சுமார் 200க்கும் மேற்பட்ட குளங்கள் திருவண்ணாமலையில் இருந்திருக்கின்றன. காலத்தின் சுழற்சி காடுகள் வீடுகளாக உருக்கொண்டு மனித வளர்சியின் ருசியில் மறைந்து இன்று 80 குளங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.
நீர் நிலைகளையும் சுற்று சூழலையும் பாதுகாப்பது தான் நம் வருங்கால தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து அப்படியான பணியைச் செய்யும் ஓர் இளைஞர் கூட்டம் திருவண்ணாமலையில் “நீர் துளிகள்” இயக்கம் என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதன் ஒருங்கிணைப்பாளர்களாக நீலகண்டன், ராகவன், என 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைத்து வாரத்தில் சனி, ஞாயிறுகளில் கூடி இம்மண்ணில் இருக்கும் நீர் நிலைகளைச் சீர்படுத்தி வருகின்றனர். செப்டம்பர் 16, 2016 ஆண்டில் இருந்து இது நாள் வரையில் அவர்களின் செயல்கள் மகத்தானவை. இதுவரையில் 15 குளங்கள் சீர்மைக்கப்பட்டுள்ளது.
- பூமாந்தாள் குளம்,
- பிள்ளை குளம்.
- சோமவார குளம்.
- சரஸ்வதி தீர்த்தம்.
- வேடியப்பன் தீர்த்தம்
- மொண்டி குளம்
- பிள்ளையார் குளம்.
- காட்டு குளம்
- தர்மராஜா குளம்.
- பிரம்ம தீர்த்தம்.
- நந்தி தீர்த்தம்.
- காட்டு குளம்
- ஊற்று குளம்
- விண்ணமலை ஏரி (எ) எடப்பாளையம் ஏரி.
- அண்டம்பள்ளம் ஏரி.
இவைப்போக அரசு பள்ளி மாணவர்களின் உறுதுணையுடன் விதைப் பந்துகளைச் செய்து திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மேல் மாணவர்களின் உதவியுடன் வீசப்பட்டது. அடுத்த தலைமுறைக்கு இப்படியான நம்பிக்கையை விதைப்பதுடன் இதனூடே விழிப்புணர்வையும் மூட்டுக்கின்றனர். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பருவத மலையின் அடிவாரத்தில் விதைப்பந்து செய்து வீசியிருக்கிறார்கள்.
காற்றில் அடித்துச் செல்லும் விதை எங்கோ விழுந்து விருச்சமாகி பல உயிர்களுக்கு பயன் தரும் அப்படியானதொரு செயலைப்போல அந்த விதைப்பந்துகளில் இருந்த விதை வளர்ந்து ஏதோவொரு உயிருக்கு அடைக்கலமாக இருக்கலாம்.!
இக்குழுவே மலையைச்சுற்றி மரங்களை – நடுவதும் அவற்றை வார இறுதியில் – தண்ணீர் ஊத்திப் பராமரிப்பதும் பேரிடரின் போது எளியோர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவுவதும் மகப்பேறின் போது ