அனைத்து தென் இந்திய மொழிப் படங்களில் பிரபலமானவர் நடிகை ரோகிணி. ஐந்தாவது வயதில், தனது நடிப்புபைத் தொடங்கியவர், 1996 இல் ஸ்திரி (1995ல் வெளியானது) திரைப்படத்திற்காக தேசிய விருதையும், சிறந்த பெண் நடிகருக்கான ஆந்திரப் பிரதேச மாநில விருதையும் பெற்றார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணை தலைவராவார்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, வெளியூர் பிரயாணத்தில் இருப்பதால், மூன்று நாட்கள் கழித்து சந்திக்கச் சொன்னார். விலாசம், கூகுல் மேப் என, தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ஒரு நடிகையைப் பார்க்கப் போகிறோம், அவருடன் பேசப்போகிறோம், என்ற அந்த அடிப்படை குதூகலத்துடன் நானும் சென்றேன்.
ஒரு மாலை நேரம், அழகான ஒரு குடியிருப்பு. அழைப்பு மணியை அழுத்தியவுடன், அவருடைய வீட்டு மேலாளரும், கியா (செல்லப்பிராணி)யும் கதவைத்திறந்து, வரவேற்றனர். வாலை ஆட்டிக்கொண்டு ஓடிவந்த கியா, என்னை மூன்று முறை சுற்றி வந்து, பின் அதன் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டது. “அம்மா மேல இருக்காங்க. இப்போ வந்திடுவாங்க” என்றபடிய, தண்ணீர் பரிமாறினர்.
கண்கள் மெல்ல வலம் வர ஆரம்பித்தது. எதிரே மேசை மீது மார்க்ஸிய சிந்தனைப் புத்தகம். அழகான ரசனையுடன் அலங்கரிக்கப்பட்ட குடியிருப்பு. முக்கியமாக, ஆடம்பரம் இன்றி, தேவைக்கேற்ற பொருட்கள் மட்டுமே இருந்தன. பல விருதுகள் பெற்றிருந்த போதும், தமிழ்நாடு கலைமாமணி விருது மட்டுமே சுவரில் பளிச்சிட்டது. மற்றபடி, அமைதியும், அவ்வபொழுது கூவும் ரயிலின் ஓசை மட்டுமே, இடத்தை ஆக்கிரமித்திருந்தது.
சில நிமிடங்களில் நடிகை ரோகிணி வந்தார். சாக்லேட் நிறத்தில் எளிமையான குர்தா அணிந்து இறங்கி வந்தவர், ‘வாங்க’ என்றபடி, நேரே சமையலறைக்குச் சென்றார். ஆப்பிள் பழத்துண்டுகளைப் பரிமாறி, சோபா தலையணையை சரிசெய்து, அருகில் இருந்த கைப்பையை அகற்றி உள்ளே வைத்து, டேபிள் மீதிருந்த துண்டை சரிசெய்து விட்டு, வந்தமர்ந்தார்.
நடிகையைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்த நான், ஏதோ என் சக தோழியைப் பார்ப்பது போல உணர்ந்தேன். ‘நடிகை என்பது என் வேலை. வேலை முடித்து, வீடு வந்த பின், இதுதான் நான்..’ எனச் சொல்லாமல், மிக அழகாக உணர்த்தினார்.
திரையில் பல முன்னணி நடிகைகளின் வசீகரக் குரலுக்குச் சொந்தக்காரர், அதே வசீகரத்துடன், புழுதி ‘பெண்ணதிகாரம்’ சிறப்பிதழுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
கே. வணக்கம் அம்மா. உங்களை பற்றிய அறிமுகம்?
ப. வணக்கம். நான் ரோகிணி. ஐந்து வயது முதல் நடிப்புத் துறைல இருக்கேன். ஸ்டுடியோவில் தான் எனது பால்யம்.
கே. திரைத்துறைக்கு வந்ததைப் பற்றிய உங்கள் எண்ணம்?
ப. ஐந்து வயசுல பெருசா ஒன்னும் தெரியல. பள்ளிக்குப் போகும் வயது. பள்ளிக்குப் போகாமல், ஏன் இங்கே இருக்கோம்னு தான் யோசிச்சேன். சினிமானா என்னனு தெரியாது, நடிப்புன்னா என்னனு தெரியாது.
கே. ஆண்கள் கையில் இருக்கும் திரையில் பெண்கள் சந்திக்கும் நெருக்கடிகள் / சிக்கல்களைப் பற்றி? அவற்றை எப்படி எதிர் கொண்டீர்கள்.?
ப. திரை மட்டும் அல்ல. உலகமே ஆண்கள் கையில் தான் இருக்கு. இத நாம எல்லாருமே, கண்கூடா அனுபவிச்சுகிட்டு இருக்குற விஷயம் தான். அதை எப்படி எதிர்கொள்வதென்றால், நம்மை நாம் hone (கூர்மை படுத்துதல்) பண்ணிக்கொண்டே, இருக்கணும். நம் திறமைகளை வளர்த்துகொண்டே இருக்கணும். மூன்று விஷயங்களில் கவனம் தேவை. முதலாவதாக, தைரியமா இருக்கணும். அடுத்து, நிறைய வாசிக்கணும். வாசிப்பு என்றால், புத்தகங்களை மட்டும் இன்றி, மனிதர்களையும், வாழ்க்கையையும் வாசிக்கணும். மூன்றாவதாக, உள்ளேயும், வெளியேயும், நமக்கு நாம் தான் முதல் ஃபிரெண்ட், நம்மை நேசிக்கும் முதல் நண்பராக நாம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், மற்ற எல்லாவற்றையும் சமாளித்து விடலாம்.
நம் பாட்டியும், அதற்கு முந்தையப் பெண்களும், இதை அறியாமலேயே செய்து வந்தாங்க. நாம தான் இப்போ, இதற்கு பெயர் இது என்று லேபிள் பண்ணிட்டு வர்றோம்.
படிப்பறிவே இல்லாத பெண்களுக்கு வாழ்க்கையின் புரிதல் எப்படி வரும்னா, அனுபவத்துல இருந்து வருது. அனுபவமே நமக்கான பெரிய படிப்பினை. முழுவதுமாக அவநம்பிக்கை, தேவையே இல்லை. சமூகம் இன்னும் அந்த அளவுக்குத் தள்ளி விடல. தைரியம், கல்வி, நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினால், நிச்சயம் அதற்கான மதிப்பு உண்டு. ஆனால், அந்த இடத்தை அடைவது கொஞ்சம் கடினம்.
யாருமே, நமக்கு அந்த பாதைய அமைத்துக் கொடுக்க மாட்டார்கள். நாம் தான் நம் பாதையை உருவாக்கி, அமைக்கணும். இது எல்லா பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
கே. உங்களை மனதளவில் புத்துணறர்வோடு வைத்துக் கொள்ள நீங்கள் மேற்கொள்வது?
ப. பயணங்கள் மற்றும் புத்தகங்கள். அத்துடன், ஒத்தக் கருத்துள்ள மனிதர்கள் அல்லது நண்பர்கள். எனக்குத் தெரிந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்று கிடையாது. அதன் பின், நான் கேட்கணும்னு நினைக்கிற சில உரைகள் இல்லை புத்தகங்கள். இவற்றால், நம் உலகம் இன்னும் விரிவடையும்.
கே. இந்த வரி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஒத்தக் கருத்துள்ள மனிதர்களுடன் பழகுவது என்பது, ஒரு நல்ல உணர்வு. இல்லையா…?
ப. ஆமாம். Choose your friends or choose the people who you are with என்று சொல்வார்கள். நமக்கு சந்தர்ப்பம் சூழ்நிலை அப்படி அமையாது. வேலை ஒருவருடன் பண்ண வேண்டிய கட்டாயம் இருக்கும். நம்மை சுத்தி இருக்கறவங்கள நாம எப்பவுமே தேர்வு செய்ய முடியாது. ஆனா, நண்பர்களை நிச்சயம் நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.
கே. தமுஎகசாவில் இணைந்து பணியாற்ற, தங்களுக்குத் தூண்டுதலாக இருந்தது எது?
ப. முதலில் சொன்னது போல, ஒத்தக் கருத்துள்ள மனிதர்களோடு பயணிப்பது. சமத்துவ கருத்தைப் பேசிகிட்டு இருக்குற எல்லா இடங்களிலும், gender equality பற்றிப் பேசக்கூடிய, சாதி பேதம் பற்றி தட்டிக் கேட்க கூடிய, அதை களையறத்துக்காக வேலை செய்யக்கூடியவர்கள் தான் அடிப்படையாக இதில் உள்ளவர்கள். இவர்களுடன் நானும் பயணிக்கிறேன். இதன் அடிப்படையில், அவர்கள் என்னைக் கண்டுகொண்டார்கள், நானும் அவர்களுடன் சேர்ந்து பயணிக்கிறேன்.
இது, கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் சங்கம். கலைஞரா நான் என்ன contribute பண்றேன், என்பது தான் முக்கியம். நாடகங்கள் மூலமாகவோ, பாடல்கள் மூலமாகவோ இல்ல பேச்சுக்கள் மூலமாக, நாம சொல்ல வேண்டிய விஷயத்தை, கொஞ்சம் வீரியத்தோட சொல்றதுக்கான இடம்.
கே. கலைத்துறையில் இருந்து கொண்டு சமூக பார்வையுடன் செயல்படும் எண்ணம் எப்படி எழுந்தது?
ப. ஒரு காலகட்டத்துல, என்னைச் சுற்றி இருக்கிறவங்க, சமூகத்துக்குத் தேவையானதை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கும் போது, நம்முடைய புகழ் எதற்குப் பயன்பட வேண்டும் என்று, அதைப் பார்த்து தெரிஞ்சகிட்டேன். வெறுமனே ஒரு கடை திறப்பு விழாவிற்குப் போவதோ, இல்லைனா, வெறுமனே ஒரு நிகழ்ச்சிக்குப் போவதோ, என்று இல்லாமல், எதற்கு உபயோகப் படுத்தணும் என்பது தான்.
அதைத் தாண்டி, சினிமா நடிகை என்பது என் தொழில். தொழிலுக்கு அப்பாற்பட்ட ஒரு நபரா, நான் யார் என்று கேட்கும் போது, நான், என்னுடையத் தேவைகள், நான் யாராக விரும்புகிறேன், அல்லது யாராக வளர்கிறேன் என்பது முக்கியம். அப்படி வளர்ந்தது தான் இது. எதையுமே, நான் பிளான் செய்து, டிசைன் பண்ணி வந்ததல்ல. நாம எதுக்கெல்லாம் react பண்றோம், my reaction to the whole world around me, to the society around me is important.
கே. தனிமனித சுதந்திரத்தோடு பெண் தன்னை வளப்படுத்திக் கொள்ள முட்டுகட்டையாக இருப்பது எது?
ப. மதம். மதத்தின் பெயரால், (எல்லா மதமும் தான்) பெண்ணை ஒரு வட்டத்திற்குள் சுருக்கி விடுவது என்ற உத்தியை கண்டுபிடிச்சிருக்கு இந்த சமூகம். காலம் காலமா, இந்த உத்தி அவங்களுக்குத் தேவை பட்டிருக்கு. கல்யாணம் ஆகும் முன், அவ எப்படி எல்லாம் இருக்கணும், பின் ஆச்சாரம்னு சொல்லப்பட்ட தெல்லாம் எங்கிருந்து வந்தது? நம்பிக்கைகள் எல்லாம் எங்கிருந்து வந்தது? இந்த மாதிரி உடை அணியணும், இதைப் படிக்கணும், இதைப் படிக்கக் கூடாது, இந்த மாதிரி வேலை பண்ணனும், பண்ணக்கூடாது என்று, எல்லாமே அங்கிருந்து தான் originate ஆகுது.
ப. அவற்றை பெண் எப்படி எதிர்கொள்ள வேண்டும்.?
ப. நாம எந்த இடத்துல, யாரால் வழிநடத்தப்படுகிறோம்னு புரிஞ்சுக்கணும். நம்ம குடும்பத்துல என்ன சொல்லி வழி நடத்தறாங்கனு புரிஞ்சிக்கணும். இந்த வழிநடத்துதலே, அவங்களுக்கு ஒரு புரிதல் இல்லாம தான் செய்றாங்க. பல காலமா, அவங்க அம்மா என்ன சொன்னாங்க, அவங்க பாட்டி என்ன சொல்லியிருக்காங்க, நாம இப்படி தான் இருக்கணும் என்பதைக் கடத்திகிட்டே வர்றாங்க. தீர யோசிச்சு, இந்த வழி சரியாங்கறத, அவங்களே புரிஞ்சுக்காம, அடுத்த தலைமுறைக்கு ஒரு torch மாதிரி கொடுத்திட்டு வர்றாங்க. அந்த torch bearers ஆக, நாம, எப்படிபட்ட பாதைல பயணிக்கிறோம்ங்கறத, நம்மள நாம புரிஞ்சிக்கணும். எனக்கு என்ன பிடிக்கும் என்ற தேர்வு, எனதாக இருக்கட்டும். நமக்கானதை, நாம தான் தீர்மானிக்கணும். அந்த இடத்துக்கு நாம போகணும். படிப்பா இருக்கட்டும், வேலையா இருக்கட்டும், வாழ்க்கை முறையாக இருக்கட்டும், இணையரைத் தேர்வு செய்வதாக இருக்கட்டும், குழந்தைப் பெற்றுக்கொள்வதாக இருக்கட்டும், எப்போது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகட்டும், அதை பெண்கள் தீர்மானிக்கும் நிலைக்கு வர வேண்டும்.
இந்த சந்தோஷமான வாழ்க்கையை வாழறதுக்கு, நம்மள நாம கட்டமச்சிக்கணும். சந்தோஷம் எங்கிருந்து வருது? நாலு செவுத்துக்குள்ளேயே வேலை செஞ்சுகிட்டு இருந்து, அதை சந்தோஷம்னு சொன்னா, நா நம்ப மாட்டேன். Every life has to be free enough to fly, the way they want to.
கே. பெண்களை சார்ந்த சமூக நேர்/ எதிர்மறை மதிப்பீடுகளைப் பற்றி?
ப. நம்மை ஒரு வரையறைக்குள்ள வச்சிருக்கறதால தான், மதிப்பீடுகள் வருது. எங்க மதிப்பீடு ஏன் வேறொரு கைகளுக்குப் போகணும்?
கே. பெண்ணின் முக்கித்துவம், உங்கள் பார்வையில். எவ்விதங்களில், பெண் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்?
ப. ரொம்ப முக்கியம். நாம இப்படி உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கறது தான் பெண்களின் நிலைனு இல்ல. பெண்களின் நிலை என்னனா, 70% பெண்களுக்கு, இன்னும் தனக்கு நடப்பது வன்முறைனு தெரியாத வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்காங்க. அந்த இடத்தில இருந்து, பெண்ணை நாம விடுவிக்கணும். நாம நிறைய பேசணும். ஆண்களும் பெண்ணியம் பேசிக்கிட்டு இருக்காங்க. ‘உனக்கு இப்படி நடக்குதே, கொஞ்சம் பாரு…’ என்று அதை சுட்டிக் காட்டும் இடத்தில் நாம் இருப்பதால், அதை பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கோம்.
கே. பிடித்த எழுத்தாளர்?
ப. நிறைய பேர் இருக்காங்க. விரும்பி வாசிக்கிறதுன்னா, அந்தந்த நேரத்துல, யாராவது பரிந்துரைப் பண்ணுவாங்க. சா.தமிழ்செல்வனுடைய எழுத்து ரொம்ப பிடிக்கும். ஜெயகாந்தனுடைய எழுத்து, நமக்கு ரொம்ப முக்கியமான எழுத்து. இப்ப இருக்கிறவங்கள்ல, கரண் கார்கி, இமையம், நரன். கவிதைகள்ல, சுகிர்தாராணி, மனுஷ்யபுத்திரன், சுகுமாரன், of course, பாரதியைத் தொடாமல் யாருமே வந்திருக்க முடியாது. ஆரம்பமே அதுதான.
எனக்கே, ஏதாவது ஒரு நேரத்துல, ஒரு comfort reading தேவைப் பட்டால், பாரதியார் பாடல்கள தான் தேர்வு செய்வேன். அதன்பின், அந்தந்த மனநிலைக்கு எது வாசிக்கணும்னு தோணுதோ, அப்படி. சில நேரங்கள்ல, ரொம்ப கனமா இல்லாம, லைட்டா, சிறுகதைகளைத் தேர்வு செய்வேன். அம்பையின் சிறு கதைகள் பிடிக்கும். புதிய எழுத்தாளர்கள் நிறைய பேர் இருக்காங்க.
கே. பொழுது போக்கு அம்சம்?
ப. கொஞ்சம் கார்டனிங் பண்ணுவேன். அது ஒரு பெரிய stress buster. இரண்டு இல்ல மூன்று நாளைக்கு ஒரு முறை சினிமா பார்ப்பேன். தியேட்டர் போய் சினிமா பார்க்கப் பிடிக்கும். இது தான் என்னுடைய relaxation.
கே. கேள்விகள் அவ்வளவு தான். இதை தவிர, நீங்கள் புழுதி ‘பெண்ணதிகாரம்’ சிறப்பிதழுக்குப் பகிர விரும்பும் தகவல்கள் ஏதாவது?
ப. வோல்கா என்ற பெண் எழுத்தாளர். மிக முக்கியமான எழுத்து அவங்களுடையது. மீட்சி என்ற சிறுகதைத் தொகுப்பு. அதன்பின், ‘ராஜகீய கதலு’ என்று தெலுங்கில் அரசியல் கதைகளை எழுதியவர். எல்லோருமே அந்த புத்தகத்தை வாசிக்கணும். காரணம், பெண்களின் ஒவ்வொரு அங்கமும், அவளுக்கு எதிரா எப்படி திருப்பப் ட்டிருக்கு என்பதை அந்த கதைகளின் மூலமாக சொல்லப்பட்டிருக்கு.
உதாரணத்திற்கு, ஒரு பெண்ணிற்கு மிக நீளமான தலை முடி இருக்கும். உன் கூந்தல் மாதிரி உண்டான்னு, எல்லோரும் பாராட்டுவாங்க. அவளுக்கு அதனால் பயங்கரப் பெருமை. உறவுக்காரப் பெண் ஒருத்தி, முடியை வெட்டிக் கொண்டு வந்தால், இவளுக்குப் பிடிக்காது. ஒரு கட்டத்தில், அந்த பெண்ணுக்கு கேன்ஸர் நோய் வந்துடும். கீமோ, கோடுக்கும் போது, முடியெல்லாம் கொட்ட ஆரம்பிக்கும்.
பார்க்குறவங்க, அய்யோ, உனக்கு கேன்ஸர் வந்துடுச்சேனு சொல்றத விட, அய்யோ உன் தலை முடியெல்லாம் போச்சேன்னு வருத்தப்பட்டாங்களாம். இந்த சமூகம், ஒரு பெண்ணிற்குத் தலை முடி முக்கியம் என்று கற்பித்திருக்கு. இதையா நான் இத்தனை வருடங்களா, பெருமையா பார்த்துக்கொண்டிருந்தேன், என்று அந்த பெண் பின் உணர ஆரம்பிப்பாள்.
இன்னொரு பெண், பயங்கரச் சுட்டி. துடுக்குத்தனமா பேசுவா. ஒரு வயசுக்கு மேல, அந்தப் பெண்ணை அதிகம் பேசக் கூடாதுன்னு, குடும்பத்தார் அதட்டிக் கட்டுப்படுத்தினாங்க. அவள் பேச்சை முழுவதுமாகத் தொலைத்து விட்டாள். திருமணம் ஆன பின், கணவர் ஏதாவது கேட்டால், இரண்டு வார்த்தைக்கு மேல பேச மாட்டா. “ஏன் பேச மாட்டேங்குற”னு கணவர் கேட்ட பிறகு, இவ நடந்தத சொல்றா. இல்ல நீ பேசணும்னு சொல்லி, கணவர் பழையபடி, அவளைப் பேச வைக்கிறார்.
இப்படியாக, பல விஷயங்கள் பெண்களுக்கு எதிரா திருப்பப் பட்டிருக்கு. யோசிச்சுப் பார்த்தா, நம்ம கண்ணு எதைப் பார்க்கணும், நம்ம வாய் எதைப் பேசணும், நம்ம உடம்பு எந்தத் துணியை உடுத்தணும், நம் கைகள் என்ன வேலை செய்யணும்னு, எல்லாமும் நமக்கெதிரா திருப்பப் பட்டிருக்குனு இந்த கதைகள்ல நாம தெரிஞ்சுக்கலாம். அதை வாசிக்கும் போது, பெண் என்பவள் வெறும் உடல் அல்ல, அழகு மட்டும் அல்ல என்பதை உணர முடியும்.
புத்திசாலி ஆண், பலவான் என்று சொல்லும் சமுதாயம், பெண்களை வேற மாதிரி project பண்றாங்க. அந்த projectionல நாம போய் விழுந்திடக் கூடாது. உடலை ஆரோக்கியமா வெச்சுக்கோ, உனக்குத் தேவையானதை நீ பார்க்கலாம், கேட்கலாம், பேசலாம். தீர்மானம் எடுக்கும் எல்லா உரிமையும் உனக்கு இருக்கு என்று சொல்ல வேண்டும். வீரத்திற்கு பெண்களை யாருமே ஒப்பிடுவது இல்லை. ஏன், பெண்களிடம் வீரம் இல்லையா? Who are you to decide?
ஒரு வீட்டில் பெண் இல்லைனா, அந்த வீடு எப்படி இருக்கும்னு எல்லோருக்கும் தெரியும். ஆணில்லாத வீட்டில், எத்தனைப் பெண்கள் தைரியமா குழந்தைகளை வளர்த்தெடுக்கறாங்க? இதுதானே வீரம்? இது தானே courage? நிலவே மலரே என்னு எல்லாவற்றிலும் இந்த soft nature ஒப்பிடுதல் தேவையில்ல. உங்களுக்கு விருப்பம் இருந்தா எடுத்துக்கங்க. ஆனா, மற்றவர்களை முடிவு செய்ய விடாதீங்க. ஒரு சில பெண்கள், நான் இப்படிதான். ஏத்துக்கோங்க, இல்லைனா அது உங்க கவலைங்கற மாதிரி வாழ்ந்துட்டு வர்றாங்க. அந்த இடத்துக்கு நாம போய்டுவோம். போய்டுவோம்னு சொல்றதை விட, அடுத்த தலைமுறையை அந்த இடத்திற்குக் கொண்டு போக வேண்டிய கடமை நம்கு இருக்கு.
பெண் குழந்தைக்கும், ஆண் குழந்தைக்கும் நாம என்ன சொல்லி வளர்க்கறோம்ங்கறது ரொம்ப முக்கியம். ஆக, ஒரு பெண்ணை, வெறும் உடலாப் பார்க்காதேன்னு சொல்லி, ஆணை வளர்க்கனும். ஆண் பிள்ளைக்கும் வீட்டு வேலை, சமையல் வேலை சொல்லித் தரணும். இதைச் செய்தாலே, domestic violence கட்டுப்படுத்தலாம். இதையும் மீறி செய்பவர்களுக்கு, ஏதோ பிரச்சனை இருக்கும். ஆண் குழந்தைக்கு சாப்பாடு அதிகம் போடுவது, பெண் பிள்ளைக்கு குறைவா போடுவது. ஏன் இப்படி? பெண்ணுக்கும் ஆரோக்கியம் முக்கியம். எல்லோரும் எல்லாமும் செய்யணும். எல்லோரையும் சமமா நடத்துங்க.
நன்றி.