மரணத்தின் அமுது

பூமியில் வாழ்வின் வரலாறு என்பது உயிரினங்களுக்கும் அதன் சுற்றுப்புறத்திற்கும் இடையிலான வரலாறாகும்.  பூமியில் உயிரினங்கள் உருவாக, பல மில்லியன் ஆண்டு தடைகளும்  சவால்களும்  தேவைப்பட்டன.  கடந்த நூற்றாண்டில் மட்டுமே, மனிதர்கள் என்ற ஒரு இனம், உலகை மாற்றும் குறிப்பிடத்தக்க சக்தியாக மாறியுள்ளது.  சுற்றுச்சூழலின் மீதான மனிதனின் தாக்குதல்களில் மிகவும் ஆபத்தானது, சுற்றுச்சூழல்  மாசுபாடு.

கற்பனைக் கதைகளில் (fairy tales) நாம் கண்டு மயங்கிய காடுகள் இன்று, இலையை மென்று சாப்பிட்டாலோ, அல்லது செடியின் சாற்றை உறிஞ்சினால் கூட, பூச்சிகள் அழியும் விஷக் காடாக மாறிவிட்டது. இன்று நாய்களின் இரத்தம் விஷமாக மாறியதால், ஒரு உண்ணி நாயைக் கடித்தால், அது இறந்துபோகும்.  ஒரு பூச்சி, அது தொடாத தாவரத்திலிருந்து வெளிப்படும் நீராவியால் இறந்துபோகும் அபாயம் உண்டு, ஒரு தேனீ தனது தேன் கூடுகளுக்கு நச்சுத் தேனை உற்பத்தி செய்கிறது. இது எப்படி நடந்தது?

இரண்டாம் உலகப் போரின் போது, ​​போருக்காக உருவாக்கப்பட்ட செயற்கை இரசாயனங்கள், பூச்சிகளுக்கும் கொடியதாக மாறியது.  அதாவது, பூச்சிக்கொல்லி பண்புகள் கொண்ட செயற்கை இரசாயனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.  இதை அவர்கள் தற்செயலாக கண்டுபிடிக்கவில்லை. கொடிய இரசாயனங்களை சோதிக்க, பூச்சிகள் வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்டன.

அணு ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன. ஸ்ட்ரோண்டியம் 90 (Strontium 90), அணு ஆயுத வெடிப்புகள் மூலம் காற்றில் வெளியானது. மழை மூலமாக பூமிக்கு வந்து, மண்ணில் தங்கி, அங்கு விளைந்த புல் அல்லது சோளம் அல்லது கோதுமைக்குள் நுழைந்து, காலப்போக்கில், மனித எலும்புகளை தனது இருப்பிடமாக்கிக் கொண்டது. அம்மனிதன் இறக்கும் வரை, அந்த இரசாயனம்  அங்கேயே தங்கி விடும். இது ஆயுதங்களின் இரசாயன விளைவு.

பூச்சிக்கொல்லிகளை வேறுபடுத்துவது அவற்றின் வலுவான உயிரியல் ஆற்றலாகும்.  அவை பூச்சிகளுக்கு மட்டும் விஷமாக மாறவில்லை;  மனித உடலின் மிக முக்கியமான செயல்முறைகளை பாதிப்படையச்செய்யும் அதாவது, நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்கும் என்சைம்களை அவைத் தடுத்து, பல்வேறு உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டைத் தடுக்கும்.

நவீன பூச்சிக்கொல்லிகள் இன்னும் ஆபத்தானவை.  பெரும்பான்மையான பூச்சிக்கொல்லிகள், இரண்டு குழுக்களின் கீழ் அடங்கும்.  ஒன்று டிடிடி (குளோரினேட்டட் ஹைட்ரோ கார்பன்கள்) மற்றும் இன்னொரு குழுவில் கரிம பாஸ்பரஸ் பூச்சிக்கொல்லிகள் உள்ளன.  DDT இப்போது உலகளவில் பயன்படுத்தப்படுகிறது.

டிடிடி ரசாயனம், முதன்முதலில் 1874 ஆம் ஆண்டில் ஒரு ஜெர்மன் வேதியியலாளரால் (chemist) கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் 1939 ஆம் ஆண்டு வரை, அதை ஒரு பூச்சிக்கொல்லிக்கான  கண்டுபிடிப்பாக யாரும் பார்க்கவில்லை. உடனே,  ஒரே இரவில், டிடிடியானது பயிரை அழிக்கும் பூச்சியால் பரவும் நோயை முறியடிப்பதற்கும், விவசாயிகளின் போரில் வெற்றி பெறுவதற்குமான ஒரு வழியாகப் பாராட்டப்பட்டது.  இதை ஒரு பூச்சிக்கொல்லியாக கண்டுபிடித்த சுவிட்சர்லாந்தின் பால் முல்லர், நோபல் பரிசை வென்றார்.

எந்த வகை பாதிப்பும் இல்லை என்ற அம்சத்துடன், இந்த பூச்சிக்கொல்லி மிக பிரபலமானது.  இந்த எண்ணம் தோன்ற, மற்றுமொரு காரணம் உண்டு. போர் காலத்தில், பேன்களை எதிர்த்துப் போராடுவதற்குப் பல வீரர்கள், அகதிகள் மற்றும் கைதிகளுக்கு, இதை  பவுடர் வடிவில் மேலே தெளிப்பார்கள். இது தான் இந்த ரசாயனத்தின் முதல் பயன்பாடாகும். இப்படி டிடிடி உபயோகித்து, அதனால் யாரும் உடனடியாக பாதிக்கப்படாததால், இரசாயனம் நிச்சயமாக தீங்கு விளைவிக்காததாக இருக்க வேண்டும், என்று பரவலாக நம்பினார்கள்.

மற்ற குளோரினேட்டட் ஹைட்ரோகார்பன்களைப் போலல்லாமல், தூள் வடிவில் உள்ள DDT தோல் வழியாக எளிதில் உறிஞ்சப்படுவதில்லை என்ற உண்மையை அவர்கள் அறிந்திருக்கவில்லை.   விழுங்கினால், அது செரிமானப் பாதை வழியாக உறிஞ்சப்பட்டு, கல்லீரல், அட்ரீனல்கள் மற்றும் தைராய்டு போன்ற கொழுப்புப் பொருட்கள் நிறைந்த உறுப்புகளில் சேமிக்கப்படும் (ஏனென்றால் இது கொழுப்பில் கரையக்கூடியது).

இதைவிட ஆபத்தான செய்தி என்னவென்றால்,  ‘உணவு மற்றும் மருந்து நிர்வாக’ விஞ்ஞானிகளால் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில், மனித பாலில் இருந்து பூச்சிக்கொல்லி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இதன் பொருள், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் தனது உடலில் உருவாகும் நச்சு இரசாயனங்களை, சிறிய அளவில் ஆனால் தினசரி சேர்க்கையாகப் பெறுகிறார்கள்.

பூச்சிக்கொல்லிகளின் இரண்டாவது பெரிய குழு, அல்கைல் (alkyl) அல்லது ஆர்கானிக் பாஸ்பேட்டுகள் (organic phosphate). உலகின் மிக கடுமையான விஷத்தன்மை கொண்ட இரசாயனங்கள். ஆர்கானிக் பாஸ்பரஸ் பூச்சிக்கொல்லிகள், உயிரினங்களின் மீது ஒரு விசித்திரமான வழியில் செயல்படும். உடலில் தேவையான செயல்பாடுகளைச் செய்யும் என்சைம்களை அழிக்கும் திறன் அவற்றிற்க்கு உண்டு. பாதிக்கப்படும் நபர் ஒரு பூச்சியாக இருந்தாலும், மனிதராக  இருந்தாலும், இக்கொல்லிகளின் இலக்கு நரம்பு மண்டலம் தான்.

மாலத்தியான் (malathion) எனும் ஆர்கானிக் பாஸ்பேட், வீட்டு தோட்டங்கள், வீட்டுப் பூச்சிக்கொல்லிகள், கொசுவைக் கொல்லும் மருந்து  ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.  பூச்சிக் கொல்லி் திரவம் மற்றும் காற்றுடன் கூடிய (Liquid&Gas) Aerozone என்கிற வடிவத்தில் இருக்கும். எளிதில் காற்றில் கலக்கக் கூடியவை. உடனடி நிவாரணம் தரக்கூடியவை. பெரிய கடைகள், உணவு விடுதிகள், கோழிப்பண்ணை, மாட்டுப் பண்ணை போன்ற இடங்களில், ஈக்கள் மற்றும் கரப்பான் போன்றவற்றை கட்டுப்படுத்த, இவை உபயோகிக்கப்படும்.

மனிதனின் கல்லீரலில்  இருக்கும், அசாதாரண பாதுகாப்பு நொதிகள் (enzymes), நம்மை இதிலிருந்து ஓரளவுக்கு பாதுகாக்கும். ஆனால், தொடர்ந்து சுவாசித்து வருவதாலும், இந்த இரசாயனம் கலந்த உணவை உட்கொள்வதாலும், இந்த நொதியின் செயல்பாட்டை நாம் இழக்க நேரும். பின் மாலத்தியனுக்கு வெளிப்படும் நபர், அதன் விஷத்தின் முழு தன்மையையும் பெறுவார்.

அதேபோல, கரிம பாஸ்பேட்டுகளில் ஒன்றான பரத்தியான் (parathion) மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாகும்.  ஃபின்லாந்தில் தற்கொலைக்கு எளிதில் பயன்படுத்தப்படும் கருவியாக parathion இப்போது கூறப்படுகிறது. இந்த ரசாயனங்கள் கொண்ட பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பவர் மட்டும்மல்லாது, அந்த காய் கனிகளை உட்கொள்பவரும் பாதிப்பிற்குள்ளாவார்.  சலாட் என்று நாம் ஆரோகியம் சார்ந்து சாப்பிடும் பச்சை காய் கனிகளிலும், கரிம பாஸ்பேட்டுகளின் கலவை இருக்கும். 

ஒவ்வொரு மனிதனும் இப்போது, கருவுற்றது முதல் இறக்கும் வரை ஆபத்தான இரசாயனங்களுடன் தொடர்பு கொள்கிறான். ஒரு  நூற்றாண்டுக்கும் குறைவான காலத்தில், செயற்கை பூச்சிக்கொல்லிகள், உலகம் முழுவதும் நீக்கமற பரவிக் கிடக்கின்றன.  பெரும்பாலான முக்கிய நதி அமைப்புகளிலும், கண்ணுக்குப் புலப்படாத  நிலத்தடி நீரோடைகளிலும்  கூட இந்த இரசாயணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த இரசாயனங்களின் எச்சங்கள் மண்ணில் தேங்கி நிற்கின்றன, அவை இன்றல்ல,  ஒரு டஜன் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.  இவை மீன், பறவை, ஊர்வன, வீடு மற்றும் காட்டு விலங்குகளின் உடல்களிலும் காணப்படுகின்றன. உலகளவில் விலங்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள், மாசுபாட்டிலிருந்து விடுபட்ட எந்த ஒரு விலங்கையும் கண்டறிவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றே தெரிவித்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத தொலைதூர மலை ஏரிகளில் உள்ள மீன்களிலும், மண்ணில் துளையிட்டு வாழும் மண்புழுக்களிலும், பறவைகளின் முட்டைகளிலும்,  மனிதனிடமும், தீங்கு விளைவிக்கும் ரசாயனம் காணப்படுகின்றன.  இன்னும் பிறக்காத குழந்தையின் திசுக்களிலும் கூட காணப்படலாம்.

ரசாயனங்களைப் பயன்படுத்தாமல் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன.  சில ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. மற்றவை இன்னும் சில, ஆய்வக பரிசோதனையில் உள்ளன.  ஆனால் அவை அனைத்தும், பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்கள் இயற்கையில் எவ்வாறு இணைந்து செயல்படுகின்றன, என்ற புரிதலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை.

அச்சுறுத்தலின் தன்மை பற்றிய விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது.  ரிஸ்க் எடுத்தாலும், தொழிற்சாலைகள், பணம் சம்பாதிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும் காலம் இது.  பொதுமக்கள் என்ன ஆபத்தை எடுக்க வேண்டும் என்பதை இந்த தயாரிப்பாளர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.  ஆனால், இப்படியே தொடர வேண்டுமா, அல்லது நம் சந்ததியினர் வாழும் உலகம் மேம்பட வேண்டுமா, என்பதை பொதுமக்கள் தீர்மானிக்க வேண்டும். அதற்கு அனைத்து உண்மைகளும் மக்களுக்குத்  தெரிய வேண்டும்.  ஜீன் ரோஸ்டாண்ட் கூறியது போல், “அறியும் உரிமை நமக்கு உள்ளது, ஏனென்றால் விளைவுகளை நாம் தாங்கிக் கொள்ள வேண்டும்.”

“We have the right to know, because we have to endure the consequences “.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version