ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று இங்கு எண்ணியிருந்தவர் மாய்ந்துவிட்டார்- வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகுனிந்தார்.
நூறு வருடங்களுக்கு முன்பு பெண்கள் நிலை இவ்வாறுதான் இருந்தது.
அடுப்படிக்குள்ளும் , பிரசவ வேதனையிலும் முடிந்துபோகும் வாழ்க்கையாக பெண்கள் வாழ்க்கை இருந்தது.
பாரதியார், பெரியார், அம்பேத்கர் என தலைவர்களின் குரல்கள் பெண்களுக்கான சுதந்திரத்தை வலியுறுத்தி வந்த நிலையில், ஆங்கிலேயர்களின் கிறித்துவ கல்வி நிறுவனங்கள் பெண்களுக்கு கல்வியறிவை முதலில் தரத்தொடங்கின.
1850 களில் பொதுமக்களின் கல்வி மற்றும் பெண்களின் நல்வாழ்வு குறித்துப் புரட்சிக்கர சிந்தனை கொண்ட மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தம்பதியர் ஜோதிபாய்பூலே, சாவித்ரிபாய் பூலே போன்றோர் பெண்களுக்கான கல்வியை மிகுந்த போராட்டங்களுக்கிடையே தரத் தொடங்கினர்.
இந்தியாவில் படிப்படியாக பெண்கள் தங்கள் சுதந்திரம் பற்றி சிந்திக்கத் தொடங்கினர்.
கல்விநிலையங்களில் பெண்கள்:
கல்விநிலையங்கள் ஆணுக்கும், பெண்ணுக்குமான சமமான வாய்ப்பினை கொண்டிருந்ததா? எனில் இல்லை. கல்வியில் முன்னேற பெண்கள் குடும்பத்தைத் தாண்டி வருவதே பெரும்பாடாக இருந்தது.
நகரத்துப் பெண்கள் கல்விநிலையங்களை சென்றடைந்த அளவு, கிராமத்துப் பெண்களுக்கு கல்வி வாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை.
போக்குவரத்து சாதனங்கள், பெற்றோர்களின் மூடநம்பிக்கை, பெண்களின் தன்னம்பிக்கையின்மை என ஏராளமான காரணங்கள் கல்விநிலையங்களில் பெண்களின் காலடித்தடங்கள் படியாததற்கு காரணங்கள் ஆகின.
தொழில்நுட்பத்தின் வரவு:
பொதுவெளியில் ஆண்களின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. தற்போதும் பெண்களை விட ஆண்களின் நடமாட்டமே சதவீதத்தில் அதிகம்.
தொலைக்காட்சிப் பெட்டிகள், தொலைபேசிகள் , துணிதுவைக்கும் இயந்திரம், அரவை இயந்திரம் என பல பரிசுகளை தொழில்நுட்ப வளர்ச்சி சமூகத்திற்கு பரிசளித்தது. அந்த வரவுகளை மிகுதியாக தன் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொண்டோர் பெண்கள்தான்.
தொலைக்காட்சிப் பெட்டிகள் பெண்களின் சமூக அறிவை விழிப்படையச் செய்தது.
திண்ணையில் அமர்ந்து ஒரு தெருவின் கதைகளை மட்டுமே பேசிக் கொண்டிருந்த பெண்கள், உலகச் செய்திகளை அறியும் வாய்ப்பைத் தந்தது தொலைக்காட்சிப் பெட்டிகள், பெண்களின் அறிவு வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் உறுதுணையாக இருந்ததோடல்லாமல், தானும் வளர்ச்சி பெற வேண்டும் எனும் எண்ணத்தையும் விதைத்தது.
90களில் ஸ்மார்ட் தொலைபேசிகள் வரவுக்குப் பின்னர் கிராமங்களின் வேர் வரை தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் சென்றடைந்தது.
ஸ்மார்ட் போன்கள் பெண்களுக்கு கிடைத்த எளிமையான அதேசமயம் பிரம்மாண்டமான தொழில்நுட்ப சாதனம்.
You tube channel கள் பெண்களுக்கான அறிவுத் தீனியை தேவைப்படும் விதங்களில் வழங்குவதாய் உள்ளது.
பல்வேறு திறமைகளை வைத்துக் கொண்டு, சூழ்நிலைக் கைதியாக, குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் இருந்த பெண்கள், தங்களுக்குள் பல்வேறு திறமைகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவருக்குமான அட்சயப் பாத்திரம் போல யூ டுயூப் தொழில்நுட்பங்கள் உதவிவருகின்றன.
குடும்பப் பெண்கள் ஏராளமானோர் கதை சொல்லிகளாகவும், சமையல் கலைஞராகவும், மொழி இலக்கணம் போதிப்பவராகவும், யூடுயூப் சானல்களில் ஜொலித்து வருகின்றனர்.
நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்களாக தன்னம்பிக்கை உரைகளை வழங்குகின்றனர்.
புதியனவற்றை கற்றுக்கொள்ள விரும்பும் பெண்களுக்கு,தொழில்நுட்பத்தின் அனைத்து நுட்பங்களையும் கற்றுக்கொள்ளவும் ஸ்மார்ட் தொலைப்பேசிகள் உதவுகின்றன.
பெண்கள் ஆன்லைன் வியாபாரங்களை மேற்கொண்டு, பொருளாதார தன்னிறைவு பெறவும் தொழில்நுட்பம் உதவுகிறது.
பெண்களின் அதிகமான உடல் உழைப்பை குறைப்பதற்கு உதவிய தொழில்நுட்பம், குறைந்த மூளை உழைப்பில் பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, அறிவுப்பெருக்கம் என மாற்றங்களையும்,முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவும் தொழில்நுட்பமே உதவியிருக்கிறது.
நெருப்பு ஆக்கவும், அழிக்கவுமான சக்தியாய் இருப்பதைப் போன்றே தொழில்நுட்பமும் ஆக்கப்பூர்வ வளர்ச்சிக்கு உதவுவது போன்றே அழிவுப் பாதையையும் தன்னுள்ளே கொண்டது.
மிகுந்த கூர்மையான நுண்ணறிவுடன் தொழில்நுட்பத்தை புரிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சமூக விரோதச் செயல்களுக்கான ஊடகமாக தொழில்நுட்பத்தின் பாதையை மாற்றிக் கொள்ளாமல், ஆக்கப்பூர்வ வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்பட்டால், படிக்கக் கூட உரிமை மறுக்கப்பட்ட பெண்களின் நிலை நூறாண்டுகளில் உச்சத்தைத் தொட தொழில்நுட்பமே காரணம் என உணர்ந்திருந்தால் , பெரியார், பாரதி, அம்பேத்கர் கண்ட கனவுகள் நனவாகும்.