‘பெண்ணதிகாரம்’ சிறப்பிதழுக்காக நான் சந்திக்கும் ஆளுமைகளின் பட்டியலை  தயார்செய்து, அவ்வப்பொழுது, என் ‘புழுதி’ குழுவினருடன் ஆலோசிப்பேன். ஜோதிடம் சார்ந்து ஒருவரை நாம் சந்திக்க வேண்டும் என்பதை குழுவினருடன் தெரிவிக்கையில், அவர்கள் தரப்பிலிருந்து ஒரு சின்ன மௌனம். அறிவியல், முற்போக்கு சிந்தனை, பெண்ணியம், விஞ்ஞானம், இலக்கியம், தொல்லியல் என்ற போக்கில் ஜோசியமா? என்ற எண்ணத்தின் வெளிபாடுதான் அந்த மௌனம். ஆனால், அதை நான் கவணிக்காத வாறு கடந்து சென்றேன். 

இதற்கான முக்கிய காரணம், ஜோதிடம் பலிக்கும், பலிக்காது, என்பதையும் தாண்டி, ‘ஒரு நெய் விளக்கேத்திட்டு வாங்க. எல்லாம் சரியா போகும்’ என்ற அந்த ஒரு வரி, பரிதவித்துக் கொண்டிருக்கும் உள்ளத்திற்கு,  பாலை வார்க்கும். தத்தளிக்கும் ஒரு ஆன்மாவுக்குக் கிடைத்த ஒரு கட்டுமரம் போல் இருக்கும்.  இன்று பலர் லட்சங்களில் பணம் வாங்கி கொண்டு, பணம் படைத்தவர்களுக்கு, motivational speech வழங்கி வருகிறார்கள். எத்தனை பேருடைய இதயங்களில் அந்த வார்த்தைகள் நம்பிக்கை ஒளியை ஏற்றிவைத்தென்று தெரியவில்லை.

முன் காலங்களிலிருந்தே, ‘நல்ல காலம் பொறக்குது’ என்ற நேர்மறையான வசணங்களைக் கேட்டுப்  பழக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் நாம் எல்ரோரும். பிறரின் நம்பிக்கையை கேலி செய்யும் எண்ணத்தை விட, பிறருக்கு ஏதோ ஒரு வகையில் நம்பிக்கை வார்க்கும் இவர்களுடைய வார்த்தை, எவ்வளவோ மேல். 

இன்று எத்துரையில் போலித்தனம் இல்லை? சரியானவர்களை தேர்வு செய்யாமல் போவது, தேர்வு செய்தவர்களின் குற்றமே ஆகும். இத்துரையில் என்னுடைய தேர்வு, திருமிகு பாரதி ஶ்ரீதர் அவர்கள்.   பாரதி ஶ்ரீதர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தன் பெண்ணின் பிரசவ நேரம் என்பதால் வெளி வேலை எதையும் ஒப்புக்கொள்வதில்லை என்று தெரிவித்தார். காத்திருக்க முடிவு செய்தேன், சில நாட்களில் மறந்தே போனேன். 

பின் அவரே ஒரு நாள் என்னை கைப்பேசியல் அழைத்தார். ஆச்சரியமும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு உணர்வுடன் பேசினேன்.  எங்கே சந்திக்கலாம் என்று கேட்டேன். அடுத்த மூன்று நாடகளில் ஹோட்டல் சவேராவில் சந்திக்கலாம் என்றார். அருமையான இடம், அழகான உரையாடல், தெளிவான பேச்சு. பல புதிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

நான் சந்தித்த பெண்கள் அனைவருமே, சமுதாயத்தில் ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியவர்களே என்பதில் ஐயமில்லை. ஆனால், திருமதி பாரதி ஶ்ரீதர் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் என்பது எதுவரை என்றால், கண்ணீருடன் ஒரு தாய், “உங்க போட்டோவ எங்க பூஜை அறையில வெச்சிருக்கேன் அம்மா” என்று சொல்லும் அளவிற்கு பலரின் மனதில் உயர்ந்து நிற்பவர்.

ஜோசியம், பெண்ணியம், கிரக பரிகாரம், புதுமையான சிந்தனை, உலகெங்கிலும் பல வாடிக்கையாளர்கள் என்ற ஒரு வித்தியாசமான கலவையாக நான் அவரை பார்த்தேன். நான் பார்த்து வியந்த திருமகு பாரதி ஶ்ரீதர் அவர்களின் நேர்கானல் இதோ..

கே. வணக்கம் அம்மா. உங்களைப் பற்றிய அறிமுகம்?

ப.  வணக்கம். நான் பாரதி ஶ்ரீதர். பிறந்தது சென்னையில். வளர்ந்தெல்லாம் தூத்துக்குடியில். அங்கே ஹோலி கிராஸ் (Holy Cross Anglo Indian) பள்ளியில் படித்தேன். பின் புனித மேரி கல்லூரியில் (St Mary’s College) ஆங்கிலத்தில் பட்டம் பெற்றேன். பள்ளி படிக்கும் போதே, பரதநாட்டியத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. ஏழு வயசுல அரங்கேற்றம். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில், நான் படித்ததைவிட நடனமாடியது தான் அதிகம். ஏறத்தாழ ஆயிரம் மேடைக்கு மேல பார்த்தாச்சு. துத்துகுடியில் SPIC, Indian Chamber of Commerce, மற்றும் எல்லா அரசு, தனியார் நிகழ்வுகளில், என் நடன நிகழ்ச்சி இருக்கும். நிகழ்வுக்குத் தலைமை தாங்க வந்த பி.எச. பாண்டியன், முன்னாள் ஜனாதிபதி வெங்கடராமன், கோசல் ராம் போன்ற பல பிரபலங்களிடம் நான் பரிசு வாங்கி இருக்கேன். கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம். திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் நான் தூத்துகுடியில் தான் இருந்தேன். என் கனவர் அங்கே சுங்க இலாகா அதிகாரியாக இருந்தார்.

பின் சென்னை வந்தாகிவிட்டது. இங்கே சரஸ்வதி கான நிலையத்தில், ரங்கநாயகி ஜெயராமனிடம் நடன பயிற்சி பெற்றேன். ரோட்டரி கிளப், லையன்ஸ் கிளப் நிகழ்வுகளுக்கு நடன நிகழ்ச்சிகளுக்கான பயிற்சி (choreography) அளிக்க ஆரம்பித்தேன். எனக்கு பக்கபலமா இருந்தது என் மாமியார். அவருடைய திடீர் மரணம் என்னை ரொம்பவே பாதித்தது. ஒரு வருட காலம் விட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். அந்த சமயத்தில், பிரபல ஜோதிடர் ஒருவர், என் குடும்பத்திற்கு வேண்டியவரும் கூட, தன் அலுவலக நிர்வாகப் பணிக்காக என்னை அழைத்தார்.

என் வாழ்வின் மிகவும் மோசமான காலகட்டம் அது. மாமியாரின் இழப்பில் இருந்து வெளிவர அங்கு வேலைக்கு சேர்ந்தேன். அந்த ஜோசியருடைய குடும்பத்தில் பல பிரச்சனைகள். அவர் இந்த தொழில் செய்வதையே அவர்கள் யாரும் விரும்ப வில்லை. இதுஎதுவுமே எனக்குத் தெரியாது. நான் எனக்கு தெரிந்த கம்பியூட்டர் வேலையை அங்கே செய்துகொண்டிருந்தேன்.

கே. நீங்கள் அவரிடம் ஜோசியம் கற்றுக்கொள்ள வில்லையா?

ப.  இல்லை. I was only an office staff. எனக்கு ஜாதக கட்டம் போடக் கூட அப்போ தெரியாது. நிறைய அவமானங்களை சந்தித்தேன். அந்த ஜோசியரின் குடும்பத்திலிருந்து ஒரு பெண் திடீரென்று உள்ளே நுழைந்து, என் புடவையை இழுத்து, என்னை வெளியே தள்ளினார். அவர்களுடைய குடும்ப பிரச்சனையில், நான் தாக்கப்பட்டேன். அந்த சமயத்தில் என் உடல் நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. முப்பது வயதில் கர்பப் பையை நீக்கவேண்டிய சூழல். அதை தொடர்ந்து இன்னோரு அறுவை சிக்கிச்சை. அதன்பின் இன்னொன்று. ஆறு மாத இடைவெளி, மூன்று மாத இடைவெளி என்று, நான்கு அறுவைசிகிச்சைகள் நடந்தது. பிள்ளைகள் வளர்ந்துவரும் நிலை, இனி போதும் என்று, அங்கிருந்து வெளியேரினேன்.

அதன் பின் என் தோழி ஒரு வியாபாரம் தொடங்கினார். அலுவலக நிர்வாகத்தில் அனுபவம் இருந்தபடியால், என்னை உதவிக்கு அழைத்தார். நானும் அங்கு வேலைக்குச் சேர்ந்தேன். இப்படியாக பல போராட்டங்களுடன் தான் என் career ஆரம்பமானது.

கே.  பின் இந்த துறைக்கு எப்படி வந்தீர்கள் ?

ப. எனக்கு தெரிந்த சினிமா நடன இயக்குனர் ஒருவர். அவருடைய மனைவி எனக்காக ஒரு பரிசை கொடுக்கச் சொல்லியிருந்தார். அந்த இயக்குனர் என்னை தொடர்பு கொண்டு, அலுவலகத்தில் காத்திருக்குமாறுச் சொன்னார். கொஞ்ச நேரம் கழித்தது, 90 வயதை கடந்த முதியவர் ஒருவர் உள்ளே வந்தார். யாரோ ரோட்ல போர பெரியவருக்கு நம் காசு போடுறமாதறி, நானும் டிராயரைத் திறக்க போனேன். உடனே அந்த நடன ஆசிரியர் உள்ளே வந்து, “மேடம், இந்த சாமியார், உங்களை பார்க்க வேண்டும் என்று சொல்லி, என்னுடன் வந்தவர்”னு சொன்னாரு. என் உடல் நிலை, முன் செய்துகொண்டிருந்த வேலை, எதுவுமே அவருக்கு தெரியாது.

என்னை பார்த்து, “நல்ல இருக்கியா?” என்று கேட்டார். பின், “காலம் மாறும் போது கிரகங்கள் மாறும்.  ஜோதிடத்தை படி. இந்த துறையை நீ விடாதே. தொடர்ந்து இதில் வேலை செய். உனக்குப் பயன்படாவிட்டாலும், உன்னைத் தேடி வருபவர்களுக்குப் பயன்படும்”னு சொன்னாரு. எனக்கு ஒன்னுமே புரியல.

“நீங்க எங்கிருந்து வர்ரீங்க”னு கேட்டேன். “நான் திருவண்ணாமலையிலும் இருப்பேன், கொள்ளி மலையிலும் இருப்பேன். என் கையில் உள்ள மூலிகையை உனக்குத் தர்ரேன். அதை நீ 10 பேருக்கு கொடு. அதனால அவங்க பயண்டைவாங்க. இந்த உலகம் பாராட்டும் அளவிற்கு நீ பெரிய ஆளா வருவே. யாருக்கு கர்மா தீரனும்னு இருக்கோ, தீரும் காலத்துல உன்னை வந்து பார்ப்பாங்க”னு சொன்னார். அவரை சந்தித்த அந்த சமயத்தில், என்னுடைய ஆரோகியம் ரொம்ப மோசமா இருந்தது. என் கையில், மூலிகை போன்ற, மூன்று பச்சை இலைகளை பொடுத்து, “இந்த ஒரு இலை, நோய் ஊற்றி ஏற்றினால், மூன்று நாட்களுக்கு எரியும். அடுத்தடுத்து மூன்று இலைகை ஒன்பது நாட்களுக்கு ஏற்றி வா” என்றதும் நான் விழித்தேன். பச்சை இலை எப்படி எரியும் என்று யோசித்தேன்.  அவர் என்னை பார்த்து, “நிச்சயம் எரியும்” என்று அவரே திரி போல திரத்துக் கொடுத்தார்.

அவர் இருந்த அந்த 20 நிமிடங்கள், ஏதோ ஒரு transcendental state, பரவச நிலை போல இருந்தது. அவர்கள் கிளம்பி சிறிது நேரம் கழித்து, என் நண்பரை அழைத்து, “யார் அவர்” என்று விசாரித்தேன்.  “எனக்கே நெரியாது, என் காருக்கருகே காத்திருந்தார். “நீ பார்க்கப் போகும் பெண்ணை நானும் சந்திக்க வேண்டும்” என்று சொல்லி என்னுடன் வந்தார்.

ஆறு மத காலம் கழித்து, நண்பர் வீட்டில் அதே சாமியாரை மீண்டும் சந்தித்தேன். “நான் சொன்னது பலித்ததா” என்னார். “இல்லை, நான் முயற்சிக்கவே இல்லை” என்றேன். “விதி உன்னை விடாது. இந்த துறையை நீ எடுத்தே ஆகனும். பத்து பேரை சந்தித்தே ஆகனும்” என்றார்.

அதன் பின், சமஸ்கிருத கல்லூரியில் Dr.ரகு என்பவரிடம் ஒரு வருடம் பயின்றேன். சூரியன் FMல் ராசிபலன் சொல்ல ஆரம்பித்தேன். தொடர்ந்து Big FM, அதன் பின் ராஜ் டீவி, மேகா டீவி என பயணம் இன்று வரை தொடர்கிறது. அன்று சாமியார் சொன்னது பலித்து விட்டது.

கே. சாமியார் சொன்னார் என்று நீங்கள் தேர்வு செய்த இந்த பயணம், எப்படி இருக்கு?

ப. 2005ல் சூரியன் FMல பேச ஆரம்பிச்சேன். 2007ல பிக் FM. பிக்FMல் இருக்குற கண்மணி என்பவர், ராஜ் டீவில ஒரு பெண் தலைமை ஏற்று நடத்தறதாகவும், அவரைப் போய் சந்திக்கும் படி சொன்னாங்க. அங்கே தான் எனக்கு மாலா மணியன் அவர்கள் அறிமுகம் ஆனவங்க. திருமதி மாலா அவர்கள் ரொம்ப ஊற்சாகப் படுத்தினாங்க. இதே ராசி பலனை வேறு விதமா, வித்தியாசமா சிந்தச்சு பேசச் சொன்னாங்க. அப்போ, கிரக பலன்களை மட்டுமே சொல்லாமல், ஒவ்வொரு கிரகத்தின் தன்மை என்ன, பலன்கள் என்ன, சாதகம் என்ன, பாதகம் என்னனு பேச ஆரம்பிச்சேன். It was a hit.

நிகழ்ச்சியோட TRP ரேட்டிங் அதிகமாச்சு. எந்த அளவுக்குனு பார்த்தீங்கன்னா, சன் தொலைகாட்சியின் முக்கியமான மதிய சீரியல் டயம். அதை விட்டு, மக்கள் இதை பார்க்க ஆரம்பித்தனர். என்னோட இந்த ‘பெண்கள் நேரம்’ நிகழ்ச்சி, தொடர்ந்து மூன்று வருடம் ஒளிபரப்பானது.

அந்த சமயத்தில் நான் இலங்கை போயிருந்தப்போ, பெண்கள் பலர் என்னை சந்திக்க வந்தாங்க. உங்க ஆலோசனைகளையெல்லாம் குறிப்பெடுத்து வெச்சிருக்கோம். ரொம்ப உதவியா இருக்குனு நன்றி தெரிவிச்சாங்க. அன்று சாமியார் சொன்னது பலித்தது. கேனடா, சிங்கபூர், மலேசியா, ஆஸ்டிரேலியா போன்ற நாடுகளிலிருந்து எனக்கு போன்கால் அவர் ஆரம்பித்தது. அதன் பின், மேகா டீவியில் சேர்ந்தேன். 2013ல் இருந்து இன்று அவரை, தொடர்ந்து என்னுடைய நிகழ்ச்சி ஒளிபரப்பாகுது.

இதற்கிடையில், நான்கு வருடங்கள் முன், ராஜ் டீவியின் நிர்வாக குழுவில், Independent Lady Directorஆக நியமிக்கப்பட்டுள்ளேன். அது ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பேணி. திரு. ராஜேந்திரன் அவர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில், 53 வயதில் corporate affairs பரிட்சை எழுதினேன். பின், Ministry of Home Affairsல் இருந்து vigilance officer வந்து சர்வே செய்த பிறகு, தேர்வானேன். 2011இலேயே யூ டியுப் நிகழ்ச்சிகளில் பேசத் தொடங்கிவிட்டேன்.

விகடன், சக்தி விகடன்ல தொடர்ந்து எழுதிட்டு வர்ரேன். தின மலரில் எழுதரேன். News 7 சேனலில் பேசுகிறேன். சமீபத்தில், News 7 சேனலின் சார்பாக, ‘தங்க தாரகை’ விருது பெற்றேன். இத்துரையில் பல வருடங்களாக நீடித்திருப்பதால், தொடர்ந்து Times of India விருதை பெற்று வருகிறேன். சென்ற வருடம், Times of Indiaவின காபி டேபிள் புக் (coffee table book)ல் நான் இடம்பெற்றேன். அதில் இடம்பெற்ற சென்னையைச் சேர்ந்த 25 பிரபலங்களில் நானும் ஒருவர்.

ஆண்கள் மட்டுமே அரசாட்சி செய்யும் இந்த துறையில் நானும் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன், செய்து கொண்டே வருகிறேன்.

கே. இந்த துறைக்கும் கல்வி, படிப்பு, பட்டம் எல்லாம் உண்ணடு, இல்லையா?

ப.  இருக்கு. எல்லாமே இருக்கு. ஆனா, இந்த துறையைப் பொருத்த வரை, அனுபவம் தேவை. இத்துரையில் பட்டப்படிப்பு, முதுகலை பட்டம், ஆராய்ச்சி கூட செய்யலாம். ஆனால், வாக்கு பலிதம் ரொம்ப முக்கியம். அதற்கு அனுபவமும், பயிற்சியும் தேவை.

கே. இத்துறையில் தாங்கள் சந்தித்த போட்டிகள், பெண் என்பதால் எநிர்ப்பு உண்டா?

ப. பலவித எதிர்ப்புகளை சந்தித்து வருகிறேன். ஆணாதிக்கம் நிறைந்த இந்த துரையில், என்னை மேலே வர விடமாட்டார்கள். ஏதவது டீவி நிகழ்ச்சிக்காக என்னை நடுவராக தேர்வுசெய்தால், மற்றவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆண் தான் நடுவரா இருக்கனும்னு வர்புருத்துவாங்க. ‘அவங்கள கூட்டதோட உட்கார சொல்லுங்க’னு கமென்ட் பாஸ் பண்ணுவாங்க. நான் ஏன் அப்படி உட்கார வேண்டும்? எனக்கும் வித்தை தெரியும். முறையா படிச்சிட்டு வந்திருக்கேன். I have the same and even better knowledge than they have. நான் வரமாட்டேன்னு சொல்லிடுவேன்.

இதைதவிற, ஆரம்ப நாட்களில் ரொம்ப அவமானப் பட்டிருக்கேன். நிறைய டீவி சேனல்ல கூப்பிடுவாங்க. ஒரு சேனல்ல “உனக்கு மாதம் ஒன்றிர்க்கு எத்தனை பவுடர் டப்பா தேவை படும்”னு கேட்டாங்க. ‘எனக்கு வேண்டாம். அதெல்லாம் உங்களுக்கு தான் தேவைப் படும் போல இருக்கு, போய் உங்க முகத்தை கண்ணாடில பார்த்துகோங்கனு” சொல்லிட்டு வந்துட்டேன்.

இன்னோரு சேனலில், “காலைல நீங்க கிளாமரா டிரெஸ் பண்ணிட்டு வரணம்”னு சொன்னாங்க. “ராசி பலன் சொல்ல கிளாமரா எப்படி பா டிரைஸ் பண்ண முடியும்? அதுக்கு நீ நடிகை ரம்பாவை வெச்சு தான் ராசிபலன் நிகழ்ச்சியை நடத்தனும்”னு சொல்லிட்டு வந்தேன்.

இந்த துறையில், ஆண்களைவிட, பெண்கள் தான் எனக்கு உதவினார்கள். அன்று என்னை கீழே இறக்க முயண்ற அத்தனை பேரும் இன்று என் வளர்ச்சியைப் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

கே.  போதுவாக  ஜோதிடம் என்பது ஒருதரப்பில் பிற்போக்காகவும் ஒருதரப்பில் கணிதமாகவும் பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில்,  நீங்கள் எப்படி இதை கையாள்கிறீர்கள்?

ப.  நான் அறிவியல் ரீதியாகவும் பார்பேன், கணித்தும் சொல்வேன். உதாரணத்திற்கு, இப்போ பெண்கள் பலருக்கு, குழந்தை பிறப்பில் சிக்கல் உண்டு. Harmone  imbalance இருக்கு. காரணம் என்ன? பல நூறு வருடங்கள் முன் இருந்த அதே ஒன்பது கிரகங்கள் தான் இன்றைக்கும் இருக்கு. வாழ்ககை தரம் மாறிபோச்சு, பழக்கங்கள் மாறி போச்சுனு சொல்றோம். ஆனால் கிரக நிலையிலும் மாற்றங்கள் ஏற்படுது. சில வருடங்களுக்கு முன் பெண் பூப்பெய்தல் என்பது 13 வயது முதல் 16 வயது என்று இருந்தது. இப்போ, பத்து வயசுலயே ஆகுறாங்க.

ஆயிரம் அமாவாசை, ஆயிரம் பௌர்ணமி கடந்த பின், பூமியின் நிலை மாறும். சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் கோல்களின் நிலை மாறும். அப்போ, மனிதனின் மனோபாவம் மாறும். சாப்பாட்டுப் பழக்கம், தூக்கப் பழக்கம் எல்லாமே மாறும்.

 ஜோசியத்தில், வின்வெளி அம்சம் (galaxy) ரொம்ப முக்கியம். சுக்கிரன் என்பது வீனஸ். சுக்கிரன் பூமிக்கு அருகாமையில் வரும்போது, sexual perversions அதிகமா இருக்கும். திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது, வயது வித்தியாசம் பாராமல் சேர்ந்திருப்பது அல்லது திருமணம் செய்துகொள்வது, இதெல்லாம் இப்போ அதிகமானதை நாம பார்க்கிறோம். விஞானிகள் என்ன சொல்றாங்க, Venus is coming near to the Earth என்று சொல்லியிருக்காங்க. அப்போ, அதன் தாக்கம் இருக்கத்தானே செய்யும்! திருமண பந்தம் வேண்டாம் என்றிருப்பவர்கள், பின்நாளில் அவதிபடுவதை நான் பார்த்திருக்கிறேன். 55 வயதில், 60 வயதில் பெண் கிடைக்குமா என்று ஜாதக்கத்தை எடுத்துக் கொண்டு வருபவர்களும் உண்டு.

முன் காலங்களில், ஆணும் பெண்ணும் பார்த்துகொள்ளாமலேயே,  ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம்  செய்துகொண்டார்கள். இன்றைக்கு அவ்வளவு துல்லியமா கணிக்க கூடியவர்கள் மிக குறைவு. இப்பவும் ஜாதகம் பார்க்கும் போது, ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தை பாக்கியம் இருக்கான்னு பார்பேன்.  வழியே இல்லை என்றால் தத்தெடுக்க பரிந்துரைப்பேன்.  

இன்று வளர்ச்சி என்ற பேரில், பல பெண்கள் குழந்தை பெத்துக்க மறுக்குறாங்க. எல்லோருமே வாடகை தாய் மூலமா குழந்தை பெத்துக்கறது ஆரோகியமான விஷயம் இல்ல. பிரபலங்கள் செய்து கொள்வது வேறு. வாய்ப்புள்ள பெண்கள் அதை நோக்கிப் போவது தவறு.

ஒரு தம்பதி என்னிடம் வந்தனர். இருவரும் மருத்துவர்கள். குழந்தை பேறு இல்லை என்பது அவர்களுடைய குறை. நான் அவர்களுடைய கட்டத்தைப் பார்த்து, “இரண்டு பேரும் மருத்துவர்கள் தானே, நான் சொல்வதை தவறா எடுத்துக்காதீங்க. உங்க கணவருடைய விந்தனுவில் கோளாறு இருக்கு. உங்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு. ஆனால் சிகிச்சை தேவை.” என்றேன். “வெறும் பேப்பரை பார்த்துட்டு எப்படி சொல்றீங்கனு” அந்த அம்மா கேட்டாங்க. “பரிசோதனை பண்ணிட்டு எனக்கு சொல்லுங்க” என்று அவர்களை அனுப்பிவைத்தேன்.  சில நாட்களில் அந்த அம்மா மறுபடியும் போன் பண்ணி, “நீங்க சொன்னது சரிதான்” என்றார். சிகிச்சை எடுத்து, இப்போ நான்கு நாட்களுக்கு முன் அவங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு.

என்னதான் படிப்பும் விஞ்ஞானமும் இருந்தாலும், எல்லாவற்றிற்கும் அப்பால் கிரகங்கள் நமக்குச் சொல்லும். அது 100% உண்மையும் கூட. அதை சரியாக கணித்துச் செல்லத் தெரிய வேண்டும். அதற்கு அனுபவம் தேவை.

கே.  எதிர்காலத்தை கணிப்பதற்கு அப்பால், பெண்களுக்கு தனிப்பட்ட வளர்ச்சிக்கான கருவியாக, ஜோதிடதம் செயல்படுமா?

ப.   நான் நிகழ்ச்சிகளில் சொல்லும் பலவற்றைப் பெண்கள் எழுதி வைத்துப் பயண்டைகிறார்கள். ஜோசியம் சொல்வதையும் தாண்டி, பலருக்கு நான் கவுன்சிலிங் (counselling) கொடுத்து வருகிறேன். என்னிடம் வரும் சில பெண்கள், ‘சாமிக்கு நான் இதை செய்தால் என் பிள்ளை மாறிவிடுவானா? என் கணவர் திருந்தி விடுவாரா?” என்னு கேட்பார்கள். எந்த குடிகாரனும் சரியாதில்லை. அவங்க கிரக நிலையை பார்ப்பேன். எதுவும் சரியில்லை என்று தெரிந்தால், ‘உன் மகன், இப்படி தான். உன் கணவர் இப்படி தான். நீ மாறனும் உன் மனசும் மாறனும். உங்க வளர்ப்பும் இதற்கு காரணம் என்பதை சுட்டிக் காட்டுவேன்.

பல தாய்மார்கள், வேலைக்குச் செல்லவேண்டும் எனபதால், குழந்தைகளை உறவினர் வீட்டிலும் தன் வீட்டிலும் வட்டுச் செல்லார்கள். இதனால், தகப்பனால், உறவினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பல பெண்கள் என்னிடம் வந்திருக்காங்க. அவங்களுக்கு நான் கவுண்சிலிங் கொடுப்பேன்.

ஒரு அம்மா அவங்க பெண்ணை அழைச்சுட்டு வந்தாங்க. அவளுக்கு 23 வயசு. கர்பப்பை இல்லாமலேயே பிறந்த பெண் அவள். ஒரு பரிகாரம் செய்யச் சொன்னேன். பரிகாரத்தை செய்த பின் என்னை பார்க்க வந்தாங்க. அந்த அம்மா கண்ணீரோட, “உங்க படத்தை நாங்க பூஜை அறையில வெச்சிருக்கோம். பரிகாரத்தை முடிச்சு, டாக்டர் கிட்ட பரிசோதனைக்குப் போன பிறகு, இப்பதான் endometrium wall வளர ஆரம்பிச்சிரிக்கு, இன்னும் ஆறு மாதத்தில் மாத விடாய் ஆரம்பிக்கும். அதன் பின் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்துவைக்கலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு” என்று கண்ணீரோட அந்த அம்மா வந்து சொன்னாங்க.

என்னை தேடி வரும் 10ல் 5 பேருக்கு நன்மை நடந்தால் கூட போதுமே. மீதி ஐந்து பேரோட கர்மா, வேறு எங்காவது தீர்க்கப்படும். ஆனால் எனக்கு சரியாகலையேனு வருத்தப்படுவாங்க. மக்களுக்கு ஒரு விஷயம் புரிய வேண்டும். கர்மா என்று உண்டு. அதை தீர்த்தே ஆக வேண்டும். இவ்வளவு ஏன், என் தம்பிக்கே என் மீது கோபம். அவனுடைய பொருளாதார பின்னடைவை என்னால் தீர்க்க முடியவில்லை என்று. என்னால் முடிந்த உதவியைச் செய்து வருகிறேன். அவர் கர்மாவை, அவர் அனுபவிக்கனும்.

கே.  ஜோதிடம் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம் என்றால், எந்த இடத்தில் மூட நம்பிக்கையாக மாருகிறது?

ப.  அதை நாம் எப்படி எடுத்து கொள்கிறோம் என்பதை பொருத்தது. படிப்பரிவு இல்லாத ஒரு சிலர், என்னை முழுமையா நம்பி வருவாங்க. கொஞ்சமா படிப்பறிவு இருக்கறவங்களுக்கு தான் மூட நம்பிக்கை அதிகமா இருக்கும். எனக்கு தெரிந்த ஒருத்தர். படிச்சவங்க தான். ஒன்னு, ஜாதக பொருத்தம் பார்த்து பெண்ணுக்கு திருமணம் பண்ணி இருக்கனும். இல்ல, நம்பிக்கை இல்லை என்ற பேரில், எதையுமே பார்க்காம திருமண முடிவை எடுத்திருக்கனும். இரண்டையும் விட்டு, “சாமி கிட்ட பூ போட்டுப் பார்த்தேன். தெய்வம் உத்தரவு தந்தது. நம்பி திருமணம் செஞ்சுவெச்சேன். இப்போ பிரச்சனையா இருக்கு”னு  வந்தாங்க. “இந்த திருமணத்திற்கு நான் பொருத்தம் பார்கல. நீங்களா கோவில்ல சாமிகிட்ட உத்தரவு வாங்கி பண்ணீங்க. இப்ப கோவில்ல  போய் தான் நீங்க கேட்கனும்” என்று சொல்லிவிட்டேன். அந்த பெண் ஜாதக படி, முதல் திருமணம் நிலைக்காதுன்னு இருக்கு. இங்கே யாரை குரை சொல்ல முடியும்? இது தான் விதி, destiny.

சின்ன வயதில் கணவனை இழந்த பெண்களை அவங்க தாய்மார்கள் கூட்டிட்டு வருவாங்க. சிலர் மூட நம்பிக்கை என்ற பேரில்,  “எங்க குடும்பத்துல மறு மணம் பழக்கமில்லைங்க”னு சொல்லுவாங்க. “அடுத்த ஏழு வருஷத்திற்கு திருமணம் செய்ய கூடாதுன்னு சொல்லியிருக்காங்க”னு என்னிடம் சொல்லுவாங்க. “ஒரு அம்மாவா உன் பெண்ணுக்கு எது நல்லதுன்னு உனக்குத் தெரியாதா? யார் அது ஏழு வருடங்கள் காத்திருக்கச் சொன்னது” என்று சண்டை போட்டு, பல பெண்களுக்கு மறுமணம் செய்து வைத்திருக்கிறேன்.

அந்த பெண்கள் என்னை அம்மாவா பார்குறாங்க. நான் உண்டாயிருக்கேன், குழந்தை பிறந்திருக்குனு போன் பண்ணி சொல்லும் போது, ரொம்ப சந்தோஷமா இருக்கும். கோடிரூபா கொடுத்தாலும் இந்த சந்தோஷம் வராது. 

ஒரு ஜோசியர் கிட்ட என்ன கேட்கனுமோ, அதை தான் கேட்கனும். நாங்களும் கடவுள் இல்லை. பல தாய்மார்கள் பெண்ணுக்கு பொருத்தம் பார்க்க வரும்போது, “என் பொண்ணு என்னை மாதிரி கஷ்டப் படக்கூடாது, அதற்கு தகுந்த மாதிரி பாருங்க”னு சொல்லுவாங்க. கஷ்டப்பட்டாம ஒருத்தர் எப்படி வாழ்ந்திட முடியும்? உங்க பெண்ணுக்கு சவால்களை சந்திக்கும் திறனை வளர்த்து விடுங்கனு சொல்லி அனுப்புவேன். 

கே. மனவலிமை இருக்கும் இடத்தில் ஜோதிடத்தின்  வேலை என்ன?

ப.  மனவலிமை இருந்தாலும் ஜோதிடம் தேவை தான். என் வாழ்க்கையே அதற்கு உதாரணமா சொல்லலாம். எனக்கு மனவலிமை அதிகம். முப்பது வயசுல கர்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொள்ள தனியே சென்றேன். அம்மாவைக் கூட அழைத்துகொள்ள வில்லை. ஆனா, நாள் பார்த்து போயிருக்கனும்னு, எனக்கு அப்போ தெரியல. அதிக நாள் தள்ள வேண்டாம் என்று மருத்துவர் சொன்னார். உடனே அடுத்த நல்ல நாளை பார்த்திருக்கனும். விளைவு, ஒரு அறுவை சிகிச்சைக்குப் போய், தொடர்ந்து நான்கு அறுவை சிகிச்சைகள் ஆச்சு. இன்று பல பேருக்கு நாள் நட்சத்திரம் பார்த்து சொல்ரேன். இந்த தெளிவு எனக்கு அப்போ இல்ல. ஆனால், மனவலிமையால், என்னால் அந்த நிலையை கடந்து அவர் முடிந்தது. நாள் பார்த்துப் போயிருந்தா, என் உடல் நிலை இவ்வளவு பாதிப்படைந்திருக்காது. இதுதான் வித்தியாசம்.

கே.  ஜோதிடத்திற்கும் ஆன்மிகத்திற்கும் தொடர்புண்டா?

ப.   கண்டிப்பா இருக்கு.  இதுவும் அதுவும், ஒன்றோடொன்று சார்ந்தது. கிரக நிலைக்கு ஏற்றவாரு கோவிலுக்குப் போகச் சொல்வோம்.  கிரகத்திற்கான தீர்வு ஆன்மீகத்தில் தான் உண்டு. 

கே.  அப்போ, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் தான் வருவாங்களா?

ப.  அப்படி இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கோவிலுக்குச் செல்லாதவர்களும் கூட வருவாங்க. ஒரு ஆலோசனை, கவுன்சிலிங் மாதிரி கேட்டுட்டுப் போவாங்க. “என் கிரக நிலை எனக்குத் தெரியும், எனக்கு ஏழறை சனி நடக்குதுன்னு தெரியும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது…” போன்ற வற்றில் ஆலோசனைகள் பெற்று கொண்டு செல்வார்கள். “புது வியாபாரம் தொடங்கலாமா, இருப்பதை விரிவு படுத்தலாமா, நான் கோவில்ல பரிகாரம் பண்ண மாட்டேன்”ன்னு கேட்டு வருவாங்க. பக்தி இருக்கிறவங்கதான் வரனும்னு அவசியம் இல்லை. 

கே. வேற்று மதத்தினர் ஜோதிடத்தில் நம்பிக்கிக்கை கொண்டு வருகிறார்களா? 

ப. நிறைய பேர் வருவாங்க. பல இஸ்லாமியரகளும் கிருத்துவர்களும் வருவாங்க. என்னை பார்க்க அப்பாய்ன்ட்மெண்ட் வாங்கும் போதே, “மேடம் யமகண்டத்துல வேண்டாம்”னு சொல்லுவாங்க. “அஷ்டமி அன்று வேண்டாம்”னு சொல்லுவாங்க. தனக்கு என்ன திசை நடக்குது, என்ன கிரக நிலைனு துல்லியமா தெரிஞ்சுவெச்சிருப்பாங்க. இவர்கள் பெரும்பாலும், சில தலைமுறைகளுக்கு முன்னர், இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறிப் போனவங்களா இருப்பாங்க. 

என்னுடைய டீவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இருவர் சிவன் கோவிலுக்கு தொடர்ந்து போவாங்க. “மேடம், சிவன் கோவில்ல படபிடிப்பு வெச்சுக்கலாமா” என்று கேட்பாரகள். தனக்கு அதில் ஆர்வமும் அறிவும் இருப்பதாக என்னிடம்  சொல்வார்கள். இதெல்லாம் மதத்தை தாண்டின விஷயம்.

கே.  நீங்க சொல்ற பரிகாரங்களை அவர்கள் செய்வார்களா?

ப. நிச்சயம் பண்ணுவாங்க. அவங்களுக்குத்  தகுந்த மாதிரி நான் சொல்வேன். அவங்க கிரகத்திற்கு, அவங்க தர்காவில் என்ன முறை இருக்கோ, அதை செய்யச் சொல்லேன். அவங்கள கோவிலுக்குப் போகச்சொல்ல மாட்டேன். ஒருசில கிருத்துவர்களும் இஸ்லாமியர்களும் நவகிரக கோவிலுக்கு கூட நாங்க போறோம் என்று சொல்பவர்களும் உண்டு.

மலேசியா நாட்டைச் சேர்ந்த ஒரு கிரித்தவர். பெரும் செல்வந்தர். அவருடைய ஒரே ஆசை, தன் சொத்துக்கள் மொத்தம் தன்டுடைய கொள்ளு பேத்திக்குப் போய் சேரவேண்டும் என்பது தான். டீவி நிகழ்ச்சியில் பார்த்து, என்னை ஒரு நாள் தொலைபேசியில் அழைத்தார். விவரத்தை சொன்னார். ‘உங்க நிலத்தில், உங்க பணியாளர்களுக்கு வீடு கட்டி, அவங்க பேர்ல பத்திர பதிவு பண்ணி வைங்க. இந்த பூமி தானம் உங்க சொத்தை குடும்பத்தாரிடம் நிலைத்து நிற்கச் செய்யும்’னு சொன்னேன். 

ஒரு வருடம் கழித்து அவர் என்னை  வந்து சந்தித்தார். நாற்பது பேருக்கு வீடு கட்டி கொடுத்ததாகச்  சொன்னார். சந்தோஷம். இதற்கு நான் காசு கூட வாங்கல. அந்த புன்னியத்தில் ஒரு சின்ன பங்கு எனக்கிருந்நாலே போதுமானதுனு சொல்லிட்டேன். 

ஆக, எதுவுமே தடையில்லை. அவங்க கிரகங்களை நம்பராங்க. எல்லா மதத்திலும் பரிகாரம் நிச்சயம் உண்டு. அதை சொல்லிக் கொடுக்க வேண்டியது, என்னைப்  போன்றவர்களின் கடமை.

கே. உள்ளுணர்வு intuitionக்கு ஜோதிடத்தில் பங்குண்டா?

ப.  நிறைய பங்கிருக்கு. உங்களுக்கும் சரி, எல்லோருக்கும் சரி, காலை எழுந்திரிக்கும் போதே, நம்ம மனசு, இன்று இதைச்  செய்யனும் செய்க்கூடாதுன்னு சொல்லும். இவ்வளவு ஏன்,  நாம சந்திக்கிற இந்த நேர்கானலே, நமக்கு கொஞ்சம் தள்ளிபோச்சு. ஆனா, ‘பத்மாவை நான் நிச்சயம் சந்திக்கனும்னு, இந்த நேர்கானலுக்குப் போகனும்’னு என் மனசுல பதிவாகிடுச்சு. எத்தனையோ பேர் சந்திக்கனும்னு சொல்லுவாங்க. எல்லாமே சாத்தியப்படாது. நம்ம மனசு சொல்லும், நாம் யாரை பார்க்கனும், கூடாது, வேலைக்கு வைக்கனும், கூடாது  என்று, நம்ம கிட்ட வேலை செய்ற ஊழியர்கள் உட்பட. ஆக, உள்ளுணர்வை நாம கவணிக்கனும். Intuition is our best guide.

கே. இன்று ஜோதிடம் பார்த்து, பொருத்தம் பார்த்து செய்துவைத்த பல திருமணங்கள் விவாகரத்தில் முடிய காரணம்?

ப. கர்மா. புதிதாய்  நடந்த திருமணம் மட்டும் அல்ல. சில வருடங்கள் ஒன்றாய் வாழ்ந்த நல்ல தம்பதிகள் கூட, திடீரென்று பிரிந்து போவதை நாம் பார்க்கிறோம். ஐம்பது வயதுக்கு பிறகு கூட, மனைவி கணவனை விட்டு போவதும், கணவன் மனைவியை விட்டுப் போவதும் நடக்குதா இல்லையா? இவர்களுடைய தொடர்பு, ஒரு கட்டத்தில், வேறொருவருடன் வரும். இது எல்லாமே, எங்கேயோ ஒரு ஜென்மத்தோட தொடர்பு தான். யாரை கல்யாணம் முடிக்கனும், யாரை கல்யாணம் செய்து கொள்ளாமலேயே emotionalஆ suffer ஆகனும் என்பதெல்லாமே கர்மா தான். 

வீட்ல வளர்கிற நாய், பூனை முதல் எல்லாமே, தொடர்பு இருந்தால் மட்டுமே வரும். தொடர்பு இல்லாதது வாழ்க்கைல வரவே வராது. அதனால தான், இடையில் விட்டுட்டுப் போய்டுவாங்க. இதற்கு கர்ம பலன் என்று பெயர். கிரகங்கள் பார்த்து சொல்வது கிரக பலன். கிரக பலன் வேறு, கர்ம பலன் வேறு. உங்கள் செயலின் விளைவாக வருவது தான் கர்ம பலன். அதை அனுபவித்தே தீர வேண்டும். பரிகாரம் செய்து, நிவர்த்தியெல்லாம்  பண்ணவே முடியாது. 

கே.  உங்களுடைய வேலையில் நீங்கள் தொடர்ந்து கடைபிடுக்கும் ஒரு விஷயம்.. இதில் மட்டும் கவணமா இருப்பேன்,  என்று நினைப்பது?

ப. நான் இருக்குற வரை, இந்த வேலையை விடக்கூடாது. 

நம்மால் முடிந்தவரை, அடுத்தவருக்கு உதவியா இருக்கனும்.

