தமிழ் சினிமா எப்பொழுதும் நம் மக்களோடு இயைந்த ஒன்று. சண்டைக்காட்சிகளுக்கு கத்தியை தூக்கி ஹீரோவுக்கு வழங்க திரையில் வீசிய நிகழ்வுகளெல்லாம் நடந்திருக்கிறது என்பது நமக்கு தெரியும். காலம் உலக சினிமாக்களில் பல்வேறு பரிணாமங்களை வடிவமைத்தது. சங்கர் போன்று பிரமாண்டங்களை கொணர்ந்த இயக்குநர்கள் இங்கும் அடையாளப்பட்டனர். கதை சொல்லும் யுக்தியில், காட்சி அமைப்பில் என இன்று சினிமா என்பது எங்கோ சென்றுவிட்டிருக்கிறது. கொரோனா காலக்கட்டம் தனித்திருக்கும் மனிதர்களை தொழில்நுட்ப உதவியால் இணைய வழியில் ஒன்றிணைத்து பணிபுரிய வைத்தது. இப்படி கூட இயலுமா என எல்லோரையும் ஆச்சிரியப்பட வைத்தது. அதே கொரோனா காலத்தில் தடைபட்ட சினிமாக்கள், சீரியல்கள் வேறு வடிவம் பூண்டது. அதில் ஒன்று தான் நம்முடைய தமிழ் சினிமாவிற்கும் கிடைத்த ஒடிடி, வெப் சீரிஸ் வகையறாக்கள்.
திரைப்படங்களை மட்டுமே கண்டு ரசித்த எனக்கு இந்த வெப் சீரிசில் அவ்வளவாக நாட்டமில்லை. காரணம் அது தினசரி தொலைக்காட்சி தொடர்களைப்போல் மிக மெதுவாக நகர்வதாலும், நீண்ட நேரத்தை செலவழிப்பதாலும் அதன் மீது ஏற்பட்ட ஒவ்வாமை. அதையும் கடந்து சில சீரிஸ்கள் பலரால் புகழப்படும்போது அதை காணும் வாய்ப்பு அமைந்தது. அதில் மிகச்சில படங்களை பற்றி சுருக்கமாக கூறுகிறேன்.
1. வதந்தி. தமிழ்.
நாஞ்சில் மொழியுடைய கன்னியாகுமரி மாவட்டத்தில் வெலோனி என்கிற பெண் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார் என்ற விசாரணையில் காவல் துறை இறங்க, அதில் நிறைய குழப்பங்களும், மர்மங்களும் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்குகிறது. அதேபோல இறந்தப் பெண் குறித்த வதந்தியும் ஒருபுறம் காட்டுத்தீயாக பரவ, இறுதியில் வெலோனியைக் கொன்றது யார்? எதற்காக அவர் கொல்லப்பட்டார்? – இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லும் க்ரைம் – த்ரில்லர் வெப் தொடர் தான் ‘வதந்தி’. படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும் அப்பாவியான ஒரு கேரக்டர் தான் முடிவில் அக்கதையின் போக்கை மாற்றியிருப்பார். அதுபோன்ற கதைகள் ஆங்கில படங்களில் அதிகம். அதைப்போலவே இந்த ‘வதந்தி’ -யின் கதை முடிவும் எதிர்பாராத திருப்பங்களால் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறது.
2. தி ஹன்ட் பார் வீரப்பன். தமிழ்.
மலையூர் மம்பட்டியான், வீரப்பன் ஆகிய இருவரின் கதைகளை கேட்டு வளராத 90’களின் குழந்தைகளே கிடையாது. பல தொலைக்காட்சிகளில் வீரப்பனை ஒரு கதாநாயகனாக சித்தரித்து பல தொடர்கள் வெளியான போதிலும் அவைகளில் பெரும்பாலும் ஏதோ ஒரு குறை இருந்துகொண்டேயிருந்தது. அதை நிவர்த்திசெய்யும் விதமாக “தி ஹன்ட் பார் வீரப்பன்” என்கிற ஆவணப்படம் வீரப்பன் இறந்து பதினேழு ஆண்டுகள் கழித்து நெட்பிளிக்ஸ் வழியாக வெளியானது. ஆனால் அதிலும் அவர் மீதான அதீத பற்றால், அவர்மீதுள்ள வெறுப்பால் புனையப்பட்ட சாட்சியங்களின் வாய்மொழியாகவே அனைத்து தரவுகளும் இருப்பதாக தெரிந்தது. படம் வெளியான பின்பு அதுகுறித்து நிறைய வாதவிவாதங்களும் நடந்தன. அப்படத்தில் முக்கிய நபரான வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூட “நான் கூறியது வேறு அவர்கள் வெளியிட்டது வேறு”, என பிற்பாடு சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். ஒரு தரப்பினரால் வீரப்பன் ஹீரோவாக கொண்டாடப்பட்டார். இன்னொரு தரப்பால் அதே அளவிற்கு தூற்றப்பட்டார் என்றே சொல்லலாம் இந்த படத்தில். அதை தொடர்ந்து இப்படத்திற்கு முற்றும் மாற்றாக சில மாதங்களிலேயே ஜீ 5 வழியாக இன்னொரு படம் இதே வீரப்பனை பற்றி வந்தது.
3. கூசு முனிசாமி (எ) வீரப்பன். வெப் சீரியஸ் (தமிழ்)
ஒருவன் கத்தி எடுப்பதற்கு என்ன காரணம் இருக்கிறது என்பதற்கு நீங்களோ நாமோ ஆயிரம் காரணங்களை சொல்லலாம். ஆனால் கத்தியை எடுத்தவனே சொல்லும்போது தான் உண்மை என்னவென்று தெரியும். இதுவரை வெளியான, வெளிவராத வீரப்பனின் பேட்டிகள், ஆடியோ வீடியோக்களை ஒன்றாக்கி பாதிக்கப்பட்டவனின் ஒப்புதல் வாக்குமூலமாகவே தந்திருக்கிறார்கள். என்னதான் வீரப்பன் குற்றவாளி எனினும் அவர் அப்படியாக மாறியதற்கான காரணத்தை சொல்லும்போது பார்ப்பவருக்கே பரிதாபத்தை வரவழைக்கிறது. எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருப்பினும் அவர் மனம் திருந்தி வாழ நினைக்கும் கடைசிகாலத்தில் மரணமெனும் தண்டனை கிடைத்திருக்கவேண்டாம் என நம்மை நினைக்க வைக்கிறது இந்த படம். இதற்கும் நிறைய சலசலப்புகள் உண்டானது. எனினும் படம் உருவாக காரணமாக ஆதாரங்களை தந்தது சம்பந்தப்பட்டவரே என்பதால் சலசலப்புகள் எடுபடவில்லை.
4. அயலி. (தமிழ்) வெப் சீரியஸ்
நம் ஊரில் பெண்கள் மீது எவ்வாறெல்லாம் அடக்குமுறைகள் ஏவப்படுகிறது, பெண்ணுக்கு கல்வி கொடுத்தால் எவ்வாறு ஆண் வர்க்கத்திற்கு பின் விளைவுகள் ஏற்படும்? என்பதை சொல்லுவதான படம். கூரிய வசனங்களும்,இருபது வருடங்களுக்கு முன்புள்ள ஒரு பின்தங்கிய கிராமமக்களுமாக தனக்கான தனித்த அடையாளத்தை பதிவு செய்தது அயலி.
5. To Kill A Tiger. (Documentary) English, Hindi
2017, ஏப்ரல் மாதத்தில் தனது பெரியப்பா வீட்டு திருமணத்தில் இரவு விளையாடிக்கொண்டிருந்த கிரண் என்கிற 13 வயது சிறுமி மூன்று ஆண்களால் கடத்தி செல்லப்பட்டு சீரழிக்கப்படுகிறாள். அடுத்த நாள் விசயம் தெரிய வர அச்சிறுமியின் ஏழை விவசாயியான அப்பா ரஞ்சித் காவல் நிலையத்தில் புகாரளித்து வழக்கு பதிவு செய்கிறார்.
இந்த சம்பவம் ஊருக்குள் தெரிய வர ஊரிலுள்ள எல்லோரும், பெண்களும் “அந்த நேரத்துல பொம்பள புள்ளைக்கு அங்க என்ன வேலை?” “இவ மேல கற படிஞ்சிருச்சு,” “பொம்பள புள்ளனா வீட்டுல பொத்திக்கிட்டு இருக்கனும்” என ஏக வசனத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியையும்,அவரது தந்தையையும் வசை பாடுகின்றனர். இந்த சம்பவம் நடந்தது சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த தம்பதியினரை தாக்கி அப்பெண்ணை பலவந்தமாக சீரழித்த ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி அருகே உள்ள ஏதோ ஒரு குக்கிராமத்தில்.
ஒரு கட்டத்தில் ஊர் தலைவரும் குற்றம் செய்த மூன்று கயவர்களின் குடும்பமாக சேர்ந்து ரஞ்சித்தை சமரசம் செய்ய முற்படுகிறது. மேலும் வழக்கை திரும்ப பெறு, இல்லையென்றால் நம்முடைய ஊரின் கௌரவமும், உன் மகளின் மானமும் போய்விடும் என மிரட்டுகின்றனர். குற்றம் செய்தவன்களில் ஒருவனையே உன் மகளுக்கு கட்டி வைத்துவிட்டால் உன் மகள் மீதுள்ள கறை அழிந்துவிடும் என்கின்றனர். ஆனால் ரஞ்சித்தும் அவரது மகளும் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் போகவே, ஒருகட்டத்தில் கொலை மிரட்டலும் விடுக்கிறார்கள். ஒருகட்டத்தில் ஊருக்கும், மானத்திற்கும் பயந்து ரஞ்சித் மனம் தளரும்போது பாதிக்கப்பட்ட அவருடைய மகளான கிரண் தைரியமாக இந்த வழக்கை நீங்க நிறுத்த நினச்சீங்கனா அதுக்கு பதிலா நாம எல்லோரும் செத்திடலாம் என்கிறாள்.
ரஞ்சித்தை இவ்வழக்கு பதிய வைத்து அதை நடத்திக்கொண்டிருக்கும் Srijan foundation அமைப்பு அவருக்கு உறுதுணையாக நின்று பதினான்கு மாதங்களுக்கு பிறகு வழக்கில் வெற்றிபெற வைக்கிறது. குற்றவாளிகளுக்கு தலா இருபத்தி ஐந்தாண்டு சிறைதண்டனை கிடைக்கிறது.
இந்த சம்பவம் நடந்து ஏழாண்டுகளுக்கு பிறகு இதை ஒரு ‘Documentary film’ ஆக ஒரு கனடா அமைப்பு எடுத்து கடந்த மாதம் “To Kill a tiger” என்கிற பெயரில் வெளிவந்திருக்கிறது. படமாக பார்க்கும் போதே வடக்கன்களின் மீது அவ்வளவு கோபம் வருகிறது. அதிலும் நம்மை விட பல ஆண்டுகள் அனைத்திலுமாக பின்தங்கியிருப்பதை நினைத்தால் ஒருபக்கம் பரிதாபகரமாகவும் இருக்கிறது.
இப்படத்தில் ரஞ்சித்தே தான் நிஜ தந்தையாக நடித்திருக்கிறார் என நினைக்கிறேன். படம் Netflixe-ல் வெளியானது. நாட்டில் ஆங்காங்கே இப்படி தினமும் வெளியாகும் செய்திகள் எல்லாமே நமக்கு நடக்காதவரை ஒரு செய்தி மட்டுமே. அப்படி நடந்துவிட்ட ஒரு குடும்பம் ஊருக்கும், வாழ்விற்கும் பயந்து எவ்விதமான மன உளைச்சலுக்கு ஆட்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள இந்த படத்தை எல்லோரும் பாருங்கள். இது ஒவ்வொருவருக்குமான படம்.
6. நகேந்திரன் ஹனிமூன்ஸ். வெப் சீரியஸ் (மலையாளம்)
இதுவரை நான் பார்த்ததிலேயே மிக மொக்கையான கதைக்களம் கொண்ட படம் என்றால் அது இந்த நாகேந்திரன் ஹனிமூன்ஸ் படம் தான். வேலைக்கு போக முடியாத ஒருவன். கல்யாணம் செய்தால் சம்பாதிக்க வேண்டுமென திருமணத்தையே வெறுக்கிற ஒருத்தன். ஆனால் வேளாவேளைக்கு உணவை மட்டும் வெளுத்துகட்டுகிறான். தன்னுடைய பால்ய கால நண்பன் வெளிநாட்டிலிருந்து வந்ததும் அவனுடைய வளர்ச்சியை பார்த்து இவனும் வெளிநாடு செல்ல ஆசைகொள்கிறான். இந்த ஆசையை தனது நண்பனிடம் கூற அவனும் சரி நீ பாஸ்போர்ட் எடு விசாவுக்கு கொஞ்சம் பணம் வேண்டும் அதையும் தயார் பண்ணிடு என்கிறான். இவன்தான் வெட்டி ராஜாவாச்சே! இன்னொரு உள்ளூர் நண்பனின் ஆலோசனையின்படி திருமணம் முடித்தால் வரதட்சணையாக வரும் பணத்தை வைத்து நீ வெளிநாடு செல்லலாம் என கூற. தன்னுடைய மாமன்மகளை மணமுடிக்கிறான். ஆனால் அவர்களோ பரம ஏழை. வரதட்சணை இல்லை என கைவிரிக்க திரும்ப அதே நண்பனின் ஆலோசனை படி சுகபோக சொத்துகளுடைய ஆனால் சற்று மனநலம் குன்றிய ஒரு முதிர்கன்னியை மணமுடிக்கிறான். அங்கும் வரதட்சனைக்கு பதில் ஏமாற்றமே மிஞ்சுகிறது… அந்த நண்பன் ஒரு புரோக்கர் என்பதால் இதேபோன்று வெவ்வேறு ஊர்களில் ஏதாவது ஒரு குறையுடைய பெண்ணை பார்த்து அடுத்தடுத்து மணம்முடிக்கிறான். இப்படியாக ஆறு கல்யாணம் வரை நீள்கிறது. இறுதி கல்யாணத்தில் தான் அகப்படுகிறான். கதை 70-80 காலத்தில் நடக்கிறது. ஆனாலும் பார்வையாளர்களுக்கு கொஞ்சம் கூட சந்தேகமே வராது என அவர்களே முடிவெடுத்துவிட்டார்கள் போல. மிக மெதுவாக நகரும் கதைக்களம் அயற்சியாக இருக்கிறது. இசையும் அக்காலத்திற்கான ஒளிப்பதிவும் மட்டுமே படத்தை பார்க்க வைக்கிறது. முடிவில் கதாநாயகன் மணமுடித்த ஐந்து பெண்களும் இவன் வீட்டில் காத்திருக்கிறார்கள். இந்த முடிவை பார்த்ததும் இன்னும் கடுங்கோபம் தான் வந்தது எனக்கு.