1.உங்களைப் பற்றிய அறிமுகம்?

         பென்சில் முனையில் தொடங்கிய என் கலைப் பயணம் இன்று பிரான்ஸ் ஸ்பெயின் என பல நாட்டவர்களிடம் சென்றடைவதில் பெரும் மகிழ்ச்சி. நான் நந்தினி ஜெயபாரதி “தி ஆர்டிஷன் வேர்ல்ட் மற்றும் கோணி பேக்ஸ்” இன் நிறுவனர். விளையாட்டாக தொடங்கிய என் கலைப் பயணம் இன்று என் வாழ்வாதாரமாக மாறியுள்ளது.

2.தொழிலில் பங்கேற்க, பெண்களை எப்படி ஊக்குவிக்கிறீர்கள்?

        சுதந்திரத்தைக் கேட்கும் பெண்கள் முதலில் நிதி சுதந்திரம் பெற வேண்டும். பெண்கள் மீதான அடக்குமுறைகளை தகர்த்தெறிய பெண்கல்வியும், வேலைவாய்ப்பும் தான் முக்கிய ஒன்றாக உள்ளது. குறிப்பாக பெண் தொழில் முனைப்பின் மூலம் தனக்கென்ற ஓர் அடையாளத்தையும் , சமூத்தில் பெண்கள் மீதான குறைந்த மதிப்பீட்டையும் உடைக்க முடியும் என்பது என் நம்பிக்கை. தொழில்முனைப்பில் பெண்கள் பலத்தரப்பட்ட சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இதன் மூலம் சுய நம்பிக்கையும் , எதிர்த்துப் போராடும் குணமும் இயல்பாய் தோன்றும். இதுவே ஒருநாள் வெற்றிகரமான பெண்தொழில் முனைவோராக மாற்றும்.

3.பெண் தொழில்முனைவோர்கள், இன்று எதிர்கொள்ளும் சவால்கள் என்னவாக இருக்கும்?

          பெண் தொழில்முனைவோராக சந்திக்கும் சிக்கல்களில் சமூக கலாச்சாரமும் , கட்டுப்பாடுகளும் முதன்மை வகிக்கிறது. பெண்ணின் போராட்டம் வீட்டைவிட்டு வெளி உலகை பார்ப்பதில் தொடங்கி பெண் கல்வி, வேலைவாய்ப்பிலிருந்து இப்பொழுது புதிய பரிணாமமாக தொழில் முனைப்பில் உருவாகியுள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்களை காட்டிலும் தொழில் முனைவோராக உள்ள பெண்கள் மீதான அடக்குமுறைகளும் , கேலி கிண்டல்களும் சற்று மேலோங்கியே இருப்பதைப் பார்க்க முடிகிறது.     ஒழுக்க வரையறையில் தொடங்கி , குடும்பத் தாக்கங்கள் , நிதியுதவி, நேரக் கட்டுப்பாடுகள், மூலதனத்திற்கு பாலின பாகுபாட்டு அணுகல், வணிக நெட்வொர்க், வேலையாட்கள், பெண் தொழில்முனைவோரிடம் பெண்கள் மட்டுமே வேலை செய்யும் நிலை, இவையெல்லாம் தாண்டி இதில் ஆண்களின் கௌரவக்குறைச்சல் என பல.  தொழில்முனைவு என்பது ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையாகவே எண்ணிக் கொண்ட சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட பாலின பாத்திரத்தை கையாள்வதும், இந்த பார்வைகளை மீறுவதும் பெரிய சவாலாக உள்ளது. எந்த புதுவகைப் பொருட்களாக இருப்பினும் சந்தைப்படுத்துவதில் பெரும் சிக்கலை பெண் தொழில் முனைவோர் சந்திக்கின்றனர் . பெண்கள் தொழில் முனைப்பில், தயாரிப்பாக இருந்தாலும், வணிக சேவையாக இருந்தாலும் தனக்கென ஒரு பிராண்ட்-யை உருவக்கவோ, வலுவாக்கவோ, குடும்பத்தையும் ஆண்களையும் முதலில் நாட வேண்டிய நிலை உள்ளது. இவையெல்லாம் தாண்டியும் பெண்களை வணிகத் துறையில் சாதித்தாலும் திறமையானவராக நம்பப்படுவதில்லை.