கேஇந்த வேலையில், அதிக கவணத்துடன் இருக்கும் விஷயம், இதை மட்டும் நான் செய்யவே மாட்டேன் என்றால் அது என்ன

ப. காசுக்கு அடிமை ஆகக்கூடாது. நிறைய பேர் என்கிட்ட வருவாங்க. ‘எங்க கடை கல்லை போட்டுக்க சொல்லுங்க, நாங்க தயாரிக்கிற மூலிகை தண்ணீரை அறிமுகப் படுத்துங்க’ என்று. அதை ஒரு நாளும் நான் செய்யவே மாட்டேன்.  நான் யாருக்கு உதவியா இருப்பேன்னா, தனியாக ஒரு பெண், உழைத்து முன்னுக்கு  வரக்கூடிய பெண்கள் யாராவது வந்தால், அவர்களுக்கு நிச்சயம் உதவி செய்வேன். 

கே. ஜோதிடத்தை, DNA அறிவியலுடன் அனுகும் ஒரு முறையைப் பற்றி கேள்வி பட்டுள்ளேன். அதை பற்றி விவரம்?

ப.  பரம்பரையாக வரக்கூடிய ஒரு சில வியாதிகள் இருக்கு. அதை தானே பாவம்னு சொல்றோம். ஒரு குடும்பத்தில் autism  குழந்தை பிறப்பது DNA தொடர்புடையது தானே. 12 கட்டத்தில், 9ம் கட்டம், 5ம் கட்டம் உங்கள் பூர்வ ஜென்ம கர்மாவைப் பற்றிச் சொல்லும். இந்த கர்மாவின் அடிப்படையில், நவாம்சத்தைப் பார்த்து, கணிக்க முடியும். அதுதான் DNA சம்பந்தப்பட்ட கணிப்பு.

கே.   ஜோதிடத்தை அதிகம் சார்ந்திருக்கும் மக்கள், தனிப்பட்ட பொருப்புகளையும் உழைப்பையும் தட்டிக் கழிக்கும் அபாயம் உண்டல்லவா

ப.  ஆமாம். அந்த மாதிரி நபர்கள் நிறைய ரேரை நான் பார்த்திருக்கேன். “எனக்கு நேரம் சரியில்லை, நான் வேலைக்குப் போக மாட்டேன்” என்று பெற்றோருக்குக் கவலை தரக்கூடிய பிள்ளைகள் இருக்காங்க. தினம் ராசிபலன் பார்த்துகொண்டு, வேலைக்குப் போகாமல், மனைவிக்கு தொல்லை கொடுக்கும் கவண்மார்கள் இருக்காங்க. அரைகுறை விவரம் தெரிந்து கொண்டு, ஜோசியர்களை காரணம் காட்டி, இவர்கள் பொருப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளப் பார்பார்கள். இப்படி பலர் இருக்காங்க.

கே. இத்துறையை, ஒரு புரிதலுடன் மக்களிடம் கொண்டு சேர்க்க, தவரிட்டோம்னு நினைக்கிறீங்கா? அதற்கான காரணம்

ப.  ஆமாம். இன்னும் வேறு விதமா சொல்லி இருக்கலாமோன்னு தான் தோனுது. ஆனா, எல்லாமே நம்மால் செய்ய முடியாது. மக்களின் எதிர்பர்ப்பு எப்படி இருக்குன்னா, இந்த சமயத்தில் எனக்கு ஆறுதல் கிடைக்குமா என்றே பார்கிறார்கள். எதிர்காலம் என்ன, குழந்தைகளின் நிலை என்ன, என்ற கவலையெல்லாம் கிடையாது. இன்று வரக்கூடிய யூ டியூப் thumb nail பார்த்தீங்கன்னா, ‘கோடீஸ்வரர் யோகம் யாருக்கு’,  ‘அதிகம் சம்பாதிக்க வேண்டுமா’, என்று பணம் சார்ந்தே இருக்கும். கொரோனா வந்த பிறகு பணத்திற்கான மதிப்பு என்னன்னு,  நம்தில் பலர்  உணர்ந்து கொண்டோம். 

அடுத்ததாக, இன்றைய பெண்கள், செய்யக் கூடிய இன்னோரு தவறு,  தன் குழந்தைகளுக்கு, அவங்க குடும்ப வழிமுறைகளைச் சொல்லித் தராமல் போவது. மாமியார் மருமகள் சண்டை, உன் குடும்பமா என் குடும்பமா, இது போன்ற சண்டைகளில் குழந்தைகளுக்குச் சொல்லித் தர தவறிவிடுகிறார்கள். அடுத்த தலைமுறையை இது பாதிக்கும். பாரம்பரியம் மற்றும் குடும்ப பழக்கங்கள்  என்னனு, குழந்தைகளுக்குத் தெரியனும். 

கேஇத்துறையின் சிறந்த எழுத்தாளர்கள்? புத்தகங்கள்

ப.  நான் வராகமிகிரர் புத்தகங்களை வாசிப்பேன். அவருடைய ஓலைச் சுவடிகள் நிறைய இருக்கு. அதேபோல, ஆரிய பட்டர் உடைய எழுத்துக்கள் நிறைய இருக்கு.  It is all original and authenticated scripts. 

கே.   ஜோதிடத்திலும் கணிக்க முனியாத விஷயம் என்று எதை சொல்வீர்கள்?

ப. மரணம். அதை பார்க்ககூடாதுன்னு சொல்லுவாங்க. 

கேஇறுதியாகபுழுதியின்பெண்ணதிகாரம்வாசகர்களுக்கு தாங்கள் சொல்ல நினைப்பது?

ப. பெண்கள் தினம் கொண்டாடுகிறோம். பெண் விடுதலை பற்றி பேசுகிறோம். எல்லாமே சிறப்பான, தேவையான விஷயங்கள் தான். ஆனால், குடும்ப பொருப்பை பெண்கள் உதாசீனப்படுத்த கூடாது.  முக்கியமாக, ஆரோகியமான மனநிலையுடன், அடுத்த தலைமுறையான நம் குழந்தைகளை உருவாக்குவது, ரொம்ப முக்கியம். சாதிக்க வேண்டாம் என்று சொல்லவே இல்லை. ஆனால், குடும்பத்தை விட்டு சாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. 

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *