பெண்ணதிகாரம்’ சிறப்பிதழுக்கான வேலைகள் ஏறத்தாழ முடிந்து விட்டது. தேதியும் மார்ச் 1. இனி அட்டைப் பட வடிவமைப்பு, பிழைத் திருத்தம், விளம்பரங்கள் என்று வெளியீட்டிற்கான வேலைகளில் இறங்கவேண்டியது தான் என்று இருக்கையில், புழுதி குழுவிடமிருந்து அழைப்பு. “ஏறத்தாழ 19 பேருடைய நேர்காணல் முடிந்திருக்கு. இன்னும் ஒருவரைப் பார்த்து விட்டால் 20 ஆகிவிடும்”என்றார்கள். யாரை அணுகுவதென்ற யோசனை. காரணம், இதற்கு மேல் ஒரு பெண் ஆளுமையிடம் சந்திக்கும் அனுமதி பெற வேண்டும். இரண்டு நாட்களுக்குள் பேட்டி எடுத்து, அதை எழுதி அனுப்பவேண்டும்.

சில மணி நேரத்தில், புழுதி குழுவினரிடமிருந்து,  ஒரு நபரின் தொடர்பு கொண்ட குறுஞ்செய்தி. வான்மதி என்று பெயர். கண்டேய்னர் கொண்டு வீடு அமைப்பது அவருடைய தொழில். அத்துடன் ஒரு மாதாந்திர பத்திரிகையும் நடத்தி வருகிறார். ஒரு பெண், கண்டேய்னர் கொண்டு தொழில் செய்கிறார் என்றால், நிச்சயம் இரும்புப் பெண்ணாக தான் இருப்பார். அதே இரும்பு பெண், பத்திரிகையும்  நடத்தி வருகிறார். இந்த கலவை மிக வித்தியாசமானதாக இருந்தது. திருமிகு திலகவதி அம்மாவை எனக்கு நினைவூட்டியது.

உடனே தொடர்பு கொண்டு பேசினேன். மறுநாள் காலை ஜூம் வழியாக சந்திக்கலாம் என்றார். ஆனால், வேலை பளு காரணமாக, அவரால் என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை. இன்றில்லை என்றாலும், மறு நாள் வரை, காத்திருக்க முடிவு செய்தேன். இரவு 7.15 மணிக்கு வான்மதி அம்மாவே என்னை அழைத்தார். சந்தோஷத்துடன் கைபேசியை எடுத்துப் பேசினேன்.

“மன்னிக்கணும் மா. இன்னிக்கி work load கொஞ்சம் ஜாஸ்தி.”என்றார்.

“பரவாயில்லை அம்மா. எப்போது சந்திக்கலாம் சொல்லுங்கள். நாளை காலை?”

“இல்லை மா. நான் இன்னும் அலுவலகத்தில் தான் இருக்கேன். நீங்க ரெடின்னா, நான் இப்பவே பேச தயார்” என்றார்.

எனக்கு வேறு என்ன வேலை, நேரமாவது காலமாவது… உடனே ஜூம் தொடர்பை அவருக்கு அனுப்பி, நேர்காணலை முடித்தேன்.

அபாரமான தைரியசாலி. பல இன்னல்களை கடந்து வந்தவர். பெண் விடுதலையின் தேவையை முற்றிலும் உணர்ந்தவர். எல்லாவற்றிர்கும் மேலாக, பொறுமையை கடைபிடிப்பவர். அன்றைக் கென்று, ஏர்டெல் இணைப்பு ரொம்பவே மோசமாக இருந்தது. பல முறை இணைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் இணைந்தோம். நேரமும் தாண்டிக் கொண்டிருந்தது. “பரவாயில்லை மா” என்ற ஒரு வார்த்தை தாண்டி, வேறேதும் சொல்ல வில்லை. காரணம், பெண்ணினத்தின் மீது இவர் கொண்ட அக்கறை. பெண்கள் இன்னும் முன்னேற வேண்டும் என்ற ஆதங்கம்.

இவருடைய பேச்சில்,

பெண்ணியத்திற்கும், பெண் விடுதலைக்குமான வேறு பாடு…

இல்லறம் என்பது கூடு. கூண்டல்ல…

மற்றவர் பாதையில் நடப்பது சுலபம்…

வேலையில் எல்லாவற்றையும் முழுமையாகக் கற்றுக்கொள்…

வீட்டின் முன் தினம் கரும் பலகையில் எழுதுவேன்…

“யாருடா உங்க அண்ணே…”?

இவரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த என் புழுதி குழுவினருக்கு  நன்றி. இனி, பல பெண்கள் இவருடைய நேர்காணலிலிருந்து பயனடையட்டும். வான்மதி அம்மாவிடமிருந்து நான் கற்றுக் கொண்டவை, இனி உங்கள் பார்வைக்கு..

கேவணக்கம் அம்மா. உங்களைப் பற்றிய அறிமுகம்

ப.  வணக்கம். என் பெயர் வான்மதி. சென்னைல, Makwell Container Care என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நான் பிறந்தது நெய்வேலியில். அப்பா, NLC ஊழியர். நான்கு பெண் குழந்தைகள், ஒரு ஆண் என்ற பெரிய குடும்பம். நடுத்தர வர்கத்துக்கும் சற்று குறைவான நிலை தான். ஆனால் அப்பாவுக்கு, பெண் பிள்ளங்க படிக்கணும் என்பதில் உறுதியா இருந்தார். நகராட்சி பள்ளியில் தான் படித்தோம்.  

பத்தாம் வகுப்பு படிக்கும் போதே, அதாவது, 15வயதிலிருந்தே, கடைகளில் வேலை செய்வது, ஆறாம் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டில் படிப்பு சொல்லித் தருவது என்று, சம்பாதிக்க ஆரம்பித்தேன். படிப்பை விடக்கூடாது. அதனால் கிடைத்த சம்பளத்தில், எனக்கான துணிமணி, பள்ளி, கல்லூரி கட்டணம், கொஞ்சம் வீட்டு செலவிற்கென்று பார்த்துக்கொண்டேன்.  இந்த வருமானத்தை வைத்து, B.Com முடித்தேன். B.L முடித்தேன். PGDL முடித்தேன். அதே சமயம், டைப்பிங் வகுப்பும் சென்று வந்தேன். 

அப்பாவின் திடீர் மறைவிக்குப் பின், வேலை செய்ய வேண்டிய சூழல். பேப்பரில் விளம்பரத்தைப் பார்த்து, சென்னையில் ஒரு கண்டேய்னர் பழுது பார்க்கும் நிறுவனத்தில், டைப்பிஸ்டாக சேர்ந்தேன்.  

பெண்களுக்கென்று ஒரு குணம் உண்டு. எதுவுமே இல்லாமல் நிர்கதியாக நின்றாலும் கூட, எதையாது செய்து, பெண்கள் சமாளித்து, வந்து விடுவார்கள். என் நிலையும் அப்போது அப்படிதான். என்னுடைய முழு கவனமும் வேலையின் மீது மட்டுமே இருந்தது. காலை எழுந்து வேலைக்குப் போவேன். தூக்கம் வந்தால், நான் தங்கும் விடுதிக்கு வந்துவிடுவேன். வேறு சிந்தனையே இல்லை. வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து வேலை செய்வேன். 

மிகக் குறுகிய காலத்தில், டைப்பிஸ்ட் பணியிலிருந்து, கிளாக்ர்காக உயர்ந்து, 14 வருடங்களில் regional manager ஆக பதவி உயர்வு பெற்றேன். ஒரு கட்டத்தில், அடுத்த உயர் பதவிக்காக ஊர் மாற்றலாகிப் போக வேண்டிய சூழல். குடும்பத்தைப் பிரிந்து, போக முடியாத சூழல் காரணமாக, வேலையை ராஜினாமா செய்தேன். 14 வருடங்கள் அங்கே பணியாற்றினேன், 21 வருடங்கள் நான் சுயமாக தொழில் செய்து வருகிறேன். 

கேகண்டெய்னர்  கொண்டு, குறைந்த செலவில் வீடு, என்ற திட்டம் எப்படி உருவானது

ப.   கண்டெய்னர்ல ஆள் உட்காரலாம் என்பதையே, நான் தான் கண்டுபிடித்தேன். வெளிநாட்டில் இது பிரபலம். நம் ஊரில் தான், இரும்பு பெட்டி, வெய்யில் கடுமையாக இருக்கும் என்று பயந்தார்கள். முன் சொன்னது போல, செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டேன். அடுத்த நாள் எங்கே போறதுன்னு தெரியல. என் நண்பரின் அலுவலகத்திற்கு அருகே, ஒரு மரத்தடியில், கண்டேய்னர் பழுது பார்க்க, நான், என் கணவர், ஒரு பெய்ன்டர், மூன்று பேரும் உட்கார்ந்து கொண்டோம். 14 வருட அலுவலக பணியில், என் பெயர் கொஞ்சம் பிரபலம். மெல்ல என்னைத் தேடி வர ஆரம்பித்தனர். 

எத்தனை நாட்கள் மரத்தடியில் உட்காருவது? அந்த இடத்தின் உரிமையாளர், அவர் பெயரை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். திரு தங்கவேல் – சிவா கண்டேய்னர் யார்ட். அவர் தான் அந்த இடத்தைக் கொடுத்தார்.  அந்த இடத்தில், ஒரு கண்டேய்னரை, அலுவலகமாக மாற்றி அமைத்து, அதில் உட்கார்ந்து வேலை செய்ய ஆரம்பித்தோம். எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். 

கண்டேய்னர் பழுது பார்க்க வரும் ஓட்டுனர்கள் எல்லோரும், அவர்களுடைய முதலாளியிடம் போய் சொல்வார்கள். முதலாலிகள் வந்து பார்த்து, ‘எங்ஙகளுக்கும்  இப்படி ஒண்ணு அமைச்சு கொடுங்க..’. ‘எங்க பெட்ரோல் பங்கிற்கு இப்படி போட்டு குடுங்க..’ என்று வர ஆரம்பித்தனர். அலுவலகம் மட்டும் இன்றி, முழு வீடாகவும் அமைக்க ஆரம்பித்தோம். 

இப்படி ஆரம்பித்தது, இன்று, வேற லெவல்ல போய்க்கிட்டு இருக்கு. இரண்டு விஷயங்களை நாம்  தெரிந்து கொள்ள வேண்டும்.  தேவைன்னு வரும், போது தான்,  ஆக்கபூர்வமா அறிவு வேலை செய்யும். வாடகை கொடுத்து அலுவலகம் தேடும் வசதியெல்லாம் இல்லை. அதனால இப்படி ஒன்றை அமைத்துகொள்ள வேண்டிய சூழல். காலைல இருந்து சாயங்காலம் வரை ஒரே மாதிரியா போய்கிட்டு இருந்தா, புதுசா எதையுமே கண்டுபிடிக்க முடியாது.  