4. பெண் தொழில்முனைவோர்களுக்கு, உங்கள் ஆலோசனை?

         தொழில் தொடங்க நினைக்கும் பெண்களும் தனக்கென்று அடையாளமும், உள்ளுணர்வு திருப்தியும், போதும் என நினைத்தாலும் தொழில் தொடங்குவோரின் குறிக்கோள் பணம் ஈட்டுவது தான். ஆண்களை விடவும் பெண்கள் பண விவகாரத்தில் சாமர்த்தியமாகவும் ரிஸ்க் எடுக்கவும் பயப்படுவது இல்லை. வணிகக் துறையில் சாதித்து காட்டுவதற்கு ஆண் பெண் என்ற வேறுபாடு தேவையில்லை. எந்த ஆதரவும் துணையும் தேவையில்லை. திறமையும் துணிச்சலும் மட்டுமே போதும்.

5.இப்பணியில்,  உங்களிடைய குறிப்பிடத்தக்க சாதனைகள் அல்லது அங்கீகாரம்?

       தமிழக அரசின் முதலமைச்சர் விளையாட்டு கோப்பை நிகழ்விற்கு நினைவுப் பரிசாக இரு பரிமாண புகைப்படங்கள் செய்து கொடுத்தோம்.  பென்சில் முனையில் செதுக்கிய சிற்பம் உலக சாதனை படைத்துள்ளது.

6.உங்களுடைய பொழுதுபோக்கு எப்படி இருக்கும்?

        எங்களின் வணிகம் சார்ந்து புதுவகை பொருட்களை உருவாக்குவது. போட்டியாளர்களின் புது முயற்சிகளைப் பற்றி தகவல் சேமிப்பது. இன்றைய சூழலில் வளர்ந்து வரும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான உத்திகளைப் பற்றி தெரிந்து கொள்வது. வணிகம் சார்ந்த புத்தகங்கள் வாசிப்பது.

7.இறுதியாக, உங்களைச் சுற்றி உள்ள தோழிகளுக்கு நீங்கள் பகிர விரும்பும் அட்வைஸ் ?

          பெண்கள் தொழில் தொடங்க முன் வர தயங்குவதற்கு வணிக மூலதனமே முக்கிய காரணமாக உள்ளது. எனவே வங்கியின் மூலம் கடன் பெறுவதற்கான வழிகள் மற்றும் அரசுத் திட்டங்கள் மூலம் கிடைக்கும் மானிய நிதி கடன்கள் பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வது அவசியம். பெண்களின் தொழிலாக வகுக்கப்பட்ட தையல், அழகுக்கலை, ஊறுகாய், பொடி போன்ற ஸ்டீரியோடைப் தொழில்களை மட்டும் அல்லாமல் ஆர்வம் உள்ள அனைத்து துறைகளிலும் துணிந்து தொடங்க வேண்டும். எந்த ஒரு சூழலிலும் மற்றவரின் உதவிக்காகக் காத்திருக்காமல் தங்களை தற்காத்துக் கொள்ளும் திறன் ஒவ்வொரு பெண்ணுக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்.           வெற்றி என்ற எண்ணம் மட்டுமே நம்மை உயர்த்தி விடாது. வளர்ச்சிக்கான பாதையில் கிடக்கும் தடைகளை அகற்றி, தயக்கங்களை விரட்டி, முதல் அடியை எடுத்து வைத்தால் மட்டுமே நம்மால் இலக்கை அடைய முடியும்! வெற்றி வாகை சூட முடியும்!

3 thoughts on “

  1. நன்றி நந்தினி ஜெயபாரதி. Best guide for the woman who is looking forward to start a business. I’m doing first year ug. Thinking of develope my art skills even better and start a small business. I have seen all your works and got very inspired. All the very best for all your upcoming projects and shine more brighter. Take care.

  2. எனதருமை மாணவியின் வளர்ச்சியை கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க வளமுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *