வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான சிறப்பிதழ் இந்த சிறப்பிதழுக்கு “திணைப்பெயர்வு” என்று பெயர் சூட்டப்பட்டு மொத்தம் 22 தலைப்புகளை உள்ளடக்கி, பல நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

  இந்தப் பதிவுகள் அனைத்தும் நாம் படிக்கும் போது ஒரு தெளிவான சிந்தனையும் மனநிலையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது நிச்சயம். சில கட்டுரைகளில் அவர்களின் எண்ணங்கள் பிரதிபலிக்கப்பட்டு சிறப்பாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கின்றது. கட்டுரைகள் அனைத்தும் பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ளது. அதனால் பல்வேறு நாட்டில் தமிழர்கள் வாழ்கின்ற சூழ்நிலையைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது.

 முக்கியமாக ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கொரியா அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றில் முதலாவது, அனைத்துக் கட்டுரைகளிலும் கூறப்பட்டிருப்பது வெளிநாட்டிற்கு சென்று ஒன்றிரண்டு ஆண்டுகளில் மீண்டும் தாயகம் திரும்பிவிட வேண்டும் என்ற எண்ண ஓட்டம் இருப்பது. இரண்டாவது வெளிநாட்டிற்கு சென்ற பிறகு ஏற்படும் எண்ண மாற்றங்களையும், எதனால் அவர்கள் தாயகம் திரும்ப முடியவில்லை என்பதனையும் புரிந்து கொள்ள முடிகிறது. மூன்றாவதாக வெளிநாட்டில் அவர்கள் என்னென்ன சுகங்களை அனுபவித்தாலும் அவர்கள் மனதில் நீங்காத வடுவாக இருக்கும் சில  விசயங்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். நான்காவதாக வெளிநாடுகளில் இருக்கும் வசதியான வாழ்க்கை பற்றியும் அதனால் அவர்களும் அவர்களது குழந்தைகளும் எதிர்காலத்தையும் சிந்திக்கும் திறனைப் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஐந்தாவதாக உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள், ஒப்பீடு போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார்கள். ஆறாவதாக மருத்துவம் மற்றும் கல்வி எவ்வளவு சிறப்பாக இருக்கின்றது போன்றவற்றை குறிப்பிட்டிருக்கிறார்கள். 

ஒரு சில கட்டுரைகள் தங்களுடைய பங்களிப்பைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறது. முக்கியமாக சிலம்பம் கற்றுக் கொடுப்பது, பறையிசை கற்றுக் கொடுப்பது, எப்படி நம்முடைய கலாச்சாரத்தையும் கலையையும் வெளிநாட்டிலும் சென்று அதை பரப்புவது போன்ற கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கின்றன.

 நானும் இங்கு அமெரிக்காவில் பறையிசைக் கற்றுக் கொண்டிருக்கின்றேன். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அனைவரும் தமிழையும் தமிழின் கலாச்சாரத்தையும் இசையையும் கண்டிப்பாக வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது.

  கட்டுரைகள் பல துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுனர்களிடமிருவந்தும் ஆராய்ச்சியாளர்களிடமிருந்தும் வந்திருக்கின்றன. அதில் வியப்பாக ஒரு குழந்தையின் கட்டுரையும் இடம் பெற்று இருக்கின்றது. 11 வயது குழந்தை தன்னுடைய எண்ணத்தை பிரதிபலித்திருக்கிறார். அந்த குழந்தை பல நாடுகளுக்குச் சென்று இப்பொழுது அமெரிக்காவில் வாழ்ந்தாலும் திரும்ப இந்தியாவிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அங்கு தன்னால் எப்படி எண்ணங்களை மாற்றிக் கொண்டு அங்கிருக்கும் மாணவர்களுடன் பழக முடியும் என்று தன்னுடைய வருத்தத்தையும் பதிவு செய்திருப்பது சிறப்பாக இருந்தது. இந்த குழந்தையின் எண்ண ஓட்டம் மேலே குறிப்பிடப்பட்ட அனைவரின் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கண்டிப்பாக விடை கிடைத்துவிடும். ஆம், நீங்களும் நானும் நினைப்பது சரியே, குழந்தைகளின் மன நிலையை கருத்தில் கொண்டே நாம் தாயகம் திரும்பும் எண்ணங்களை பல நேரங்களில் மறுபரிசீலனை செய்யவேண்டி உள்ளது. இப்படியாக பல தலைப்புகளின் கீழ் பல கட்டுரைகள் ஒரு கோர்வையாக இங்கு உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த அனைத்து கட்டுரைகளையும் ஒருங்கிணைத்து வெளியிட்டிருக்கும் புழுதி நண்பர்கள் குழுவிற்கும் என்னுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும்.

2 thoughts on “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version