அடுத்து, கற்றுக்கொள்வதை, முழுமையாக, ஈடுபாட்டுடன் கற்க வேண்டும்.  இது ஏதோ ஃபேஷன், ஆசைனு வந்ததில்ல. வெல்டிங் பண்ற ஆள் வேலைக்கு வரலைனா, நான் போய் வெல்டிங் செய்வேன். கட்டிங் செய்யத் தெரியும். வண்டி ஓட்டத் தெரியும். எந்த காரணத்தைக்கொண்டும் வேலை நிற்கக் கூடாது. 

மற்றவர் போட்ட பாதைல நடந்து போறது, ரொம்ப சுலபம் மா. நாமாக மணல் கொட்டி, கல்லு போட்டு, தண்ணி தெளிச்சு, பாதையை உருவாக்கிப் போகணும். அப்போதான், உங்களுக்கென்று ஒரு அடையாளம் இருக்கும்.

கே.   பாவையர் மலரின் பின்னணி என்ன?

ப.   சிறு வயது முதல், படிப்பும் எழுத்தும் பிடிக்கும். வெறித்தனமாப் படிப்பேன்.  பள்ளி, கல்லூரியில் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, மேடைப் பேச்சு என்று எல்லாவற்றிலும் நான் இருப்பேன்.  முதன் முதலில், தின மலர், வார மலரில் எழுத ஆரம்பித்தேன். எனக்கு எப்படீன்னா, என் பெயரை, ஒரு பத்திரிக்கையிலோ, நாளிதழிலோ, புத்தகத்திலோ பார்த்து விட்டால், அதை நான் மிகவும் ரசிப்பேன். அது எனக்கு ஒரு போதை மாதிரி. 

தொழில் அதிபர் ஆன பின், நிறைய பேட்டி எடுக்க வந்தாங்க. ‘மீடியாவிக்கு இவ்வளவு பவரா!’ என்று சிந்திக் ஆரம்பித்தேன். இதுபோல ஒரு மீடியாவை நாமும் ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவுசெய்தேன்.  அதன்  விளைவு தான் ‘பாவையர் மலர்’ பத்திரிக்கை. வட சென்னை, தண்டையார்பேட்டை பகுதி மக்களின் குறைகளை அரசாங்கத்திடம் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் ஆரம்பித்தேன். ரொம்ப நல்ல வரவேற்பு இருந்தது. 

இப்போது பாவையர் மலர் தொடங்கி 13 வருடங்கள் ஆச்சு. அதன் பின் வந்தது தான், ‘பாவை மதி’ வெளியீடு.  100 புத்தகம் தாண்டியாச்சு. தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர்கள் புத்தகங்களைக் கூட, வெளியிட்டு விற்பனை செய்துள்ளோம். சிறந்த நூல், சிறந்த வெளியீடு என்று, பாவை மதிக்கு, அரசாங்கத்திடமிருந்து மூன்று விருது கிடைத்திருக்கு. இது எனக்கு ரொம்ப பெருமை. 

தினமலரில், தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு, ‘நாயகி’ என்ற தலைப்பில்,  ஒருபக்கக் கட்டுரை எழுதி இருக்கேன். இன்றும், தின மலரில், கனவு இல்லம் என்ற பகுதியில், கட்டுமான விவரங்களை எழுதி வருகிறேன். இதைத் தாண்டி, ஐந்து நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். 

முந்தைய அரசில், ஏதோ ஒரு விமர்சனத்திற்காக, ஒரு கார்ட்டூன் படத்தைப் போட்டேன். அந்த அரசு என்னை அழைத்து, இது போல் போடக்கூடாது, என்று கண்டித்தது. பின் ஒரு கட்டுரை எழுதி, மாற்றுத் திறனளி ஒருவர் அதனால் பயனடைந்ததால்,  அதே அரசாங்கம், என்னை அழைத்துப் பாராட்டியது. கண்டிக்கவும் செய்தார்கள், அழைத்துப் பாராட்டவும் செய்தார்கள். இதுவும் எனக்குப் பெருமை தான். 

கே.   பெண்கள் முன்னேற்றத்தில், பாவையர் மலரின் பங்கு?

ப.   பாவையர் மலர் என்று பெயர் கொண்டதால், ஒரு பெண்ணாய் நான் நடத்தி வருகிறேன் என்பதால்,  இது பெண்களுக்கான பத்திரிகை அல்ல. பெண்கள் சமூகத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி கோலம் போடுவது, எப்படி சமைப்பது, மாமியாரை கவனிப்பது எப்படி, உடை அணிவது எப்படி, போன்ற பெண்களுக்கான விஷயங்கள் மட்டுமே அதில் இருக்கும் என்று எதிர்பார்த்தீர்களென்றால், அப்படி இல்லை. இது எதுவுமே அதில் இல்லை. 

ஒரு பெண்ணிற்கு என்ன தேவை? தெளிவான சிந்தனை, கல்வி அறிவு, சமூகப் பார்வை, பிரச்சனைகளை எதிர் கொள்ளும் திறன், பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது, அல்லது, அதிலிருந்து மீண்டு வருவது. இது எல்லாம் தான் பாவையர் மலரில் இருக்கும். பெயரில் மட்டும் தான் ‘பாவை’. மற்றபடி, அனைவருக்குமான இதழ். பாவையர் மலரின் வெற்றிக்கு இதுவே காரணம். 

இப்போதைய பெண்கள், ரொம்பத் தெளிவா இருக்காங்க. யாரும் புத்திமதி சொல்லத் தேவை இல்லை. தெளிவா இருக்குறவங்கள, நாம குழப்ப வேண்டாம். அவங்கள கவனிச்சுட்டு வந்தா போதும். கல்லூரி மாணவர்களிடம் பேசும் போதும், இதைத் தான் சொல்வேன். கண்டிப்பிற்கும், கண்காணிப்பிற்கும் வித்தியாசம் உண்டு. 

இன்று காலை, என் கண்டேய்னரைப் பார்க்க, ஒரு குடும்பம் வந்தார்கள். அப்பா, கண்டேயனர் மீது ஏறி, மேலே பார்க்கவேண்டும் என்றார். அவருடைய பெண், ஐந்தாம் வகுப்பு மாணவி, நானும் வர்ரேன் என்றாள். உடனே அவர்கள், “ஐய்யோ… நீ பொண்ணு. சின்னவ,  மேலே எல்லாம் ஏறக்கூடாது”  என்றார்கள். நான் உடனே அவர்களைத் தடுத்து, “சார், குழந்தைகளை, செய்யாதேனு சொல்லி பழக்க வேண்டாம். கவனமா செய்யச்சொல்லிப் பழக்குங்க. Guide பண்ணுங்க. எதுக்கு stop பண்றீங்க? நாம எல்லோருமே சுத்தி நிண்ணு பார்த்துக்குவோம். விழுந்துருவேனு சொல்லாதீங்க. விழாம ஏறணும்னு சொல்லுங்க” என்றேன். 

பெண்களுக்கு நான் சொல்வது இதுதான். முடியாது என்று எதுவும் இல்லை. முயற்சி மட்டுமே தேவை. தப்பானாலும் பரவாயில்லை. கத்துக்கங்க. என் வீட்டு வாசல்ல, ஒரு கரும்பலகை வைத்து, கிட்டதட்ட 20 வருடங்களா, பொன்மொழிகள் எழுதிட்டு வர்ரேன். அனைவருக்கும் எளிதில் புரியும் படியா இருக்கும். இன்று நான் எழுதி வைத்தது. ‘தோல்வி உன்னை தொரத்திகிட்டே இருக்கா; நீ வெற்றியை நோக்கி ஓடு’. 

நான் வசிக்கும் தண்டையார்பேட்டை பகுதியில், இதற்கு நிறைய வாசகர்கள் உண்டு. ஆக, வெற்றியை நோக்கி நாம ஓட ஆரம்பித்தால், தோல்வி சோர்ந்து போகும். 

கே.    பாவையர் மலர் மாத இதழின் future initiatives, அடுத்த கட்ட நகர்வு, என்னவாக இருக்கும்? புதிதாக தொடங்க விரும்பும் பெண்களுக்கு தங்களுடைய பரிந்துரை என்னவாக இருக்கும்?

ப.     இல்லை மா. வணிக நோக்கத்துடனோ , பொருளாதார மேம்பாட்டிற்காகவோ, நான் பாவையர் மலரை ஆரம்பிக்க வில்லை. பெரிய எழுத்தாளர்கள் மட்டுமே எழுதணும் என்று இல்லாமல், அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும், என்பது தான் என் ஆசை. என் பதிப்பகம் வெளியிட்ட 100 புத்தகங்களில், பெரும்பாலான புத்தகங்கள், புதிய எழுத்தாளர்களுடையது. அவர்களுடைய முதல் புத்தகம் அதுதான். 

மற்றவர்களிடம் எழுதும் பழக்கத்தைத் தூண்ட வேண்டும். ஒரு கட்டுரை எழுதுவதானால், ஒரு மூலையில் போய் அமர்ந்து எழுத முடியாது. அதுக்கு நிறைய வாசிக்கணும். எழுதுங்கன்னு  நான் சொல்லும்போது,  மறைமுகமா, வாசிக்கத் தூண்டுறேன். ஒரு 50 பக்கங்கள் வாசித்தால் தான், ஒரு பக்கம் எழுத முடியும். ஆக, இது தான் என் முதல் நோக்கம். 

புதிதாக பத்திரிக்கை ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு – எழுத்துதுறையாகட்டும், பத்திரிகைத் துறையாகட்டும், ஆசைக்காவோ, இல்லை, ‘எல்லோரும் செய்றாங்களே, நாமும் ஆரம்பித்தால் என்ன’, என்ற காரணத்திர்காகவோ, ஆரம்பிக்காதீர்கள். அதையும் தாண்டி, விளம்பரம் வாங்குவது ஒரு தனி டிபார்ட்மெண்ட். விளம்பரம் இல்லைனா, பத்திரிகை இல்லை. 

அருமையான கண்டென்ட் இருந்தாலும், விளம்பரங்கள் தேவை. 

அதேபோல, நிறைய பணம் இருக்கு, அதனால பத்திரிகை தொடங்கலாம், என்ற எண்ணம் கொண்டவர்கள், தயவு செய்து பத்திரிகை துறைக்கு வராதீர்கள். எழுதவும் படிக்கவும் ஒரு வெறி இருக்கணும். அதே வெறியை மற்றவர்களுக்கும் உண்டாக்க வேண்டும். நான் ஒரு நாவலைப் பற்றி எழுதினால், ஒரு 10 பேர் அதைபற்றி விவாதிக்க வேண்டும். அதேபோல அவர்களையும் எழுதத் தூண்ட வேண்டும். சமூக நலன் அக்கறை இருந்தால் மட்டுமே, இந்த துறைக்கு வாங்க. 

இரண்டாவது, பத்திரிக்கையை மட்டுமே நம்பி, வாழ்வாதாரத்தை வைத்துக்கொள்ளாதீர்கள். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி. இந்த காலத்தில் print media ரொம்ப ரொம்ப கஷ்டம். வெறி இருந்தா தான் ஜெயிக்க முடியும். 

இதைத் தொடங்கும் முன்,  கிட்டதட்ட, ஒரு வருஷம் வேலை செய்திருக்கேன். பத்திரிக்கைக் கூட்டங்கள், இலக்கிய கூட்டங்கள், புத்தக வெளியீடு, எங்கே எது நடந்தாலும், ஒரு ஓரத்தில் அமர்ந்து பார்ப்பேன். பின் ஆறு மாதங்களில், மக்கள் என்னை கவனிக்க ஆரம்பித்தனர். பின் மேடையில் பேச அழைத்தனர். Layout என்றால் என்ன, பிரின்ட் என்றால் என்ன, எல்லவற்றையும் கற்றுக் கொண்டேன்.  

சிலர் ரொம்ப degrade பண்ணாங்க. “இவ வடசென்னை ஆளு. என்னத்த பெருசா செஞ்சிடப் போறா? இது என்ன பண்ணப்போகுது? ஒரு பொம்பள, பத்திரிக்கையை நடத்த முடியுமா..?” என்று காதுபட பேசினார்கள். என்னை விமர்சித்த யாரும் இப்போது துறையில் இல்லை.  ஆனால் தமிழ்நாட்டைத்  தாண்டி, வெளி நாட்டிலும், பாவையர் மலர் பிரபலமாகி இருக்கு. 

கண்டேய்னர்ல சம்பாதிச்சு, இதில் போட்டு இழக்குறா…. என்ற பேச்செல்லாம் கூட இருக்கு. கிடையவே கிடையாது. முதன் முதலில், சிற்றிதழில், gate opening போட்டது பாவையர் மலர் தான் (ஒரு விளம்பரத்தின் மேல், இரண்டு பக்கம் திற்கும்). ஆச்சி மசாலா, சென்னை சில்க்ஸ், போத்தீஸ் விளம்பரம் வாங்கி, gate opening folder போட்டேன். 

எல்லாமே உழைப்பு தான். ஒரு சென்னை சில்க்ஸ் விளம்பரம் வாங்க, நான் திருப்பூர் போகணும். MDயை பார்த்து விவரிச்சுப் பேசனும். பெரும்பாலான தலைமை அலுவகங்கள் சென்னைக்கு வெளியே, திருப்பூர், கோவை, திருச்சில தான் இருக்கும். ஆசை இருந்தா போறாது, உழைக்கணும் மா. 

கேபெண்கள் இந்த சமூகத்தில் தன்னை நிறுவுவதற்கான தேவையும், அதற்கு மேற்கொள்ள வேண்டிய அம்சங்களும் என்ன?

ப.   இருவருமே நிச்சயம் தன்னை நிலை நிறுத்திக்கனும்.  ஆனா, இதற்கான அவசியம், பெண்களுக்கு தான் அதிகம் உண்டு. எந்த இடத்திலும் ஆணுக்கான இடமும் வெகுமதியும் எளிதாக கிடைத்து விடும். கண்டிப்பா முயற்சியினால தான் கிடைச்சிருக்கும். குறை சொல்ல முடியாது. ஆனா, அதே 100% உழைப்பையும் முயற்சியையும் ஒரு பெண் போட்டால், அங்கிகாரம் கிடைப்பதில்லை. காரணம், ஆண் யாரும் பெண்ணை சமமாக நினைப்பதில்லை. 

‘பெண் தானே, பொம்பள தானே, என்னத்தப் பெருசா செஞ்சுடுவா’ங்கற எண்ணம் அவங்களுக்கு. இந்த எண்ணம் உருவாக, நாமும் ஒரு காரணம். ஒரு உதாரணம் சொல்றேன். இப்போ, மணி 8ஆச்சு. நீங்க ஒரு பெண். அலுவலகத்தில உட்கார்ந்து பேசிகிட்டிருக்கீங்க. நானும், இன்னும் வீட்டுக்குப் போகாம, அலுவலகத்துல இருந்து, உங்ககூட பேசிகிட்டிருக்கேன். நாம இரண்டு பேருமே, ஒரு பெண் என்ற அடையாளத்தை நகர்த்தி வெச்சுட்டு, இப்போதைய தேவை என்னனு பார்க்கிறோம். நான் போட்டி கொடுத்தே ஆகணும். இப்ப விட்டா, அடுத்த மூன்று நாட்களுக்கு நான் பிஸி ஆயிடுவேன். உங்களுக்கும் இந்த வேலையை, இரண்டு நாட்களில் முடித்தாகவேண்டிய நிர்ப்பந்தம். அப்போ,  நாம இரண்டு பேருமே, சுற்றி உள்ள எல்லா காரணிகளையும் நகர்த்தி வைத்துவிட்டு, வேலையில் தீவிரமா இருக்கோம். இந்த இடத்தில தான், நீங்களும் நானும் ஜெயிக்கிறோம். 

இதை அப்படியே மாத்தி யோசிச்சுப் பாருங்க. “அம்மா, மணி 8ஆச்சு. நான் வீட்டுக்கு போய் தோசை ஊத்தணும். மருமகன் வருவான், மகள் வருவா. வீட்டில் வேலை இருக்கு என்று என்னை சுருக்கிக் கொண்டால், இந்த சமுதாயத்தில் என்னை நான் நிலை நாட்டிக் கொள்ள முடியாது. நீங்களும், ஆறு மணிக்கு மேல வேலை செய்ய முடியாது. இப்போ நேர்காணலுக்கு உட்கார முடியாதுனு சொன்னா, நீங்களும் ஒரு வட்டத்துக்குள்ள சிக்கி, சுருங்கிடுவீங்க. 

சமூகத்தில் பெண் தன் அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டுமென்றால், பெண் முதலில்  வெளியே  வர  வேண்டும். முன்னேறுவதற்கு தெளிவான புத்தி இருக்க வேண்டும். அந்த புத்திக்குக் கல்வி அவசியம். படிப்பிற்கு ஏற்ற அறிவு வேண்டும். 

கே.   ஆணாதிக்கம் நிறைந்த சூழலில், தாங்கள் எதிர்கொண்ட சவால்கள்? எப்படி சமாளித்து, தங்களுக்கென்று ஒரு நிலையைத் தக்கவைத்து கொண்டீர்கள்?

ப.   2024ல உட்கார்ந்து கொண்டு, ஆணாதிக்கத்திற்காக, குறைவான குரல் தான் கொடுக்க வேண்டி இருக்கு. காரணம், இப்போ இருக்குற exposure அப்போ இல்ல. நான் வேலை செய்த அலுவலகத்தில் கூட, “பொம்ள… அதனால முன்னேறிட்டா. இனிமே விடக்கூடாது” மாதிரியான பேச்சுக்கள் நிறைய இருந்தது. எல்லா துறையிலும் இது இருக்கு. 

ஆண்களில் சிலர்  உண்டு. “எல்லாமே நீங்க தான் பா. நீங்க தான் பெஸ்ட்..” என்று சொல்லி, அவங்க லெவலுக்கு கொஞ்சம் கீழே இருந்தோம்னா, பிரச்சனை இல்லை. “அவ நம்ம ஆளு. நம்மை மீறி போக மாட்டா” என்கிற மனோபாவத்தில் ஆண்கள் இருப்பார்கள். 

எந்த இடத்தில், ஆணைவிடப் பெண் புத்திசாலித்தனமா வெளியே வர்றாளோ, அவளுக்கு exposure கிடைக்குதோ, அங்கே பிரச்சனை ஆரம்பமாகுது. 

கே.   பெண் முன்னேற்றத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை யா?

ப.    ஆமாம். ‘நீ புத்திசாலியா இரு. ஆனா, என்னைவிட அதிகம் வாழ்ந்து காட்டிடாதே. நீ நல்லா சம்பாதி, ஆனா என்னை விட ஒரு லெவல் கம்மியா இரு” என்ற சிந்தனை அவர்களிடம் உண்டு. எனக்கு இது போன்ற சிக்கல், அலுவலகத்திலும் உண்டு, குடும்ப உறவினர்கள் மத்தியிலும் உண்டு.  திருமணத்திற்கு பிறகுதான், என் செயல்பாடு அதிகமாச்சு. என் கணவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். 

ஒரு பெண்ணிற்கு, வீட்டுச் சூழல் ரொம்ப முக்கியம். “8மணி வரை அப்படி என்ன வேலை? இப்படி வேலை செய்து சம்பாதிச்சு கிழிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் 10ரூ கொண்டு வந்து கொடுத்தால், அதில் குடித்தனம் பண்ணு.” என்ற நிலை இருந்தால், பெண்கள் சுருங்கிப் போவார்கள். 

டெண்டர் போடும்போது நிறைய அனுபவிச்சிருக்கேன். “நீ விலகிக்கோ, நாங்க ஆறு ஆம்பளைங்க, நீ ஒரு பொம்பளையா என்ன பண்ணுவே? நீ இன்னும் கொஞ்ச காலம் நல்லா இருக்கணும். நல்லபடியா வேலை செய்யணும்னு நினைக்கிறோம். அதனால வெலகிடு”னு, அமைதியா  மெரட்டுவாங்க. எங்க ஏரியா தாதா ஒருத்தர், ஆள் விட்டு மெரட்டினார். “அக்கா, நீ நல்லா இருக்கணும்னு எங்க அண்ணன் விரும்புறாரு..”னு சொல்லிட்டு வருவான். “யார்ரா உங்க அண்ணன்?” என்று விசாரித்தால், அவரும் டெண்டர் போடும் விவரம் தெரிய வரும். 

இப்படியாக, காவல்துறையிடம் புகார் கொடுத்து, என்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு, இவர்களிடம் நான் பிரச்சனைகளை சந்திச்சிருக்கேன். ஆக, ஆணாதிக்கம் இருக்கத் தான் செய்யும். இன்னும் எத்தனை காலம் கழித்து நீங்க இந்த கேள்வி கேட்டாலும், என்னைப் போன்ற ஒரு பெண்,  தொழிலதிபராக உட்கார்ந்து  கொண்டு, இப்படி வருத்தப்பட்டுப்  பேசிக் கொண்டு தான் இருப்பாள். ஜாதி அமைப்பை எப்படி ஒழிக்க முடியாதோ, அதேபோல, ஆணாதிக்கத்தையும் ஒழிக்கவே  முடியாது. 

கே.   உங்களை அதிகம் பாதித்த எழுத்து யாருடையது? ஏன்?

ப.   10ம் வகுப்பு முதலிருந்தே, நிறைய புத்தக வாசிப்பு பழக்கம் இருந்தது. கதை, நாவல், கிரைம் நாவல், என்று ஒன்றுவிடாமல் படித்து விடுவேன். ஒரு பெரிய கிரைம் நாவலைகூட, ஒரு மணி நேரத்துல படிச்சிடணும். அப்படி ஒரு  வெறி. அதேபோல, படிக்கும் போதே நிறைய கற்பனை பண்ணிக்குவேன். இந்த கதையில், இந்த இடத்தில் நான் இருந்தால், என்ன செய்வேன்? என்று யோசிக்க ஆரம்பிப்பேன். மனதை சுறுசுறுப்புடன் வைத்திருக்க, இந்த கற்பனைத்திறன் வேண்டும். 

இந்த கால குழந்தைகளுக்கு அது கொஞ்சம் கம்மி தான். நிறைய யூடியூப், ஷாட்ஸ் (YouTube, shorts) பார்த்துட்டு, புத்தி மந்தமாவே இருக்கு. இந்த சமயத்தில், பெரிய திருப்புமுனையாக அமைந்தது, பாலகுமாரன் அய்யாவுடைய புத்தகங்கள். எழுத்து மற்றும் எழுத்துக்காக அவர் கொடுக்க கூடிய அர்ப்பணிப்பும், முயற்சியும் அபாரம்.  ஒரு இயந்திரத்தை பற்றி எழுதணும்னா, அங்கேயே போய் உட்கார்ந்து கொண்டு, அதைப் பார்த்து, தெரிந்துகொண்டு எழுதுவார். ஒரு காய்கறிகாரனைப் பற்றி எழுத வேண்டுமென்றல், கற்பனையா எழுத மாட்டார். அந்த இடத்திற்கேப் போய்விடுவார். அவருடைய எழுத்து, பயங்கர ஈர்ப்பைத் தந்தது. 

கல்லூரி படிக்கும்போது, நாங்க ஒரு குழு. அத்தனைபேரும் பாலகுமாரன் ரசிகைகள். அய்யாவோட புத்தகம் எது வந்தாலும், உடனே படித்துப் பகிர்வோம். 

கேநீங்கள் அவரை சந்தித்ததுண்டா?

ப.   ஓ யெஸ்… (முகம் முழுவதும் புன்னகை மலர, தொடர்ந்தார்). அவர் புத்தகத்தின் மீது இருந்த ஈர்ப்பு, அவருடன் உட்கார்ந்து காபி சாப்பிடும் அளவிற்கு வளர்ந்தது. “வான்மதீ..”னு அழகா கூப்பிடுவார். பவையர் மலர் ஆரம்பித்த உடனே, அவருடைய விலாசத்தைத் தேடி, அவருக்கு அனுப்ப ஆரம்பித்தேன். தலைல கைவெச்சு அவர் ஆசீர்வாதம் பண்ணார்னா, கண்ணுல நீர் கடகடனு கொட்டும்.  அவ்வளவு ஆன்மீகம் நிறைந்த நபர். 

அடுத்து, தமிழருவி மணியனின் கட்டுரைகள் பிடிக்கும். சுகி சிவம் அய்யாவினுடைய எழுத்து பிடிக்கும். இன்னும் பல எழுத்தாளர்கள் இருக்காங்க. 

கே.    தற்போதை இளைய தலைமுறை பெண்களிடம் நீங்கள் கண்டு வியப்பதும் வருந்துவதும்?

ப.   முதலில் வியப்பதைச் சொல்றேன். நிறைய exposure இருக்கு. எந்த விஷயத்தையும் தயங்காமல் செய்வது. உலக செய்திகளை தெரிந்து வைத்துக் கொள்வது. ரொம்ப தெளிவா இருக்காங்க. 

வருந்தத்தக்க விஷயம் என்றால், ஒன்றை நினைத்தால், உடனே செய்துவிடவேண்டும் என்ற அவசரம். உடனே நடந்துவிடவேண்டும் என்று எதிர் பார்ப்பது.  ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தால், உடனே பதவி உயர்வு வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. அனுபவம் பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாதது தான் இதற்குக் காரணம். 

அதேபோல, ஒரு தோல்வி நிகழ்ந்தால், அதையே பேசிகிட்டு, அதை பற்றியே சிந்தித்து கொண்டிருப்பார்கள். அதிலிருந்து வெளியே வர மற்றவர்களின் துணை, guidanceஐ எதிர்பார்க்கிறார்கள். இது தவறு. 

கே.   பெண்கள் தொழில்முனைப்பில் ஈடுபடுவது குறித்து தங்களின் பார்வை?

ப.   கண்டிப்பாக பெண்கள், பொருளாதார ரீதியாக, யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. எந்த நாடு முன்னேறிவிட்டதுனு பட்டியல்ல இடம் பிடிக்குதோ, அந்த நாட்டில் பெண்கள், நிச்சயம் முன்னேறி, பொருளாதார சுதந்திரம் அடைந்திருப்பார்கள். ஒரு நாடு முன்னேற, அந்நாட்டின் பெண்கள் முன்னேற வேண்டும். அது தான் உலகின் நியதி. அதற்குப் பெண்கள் சமமா நடத்தப்படணும், சமமா சம்பாதிக்கணும். அதற்குப், பெண்கள், தொழில்முனைவோர்களாக மாறியே ஆகணும். படிச்சுட்டு வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால் என்ன லாபம்?

