாக உணர வேண்டும், சந்தோஷ நினைவுகளுடன் வீடு செல்ல வேண்டும். முக்கியமாக, அவர்கள் முதல் முறை உள்ளே நுழையும் போதே, they have to become our loyal customer. ஆகையால், யார் வருகிறார்கள்? அவர்கள் தேவை என்ன? விருப்பங்கள் என்ன? என்பதெல்லாம் அமைதியாக கவனிக்கப் படும். அடுத்த முறை அவர்கள் வரும்போது, “சார், உங்களுக்கு பால் கலந்த காபி விருப்பமில்லை என்று எனக்கு தெரியும். ஆகையால், நீங்கள் விரும்பும் கடுங்காபியை நான் பரிமாறுகிறேன்.” என்று சொல்லும் போது, விருந்தினருக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். 

அதே சமயம், காலில் விழுந்து, பணிவிடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. That is not being professional. You must be authentic to your job. உங்கள் செலவுகளையும் நீங்கள் பார்க்க வேண்டும், பெயரை நிலை நாட்ட வேண்டும், அதேசமயம், உபசரிப்பில் குறை இல்லாமல் பார்த்துக் கொள்வோம். காபி சூடாக இல்லையா? தவறு தான். உடனே சூடான காபி பரிமாறப்படும். அங்கே தான் நம் அக்கறை வெளிப்படும். காசு வாங்கினோமா, அவரை அனுப்பி வைத்தோமா, என்று இருக்க மாட்டோம். 

இன்று வரும் வாடிக்கையாளர்கள், பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் பயணிக்கிறார்கள். அதனால், சிறு சிறு விஷயங்களை கூட கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள். முன் அப்படி இல்லை. அதற்கேற்றவாறு, நாங்களும் வளர்ந்து வருகிறோம். Technology ஆகட்டும், உணவு வகைகள் ஆகட்டும், சிலவற்றில் புதுமை தேவைப்படுகிறது. சிலவற்றில் பழமை மாறாமல் இருக்கணும். அதிகம் விஞ்ஞானம் சார்ந்து இருந்தால், அடிப்படை உபசரிப்பிலிருந்து நாம் விலகிப் போகிறோம். I like to keep it as a blend. வேலையை சிறப்பாக செய்யணும், அதில் human touch இருக்கணும். 

கே: பெண்களின் வளர்ச்சிக்கு, தங்களுடைய நிறுவனத்தின் பங்கு? 

ப:  நான் இங்கே நுழைந்த காலத்தில், பெண் ஊழியர்களை விரல்விட்டு எண்ணலாம். மிக குறைந்த அளவில் பெண்கள் ஹோட்டல் துறை வேலையில் இருந்தனர். இங்கே பல வேலைகளுக்கு, பெண்களின் தேவை இருப்பதை உணர்ந்தேன். தொழிலதிபர்கள், சினிமாத்துறை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் மட்டுமே வந்துபோகக் கூடிய இடமாக இது இருந்தது. எனக்கு பெண்கள் அதிக அளவில் வர வேண்டும். குடும்பமாக வந்து தங்கி போக வேண்டும். பெண் ஊழியர்கள் பலரை நியமிக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். 

என்னைச் சுற்றி உள்ள தோழிகள் பலரும். ஏதோ ஒரு கட்டத்தில், முன்னேற முடியாமல் இருப்பதைக் கவனித்தேன். என் ஹோட்டலில் அவர்களுக்கென்று வேலையை ஒப்படைப்பேன். ஆனால், இலவசமாக கொடுக்கமாட்டேன். “நீ உழைத்து, சம்பாதித்து, ஹோட்டலுக்கான கட்டணத்தை செலுத்திவிடு” என்பேன். இப்படியாக, என்னைச் சுற்றி உள்ள பெண்களின் திறமைகளை கண்டறிந்து, ஊக்கப்படுத்துவது என் பழக்கம். 

கே:   இத்துறையில், தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? ஒரு பெண் என்ற நிலையல், கூடுதல் சவால்களை மேற்கொள்ள வேண்டி இருக்கா?

ப:  அனைத்து பாலினருக்கும் இது பொதுவானது.  நீங்கள் அதை பார்க்கும் கண்ணோட்டம் தான் முக்கியம். பல ஆண்களும் அவதிப்படுவதை நாம் பார்க்கத்தான் செய்கிறோம். தொழில் என்று வரும்போது, அதை ஒரு சவாலாக, சாகசமாக எடுத்துச் செய்ய வேண்டும். You can’t be too safe. அதுவும், மக்களுடன் தொடர்ந்து, தொடர்பில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு, எங்கிருந்தும் பிரச்சனை வரலாம். விழிப்புடன் இருக்க வேண்டும். வேலையை விரும்பிச் செய்ய வேண்டும். அந்த வகையில், சிக்கலைக் குறைக்கலாம். 

உதாரணத்திற்கு, அறைகளை தினமும் சுத்தம் செய்வோம். ஏதோ ஒரு நாள், ஏதோ ஒரு குறை இருக்கலாம். அதை வாடிக்கையாளர் பார்த்து, சர்வீஸ் சரியில்லை என்று ஒட்டுமொத்தமாக report எழுதி வைத்துப் போவார். அவருக்கு வேறேதோ மன உளைச்சல் காரணமாகக் கூட இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒவ்வொரு நாளும்,  காலை உள்ளே நுழையும்போதும், “I am going to give my best. இன்று சிறப்பாக வேலை செய்வேன்” என்ற உற்சாகத்துடன் நுழைவேன். 

ஒவ்வொரு பணியாளரும், அவர் பொருப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த ஹோட்டலில் உள்ளவர்கள், அதை முழுமையாக உணர்ந்து செயல்படுகிறார்கள். அதை உணரச்செய்தது, எனக்கான பெரிய சவால் தான்.

பெண்கள், ஒரே சமயத்தில், பல வேலைகளை செய்யக்கூடியவர்கள் தான். ஆனால், எல்லா வேலையும் நானே செய்வேன் என்ற பெயரில், வருத்திக் கொள்ளக் கூடாது. திறமைசாலிகளை தேர்ந்தெடுத்து, குழுக்களை அமைத்து, அவர்களை நிர்வகிக்கச் செய்தேன். குழுக்களை நான் மேற்பார்வையிட ஆரம்பித்தேன்.

சவால்களை அடுத்த கட்டத்திற்கான படிகளாக பார்த்ததால் தான், நகர்ந்து செல்ல முடியும். சவால் வரும்போது, ஏன் இப்படி? இதில் நமக்கான படிப்பினை என்ன என்று பார்க்க வேண்டும். குழப்பம் நேரும் போது, கடற்கரை மணலில் நீண்ட தூரம் நடப்பேன். ஆகாயத்தை வெரித்துப் பார்த்து, கண்களில்  நீர் வற்றிப்போகும் வரை, அமர்ந்திருப்பேன். மைலாப்பூர் பாபா கோவிலுக்குச் சென்று, அவருடன் பேசிக்கொண்டிருப்பேன். கடைசியில், எல்லாவற்றிற்குமான விடை, நம்மிடமே உண்டு, என்பதை உணர ஆரம்பித்தேன். 

என்னை சுற்றி உள்ளவர்களின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்பேன். தேவையானவற்றை எடுத்துக் கொள்வேன். என் செயல்களுக்கு, நான் பொறுப்பேற்றிக் கொள்வேன். பொறுப்பை ஒரு காலமும் உதறிச் செல்ல மாட்டேன். 

கே:   ‘டச்சஸ் கிளப்’ பற்றிய அறிமுகம்?

ப:   ‘டச்சஸ் கிளப்’ (Dutches Club) ஆரம்பித்து, 20 வருடங்கள் கடந்து விட்டது. பெண்கள் பலரை ஒன்றிணைத்து, ஊக்கப்படுத்தி, பல செயல்களில் ஈடுபட செய்வது தான் இதன் நோக்கம். பெண்களுக்கு பேசப் பிடிக்கும். உணர்வுகளை பரிமாறிக்கொள்ளப் பிடிக்கும். இப்படிப்பட்ட பெண்களுக்கான தளம் தான் ‘டச்சஸ் கிளப்’. 

நான் சென்னை வந்த புதிதில், நண்பர்களை தேடி அலைந்தேன். ஒரு கட்டத்தில்,  கணவரும் ரொம்ப பிஸியாக இருந்தார். சில சமயங்களில் தனிமை கொடுமையாக இருக்கும். ஆண்களுக்கு இது புரியாது.  இங்கே உள்ள ஒரு 300 பெண்களில், உங்களுக்கான தோழிகளை நீங்கள் கண்டறிவீர்கள். இடம், நடை பேச்சு என, பலவற்றில் இணைவீர்கள். 

இதில் பெருமைப்படும் விஷயம் என்னவென்றால், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக, சில பெண்கள் எங்களுடன் தொடர்ந்து பயணித்து வருகிறார்கள். தாயாய், பாட்டியாய், எங்களுடன்  வளர்ந்து வருகிறார்கள். 

கே:   பரபரப்பான சூழலில், தங்களுடைய நலனை பாதுகாக்க, தாங்கள் எடுக்கும் முயற்சி?

ப:   இந்த இரண்டும், நம் அன்றாட வாழ்க்கையில், நம்முடன் தொடர்ந்து வருபவை. இவற்றைப் பிரித்து பார்க்க முடியாது. பிரிக்கவும் கூடாது. நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், வேலையில் கவனம் செலுத்த முடியும். சிலவகை வியாதிகள், நம் கட்டுப்பாட்டிற்கு மீறியவை. அதை பற்றி நாம் பேச வேண்டாம். அதைத் தவிர, lifestyle diseases, நம் கட்டுப்பாட்டில் இருக்கு. 

சரியான உணவுவகைகளைத் தேர்வு செய்யுங்கள். நிச்சயம் பட்டினி கிடக்க வேண்டாம். போதுமான அளவு உடற்பயிற்சி தேவை. அதற்கென்று உடலை வருத்திக் கொள்ள வேண்டாம். Be mobile. நடந்து கொண்டே இருங்கள். செயலாற்றிக் கொண்டே இருங்கள். (தன் ஸ்மார்ட் வாட்சை காண்பித்து) இது எனக்கு ரொம்பவே உதவியா இருக்கு. தினமும் 10,000 அடிகள் கண்டிப்பாக நடந்து முடிப்பேன். End of the day, who are you answerable to? To yourself. 

இதைத்தவிர, குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் அதிக நேரம் செலவிடுங்கள். 

கே:  இத்தனை தூரம் வந்த பிறகு, திரும்பி பார்க்கும் போது எப்படி இருக்கு? 

ப:    Somethings are meant to be,  Padma. 

கே:  விதியைச் சொல்கிறீர்களா?

ப:  விதி என்பது, எங்கோ, ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டிருக்கு. அதைப் பற்றி நாம் யோச்சித்து, தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், இன்றைய பொழுது, நம்கையில் உண்டு. எதிர்காலத்தை நம் நிகழ்காலம் தீர்மானிக்கும்.  You can’t aspire for something, by not being prepared for today. Face your fears. வாழ்க்கை நகர்ந்து கொண்டேதான் இருக்கும். நமக்காக ஒருபோதும் நிற்காது. அதேசமயம், நமக்காக வேறொருவர் வேலை செய்ய முடியாது. 

என்னைப் பலர் கேட்டிருக்காங்க, “நீ இப்படி ஓடி உழைக்கணுமா என்ன?” என்று. இது என் தனிப்பட்ட பயணம். நான் எனக்காக அமைத்துக் கொள்ளும் பாதை. தினமும் மசாஜ் செய்துகொண்டு, பட்டு உடுத்தி, வைர நகை அணிந்து, ஏசி அறையில் இருந்தால் கூட, என் காலம் நிம்மதியாக கடந்து போகும். ஆனால், அதில் எனக்கு நிம்மதி கிடைக்குமா என்றால், இல்லை. பிறருக்கு அதில் சந்தோஷம் இருக்கலாம் . எது உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் தருதோ, அதை செய்யுங்கள். 

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்கான purpose, நோக்கம் அல்லது குறிக்கோளை கண்டறியுங்கள். சிலர், சிறு வயதிலேயே இதை கண்டறிவார்கள். சிலர் தாமதமாக உணர்வார்கள். உங்கள் நோக்கத்தை கண்டறிந்து, அதை நோக்கி செயல்படுங்கள். என்னுடைய நோக்கம், பல மனிதர்களைச் சந்திப்பது. முடிந்தவரை, பிறர் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவருவது. இவற்றில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். 

கே:   இதை ஏன் செய்தோம் என்று வருந்தியது உண்டா?

ப:   இது வரை இல்லை. தவறு செய்வது மனித இயல்பு தானே. நானும் மனுஷி தான். ஆனால், அவற்றிலிருந்து பாடம் கற்று கொண்டேன்.  அவற்றிலிருந்து வெளியே வந்து விட்டேன். பல தேவையற்ற உறவுகளிலிருந்தும், நட்பிலிருந்தும் விலகி விட்டேன். I cut myself away from all toxic relations. ஆனால் அந்த சமயத்தில், அது என்ன என்று தெரிந்து கொள்வதற்காக, நான் அதை கடக்க வேண்டி இருந்தது. 

இன்று, ஒரு முதிர்ச்சி அடைந்த பெண்மணியாக, சற்று தெளிவான சிந்தனையுடன், வளர்ந்து நிற்கிறேன். இன்றும் தவறுகள் நேரலாம். ஆனால் அவை, முன் போல இருக்காது. சரியான மாற்றங்களை மேற்கொண்டு, சரியான பாதையில் தான் வந்திருக்கிறேன் என்ற திருப்தியும் நிம்மதியும் எனக்கு இருக்கு.

கே:   தாங்கள் கடந்து வந்த மைல்கற்கள்?

ப:   சில வருடங்களுக்கு ஒரு முறை, மைல்கற்களை கடந்து வருகிறோம். இன்றைய நாள், என்னை சுற்றி, ஒரு அருமையான குழுவை உருவாக்கி உள்ளேன். அதுவே எனக்கான பெரிய சாதனை தான். 25 வருடங்களுக்கு முன், அங்கொருவர், இங்கொருவர் என்று வேலை செய்து வந்தனர். இன்று, அனைவரும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் யாரும் எனக்காக வேலை செய்ய வில்லை. இந்த நிறுவனத்திற்காக வேலை செய்கிறார்கள். 

கே.   உங்கள் துறையில் தாங்கள் விட்டுச்செல்ல நினைக்கும் அடையாளம் என்னவாக இருக்கும்?

ப.   Doing authentic business. வேலையை அதன் உண்மைத்தன்மை குறையாமல், தரம் குறையாமல் செய்தேன் என்ற பெயர் நிலைத்திருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து, அதை நடத்தி வரவேண்டும். எனக்கான வலிமையை, நான் என் குடும்பத்தாரடமிருந்து தான் பெற்றேன். நானும் என் கணவரும், குடும்பத்துடன் இணைந்து செயலாற்றியதை, என் பிள்ளைகள் பார்த்து வளர்ந்தனர். ஆகையால், அவர்களுக்கும் தெரியும். 

அடுத்து, இந்த ஹோட்டல், இன்னல்களை சந்தித்தாலும், தொடர்ந்நு ஜெயித்து கொண்டே வரவேண்டும். அதே சமயம் ஏமாற்று முறையில் ஜெயித்ததாக இருக்கக் கூடாது. பலவருட பாரம்பரியத்தை கட்டிக்காத்து வருகிறோம். இது மேலும் தொடர வேண்டும். 

கே.  ‘பெண்ணதிகாரம்’ என்ற சொல், உங்கள் பார்வையில்? பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய அம்சங்கள்?

ப.   பலமான ஒரு பெண்ணாக இருக்க வேண்டும். உடலளவிலும், மனதளவிலும். சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் தைரியம் வேண்டும். வேண்டாம் என்று நினைக்கும் மக்களிடமிருந்தும், சூழ்நிலைகளிலிருந்நும் தைரியமாக விலகிட வேண்டும். பிறருக்கு, என்று மட்டுமே இல்லாமல், உங்களுக்கான வாழ்கையை வாழுங்கள். 

அதேசமயம், be useful. உதவிசெய்து அதில் பட்டம் பெற அவசியம் இல்லை. உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு, முடிந்த உதவிகளை செய்து வாருங்கள். உங்கள் உரிமைகளை இழக்காதீர்கள். உங்களை ஊக்கப்படுத்தி, வலிமையாக்கும் ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். 

மற்றவர்கள் நம்மை பயன்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதற்கு கல்வியறிவு ரொம்ப முக்கியம். முக்கியமாக, மற்றவர்களிடம் அழுது நின்று, வேலையை சாதித்துக் கொள்ளும் எண்ணம் வேண்டவே வேண்டாம். கூடுமானவரை, உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு காணப்பாருங்கள். நம்பிக்கையானவர்களின் ஆலோசனை பெருவதில் தவறில்லை. 

I am constantly pushing away people, from whom I don’t get the right vibe Padma. இருப்பது 24 மணி நேரம் தான். அதை, சரியான நபர்களுடன் செலவிடவேண்டியது அவசியம். 

கே.   புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டா? பிடித்த எழுத்தாளர்கள்?

ப.  முன்பெல்லாம், அதிகம் வாசித்து வந்தேன். இப்பொழுது இல்லை. ஆனால், வேறு சில வகையில், வாசிப்பை மேற்கொள்கிறேன். இன்று காலை கூட, சமஸ்கிருத வகுப்பு சென்று வந்தேன். வேறு சில மொழிகளைக் கற்று வருகிறேன். 4 வருடங்கள் முன்பு, அறுபது வயதை கடந்த பின்னர், பஜனை பாடும் வகுப்பில் சேர்ந்தேன். கற்று கொள்ள வயது வரம்பேது?

கே.  வெளிநாட்டு பயணங்களின் போது, தாங்கள் ரசித்த ஹோட்டல் மற்றும் அதன் காரணம்?

ப.  எனக்கு பாலி மிகவும் பிடித்தமான இடம். அங்கே இருப்பவர்கள், சாமானிய, எளிய மக்கள். எல்லாவற்றிலும் நேர்த்தி இருக்கும். அழகாக வைத்திருப்பார்கள். நாங்கள் பெரிய குடும்பமாக சென்றிருந்த போது, தம்பதிகள் ஒவ்வொருவரும், தனி வில்லா எடுத்துத் தங்கினோம். ஒவ்வொரு வில்லாவிலும், ஹால், பெட்ரூம், கிட்சன், நீச்சல் குளம் இருக்கும். 

எனக்கு நல்லா நினைவிருக்கு. தினம் காலை எட்டு மணிக்கு, அங்கே பணி செய்யும் ஆடவர்கள், அவர்களுடைய பாரம்பரிய உடை அணிந்து, ஒரு கையில் பெரிய தாம்பாள தட்டு நிறைய பழங்கள் மற்றும் காலை உணவிற்கான பதார்த்தங்களை, ஒவ்வொரு வில்லாவிற்கும் சுமந்து வருவார்கள். அவர்களே உள்ளே வந்து, காலை உணவை சூடாக சமைத்து பரிமாறுவார்கள். பொதுவான பஃபே சிஸ்டமிலிருந்து  இது சற்று வித்தியாசமாக இருந்தது. 

நான் ஒரு ரிசார்ட்டைத் தொடங்கினால், இந்த முறையை பின்பற்றுவேன். 

கே.  உந்துதலாக இருப்பவர்கள் யார்? Your inspiration?

ப.   அந்தந்த சமயத்தில் என்னை வியக்கவைத்த ஆணும் பெண்ணும் எனக்கான inspiration தான். சுஹாசினி மணிரத்னம் எனக்கு மிகவும் பிடித்த தோழி. ரொம்ப ஆக்டிவா இருப்பாங்க. பல வேலைகளை திறமையுடன் செய்யக்கூடியவர். அனைவருடனும் தொடர்பில் இருப்பார். 

அடுத்து, பூர்ணிமா பாக்கியராஜ். அதிகம் அலட்டிக் கொள்ளாத அமைதியான பெண்மணி. அவர் மகளும், என் மகளும், ஒன்றாக  ஒரே வகுப்பில் படித்தவர்கள். நிறைய சவால்களை சந்தித்த பெண்மணி, அவற்றை அழகாக சமாளித்து வெளியே வந்தார். 

அடுத்து எழுத்தாளர் சிவசங்கரி அம்மா. மனதளவில், ரொம்ப தைரியசாலி. கணவரை இழந்த பின், தன்னை எப்படி பார்த்துக் கொண்டார், என்பதெல்லாம் எனக்கொரு பெரிய உந்துதல். 

அடுத்த நபர், டாக்டர் பிரித்திகா சாரி. கேன்சரைப் போராடி வென்ற தைரியசாலி.

கே.  புழுதி ‘பெண்ணதிகாரம்’ இதழின் வாயிலாக, பெண்களுக்கு தாங்கள் சொல்ல நினைக்கும் செய்தி?

ப.  முதலில், உங்களை பார்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். உடற் பயிற்சி செய்யவேண்டும். பிறகு அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். Don’t look food as your comfort. Look at food as, giving you strength. 

உங்கள் நோக்கத்தை அறிந்து செயல்படுங்கள். ஒவ்வொரு நாளும் காலை எழுந்திரிக்கும் போதே, அன்றைய  நாளுக்கான  நோக்கத்துடன் எழுந்தால், உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். வயதாகிவிட்டதே, என்று யோசிக்க வேண்டாம். எல்லா வயதிலும், ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டே இருக்கலாம். Be open to learning. இருப்பது ஒரு வாழ்க்கை. கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கு. 

முக்கியமாக அன்பு, கருணை அனைவருக்கும் தேவை. கூடுமானவறை அனைவருடனும் அன்பைப் பகிருங்கள். என் கண்கள் கலங்கினால், அது அன்பின் காரணமாகத் தான் இருக்கும். 

இந்த உலகில் நாம் அனைவருமே ஒரு தூசு தான். ஆனால், ஏதோ ஒரு வகையில், உலகைச் சிறப்பாக்க, நாம் அனைவரும் பங்காற்ற வேண்டும். அன்பான உள்ளத்தோடு அனைவரும் இணைந்தால், எப்படிப்பட்ட அற்புத உலகமாக இது மாறிப்போகும் என்று கற்பணை செய்து பாருங்கள்? 

நன்றி.

WhatsApp Image 2024-03-08 at 7.48.52 PM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *