வாசகர்களுக்கு,
மாத(ய)விடாய்!
ஆமாம்.. பெண் எப்போது பூப்பெய்கிறாள் எப்போது மாதவிடாய் அவளிடமிருந்து விடைபெறுகிறது என்பது ஒரு மாயம் தான்!… இன்னும்கூட மாதவிடாய் பற்றிய சரியான புரிதலும் விழிப்புணர்வும் தேவைப்படும் சமூகமாகவேதான் கட்டமைக்கப்பட்டுக் குறிப்பாகப் பெண்களே கட்டிக்காக்கிறார்கள் என்பதும் நூறு விழுக்காடு உண்மை.
பெண் என்றாலே இந்திய இறையாண்மை தேசத்தில் எப்படியெல்லாம் நடத்தப்படுவாள் என்ற நேர்பொருளுக்கு மாறாக இன்று நேற்றல்ல பலநூற்றாண்டாக பொருளாக, அரசியலாக, அவமானகரமாக மதிக்கப்படுவதை சமீபத்திய நிகழ்வுகளால் அதிகமாகவே காண்கிறோம்.
தாய்வழிச் சமூகம் எப்படியோ தனக்கே தெரியாமல் தனது உரிமைகளைப் பறிகொடுத்து நிற்கிறது. இந்த இதழ் முழுமைக்கும் பெண்களின் பார்வையில் அவர்களின் உணர்வுகளை நம் பார்வைக்கு தங்களின் எல்லையில் நின்று எழுதியிருக்கிறார்கள். வாசிப்போடு நிற்காமல் இதற்கான களப்பணிகளில் ஈடுபட வாய்ப்பும் பொறுப்பும் உள்ளவர்கள் கரம் கோர்ப்பதே நல்ல முன்னேற்றமாக அமையும். ஏற்கனவே பள்ளிகளில் வளரிளம் குழந்தைகளிடம் எங்கள் வேலையைத் தொடங்கிவிட்டோம்.
புழுதி கிளப்பிவிடும் ஒவ்வொரு பொருண்மையும் சமூகப்பொறுப்புடன் பயணிக்கும் என்று உறுதியளிக்கிறோம்.
விஜயராணி மீனாட்சி
“Periods are something women hate to have; but are scared not to have”
இது தான் பொதுவாக பெண்ணின் மனநிலை. ஒவ்வொரு மாதமும் படும் அவஸ்தைக்கு இந்த மாதவிடாய் வராமலே இருக்கலாம் என தோன்றும். வரவில்லை என்றால் அய்யோ வரவில்லையே என கவலையும் தோன்றும். ஏன் பயப்படுகிறோம்? மாதவிடாய் மட்டும் வந்தால் சரி, மனச்சோர்வு , வயிற்று வலி, உடல் வலி, மன நிலை மாற்றம், தலை வலி என கூடவே ஏகப்பட்ட தோழர்களையும் அழைத்து வந்துவிடுகிறது. சரி வரவில்லை என்றால், அவள் பெண்ணே இல்லை. அவள் நாட்டுக்கும் வீட்டுக்கும் பாரம் அவ்வளவு தான்.
இது தான் அடிப்படை. அப்போது இவர்கள் பெண்ணை எப்படி பார்க்கிறார்கள் என்றால், பொம்பள புள்ள பொறாந்தா வயசுக்கு வரணும், கட்டி குடுக்கணும், அதுங்க புள்ளைய பெத்துக்கணும் அதை வளர்க்கணும்,அப்புறம் அவங்களுக்காக வாழணும் அவ்ளோதான். உடல் ரீதியாக மன ரீதியாக ஒரு பெண்ணை இந்த சமூகம் எப்போதும் புரிந்துக்கொள்ள போவதே இல்லை. அதிலும் இப்பொழுது இருக்கும் சமூக வலைத்தளம் ரீல்ஸ் செய்கிறேன் பேர்வழி என்று, அந்த மூன்று நாட்களுக்காக துணி துவைப்பதென்ன? காய்கறி நறுக்குவதென்ன, சாக்லேட் வாங்கி கொடுப்பதென்ன? எல்லாம் அந்த மூன்று நாள் தான். அப்புறம் அதே முறுங்கை மரம் அதே வேதாளம் தான்.
ஒவ்வொரு பெண்ணின் மனநிலையும், உடல்வாகும் வெவ்வேறானவை, அதுவும் மாதவிடாயின் போது, ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நாங்கெல்லாம் இப்படியா வயித்த புடிச்சிட்டு உட்கார்ந்தோம் என ஆரம்பிக்கும் எடுத்துக்காட்டு, அவள் வாழ் நாள் முழுவதும் தொடரும்.
இப்படி பெண்ணே பெண்ணை[ப் பற்றி பேசத் தயங்கும் மாதவிடாய் என்னும் தலைப்பே இந்த மாதத்திற்கான தலைப்பாய் எடுத்ததற்கு புழுதியின் ஆசிரியர்களுக்கு நன்றி.
பெண்கள் சிறப்பிதழாக இதைக்கொண்டு வரவேண்டும் என்று, அத்தனை கட்டுரைகளும் பெண் ஆளுமைகளிடம் கேட்டிருந்தோம். அத்தனை ஆளுமைகளும் கொஞ்சம் கூட முகம் சுழிக்காது, கேட்டவுடன் கட்டுரை தர சம்மதித்தனர். அதற்காக அவர்களுக்கு நன்றி.
ஒவ்வொரு கட்டுரையும் தனித்தன்மை வாய்ந்தவை. இணைய இதழ் தானே இருக்கட்டும் என்றில்லாமல், தோழர்கள் அனைவரின் உழைப்பும் ஒவ்வொரு முத்தாய் வெளிவந்திருக்கிறது.
பழங்குடி பெண்கள் தொடங்கி பள்ளிக்கூட பெண்கள் வரையில், அத்தனை வயதினருக்குமான மன நிலை, உடல் நிலை, பழங்குடி பெண்கள் பற்றிய குறிப்புகள் என எல்லாமே இதில் அலசி ஆராய்ந்து இருக்கிறார்கள் தோழர்கள். மருத்துவ ரீதியாக இதை பெண் எப்படி கையாள வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.
பெண்கள் சிறப்பிதழாக வெளி வந்திருக்கும் ஆகஸ்ட் மாத புழுதிக்கு கட்டுரை தந்த தோழர் மகேஸ்வரி மீனாட்சி, தோழர் உமேரா, தோழர் வித்யா மனோகர், தன் பேறு காலத்திலும் கேட்டவுடன் கொடுத்த அன்புத் தோழி பத்மா, செல்ல மகள் தனபிரபா, அன்பிற்குரிய அக்கா சாந்தா தேவி, தோழர் கனகா பாலன், தோழர் சவிதா, இடையறாத பணிகளுக்கு இடையே நான் கேட்டதும் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் சரி என்று சொன்ன தோழர் லதா, அன்பு அக்கா தீபா ராணி, தோழர் மழையிசை , தோழர் பத்மா அமர்நாத், தோழர் சுபி, தோழர் சரஸ்வதி, பேரன்பிற்குரிய அக்கா மான்விழி ரஞ்சித், தோழர் சாய் வைஷ்ணவி, தோழர் உதயலஷ்மி. அன்புத்தோழி பிரியதர்ஷினி ரவி, அன்பிற்கினிய அக்கா சுனிதா கணேஷ்குமார், ஆருயிர் தோழி மதுரை சத்யா, தோழர் சரிதா என அத்தனை பேருக்கும் என் பேரன்புகளும் நன்றியும். நேர்காணலில் அனைத்து கேள்விகளுக்கு இன்முகத்தோடு பதில் அளித்த தோழர் கீதா இளங்கோவன் அவர்களுக்கு நன்றி.
கட்டுரை அனைத்தும் சரி பார்த்துக்கொடுத்ததோடு மாதவிடாய் பற்றிய ஒரு கட்டுரையும் வழங்கிய அம்மா சுஜாதா அவர்களுக்கும் நன்றி.
“சிறப்பாசிரியாரா நான் எல்லாம் வேண்டாம்” என ஜெபியிடம் சொன்ன போது “உனக்கு துணையாய் அக்கா இருப்பாங்க” என அவர் சொன்னது போலவே உடன் பயணித்த அக்கா விஜயராணிக்கு பேரன்புகளும் நன்றியும். இன்னும் எனக்கு அறிமுகம் இல்லாத நிறைய தோழர்களிடமும் புழுதிக்காக கட்டுரை வாங்கி கொடுத்த அண்ணன் வேல்கண்ணன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல விழைகிறேன்.
புழுதியின் ஒவ்வொரு இணைய இதழுக்கும், தலைப்பிலிருந்து பதிவேற்றம் வரை அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் ஜெய பிரகாஷ், சிறகன், தளபதி சல்மான் அவர்களுக்கு நிறைய நிறைய அன்புகள். உன்னால் முடியும் நீ செய் என எப்போதும் ஊக்குவித்து இன்று சிறாப்பாசிரியராய் என்னை மகிழ்வித்த நண்பர்களுக்கு நன்றி.
இனி புழுதி பறக்கும் பாரு…….
பெண்மையின் ஓர் அங்கமாக மாதவிடாய் இருக்கிறது என்பதை பெண்களே இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளாத சூழ்நிலையில் இத்தனை தோழியரின் அனுபவ புரிதல்களின் கட்டுரைகளை சிறப்பாக தொகுத்து வெளியிட்டுள்ள ஆசிரியர் குழு மற்றும் சிறப்பாசியர்களுக்கு வாழ்த்துகள்…
புழுதி பறக்க தெளிவு பிறக்கட்டும்.