எழுதப்படும் போதும் வாசிக்கும் போதும் பறந்து கொண்டே இருக்கிறது கவிதை. தத்தித்தத்தி சிறிது குதித்து மெல்ல எழும்பி விரைவு கொண்டு பாய்ந்து காற்றோட்டத்தில் பொருத்திக் கொண்டு மிதப்பது பறவைக்கும் கவிதைக்கும் பொதுவான குணமாக இருக்கிறது. இரை தேடிப்பறக்கிறது பறவை. கவிதை அடைய முடியாத நிறைவைத் தேடி அலைகிறது. இரை கொண்ட பறவை அந்தியில் கூட்டுக்குத் திரும்புகிறது. கவிதையோ நிறைவின்மையில் மோதித் தோற்றுதுக்கித்துமீளவும் பூமிக்கு வருகிறது. வீட்டுக்குள் ஒளிந்திருப்பவர்களை அறை ஜன்னல் வாசற்கதவு பால்கனி கடந்து வானத்தையும் சூரியனையும் விண்மீன்களையும் காணச்சொல்லி அழைக்கும் முதற்குரல் பறவையினுடையதாகவே இருக்கிறது. ஒவ்வொரு பறவையையும் பெயர் சொல்லி அழைத்த காலத்திலிருந்து கூகுளில் லென்சு தேடல் வழியாக பெயரை அறிந்து கடந்து செல்லும் காலம் வந்திருக்கிறது.
ஒவ்வொரு நாளும் ஒரு பறவை குறித்தாவது பேசாமல் இருப்பது குற்ற உணர்வை அளிப்பதாக இல்லை. பஞ்சாரத்தைத்தூக்கும்போதுபறந்துசிறகடிக்கும்கோழிகள்யார்கனவிலும்வருவதுமில்லை. வீடியோக்களில், ரீல்ஸ்களில் வருகின்ற பறவைகளும் மிக விரைவாகவே நகர்த்திவிரட்டப்படுகின்றன. புறக்கணிப்பால் சிறகுகள் இன்னும் அதிக எடையுள்ளதாகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் எல்லாக்காலங்களிலும் கவிதைகள் மட்டுமே பறவைகளுடன் மிக அணுக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
கார்காலக்கிளி :-
காதல் தீண்டிய வாழ்வின் பொன் தருணங்கள் தோறும் தோன்றும் புத்தம் புதிய பறவைகள் அவளது உடலை பறவைகளின் சரணாலயமாக மாற்றுகின்றன. கீச்சொலிகளும் வண்ணங்களின் சிறகடிப்பும், தீண்டலில் அணைப்பில் எழும் ஆரோகண சங்கீத வரிசையில் ஒவ்வொரு பறவையும் உயிர் கொள்ளுகிறது. மண்ணிலிருந்து விண்ணுக்குத் தாவுகிறாள். இத்தனை நாளாய் அவளது உடலில் தான் அவை இருந்தனவா என்று அவளுக்கே தீராவியப்பு. அனாரின் கவிதையில் தோன்றும் பறவைகள் நமக்குள் படபடப்புடன் சிறகடிக்கின்றன.
அவள் பறவைகள் வாழும் உடல்
அவளது மூக்கில் முளைத்திருந்தவால் வெள்ளியை
என்ன செய்வ தென்று மணிக் கணக்காகப் பார்த்து நின்றான்
முக்காடிட்ட முகலாய ஓவியம்
தலை தாழ்ந்து சரிந்து உட்கார்ந்திருந்தாள்
அவள் தோள்களில் இருந்த ராஜாளி
அவன் அரவம் கேட்டதும்
முதலில் அதிர்ந்து பறந்து சென்றது
குருத்து நாடியைத் திருப்பி
உதடுகளை முதல் முத்தமிட்ட பொழுது
கணக்கற்ற புறாக்கள் பயந்து
ஒரே சமயத்தில் எழும்பிப்பறந்தன
தாமதித்து இன்னும் இரை தேடி
இன்னோர் இடத்தில் வந்திறங்கின
எட்டிப்பார்த்து
பின் வாங்கும்
தீக்கோழிப் பார்வை
அவள் கைவிரல் கிளைகளில்
கீச்சிடும் சிட்டுக்குருவிகள்
நீண்டு கிடந்த கால் விரல்களில்
எதிரும் புதிருமாக
மாம் பழக்குருவிகள்
கார்கால பச்சைக்கிளிகள்
ஊர்வலம் செய்கின்ற ஒன்று
சொண்டு நீண்ட மரங்கொத்திகள்
சிறகுலர்த்தும் இன்னொன்று
–அனார்
அவன் வரும் போதே இந்நாள் வரை தோளில் அணிந்திருந்த கம்பீரமான இறுக்கம் நெகிழத் தொடங்குகிறது. ராஜாளி பறந்து விட்டாலே கேடகங்கள் உடைகின்றன. எழும் பிப்பறக்கும் புறாக்கள் இன்னும் இரை தேடி உடலின் வேறொரு இடத்தில் தஞ்சமடைகின்றன. இரை போதவில்லை. அச்சத்துடன் பறக்கும் போதும் புறாக்களுக்கு முத்தம் தேவையானதாக இருக்கிறது. இவ்வளவு பறவைகள் எழுந்தால் என்னவாகும் இவ்வுடல்? காதலில் தோன்றும் பறவைகளை வேண்டாமென்றாவிட முடியும். பார்வையில், கைகால் விரல்களில் எல்லாம் புதிது புதிதாக பறவைகள் முளைத்தெழுகின்றன. அவளை முழுமையாகப் பறக்கவைப்பதற்காக சிறிது சிறிதாக உடலை மாற்றிக்கொண்டிருக்கிறது காதல். காதலில் நிகழும் பறத்தல் திசையற்றமாய வெளியை நோக்கி உந்திச் செல்லவும் பின்பு தொலைந்து போகவும் வைக்கிறது.
குருதிப்புறா :-
வெளிச்சத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான். பின்தொடரும் நிழலின் இருள் அவனை விடுவதாக இல்லை. வெற்றிப் பறவையை உணவூட்டி சத்து மிக்கதாக வளர்க்க நினைத்தாலும் அதிகமான இரையுண்டு நாளும் வளர்கிறது தோல்வி. அது எப்போதும் உடனேயே வருவதால் வெட்டிக்கொல்ல முடியவில்லை. அவனுக்கு அறவே பிடிக்காவிட்டாலும் தோளில் அமர்ந்து கொத்திக் கொண்டே இருக்கிறது. அவனுடனேயே இருக்க பிரயத்தனப்படுகிறது. செல்லும் இடமெல்லாம் முன்சென்று பறக்கும் புறா, அவமானத்தில்குனிந்தஅவனதுதலையைக்கொத்திஇரைவேண்டும்! இரைவேண்டும்! என்று குனுகுகிறது. வெய்யிலின் கவிதையில் வளரும் இந்தப் புறாவை மிகுந்த எச்சரிக்கையுடன் தொட வேண்டியிருக்கிறது.
வளர்ப்புப்புறாவின்உணவு
தோல்வி என் வளர்ப்புப் புறா
ஏழு கடல் மலை தாண்டி
ஒரு கிளை இருத்திவருகிறேன்
மீண்டும்
என் தோள்களுக்கே திரும்பிவிடுகிறது
தொடர்ந்தாடுகிறோம் நாளும்
துயர் விளையாட்டு
வேட்டையாடப்பட்ட மிருகத்தின்
கடைசித் துடிப்பிலிருக்கும் இதயம் இன்றென் வாழ்வு
உள்ளங்கைக்குள் அதன் குதுகுதுப்பை உணர்கிறேன்
ரத்தப் பிசுபிசுப்பு மென் சூடு
நீங்காதிருக்கும் என தினியபுள்ளே…
என்சாவுத் தானியங்களால்
உன் சிறிய முற்றத்தை நிறைப்பேன் !
–வெய்யில்
புறாவுடன் ஆடும் துயர் விளையாட்டு முடிவற்றதாக இருக்கிறது. அதற்கு என்னதான் வேண்டும்?. எவ்வளவு இரைகொடுத்தும் வயிறு நிறையவில்லையே. அம்புகள் துளைத்து குருதி வழியும் உடலில் உயிர் வெளியேறத் துடித்துக் கொண்டிருக்கும் போதும், பசி! பசி! என்று சத்தமிடும் புறாவுக்கு, சாவுத் தானியங்கள் போதுமா எனத் தெரியவில்லை. அதற்குப் பிறகு இன்னொரு தோள்களை அடைவது மட்டுமே அதன் இரக்க மற்ற கண்களில் தெரிகிறது.
இருள்வாழ்புள் :-
போரில் தன் குஞ்சுகளைப் பறி கொடுத்த பறவை, கடலையும் கண்டங்களையும் தாண்டிப்பயணித் துயாரும் பார்க்காத ஏரியில் நின்று கொண்டு பாடுகிறது. போர்க் கதையை கேட்கும் நெஞ்செல்லாம் நடுங்குகின்றன. யாரும் அதைப் பார்த்து ஆறுதல் சொல்லத் தேவையில்லை என்று தான் பகலில் ஒளிந்திருக்கிறது. ஒளியை வெறுக்கும் சேரனின் இப்பறவை இருட்டின் குழந்தையாக மட்டுமே பறக்க விரும்புகிறது.
பறவை
நிழலுக்கு அஞ்சிப்பகலை
வெறுக்கிறது ஒரு பறவை
அது
இருட்டின் குழந்தை
கருப்பின் அழகு
நெருங்கி உறவாடும் மலைத் தொடர்களை
ஒற்றைப் பறப்பில் கடக்கும்
வலிமை மிக்கது
ஆனால் சுற்றம் இழந்தது
கண்ணீரற்றது
புயலிலும் உயரப் பறந்து திரிந்து
அலையும் வாழ்க்கையில்
உயிரை எழுதுகிறது
–சேரன்
கண்ணீரற்ற பறவை பாடும் கானத்தில் காற்றெல்லாம் நிறைவது கண்ணீரன்றி வேறென்ன? வல்லமை மிக்க பறவை தான் எனினும், புயல்களால் தூக்கி வீசப்பட்டு இடம் பெயர்ந்து, இழந்ததை எழுதுவதால் ஒவ்வொன்றும் உயிருடையதாக இருக்கிறது. உயிரை எழுதி எழுதி பறந்து கொண்டே இருக்கிறது. சொந்த நிலத்திற்குத் திரும்புவதற்குள் எழுதிக் கொண்டிருக்கும் காவியம் அல்லது உயிர் இரண்டிலொன்று முடிந்துவிடும். எது முந்தியதோ தெரியவில்லை.
இல்லறக் காகம் :-
உணவளிக்கத் தேடும் வீடுகளே ஏன் இன்னொரு நாளில் விரட்டி அடிக்கவும் செய்கின்றன என்பது காகங்களுக்குப் புரிவதே இல்லை. குரலாலோ உடலாலோ ஈர்ப்பதில்லை எனினும் தன்னியல் பில் துணையுடன் பறக்கும் போதும், மரக்கிளையில் அலகுகளால் காதலைப் பகிர்ந்து கொள்ளும் போதும் பேரழகாகி விடுகின்றன. பொருட்படுத்துவார் இல்லை தான். கவலை கொள்வதில்லை. பறத்தல் மட்டும் வாழ்வின் சாரமாக கூடவே இருக்கிறது. மின்சாரம் தாக்கி இறந்து போன காகத்துக்காக நெஞ்சிலடித்துக் கொண்டு கரைகின்ற போது கூட்டம் கூட்டமாக வானத்திடம் முறையிடுகின்றன. இறந்த காகத்தின் கூடு எங்கிருக்கிறதோ தெரியவில்லை. குஞ்சுகளின் பசி தீர்க்க இரை தேடி வந்தகாகமாகவும் இருக்கலாம். அழத் தெரியாமல் கூடிக் கதறிய பின் பறந்து செல்கின்றன. காகங்களுடைய வாழ்வைச் சொல்லும் தேன்மொழி தாஸ் மனதை விரித்து வானமாக மாறச் சொல்கிறார்.
காகம்
காகத்தின் கால்கள்
விடுதலையின் பரப்பளவை
வரைய வல்லவை ஆயினும்
காகத்தின் அன்போ
வானத்தை விட விசாலமானது
தன் இணைக் கெனகண மெல்லாம்
காத்திருப்பை வாழ் வாக்குவது
கூட்டின் நீள அகலங்களை
தீர்மானிப்பதில் கூட
பரிதவிப்பை சிறகுகளால் நெய்வது
மரங்கள் மனிதர்களை விடமகோன்ன தமானவைகள் என்பதை
பறவைகளே விதைக்கின்றன
மரத்தின் தோள்களில் புயலையும் மழையையும் எதிர்கொள்ளும் வல்லமை மிக்க கூட்டை
சிறுமிலாறுகளால் பின்னுகிறது காகம்
பெண்காகத்தின் கருவறையை
ஆண்காகம் மதிப்பதை கண் உணரும் போது
பிரபஞ்சத்தின் ஆழ்சுவாசம் அன்பாகிறது
கணிதமொழி மிஞ்சும் கூட்டின் நுட்பங்களை
சிதிலமடைந்த மனித வீட்டிலிருந்து காண்பது
வாழ்வின்ஈவு
தன் இணையை அமரவைத்து இரை தேடி கொண்டு வரும் ஆண் காகத்தின் மனதை வணங்குவதைத் தவிர வேறு உணர்வில்லை
காகத்தை ஆரத்தழுவ மனம் காகமாகிறது
இடத்தை இருப்பை நிலத்தை மரத்தை
உடமையாக்க விரும்பாத உயிருக்கு
மடியிலிருத்தி சோறூட்ட மனம் விளைகிறது
கணிதப் புனைவை மிஞ்சும்
காகத்தின் மூளையில்
அத்தனை கட்டுமானமும்
மனித வாழ்வியல் நெறிகளுக்கு அப்பாற்பட்ட
அன்பின் மொழி
எந்த ஆதாரங்களால் அணுகூடியிருக்கும்
பறவையின் கூடுகளும் அன்பும் அதன் ஆத்மதிருப்தியோ நிம்மதியோ மட்டுமல்ல
பரந்த ஆத்ம விஸ்தாரணத்தின்
பிரபஞ்ச அடையாளமாகக் கூடும்
–தேன்மொழிதாஸ்
வல்லமை மிக்க கூட்டை மிலாறுகளால் மட்டுமல்ல அன்பினாலும் கட்டுகின்றன காகங்கள். சேர்ந்து வாழும் கூட்டில் சண்டைகள் வரக்கூடும். பிரியம் மட்டும் குறைவதே இல்லை. குஞ்சுகளைக் காப்பாற்றுவதாகட்டும், இரை தேடி நேரத்துக்குத் திரும்புவதாகட்டும் எல்லாவற்றிலும் நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவை காகங்கள் தான். “காக்கையே உன்னை ஆரத்தழுவிக் கொள்ளட்டுமா? அடித்துக் கொன்று விடுவேன் என்ற அச்சத்தில் நெருங்குவதற்குள் ஓடிவிடுகிறாய். விரட்டிக் கொண்டே இருப்பதால் நம்பிக்கை கொள்ளா திருக்கிறாய். ஒரு முறை தழுவினாலும் உன் மனத்தை நான் எனக்குள் காண்பேன்” என்கிறது கவிதை.
பித்துக்குயில்:-
காலைச் செவ்வொளி பொலியும் அந்த அரச மரத்தில் இலைகளுக்குள்ளாக ஒளிந்து கொண்டு பாடத் தொடங்குகிறது குயில். குக்கூ குக்கூ வென முதலில் சாதாரணமாகத் தொடங்கும் பாடல் காற்றில் வளர்ந்து ஏக்கமாக சூழ்கிறது. செவியில்c கொடி போல படர்ந்து உடலெங்கும் வளைத்துக் கொண்டு இதயத்துக்குள் ஊடுருவுகிறது. அங்கிருக்கும் அறைகளில் எதிரொலி தாளமுடியாமல் குயிலைத் தேடி ஓடுகிறான். காண முடியவில்லை. குரல் நின்ற இடை வெளியில் பெரு மூச்சுவிடுகிறான். அதன் துயரம் தீராதது. அதை யார் அடித்தார்கள் எனத் தெரியவில்லை. பசியில் கதறுகிறதா? காதலில் துணையைத் தேடிக்காணாது அழுது இருக்குமிடத்தை அறிவிக்கிறதா? எதுவும் புரியவில்லை. பித்து அலைக்கழிக்கிறது. அரச மரத்தைச் சுற்றிலும் ஓடி ஓடித் தேடுகிறான். இலைகள் மட்டுமே சல சலக்கின்றன. குயில் மீண்டும் மறைந்திருந்து கூவத் தொடங்குகிறது. மனுஷ்யபுத்திரனின் குயிலின் குரல் மரத்தில் தொடங்கிவான் முழுதும் ஆக்கிரமிக்கிறது.
குயில்பாட்டு
அங்கேயே தான்
அமர்ந்திருக்கிறேன்
வெகு நேரமாய்
எங்கோ வெகு அருகாமையில்
அந்தக்குயில்
எவ்வளவோ நேரமாக
கத்திக் கொண்டிருக்கிறது
அது இருக்கும் கிளையை நோக்கி
எப்படியும் வந்துவிடுவேன் என்பதில்
அது அவ்வளவு தீர்மானமாக இருக்கிறது
அது என்ன சொல்ல வருகிறது
என்பது ஏதோ ஒரு கணத்தில்
எனக்குப் புரிந்துவிடும் என்பதில்
அது அத்தனை உறுதியோடு இருக்கிறது
அது தனது மனதை மாற்றிக் கொள்ளலாம்
அல்லது மனமுடைந்து போகலாம்
அது எப்போதாவது தனது
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தானே வேண்டும்
என்று ஒரு கல் போல இருந்திருக்கிறேன்
ஒரு சிறிய பறவை
அதன் ஒரு சிறிய விருப்பம்
எவ்வளவோ நேரமாக தீராத
ஒரு சிறிய துயரம்
இந்தப் பிரபஞ்சத்தின்
ஒரு காலைப் பொழுது முழுவதையும்
அது நிறைக்கிறது
ஒரு மறுமொழி இல்லாமல்.
–மனுஷ்யபுத்திரன்
அந்தக் குயில் அத்தனை உறுதியாக நம்புகிறது தன்னுடைய மொழியை கேட்பவர் அறிவாரென்று. ஆனாலும் மனமுடைந்து போகிறது. குயிலிசை கேட்க இனிமையானது என்று சொல்லியபடிநகர்ந்து செல்பவர்களிடம் அது தோற்றுக் கொண்டே இருக்கிறது. பிரியத்தின் வலியைச் சொல்லும் குரல் முற்றாக உடைந்து மௌனத்துக்குள் புதைகிறது. குயிலின் மௌனம் போல கொடுமையானது இப்பூமியில் பிறிதொன்றில்லை. பரவிய குரல் எல்லாத் திசைகளிலும் கலந்து இல்லாமலாகிறது. கடைசி வரைக்கும் புரிந்து கொள்ளப்படாமலேயே மறைகிறது துயரத்தின் இசை.
அரூபபட்சி :-
எல்லாப் பறவைகள் குறித்தும் அறிந்தவன் தான். கோழியின் கொக்கரிப்பிலிருந்து அகவும் மயிலாகட்டும், குழறும் கோட்டானிலிருந்து இன்னிசை பரவக்கூவும் குயில் வரைக்கும் எல்லா ஒலிகளையும் கவனித்திருக்கிறான். ஆனால் இது வரைக்கும் கேளாத இனிமையில் பாடிக் கொண்டிருக்கிறது அந்தப் பெயர் தெரியாத பறவை. ஆயிரம் நாமங்களால் அழைக்கப்பட்டாலும் தெய்வம் அதற்குள் அடங்காததாக பரவியிருப்பதைப் போல அந்தக் குரல் எந்த வகைமையிலும் சேராததாக இருக்கிறது. வாசித்த புத்தகங்களின் அறிவுதள்ளாடுகிறது. எங்கிருந்து வந்தது அந்தப் பறவை அதன் குரலின் மூலம் யாதென ஏரி முழுதும் அலைகிறான். பார்த்தறிந்த பறவைகள் அமைதியாக பறந்து கொண்டிருக்கின்றன. பாடுவது இடம் காட்டாது வசீகரித்து இழுத்துக் கொண்டே இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக அது பாடிக்கொண்டு தான் இருந்திருக்கிறதா ? அவனுக்கு தான் அந்த இசை கேட்கும் மனம் பக்குவப் படவில்லையா? காலம் கடந்த ஞானத்தில் தான் அதன் குரல் தோன்றுமா? என்றெல்லாம் புலம்புகிறான். அந்தப் பறவையை தரிசிக்க முடியாது. அதன் குரலின் இனிமையை வழங்குவதும் கட்புலனாக அரூபவெளியில் உள்ளது தானா? ஆழ்மனம் மட்டுமே உய்த்துணரும் அந்த பறவைத் தேடலை முடிவற்ற தாக்குகிறார் ஸ்ரீநேசன்.
பட்சிகானம்
கரையேறியவுடன் என்னை வரவேற்பதாய்
ஏரியுள் புதர்களில்
ஒரே பறவை பல விடங்களிலிருந்து பாடும்
இனிய கீதம்
உண்மையில் நரம்புகள் உணர்ந்த இசைமை
குயிலை நான் அறிவேன்
பாடியது அதுவல்ல
மீன்கொத்தி மரங்கொத்தி குரல்களையும் அறிவேன்
பாடியது அவையு மல்ல
நாகண வாய்ப்புள்ளானமைனாவோ
ஆனைச்சாத்தன் எனவழங்கும் கரிச்சானோ கூடயில்லை
பாடியது ஒரு பட்சிதான்
சிட்டு தேன்சிட்டு காடை கௌதாரி கிளி கானங்கோழி
செம்போத்து நீர்க்கோழி
எனநானறிந்த பறவைகள் ஒன்றிலுமல்லாத
ஒரு பறவையின் இக்குரல்
இத்தனை இனிக்கும் என உணர
எனக்கு ஐம்பது ஆண்டுகள் பிடித்தனவே
இன்னும் காணா முகம் காண
முழுப்பிறவியும் வேண்டுமோ.
–ஸ்ரீநேசன்
ஒவ்வொரு பறவையாக வரிசையில் வந்து நிற்கிறது. இதுவுமில்லை அதுமில்லை என கவிஞனின் மனம் தள்ளி விடுகிறது. அறிவால் உணர முடியாத குரலை இதயம் அத்தனை அணுக்கமாக உணர்கிறது. நெஞ்சில் கைவைத்தறிந்தால் துடிக்கும் ஒசையும் அந்தப் பறவையின் இனிய குரலும் ஒத்திசைவு கொள்கிறது. காணாத பறவையை உணர்கிறான். அதுவேறொரு இடத்துக்கு அவனையும் அழைத்துச் செல்வதற்காகவே இங்கு வந்து பாடிக்கொண்டிருக்கிறது. அதன் நோக்கமெல்லாம் தன்னை காட்டிக் கொள்வதல்ல அவனுக்குள்ளாக அந்தப் பறவையை உணரச் செய்து அவனையும் பறக்கவைப் பதற்காகத்தான். தீராத நித்தியகீதத்தை இசைப்பதற்காகவும் தான்.
நித்தியக் கொக்கு :-
தீவிரகி கிச்சைப் பிரிவில் இருந்த எண்பது வயதான முதியவர் மீண்டும் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்தார். மகன்களும் பேரப்பிள்ளைகளும் பார்த்து விட்டுச் சென்ற பிறகு உயிர் மீண்டும் அவருக்குள் துடித்துக் கொண்டிருக்கும் ஓசையைக் கேட்டார். ஜன்னலில் கரைந்து கொண்டிருந்த காகம் இரண்டு முறை அவரைப் பார்த்தது. திரைச்சீலையை இழுத்து விட்டு மீண்டும் உறங்கிக் கொண்டிருந்தார். வாழ்வு போது மெனத் தோன்றியது. அவருக்குப் பறக்க வேண்டுமென விநோத ஆசை எழுந்தது. செவிலியிடம் சொன்ன போது “உறங்குங்கள் தாத்தா! கனவில் பறக்கலாம்” என்றார். அவ்வளவு தான் படபட என்ற ஒலியுடன் மருத்துவமனைக்கு மேல்அவ்வளவு குதூகலத்துடன் பறந்து கொண்டிருந்தார். ஷங்கர் ராம சுப்ரமணியன் கவிதை அவர் சென்ற வழியை கண்டறிந்திருக்கிறது.
இரவுகாகமென இருந்தது
உயிர்
ஒரு கொக்கின்
வெளிச்ச உடலுடன்
ஆஸ்பத்திரி காரிடாரில் நடந்து
வெளியேறியது
கொக்கும், காகமும்
ஒரு நித்யவனத்துக்குள்
ஜோடியாய்ப் பறப்பதை
நீங்கள் பார்த்தீர்கள்
நான் பார்த்தேன்
–ஷங்கர் ராம சுப்ரமணியன்
நித்தியவனத்துக்குள் இருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கொக்கும் காகமும் அங்கே சேர்ந்து பாடிக்கொண்டு பறக்கிறார்கள். கொக்கு குளத்திலிருந்து கரையற்றப் பேராழிக்குத் திரும்புகிறது. காகம், கொக்கை வந்தவிடத்திலேயே சேர்த்த பிறகு பூமிக்குத் திரும்பிவிடுகிறது. அடுத்த கொக்குக் காகக் காத்திருக்கிறது. ஆனாலும் நித்தியவனத்துக்குள் அவை நுழையும் போது பாடும் பாடலைத் தான் ஒவ்வொரு காலையிலும் சூரியன் பூமியிடம் பாடிக்கொண்டிருக்கிறது.
பிரபஞ்சக் குருவி :-
வீட்டுக்குள் அறைச்சுவர்களில் எல்லாம் பேராசைகளின் கோழிகள் இரவு முழுதும் எழுப்பும் ஒலிகள் தூங்கவிடாது இம் சித்தன. உடல் ஒரு நாள் மரணித்து விடும், அதற்குள்ளாகவே எல்லோருக்கும் எல்லாவற்றையும் நிலையாக இருக்கும்படி செய்து முடித்துவிட வேண்டும்; பிணியும் துன்பமும் அணுகாது காக்க வேண்டும் இப்பெரிய வாழ்வை; அன்றாடங்கள் ஒரு போதும் குழம்பி விடக் கூடாது என்பது தான் அவனது தீராத வேண்டுதலாக இருந்தது. ஒவ்வொரு திட்டம் போட்டு வைத்த பின்பும் மாபெரும் இருள் பூதமொன்று நெஞ்சில மர்ந்து அழுத்தியது. எல்லாவற்றையும் சரியாகச் செய்தாலும் எங்கிருந்தோ வந்து மனமெங்கும் ஆக்கிரமித்த வெறுமை, பெரிய திட்டங்களை அன்றாடங்களை பொருளற்றதாக எண்ணி சிரிக்க வைத்தது. தனக்குத் தானே கேலி செய்து கொண்டு அவற்றுக்கு வெளியே நின்று பார்க்க ஆரம்பித்த நாளில் அத்தனை நாளாய் அழுத்திய பூதங்கள் விடை பெற்றுக்கொண்டன. அமைதி, சிற்றகல் வெளிச்சமென பரவத் தொடங்கியது. இருள் பூதங்களை வெளியேற்றும் வித்தையை கற்றுத்தரும் குருவியை நம் வீட்டிலும் பறக்கவிடுகிறார் தேவதேவன்.
ஒரு சிறுகுருவி
என் வீட்டுக்குள் வந்து
தன் வீட்டைக் கட்டியது ஏன் ?
அங்கிருந்தும்
விருட்டென்று ஏன் பாய்ந்தது
ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல்கம்பிகளை உதைத்து
விருட்டென்றுதாவுகிறது அது
மரத்துக்கு
மரக்கிளையினை
நீச்சல் குளத்தின் துள்ளு பலகையாக மிதித்து
அங்கிருந்தும் தவ்விப் பாய்கிறது
மரண மற்ற பெரு வெளிக்கடலை நோக்கி
சுரீலெனத் தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும்பளீருடன்
நீந்தியது அங்கே ஆனந்தப் பெருமிதத்துடன்
நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது வீட்டை
ஓட்டுக்கூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர்சருகுகளும்
வீட்டு அறைகளெங்கும்
சிரிப்பும், அழுகையும் மரணங்களும்.
–தேவதேவன்
கூரை சூழ்ந்த வீட்டுக்குள் அழுகையும், மரணங்களும் தான். கூரையை அகற்றி வெளியை வீட்டுக்குள் அனுமதிக்கச் சொல்கிறது சிறு குருவி. அது பார்த்துக் குளித்து நீந்திவந்திருந்த ஆனந்தப் பெருங்கடல் குறித்து விசிலடித்துப் பாடுகிறது. கடலைத் தொட்டணைத்த சிறகுகளால் நெஞ்சில் மோதுகிறது. “நீயும் அப்பெருங்கடலின் துளிதான். உன் நெஞ்சிலும் ஆனந்தம் உணர்” என்கிறது.
பெரு வெளிப் பறவை :-
பிறந்தது முதலாய் வீட்டு முற்றத்தில் தானியங்களைக்கொத்தியபடி சுற்றிக் கொண்டிருந்த பறவைமெல்ல வாசலுக்கு வருகிறது. பொன்னொளிக சிந்து கொண்டிருக்கும் வானத்தைப் பார்க்கிறது. உயரப்பறக்கும் விழைவுவரவே பூமியின் அழகையெல்லாம் பறந்து பறந்து கடந்து செல்கிறது. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், மலைகள், கடல்கள் கடந்து துருவப்பகுதிகளையும் கடந்து பூமிக்கு மேலே நிற்கிறது. அப்போது சகல திசைகளிலும் பேரொளி மின்ன ஒளிரும் விண்மீன்களைப் பார்த்து சிறகுகளை அசைக்க முடியாமல் கண்வியந்து நிற்கிறது. ஒவ்வொரு கிரகமும் சுழல்வது போல பறக்கிறது. ஒவ்வொரு விண்மீனும் பறக்கிறது. பால் வழித் திரள்கள் பறக்கின்றன. மொத்த பிரபஞ்சமும் பறந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் பறவை தன்னை தூசியிலும் சிறிய தூசி பறப்பதாக உணர்கிறது. மெல்ல பெரு வெளிக்குள் நுழைந்து எல்லாம் அதுவாக அதுவே எல்லாமுமாக மாறியிருப்பதுடன் ஒன்றுகிறது. அங்கே கடிகாரம் இல்லை. சூரிய சந்திர விண்மீன்களின் காலக் கணிப்புகள் இல்லை. எது முதலில் தோன்றியது? யார் படைத்தார் இவையனைத்தையும் என்ற கேள்விகளும், கேட்பவரும் இல்லை. மேலும் கீழும் வலமும் இடமும் தொலைந்து எல்லாமும் முடிவற்றதாக பறந்து கொண்டே இருக்கிறது. அந்த காலாதீதத்தின் கதை பிரமிளுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது.
வெற்று வெளி ஒன்றில்
ஓயாததிகிரியை
மென் சிறகசைத்து
ஓட அசைத்தபடி
ஆடாமல் அசையாமல்
பறப்பது நீயல்ல
நானல்ல
காலாதீதம்
–பி்ரமிள்
பறவை வழியாக பிரபஞ்சத்தை நோக்கி பயணப்படும் வாழ்வு, பறவையாகவே இப்பிரபஞ்சமும் வெளியும் இயங்கிக் கொண்டிருப்பதாக உணரும் போது சொல்லற்ற காலத்துக்குள் உறைகிறது. அதற்குப்பிறகு பூரணத்துக்குள் பொங்கும் பேரமைதி மட்டும் தான் நிலைத்திருக்கிறது.
பறவைகளின்படங்கள் :
சீனிவாசன்நடராஜன்