நான் அறுசுவை உணவையும் நல்லா சமைப்பேன். உலக தரத்திற்கு என்னால சமைக்க முடியும். சமைத்த உணவை, வேண்டியவர்களுக்குப் பரிமாற வேண்டுமல்லவா? சமைத்தால் மட்டும் போதாது. பரிமாறவும் தெரிய வேண்டும். இது சமையலுக்கு மட்டும் இல்லை, அனைத்திற்கும் பொருந்தும்.  படிக்கணும், அனுபவத்தை வளர்த்துக்கொண்டு, மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில், வேலை செய்ய வேண்டும். அதற்கு தொழில் முனைவோராக, பெண்கள்  வரவேண்டும்

கே.   பெண்ணியம் என்பது சரியாக எடுத்துக் கொள்ளப்படுகிறதா

ப.   இல்லை மா. இலக்கிய வட்டத்தில் என்னைப் ‘பெண்ணியவாதி’னு தான் சொல்லுவாங்க. அதாவாது, பெண்ணியம் பேசாத பெண்ணியவாதி. பெண்ணியம் ஒவ்வொருவரின் பார்வைக்கும் மாறுபடும். இன்றைய காலக்கட்டத்தில், பெண்ணியம் என்றால், எல்லாவற்றிற்கும் போராடுவது. ஆண்களை வெறுப்பது. அநியாயத்தைக் கண்டால் பொங்கி எழுவது. இதுவல்ல பெண்ணியம். சமுதாயத்துடன் முரண்பட்டு நிற்பதல்ல பெண்ணியம். நான் கிராப் வெட்டிப்பேன், தண்ணி அடிப்பேன், தம் அடிப்பேன் என்பது சுதந்திரம். பெண்ணியம் அல்ல. 

பெண்ணியம் என்பது, வீட்டைத் தாண்டி வெளியே ஜெயிப்பது மட்டும் அல்ல. வீட்டாரையும் சேர்த்து, தன் ஆணையும் கையில் கோர்த்து கொண்டு, அழகாக முன்னேறுவது தான் பெண்ணியம். குடும்ப அமைப்பே வேண்டாம் என்பது சும்மா. சுகி சிவம் அய்யா ரொம்ப அழகா சொல்லி இருப்பார். கூடு என்பது வேறு, கூண்டு என்பது வேறு. கூடிடு என்றால், அழகா, வீட்டில் கணவருடன், குழந்தைகளுடன், பெரியவர்களுடன் இருப்பது. கூண்டு அப்படி அல்ல. உள்ளே வைத்து பூட்டி விடுவது. இப்போதைய பெண்கள், கூட்டிற்கும், கூண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்காங்க. கூட்டை, கூண்டாகப்  பார்க்க ஆரம்பித்து விட்டனர். நான் ஏன் காலைல எழுந்திரிக்கணும்? நான் ஏன் சமைக்கணும்? நான் ஏன் மாமியாரைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது பெண்ணியம் அல்ல.

என் கண்ணெதரே, நிறைய பேர், பெண்ணியம் பேசி வீணாப் போனவங்க இருக்காங்க. வீட்டில் இருந்து, பேசாமலேயே, அடங்கிப் போய் வீணாப் போன பெண்களும்  இருக்காங்க. பேச வேண்டிய இடத்தில் பேசாமலும், பேசக்கூடாத இடத்தில் பேசியும் கெட்டுப்போனவங்க பல பேர். (தலையில் கை வைத்து குனிந்தபடி) நிறைய பார்த்தாச்சு மா. 

கே.   புழுதி பெண்ணதிகாரம் வழியாக நீங்கள் சொல்ல நினைப்பது?

ப.   உலகத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும், மகளிர் தின வாழ்த்துகள். மகளிர் தினம் ஏன் வந்தது, எப்படி கொண்டாடுகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நாளை, பல காலமா மார்ச் 8ம் தேதி கொண்டாடிக்கிட்டு இருக்கோம். இதைப் பற்றி தெரியாதவர்கள், அதை தெரிந்துகொண்டு, கொண்டாடுங்கள். 

‘பெண்ணதிகாரம்’ என்கின்ற இந்த அத்தியாயம், ரொம்ப ரொம்ப பயனுள்ளதா இருக்கும்னு நான் எதிர்பார்க்குறேன். ஒரு பெண் பேசுவதும், எழுதுவதும், அவளைச் சுற்றி உள்ள விஷயங்களைப் பற்றி மட்டுமே இருக்கக்கூடாது. சமூகப் பார்வையுடன், சமூக அக்கறையுடன் எப்போது ஒரு பெண் விசாதாரமா பேசி, எழுதுகிறாளோ, அன்றைக்கு தான், பெண் சுதந்திரமா இருப்பதாக அர்த்தம். 

இந்த ‘பெண்ணதிகாரம்’  இதழில் வரக்கூடிய பெண்கள், இப்படித் தான் பேசி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்படிப் பேசி உள்ள பல விஷயங்கள், பெண்களுக்குப்  பயனுள்ள வகையில் இருக்கும்னு நம்பறேன். அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *