
இலக்கியத்தின் மேன்மை என்பது வாசிப்போரை மட்டுமல்லாது பிறரையும் வாசிக்கத் தூண்டும் எழுத்துக்களில் வாழ்வதாகும். ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதப்பட்ட எத்தனையோ வரலாறுகளை அவை வெளிப்படுத்தும் மனித உணர்வுகளை முழுமையாக உள்வாங்கி இரத்தினச் சுருக்கமாக நூல்களின் வாசிப்பை அவை தரும் கருத்தாழமிக்க செயல்பாடுகளை நவில்தொறம் நூல் நயம் நூலின் வழியே நமக்குக் கடத்துகிறார் ஆசிரியர்.
இலக்கியக் கடலுக்குள் தன்னை முழுமையாக மூழ்கடித்துக் கொண்டு அதிலிருந்து சிறந்த முத்துக்களை நமக்காக எடுத்துத் தரும் பாங்கு ஆசிரியரின் தொடர் வாசிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த நூலின் வழியே 15 நாவல்களையும் இரண்டு சிறுகதைகளையும் ஒரு மனிதனின் வாழ்வையும் நமக்கு அறிமுகம் செய்கிறார் .வெறுமனே புத்தக அறிமுகத்தோடு நின்றுவிடாமல் புத்தகம் எழுதப்பட்ட காலச் சூழலையும் அந்த ஆசிரியர்களின் வாழ்வுச் செயல்பாடுகளையும் கட்டுரைகளுக்குள் புகுத்தி நூல் எழுதப்பட்டதன் அவசியத்தை நமக்கு உணர்த்துவதில் ஆசிரியரின் மெனக்கெடல் அபாரமானது.
உலக நாடுகளின் வரலாறு என்பதை வாசிக்கும் ஒவ்வொருவரும் அதை கூறுபவரின் பக்கம் இருந்தும் உணர்ந்து கொள்ள முடியும். தாம் கண்டறிந்த செய்திகளைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியும். நூல் வடிவிலான வரலாறுகள் பேசும் இலக்கியத்தைவிட வாய்வழியாகப் பேசப்படும் இலக்கியங்களைக் கண்டறிந்து அவற்றை ஆவணப்படுத்தும் செயல்பாடுகளையும் இந்த நூலில் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.
பிறமொழி நூல்களை மொழிபெயர்த்து தமிழுக்கு கொணர வேண்டியதன் அவசியத்தை பாரதி தொடங்கி எத்தனையோ எழுத்தாளர்கள் வலியுறுத்தி வரும் சூழலில் இந்த நூல் மிக அருமையாக அதைச் செய்து காண்பித்திருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்ட பல நூல்கள் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவே இல்லை. அந்த வகையில் இவற்றை தமிழில் கொண்டு வர வேண்டும் என்கின்ற உந்துதலையும் இந்த நூல் நமக்குள் ஏற்படுத்துகிறது.
நூலில் இடம்பெறும் பெரும்பாலான நூல்கள் இந்திய- பாகிஸ்தான் பிரிவினையின் கொடூரத்தையும் அதன் விளைவுகளையும் மனிதத் தன்மையும் கருணையும் இரக்கமும் தொலைந்து போய் மக்கள் விலங்குகளாக மாறி நின்ற அவலத்தையும் விளக்குபவையாக அமைகின்றன.
சமூகத்தின் மீது பேரன்பும் அக்கறையும் வைத்திருக்கும் ஒவ்வொரு உள்ளத்திற்குள்ளும் யான் பெற்ற இன்பத்தை எல்லோரும் பெற வேண்டும் என்ற ஒற்றைக் கனவே ஒலித்துக் கொண்டிருக்கும். அப்படி தான் தேடித் தேடி வாசித்த நூல்களையும் அதில் கொட்டிக் கிடக்கும் உண்மைகளையும் சுருக்கமாகச் சொல்லி நூலின் வழியே பல எழுத்தாளர்களின் அனுபவங்களை நமக்கு எளிமையாக கற்றுத் தருகிறார் ஆசிரியர்.
இந்தியப் பிரிவினை வட மாநில மக்களுக்கு எவ்வளவு துன்பகரமான வாழ்வியலை அறிமுகம் செய்தது என்பதை நூலில் உள்ள பல கதைகள் வெளிப்படுத்துகின்றன. பாகிஸ்தான் செல்லும் ரயில் நள்ளிரவில் சுதந்திரம் அதன் வழியே இந்திய முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட கலவரச் சூழல் என ஒவ்வொரு கதையும் அன்றைய காலகட்டத்தை நம் முன்னே காட்சியாக விவரிக்கின்றன.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் கனடாவுக்கு மேற்கொண்ட சோகமான பயணத்தின் வரலாறு சொல்லும் கோல்கட்டா மாரு எனும் நாவல், பிஷம் சஹனியின் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை கால கொடூரங்களையும் மதவெறியையும் சித்தரிக்கும் வரலாற்று நாவலான தமஸ் எனும் நாவல், இந்தியா பாகிஸ்தான் பிரிவினை கால கொடூரங்களை சித்தரிக்கும் பாப்சி சித்வா எழுதிய ஐஸ் கேண்டி மேன் என்னும் நாவல், மனோகர் மல்கோத்தர் எழுதிய இந்திய பிரிவினையின் பல பரிமாணங்களை குறிக்கும் எ பெண்டு இன் தி கேன் ஐஸ் என்னும் நாவல், ஆர்வெல்லின் பகடிகள் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கில எழுத்தாளர் ஜொனாதன் ஸ்விப்ட் எழுதிய பகடிகளுக்கு இணையாக போற்றப்படும் அனிமல் ஃபார்ம் ஓர் அரசியல் பகடி என்னும் நாவல் குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் பாதிக்கப்படும் இஸ்லாமிய மக்களின் துயர் மிகு வாழ்வைச் சித்தரிக்கும் வழக்கறிஞர் கரீம் எழுதிய முகாம் எனும் நாவல்,இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக உயர்ந்த தியாகத்தை சித்தரிக்கும் தத்தா எழுதிய வரலாற்று நூல் , ஜாலியன் வாலாபாக் ஊர்வசி பட்டாலியா எழுதிய இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கால கொடுமைகள் பற்றிய வரலாறாக தி அதர் சைட் ஆஃப் சைலன்ஸ் குரல் வளமிக்க பெண்மணி தனது பேசும் திறனை திடீரென இழந்த அவலத்தை சித்தரிக்கும் கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சந்தோஷ் குமார் எழுதிய வார்த்தைகள் எனும் நாவல், தாமஸ் ஹார்டி எழுதிய நிறைவேற காதலின் வலியைச் சொல்லும் தி ரிட்டர்ன் ஆப் தி நேட்டிவ என பதினைந்து நாவல்களையும் இரண்டு சிறுகதைகளையும் பற்றி பேராசிரியர் விஜயகுமார் ஆராய்ந்து சிறப்பாக மதிப்பீடு செய்துள்ளார்.
இந்திய விடுதலையின் கடைசி காலகட்டத்தில் நடைபெற்ற பிரிவினையின் காரணமாக மக்கள் எப்படி எல்லாம் அவதிப்பட்டனர் என்பதை நிறைய நூல்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர். அவற்றில் உள்ள வலிகளையும் வேதனைகளையும் இன்றைய தலைமுறையினருக்கு எளிதில் புரியும் படியாக இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.
நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் வாசிக்கும் நமக்கு புதுப்புது புதையல்களை அறிமுகம் செய்கின்றன ஒவ்வொரு செய்திகளில் இருந்தும் தொடர்ச்சியான வரலாற்றின் தேடல்களையும் இன்றைய காலச் சூழலில் போராட்டத்தின் மீது மனிதர்கள் வைத்திருக்கும் சிந்தனைகளையும் உணர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக அமைகின்றன.
நவில்தொரும் நூல் நயம்
கட்டுரைத் தொகுப்பு
விஜயகுமார்
பட்டறிவு பதிப்பகம் மதுரை
முதல் பதிப்பு ஜனவரி 2026
பக்கம் 130
விலை ரூபாய் 120