புழுதி பத்திரிக்கையின் ‘பெண்ணதிகாரம்’ சிறப்பிதழுக்காக, பல்வேறு துறைகளைச் சார்ந்தப்  பெண்களைச் சந்திக்க நினைத்திருந்த சமயத்தில், நம் ‘நாட்டின் முதுகெலும்பு’ களாகப் கருதப்படும் விவசாயத் துறையைச் சார்ந்தவர்களை நிச்சயம் சந்திக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். இயற்கை விவசாயத்தில் பல சாதனைகள் படைத்து, விருதுகள் வாங்கிய திருமிகு அர்ச்சனா ஸ்டாலின் அவர்களை அணுக எண்ணினேன். வலைதளங்களில் அவர் பெயரை அச்சிட்டுப் பார்த்தால், ‘பிறவிப் போராளி’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். ‘பெண்ணதிகாரம்’ சிறப்பிதழுக்கு ஏற்றவர் என்ற மகிழ்ச்சியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

மிக எளிமையான நபர். எளிமையான மெல்லியப் பேச்சு.

பொங்கல் திருவிழா முடிந்ததும், ஜூம்(Zoom) இணைய வழி மூலம் நேர்காணலை வைத்து கொள்ளலாம் என்றார். அதன்படி, குறிப்பிட்ட தேதியில், ஜூம் வழியாக இருவரும் சந்தித்து உரையாடினோம். இளம் வயதிலேயே சாதனை படைத்து விட்டோம் என்ற கர்வம் சிறிதும்  இன்றி, இன்னும் என்னால் என்ன செய்யமுடியும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தேடல் அவருடைய பேச்சில் இருந்தது. உண்மை தானே. நிறைவு வந்தது போல எண்ணம் தோன்றிய அடுத்த நொடி, நம் வாழ்க்கை சலிப்படைந்து விடும்.

திருமதி அர்ச்சனாவின் பேச்சிலும், எண்ணங்களிலும், இளமையின் வேகமும், முன்னேற்றத்திற்கான தேடலும், தொடர்ந்து வெளிபட்டது. இதோ, அவருடைய நேர்காணல், உங்கள் வாசிப்பிற்காக…

கே. வணக்கம் திருமதி அர்ச்சனா ஸ்டாலின்.

உங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.

ப. வணக்கம்.  நான் அர்ச்சனா. சென்னையில் ‘மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ்’ என்ற இயற்கை விவசாய (organic farming) நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இன்று நாம் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவதில்லை. ஆரோக்கியமா சாப்பிட நினைக்கிறோம், ஆர்கானிக் கடைக்குப் போறோம், நம்பிக்கை இல்லாமலேயே, பல கேள்விகளுடனேயே வாங்குறோம். எட்டு வருடங்களுக்கு முன், கார்ப்பரேட் பணியை விட்டு,  நானும் என் கணவரும் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தோம். ஒரு தேடலின் விளைவாக எங்களுக்கு ‘மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ்’ கிடைத்தது. இதன் மூலமாக, விவசாயிகளை நேரடியா வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் உணவு எங்கிருந்து அவர்களுக்குக் கிடைக்கிறது என்ற புரிதலோட வாங்குறாங்க.

We are building an equitable food system. இன்றைக்கு, எல்லோருமாக சேர்ந்து விவசாயத்தை உயிர்ப்பிக்கிற முயற்சில தான் மைஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறோம். நஞ்சில்லா உணவை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய core vision.

கே. நீங்கள் பிறந்து வளர்ந்தது சென்னையில் தானா?

ப. நான் பிறந்தது தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே ஒரு கிராமத்தில். வளர்ந்தது சென்னையில் தான். அண்ணா பல்கலைக்கழகத்தில்  Geo Informatics படித்தேன். NASA வுக்குச் செல்லும் கனவுடன் கல்லூரி படிப்பைத் துவங்கினேன். இறுதியில், TCS என்ற IT நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சேர்ந்த 2வருடங்களிலேயே, இது எனக்கான பணி அல்ல என்பதை உணரத் தொடங்கினேன்.

கல்லூரி நாட்களிலேயே, நண்பர்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு NGO ஆரம்பித்து நடத்தினோம். அதில் ஒரு நண்பர் தான் என் கணவர்  ஸ்டாலின். 21 வயதில் திருமணம். இன்னைக்கி we are life partners.

கல்லூரியில் நானும் ஸ்டாலினும் செய்த பல விஷயங்கள், இன்று நாங்கள் செய்யும் வேலைக்கான முதல் விதையாப் பாக்குறேன்.  ஐ. டி. கம்பெனியில் வேலை செய்யும் போதே, வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தேடலில், இந்தியா முழுவதும் பயணித்தேன். இன்று நாங்கள் இருப்பது, எங்களுடைய  17 வருடத்தின் பயணம் என்று சொல்லலாம்.

கேஏதோ ஒரு தேடலில், இந்தியா முழுவதும் பயணம் செய்த தாங்கள், இயற்கை விவசாயத்தை நோக்கி எப்போது பயணம் செய்ய ஆரம்பித்தீர்கள்?விவசாயத்தைத் தொடர உங்களைத் தூண்டியது எது?

ப. சிறு வயதில், IAS அதிகாரியாகும் கனவுடன் இருந்தேன்.  அப்போது, எனக்கான பணி விவசாயம் என்று எனக்குத் தெரியாது. ஒரு அதிகாரியாக, கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்பாவும் இதையே தான் சொல்லிக் கொண்டிருப்பார். நகரத்தில் சொந்தமாக பெரிய வீடு கட்டி, குடியேற வேண்டும் என்ற ஆசையெல்லாம் இருந்ததே இல்லை. சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது.

கல்லூரியில் NGO நடத்தும்போது, பல கிராமங்களுக்குச் சென்று பார்வையிடுவோம். அங்கே மக்கள் தோட்டம் அமைத்து வைத்திருப்பார்கள். ஆனால் வாழ்வாதாரத்திற்கேப் போராட்டமாக இருக்கும். அரசாங்க சலுகைகளுகளை மட்டுமே எதிர்பார்த்திருந்தார்கள். அடுத்த தலைமுறை படித்து முன்னேறுமா என்று அவர்களுக்குத் தெரியாது. இதை எல்லாம் என் மனம் அசை போட்டுக் கொண்டே இருந்தது. அப்போது கூட, விவசாயம் தான் எனக்கான பாதை என்று நான் உணர வில்லை.

Change makers, மாற்றத்தை வரவழைக்கப் போராடும் ஒரு குழுவாக, நாங்கள் ஒரு சிலர், ரயில் ஏறி, வட இந்தியாவின் 14 மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டோம். அதில், வாழ்வாதாரத்தை உருவாக்கும் சிலரை சந்தித்தோம். ராஜஸ்தானில், சோலார் விளக்குகள் தயாரிக்கும் தாத்தா பாட்டியைச் சந்தித்தேன், ஒரிஸாவில் 1800 கிராமங்களுக்குக் கழிப்பறைகள் கட்டி தந்தவரை சந்தித்தேன். டில்லியில் பழைய கந்தல் துணியைக் கொண்டு சானிடரி நாப்கின்கள் தயாரித்தவரைப் பார்த்தேன். இவங்க எல்லாருமே, சமூக பிரச்சனைகளை தீர்ப்பதன் மூலம், தங்களுக்கான வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்வதை கவனித்து வந்தேன்.

சமூக மாற்றத்தில் இவர்களுடைய பங்கைப் பார்த்து, எனக்குள் ஒரு கேள்வி, ‘இருபது, முப்பது வருடங்கங்கள், தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு, இவர்கள் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள். இனி, நான் என்ன செய்யப் போகிறேன்?’ என்ற கேள்வி பலமாக எனக்குள் ஒலித்தது.

 பின் மாடி தோட்டம் அமைத்து வீட்டிற்குத் தேவையாக காய்கறிகளை வளர்த்தோம். சாப்பிட்டபின், அதன் சுவையையும், ஒரு ஆரோக்கியமான தன்மையையும் உணர முடிந்தது. இது எல்லாமே (connecting the dots) ஒருங்கிணைத்துப்  பார்க்கும் போது,  இயற்கை விவசாயம் செய்தால் என்ன?

ஆரோக்கியம் கிடைக்கும், மன நிம்மதி இருக்கும் ஒரு sustainable நிலையான வாழ்வை அமைத்துகொள்ளலாம் என்று முடிவானது.

அடுத்து வந்த கேள்வி, நம்மால் இயற்கை விவசாயம் செய்ய முடியுமானால், விவசாயிகளால் ஏன் முடியாது என்ற கேள்வி எழுந்தது. நான் சந்தித்த விவசாயிகளிடம் நம்பிக்கை இல்லை. இனி விவசாயம் அவ்வளவு தான் என்பது போல பேசினார்கள். ஆனால் organic farmers (இயற்கை விவசாயம் செய்பவர்கள்) மட்டும் நம்பிக்கையோடு பேசினார்கள். ‘எனக்குத் தேவையானதை நான் உருவாக்கிக்கிறேன். விற்க மட்டும் முடிந்தால் போதும், நான் பயிரிடத் தயார்’ என்றார்கள்.

இனி தாமதிக்கக் கூடாதுனு முடிவு செஞ்சேன். 2014 முதல் 2017 வரையிலான காலக்கட்டம், ஒரு திருப்புமுனையாக இருந்தது. என்னுடைய purpose of callingஐ நான் உணர்ந்த காலகட்டம். அச்சமயம், நேட்சுரல்ஸ் (Naturals) அழகு நிலையத்தின் மார்கெட்டிங் தலைமையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். 2016ல் வேலையை ராஜினாமா கடிதம் கொடுத்து வெளியேறினேன். என் கணவரும் அவர் வேலையை விட்டு, இருவரும் விவசாயத்தில் இறங்கினோம்.

சொந்தமாக நிலம் இல்லை. திருவள்ளூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளை சந்தித்து, இயற்கை முறை விவசாயத்தைப் பற்றி பேசினோம். இதை யார் வாங்குவா? இவ்வளவு உழைப்பு இருக்கே.. பூச்சி இல்லாமல் காய்கறி எப்படி வரும்? இந்த விலைக்கு கட்டுப்படி ஆகாது என்றெல்லாம் பதில் வந்தது. இதற்கு மேல் விளக்கிச் சொல்ல முடியாது. Do it and show it என்ற முடிவில், களத்தில் இறங்கினோம்.

ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்தோம். மூன்று வருடம் விவசாயம் செய்த பின், மக்கள் நம்பினார்கள். மஞ்சள் தெளிச்சா பூச்சி வராது, பெருங்காயம் போதும், வேப்ப எண்ணை போதும் என்ற நம்பிக்கையை விதைக்கும் வேலைதான் எங்களுக்கு இருந்தது. இது எல்லாமே செய்து முடிக்க, 2018 ஆச்சு.

இதற்கிடையே, 200 குடும்பங்களுக்கு மாடித் தோட்டம் அமைத்துக் கொடுத்தோம். அதிலும் சிலர், எங்களுக்கு நேரம் இல்லை, தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை, நீங்க வந்து பராமரிக்க முடியுமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். விவசாயி தரப்பில், திறமை இருக்கு ஆனால் விற்பனை முறை தெரியவில்லை என்றார்கள். ஆக, விவசாயி பிரச்சனையும் புரியுது, வாடிக்பையாளர்கள் தேவையும் புரியுது. இதை சமாளித்தால் போதும், என்ற முடிவில் எழுந்த தொழில் புரட்சி தான் ‘மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ்’ ஆ மாறிடுச்சு.

கே.    இயற்கை விவசாயத்தில் நீங்கள் எப்போதும் கவம் செலுத்தும் சில முக்கிய கொள்கைகள் அல்லது கோட்பாடுகள் எவை?

ப.      என்னைப் பொறுத்தவரை, மண்ணின் வளம் தான் மிக முக்கியம், அவசியம் கூட. Yield, அதிக விளைச்சல்  பற்றி நான் எப்போதும் பேச மாட்டேன். ஆனால், விதையைப் போட்டவுடனே, அமோக விளைச்சலைப் பற்றி தான் விவசாயி பேசுவார். நுண்ணுயிரும், மண்ணின் வளத்தையும் கூட்டினாலே, விளைச்சல் நல்லா இருக்கும். இதில் மட்டும் காம்ப்ரமைஸ் கூடாது. உடல் நல்லா இருந்தால்தான் ஓட முடியும், என்பது போல, மண்ணின் வளத்தின் மீது தான் என் கவனம் இருக்கும். 

அடுத்து, விவசாயத்தில் பெரும்பாலும், மோனோ கிராப்பிங் (mono cropping) முறை இருக்கும். அதாவது, எல்லோரும் நெல் விதைக்கிறாங்க, இல்லைனா ஏதோ ஒரு பயிர் வைக்கிறாங்க. அது நல்லா வந்தா, எல்லோரும் அதையே பின்பற்றுவாங்க. பல தானியம் அல்லது பல மரங்கள் சேர்ந்து வரக்கூடிய பல்லுயிர் (biodiversity) என்ற முறை காணாமல் போயிடுச்சு. மை ஹார்வெஸ்ட் ல, என்னோட விவசாயிகள் அத்தனைப் பேரும் பல்லுயிர் முறையைப் பின்பற்றுபவர்கள் தான். ஒரு பக்கம் கீரை இருக்கும், மறு பக்கம் கொடியில் புடலையோ, பாவக்காயோ இருக்கும். நான்கைந்நு வகைகள் இருந்தாலும், மழை வரும் போது, தாக்குப் பிடிக்க உபயோகமா இருக்கும்.

மூன்றாவதாக உரம். நம்மை சுற்றி இருக்கும் பொருட்களையே, உரமாக்க வேண்டும். பணம் கொடுத்து, பாட்டிலில் அங்கே வாங்கினேன், இங்கே தெளித்தேன் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மாட்டுச் சாணம், கோமியம், காய்ந்த இலை, மீன் தலை போன்றவை, நம்மிடையே இருக்கு. இந்த வேஸ்ட் எல்லாத்தையும் சேகரிக்கிறது, கொஞ்சம் அதிக வேலை தான். ஆனால், உரம் முழுக்க நம் தயாரிப்பாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொள்வேன்.

அடுத்து, pesticides, பூச்சி விரட்டீ னு தான் சொல்றோம். எதுவும் pesticide கிடையாது. பூச்சி நமக்குத் தேவை. ஆனால், செடியை சாப்பிடாமல் இருக்கணும். இந்த சுற்றுச் சூழலை பாதுகாக்க, ‘ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை’  integrated pest control முறையை பின்பற்ற வேண்டும். இதற்கு நான் ஒரு காலமும் இரசாயன முறக்குப் போக மாட்டேன். விவசாயிகளுக்கும் பரிந்துரைக்க மாட்டேன். எல்லாவற்றிற்கும் இயற்கை முறையிலேயே தீர்வு உண்டு. அந்த காலத்திற்கான செடியாக இல்லாமல் இருக்கலாம், அல்லது வேறு ஏதாவது ஒரு பிரச்சனையாக இருக்கலாம். காரணம் கண்டறிந்து தீர்வு காண வேண்டும்.

அடுத்து, எல்லாமே economical ஆக, பொருளாதார ரீதியாக, சிக்கனமாக இருக்க வேண்டும். செலவைக் குறைக்க வேண்டுமென்றால், native crops, நாட்டு பயிர் வகைகளை விதைக்க வேண்டும். அந்தந்த காலத்திற்கேற்ற பயிராக இருக்க வேண்டும். எல்லா காலத்திலும் மாம்பழம் சுவையாக இருக்காது. மண்ணுக்கும், நீருக்கும், ஊருக்கும், மக்களுக்கும் ஏற்றாற் போல தான் பயிரும் அமைய வேண்டும்.

இந்த 5 விஷயங்களை உன்னிப்புடன் கவனிப்பேன். இறுதியாக, விதைகள். விதைகள்ல ஒரு பெரிய புரட்சியே இருக்கு. GMO விதைகளை முற்றிலுமாக தவிர்த்து விடுவேன். முடிந்தவரை, அதை எதிர்த்து, விழிப்புணர்வை கொடுத்துக் கொண்டே இருப்பேன்.

கே.   ஒரு பெண் தொழிலதிபராக, ஆண் ஆதிக்க விவசாயத் துறையில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? அவற்றை எப்படி சமாளித்தீர்கள்?

ப.    என்னைப் பொறுத்தவரை, விவசாயத்தில் பெண்கள் தான் மிகப் பெரிய work force. விவசாயத்தில் பெண்களின் பங்கு 84%. ஆனால், பெரும்பாலான பெண்களுக்கு நிலம், சொந்தம் இல்லை. நாத்து நட்டு, அறுவடை செய்து, காய்களை அறுத்து, ஊறுகாய் செய்யும் வரை அனைத்து வேலையும் பெண்கள் செய்கிறார்கள். குனிந்து, நிமிர்ந்து செய்யும் வேலைகள் அத்தனையும் பெண்கள் காலம் காலமாகச்  செய்து வர்றாங்க. ஆனால், உண்மையில் நிறைய (disparity) வேற்றுமை இருக்கு. ஆள் கிடைக்கவில்லையா, பெண்களை கூப்பிடு. குறைந்த கூலிக்கு வேலை செய்வார்கள் என்ற எண்ணம் இன்னமும் இருக்கு.

ஆண் பெண் பாகுபாடு பார்த்து சம்பளம் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இத்தனை மணிக்கு வந்தார்கள், செய்த வேலை இதுதான் என்று கணக்குப் பார்த்து, சம்பளம் தருவேன். பெண்ணுக்கும் இவ்வளவா? அப்போ எனக்கு அதிகமா கொடுங்க என்று கேட்பார்கள். சம அளவு ஊதியம் என்பது, it’s totally not acceptable.

ஆணுக்கு அதிகம் கொடுத்தால், அந்த காசு வேறு எங்கோ செலவு செய்து, வீட்டிற்குக் குறைவாகத் தான் கொடுப்பார்கள். ஆனால், பெரும்பாலான பெண்கள், காசை வீட்டிற்குத்தான் கொண்டு போவார்கள்.  முடிந்தவரை பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். விவசாயத் துறைல, பெண்களை எடுத்துட்டு, யோசிக்கவே முடியாது. நான் பேசுவதை விட, களத்தில் இறங்கி பார்த்தபின் தான், விவசாயத்தில் பெண்களின் பங்கு ரொம்ப ரொம்ப ஜாஸ்தி என்பதை உணர்ந்தேன்.

தனிப்பட்ட முறையில் பார்த்தால், நான் ‘ஒரு இஞ்சினியரிங் சீட் வேஸ்ட் பண்ணிட்டேன்’ என்ற குற்றச்சாட்டு இருந்தது. அடுத்து, ஏதோ நிறைய பணம் பொரளுது, funding இருக்கு. அதை செலவு செய்ய தான் விவசாயம் பண்றாங்க என்று பேசினார்கள். வேறு வேலை எதுவும் கிடைக்காததால, விவசாயம் செய்ய வந்துட்டாங்க என்றார்கள். வேறு ஏதோ லாப நோக்கத்துடன் வந்திருக்காங்க என்றார்கள். இவங்க பெண் தானே, சும்மா பொழுது போக்குக்காக விவசாயம் பார்க்குறாங்க என்று கூட சொன்னார்கள். இது தான் எனக்கு மிகுந்த கோபத்தை உண்டுபண்ணியது. பெண்கள் தீவிரமா விவசாயத்தில் ஈடுபடக் கூடாதா என்ன? சில கேள்விகளை நான் யோசிப்பதுண்டு. மற்றபடி, பெண் என்பதால் தான் இந்த கேள்விகளோ, என்று தான் எனக்குத் தோனுது.

கே.   நீங்கள் செயல்படுத்தி வரும் புதுமையான நடைமுறைகள் அல்லது நுட்பங்களின் உதாரணங்கள் சில?

ப.      இயற்கை விவசாயத்துல நம்மாழ்வார், சுபாஷ் பலேகர் போன்றவர்கள் நிறைய சொல்லி இருக்காங்க. ஆனா, எதையும் அப்படியே பின்பற்ற முடியாது. செடிகளை வளர்ப்பது, குழந்தை வளர்ப்பு மாதிரி. எப்படி சொன்னால் என் பிள்ளை கேட்கும் என்று வளர்ப்பவருக்குத் தான் தெரியும். செடிகளின் தேவைக்கேற்ப, பராமரிப்பு இருக்க வேண்டும்.

அடுத்து, விவசாயிகளுக்கு fair price  சரியான விலை கொடுக்கப்பட வேண்டும்.  மை ஹார்வெஸ்ட் ஃபார்மில் அதில் நாங்கள் உறுதியாக இருப்போம். நாங்கள் செல்வதற்கு முன், அவர்கள் விற்ற தக்காளிக்குக் கிடைத்த காசு, ஞாய விலையா என்று யாரும் கேட்டதில்லை.

ஒரு 10ரூ. பேனா தயாரிப்பில் கூட, தயாரிக்க ரூ 2, பேக்கிங் செய்ய ரூ. 1, லாபம் ரூ. 4 என்று நிர்ணயிக்காமல், களத்தில் இறங்க மாட்டார்கள். ஆனால், விவசாயிக்கு யாருமே விலை நிர்ணயித்தது கிடையாது. அவர்கள் உழைப்பை யாரும் கவனித்ததில்லை.  ஆகவே, வெண்டைக்காயின் விலை ரு25 என்றால், யாரும் ரூ25 கொடுத்து வாங்க மாட்டார்கள். சந்தையில் ரூ10க்கே கிடைக்கும். ஆனால் நான், விவசாயிகளின் வேலையையும் கருத்தில் கொண்டு தான் விலையை நிர்ணயிப்பேன்.

அடித்து, இயற்கை விவசாயத்தின் மீது நம்பிக்கையை வளர்க்கணும், உருவாக்கிய நம்பிக்கையை  தக்க வைக்கணும். படம் போட்டு ஏமாற்றும் வேலை அல்ல இது. உணவு சம்பந்தப்பட்டது. நம்பிக்கையின் அடிப்படையில், வாடிக்கையாளர்களை எங்கள் தோட்டத்திற்கு வந்து பார்க்கும் படி அழைப்பு விடுவோம். ‘விவசாயம்னா என்ன, ஒரு கட்டு கீரை உங்கள் கைக்கு வரும் முன், எங்களுக்கு எவ்வளவு வேலை இருக்குன்னு வந்து பாருங்க’ என்று அழைப்போம்.

அடித்து, வீட்டு வினியோகம் home delivery. நிறைய பேர், அவர்கள் ஊர் காய்களை விரும்புவதுண்டு. எங்க ஊர் காயோட ருசி வருமா? என்பார்கள். நகரத்தில் நாக்கு செத்துப் போனவர்கள், ருசியான உணவு வேண்டும் என நினைப்பவர்கள், பணம் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள், இவர்களிடமெல்லாம் இந்த வகை உணவை கொண்டு சேர்ப்பதில் பெரிய இடைவேளை இருக்கு. அந்த இடைவேளையை நிரப்பும் விதமாக, இன்று 8,000 குடும்பங்கள்  மை ஹார்வெஸ்ட்டில் காய்கறிகள் வாங்குறாங்க.

எங்குமே குளிர் சேமிப்பு (cold storage) கிடையாது. Only fresh delivery.

கே.    Organic products எனப்படும் இயற்கை விவசாய பொருட்கள், சராசரி விலையைவிடக் கூடுதலாக விற்கப்படுவதற்கான காரணம் என்ன?

ப.     அதிக பணம் வசூலிப்பது எங்கள் நோக்கம் அல்ல. இன்று இயற்கை விவசாயம் செய்வதே ரொம்ப கடினமான வேலையா இருக்கு. சாதாரணமாக விவசாயம் செய்பவர்கள், மானிய விலையில் பொருள் வாங்குவார்கள். வேறு வழி இல்லாமல் அந்த விலைக்கே விற்கிறோம். விவசாயிக்கு லாபம் கிடைத்ததா அல்லது வேறு யாருக்காவது கிடைத்ததா என்று யாரும் யோசிப்பதில்லை. ஆனால், ஆர்கானிக்கில், விதையிலிருந்து எல்லாமே விலை ஜாஸ்தி. அதே சமயம், ஆர்கானிக் என்று சொல்லி, ஏமாற்றுபவர்களும் உண்டு.

அடுத்து, demand and supply, தேவை மற்றும் விநியோகத்தில் பெரிய வித்தியாசம் இருக்கு. மொபைல் ஃபோன்கள் வந்த புதிதில் விலை மிக அதிகமாக இருந்தது. இன்று, விலை குறைஞ்சு போச்சு. காரணம் தேவை அதிகமாச்சு, அதற்கேற்றவாறு சப்ளை விலை குறைஞ்சுபோச்சு. ஆனால் உணவுப் பொறுத்தவரை, தேவை மற்றும் விநியோகம் பெரிய பிரச்சனையாகவே இருக்கு. கோயம்பேடு வர்ற காய்கறிகளின் போக்குவரத்துக் கட்டணம் ரூ. 1 என்றால், இயற்கை விவசாய பொருட்களுக்கு ரூ. 5. இப்படியாக விநியோகத்திலும் பலகாரணங்கள் உண்டு.

ஆர்கானிக்கை பொறுத்தவரை, விவசாயிக்கு ஞாய விலையைக் கொடுக்கணும். எங்க விருப்பத்திற்கு இரண்டு மடங்கு, மூன்று  மடங்கு என்று நிர்ணயிப்பது கிடையாது. மற்றப் பொருட்களை ரூ 50க்கு வாங்கினால், ஆர்கானிக் பொருட்களை ரூ 70 கொடுத்து தான் வாங்க வேண்டி இருக்கும். இந்த ரூ.20ஐ கொடுக்க யோசிக்கிற நாம, அந்த சேமித்த காசை மருத்துவமனைக்கு கொண்டுபோய் கொடுக்கும் படியா இருக்கும். இன்றைய மகப்பேறு பிரச்சனைகள் எல்லாமே, இன்று புதிதாக வருபவை அல்ல. கடந்த மூன்று நான்கு தலைமுறைகளாக நாம் சாப்பிட்டது வந்தது தான். அடுத்தத் தலைமுறையை நாம் மாற்ற வேண்டுமானால், இன்றைய உடல், ஆரோக்கியத்திற்கு முதலீடு செய்தாக வேண்டும்.

‘நான் சாதாரண பொருட்கள் வாங்கி சாப்பிட்டு  நல்லா தானே இருக்கேன், ஏன் இந்த அலம்பல்..’ என்றெல்லாம் பேசாமல், நம்ம உடல் ஆரோக்கியத்நை கவனிப்போமே என்று இருப்பது மேல். நாம் கொடுக்கும் சிறிதளவு கூடுதல் பணம் யாருக்கு? நம் விவசாயிக்குத் தானே! எங்களுக்கென்றில்லை, விவசாயிகளுக்கு ஞாயமாக பணம் கொடுக்கும் கம்பெனிகளுக்கு ஆதரவளியுங்கள்.

கே.    விவசாயத்தில் பங்கேற்க, பெண்களை எப்படி ஊக்குவிக்கிறீர்கள்?

ப.       அனைத்திலும் பக்குவமாக வேலை செய்யும் திறன் பெண்களுக்கு உண்டு. எனக்குத் தெரியாது, பழக்கமில்லை என்று சொல்லும் பெண்களும் உண்டு. உணவே மருந்து என்ற கோட்பாட்டை நாம் மறந்து விடுகிறோம். உணவு சம்பந்தப்பட்ட உரையாடல்களை நாம் ஆரம்பிக்க வேண்டும். இப்போ, சாம்பார்ல என்ன காய் இருக்குனு பேச ஆரம்பித்தால் தானே அது வெள்ளை கத்தரிக்காயா அல்லது பர்பிள் கத்தரிக்காயா என்று நாம் தொடர்ந்து பேச முடியும்! நகரத்தில் ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களுக்கு, அந்த உணவு எதில் செய்யப்பட்டது என்பதே தெரியாது. இட்லிக்கும் உளுந்துக்கும் உள்ள தொடர்பு தெரியாது. ஆக, பெண்கள் விவசாயத்தில் ஈடுபடுவதென்பது, உடல் உழைப்புக்காக மட்டும் அல்லாமல், it’s a lot about mindfulness on food.

நம் பாரம்பரிய உணவுகளைப் பெண்கள் ஆவணப்படுத்த வேண்டும். அதை, பிறருக்குத் தெரிய படுத்த வேண்டும். இருமல் இருக்கா, இரண்டு தூதுவளையை  பறித்துத் தின்றால் போதும் என்று தெரிய வேண்டும். பிரண்டையை சாப்பிட்டல் மூட்டு வலி குணமாகும் என்று தெரிய வேண்டும். அதிக அளவில் பெண்கள் இத்துறைக்கு வந்தால், ஆரோக்கியமான உலகை மிக விரைவில் படைக்கலாம்.

கே.    விவசாயத்தில், பெண்களுக்கு ஆதரவான  நிறுவனங்கள் ஏதேனும் உங்களுக்கு உதவ முன் வருகிறார்களா?

ப.       இயற்கை விவசாயத்தைப் பற்றி பிரசாரம் செய்யும் போது, நிறைய நிறுவனங்கள் ஆதரவளிச்சிருக்காங்க. பொங்கல் சமயத்தில் கூட, கரும்பை, வெறும் கரும்பு தானே என்று பார்க்காமல், இதை ஏன் உங்கள் பணியாளர்களுக்குப் பரிசளிக்கக் கூடாது? இப்படியாக விவசாயிகளை ஆதரிக்கலாமே என்ற போது, நிறைய பேர் முன் வந்தார்கள். அதையும் தாண்டி, இது மக்களின் கடமை. என்றைக்காவது ஒரு நாள், நானும் இதைச் செய்கிறேன், I will spend a day in farming, என்று சொல்வது போல, மக்கள் பார்வையிட வருவதும்,  பங்கெடுத்துக் கொள்வது ஒழு பெரிய முயற்சி. இதனால் consumer movement இருக்கும். அதைத் தவிர, பேச்சு வாக்கில் எங்கள் நிறுவனத்தைப்  பற்றி மற்றவர்களிடம் பகிரலாம், நடப்பதை ஆவணப்படுத்தலாம், வலைதளங்களில் பகிரலாம், எங்க போஸ்ட்

பிடித்திருந்தால் அதை பகிரலாம். இதெல்லாமே எங்களுக்கு ஒரு ஆதரவு தான்.

கே.     இப்பணியில்உங்களிடைய குறிப்பிடத்தக்க சாதனைகள் அல்லது அங்கீகாரம்?

ப.         விருதுகள் நிறைய வருது. மீடியாவுக்கு நன்றி. சமீபத்தில் கூட, விவசாயத் துறைக்காக, அவள் விகடன் விருது கிடைத்தது. நடிகர் கருணாஸ் கையால் விருதைப் பெற்றேன். அது ஒரு பக்கம். இரண்டு வருடங்களுக்கு முன், அரசாங்க விருதும் கிடைத்தது. இதைத் தாண்டி, என் விவசாயிகள், ‘இந்த மாத இறுதியில் நான் இவ்வளவு லாபம்  சம்பாதித்தேன், இந்த முறை மகசூல் நல்லா இருக்கு’ என்று சொல்வதை தான் நான் விருதாகப் பார்ப்பேன். என் வாடிக்கையாளர்கள் எங்களை தொடர்பு கொண்டு, ‘காயெல்லாம் ருசியா நல்லா இருக்கு’ என்று சொன்னால், அது ஒரு பெரிய விருது.

விருதுகள் நிச்சயம் என் நிறுவனத்திற்கு ஒரு தெம்பைத் தரும். சமீபத்தில் கூட, Global investors summit, உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் நான் பேசியது, எனக்கும், என் இயக்கத்தில் உள்ளவர்களுக்கும் பெருமை சேர்த்தது. விருதுகள், எங்களுக்கு ஒரு அங்கிகாரம் கொடுத்து ஓட விடுது. விருதுகளுக்கு நன்றி. சந்தோஷமா இருக்கு.

கே.     உங்கள் கருத்துப்படி, விவசாயத்தில் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில்தனிநபர்கள் எவ்வாறு பங்களிக்க முடியும்?

ப.        தனி மனித பங்களிப்பு இருந்தா, எல்லாமே மாறிடும்.  ‘நான் மட்டும் மாறி, என்ன செய்ய? நான் மட்டும் பிளாஸ்டிக் புரூசை விட்டு கட்டை  புரூசுக்கு மாறி என்ன லாபம்?’  என்று யோசித்து, யாருமே நகராமல் இருக்கிறோம். ஒருவரைப் பார்த்து மற்றவர் மாற வேண்டும். நான் பயோ என்சைம் கொண்டு வீட்டை சுத்தப் படுத்துவேன், லைசால் வாங்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தால், பின் இவர்கள் ஏன் இதை வாங்குவதில்லை என்று யோசிப்பார்கள். எல்லாமே தனி மனித மாற்றத்தில் தான் ஆரம்பமாகும்.

No matter what, நான் மாறப் போகிறேன் என்ற முடிவு தான், பெரிய உந்துதலாக அமையப் போகிறது.  குடும்பத்தில் யாராவது ஒருத்தர் கஷ்டப்பட்டால், அடுத்த தலைமுறை சந்தோஷமாக வாழும். என் தந்தை ஆரோக்கியமான உணவை விரும்பினார், அதைப் பார்த்து வளர்ந்த நானும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறேன்.

கே.     இயற்கை விவசாயத்திற்காக நீங்கள் விரும்பி வாசித்த, அல்லது உங்களைப் பாதித்த குறிப்பிட்ட புத்தகங்கள் ஏதாவது உண்டா?

ப.        மசானபு ஃபுகோகா அவர்கள் எழுதிய  ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ (One straw revolution by Masanobu Fukuoka) . அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். அதுபோல,  நம்மாழ்வார் அவர்கள் எழுதிய ‘விதைகளே பேராயுதம்’. மற்றபடி, நான் நிறைய சுய சரிதை படிப்பேன். நிறைய பயணம் மேற்கொள்கிறேன்.

கே.      சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை விவசாயத் தொழிலில் நுழைய ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு, குறிப்பாக பெண்களுக்கு நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்?

ப.    கண்டிப்பா, ஒரு நம்பிக்கையோடு இந்த துறைக்குள்ள நுழையுங்கள். ‘உனக்கு இது தேவையா? இதில் என்ன காசு பார்க்க முடியும்?’ என்று சுய சந்தேகம் உண்டு பண்ணிகிட்டே இருப்பாங்க. வெளியே, என் படிப்புக்கான வேலை என்னனு எனக்குத் தெரியும். என் நண்பர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறாங்க, எப்படி வசதியா இருக்காங்கனு எனக்கு தெரியும். ஆனால், இது என் தேர்வு. Peer pressure வேண்டாம்.  நீங்கள் செய்வது சரி என்று உங்களுக்குத் தெரிந்தால், அதை நம்பிக்கையுடன், செய்யுங்கள்.

அடுத்து, இருப்பது ஒரு வாழ்க்கை. Purposeful ஆ வாழணும். 40, 50 வருஷங்கள் முன் நடந்த தவறை இன்றைக்கி யாரோ ஒருவர் அதை மாற்றி அமைக்க உழைக்கறாங்க. It is a very noble deed. சுற்றுச் சூழலை பாதுகாக்க வேலை பண்றீங்க. சோர்வடையாதீங்க. நிறைய தடவை தனியா வேலை செஞ்சு, சோர்வடைவோம். நல்ல வேலை, சமுதாயத்திற்கான வேலைனு  யோசிச்சு செய்யுங்க. It is not always about money, but, நிலைத்து நிற்க பணம் தேவை. இலவசமா செய்றேன் என்பதற்கு மதிப்பு இருக்காது.

கே.    இயற்கை விவசாயத்தில் ஈடுபட ஆர்வமுள்ள பெண்களுக்கு, வழிகாட்டுதல் அல்லது கல்வித் திட்டங்கள் ஏதாவது வழங்கி வருகிறீர்களா?

ப. பயிற்சி பட்டறைகள் நடத்துறேன், ஆனால் அது திட்டவட்டமா இருக்காது. தேவைப்படும் இடங்களில் பேசுவேன். காரணம், பேசுவதை விட, செய்து பார்க்கும் போது தான் புரிதல் இருக்கும். உதவி கேட்டு வருபவர்களுக்கு ஆலோசனை வழங்குவோம்.

கே.    உங்களுடைய பொழுதுபோக்கு எப்படி இருக்கும்?

ப.      பயணம் எனக்கு பிடித்த விஷயம். அது எனக்கான me time. புது இடம், புது மக்கள், புது கதைகள். இரண்டாவதாக, நிறைய வரைவேன். மண்டலா ஆர்ட் செய்ய பிடிக்கும். அதுல நிறைய creativity இருக்கும். வெளியே நிறைய பயிற்சிப் பட்டறைகளுக்குச்  செல்வேன். திடீர் என்று நண்பர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களை ஆச்சரியபடுத்தி மகிழ்விக்கப் பிடிக்கும். இருப்பது ஒரு வாழ்க்கை. செய்ய நினைப்பதெல்லாம் செய்ய வேண்டும்.

கே.   புழுதிபெண்ணதிகாரம்சிறப்பிதழ் மூலம், நீங்கள் மக்களுக்குச் சொல்ல நினைக்கும் செய்தி?

ப.    இது பெண்களுக்கான சிறப்பிதழ் என்று சொன்னது எனக்கு பிடிச்சிருக்கு. உலகத்தில் பெண்கள் ரோல் மாடல்களாக, முன்மாதிரியாக இருப்பது மிகக் குறைவு. நிறைய பெண்கள் முன் மாதிரியாக வளர வேண்டும். உங்களைச் சுற்றி உள்ள பெண்களை ஊக்குவியுங்கள். உங்களுக்கேத் தெரியாமல் ஆசைகளைப் பூட்டி வைத்திருப்பார்கள். வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். ஊக்குவிப்பதில் தவறேதும் இல்லை. அவர்களின் திறமையைக் கண்டெடுங்கள்.

திருமணம், பிள்ளைகள், குடும்பம் என்பதைத் தாண்டி, உங்கள் தேவைகளை வாய் திறந்து கேளுங்கள். அடம் பிடியுங்கள். ஆசை மட்டும் போதாது. அடம் பிடிக்கவும் தெரிய வேண்டும். பெண்கள் தேவைகளுக்கு அடம் பிடிப்பதில் தவறில்லை. தியாகிகளாகவே இருந்துடாதீங்க. பெண்கள் பாவம், கொஞ்சம் வீக் என்று சொல்லி ஆறுதல் பரிசு பெற வேண்டாம். தப்புப் பண்ணி கத்துக்கோங்க.

அதே போல, பெண் அரசியல்வாதிகள் அதிகம் தேவை. சினிமா பாடல்கள் கூட ஆண்களின் கண்ணோட்டத்திலேயே பாடப்படுது. ஆக, நிறைய இடத்துல பாகுபாடு இருக்கு. உங்களுக்கு எது நல்லா வருதோ, அதுல பெஸ்டா இருங்க. தனியா இருந்தாலும் பரவாயில்லை, you can be unique. Follow your heart.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version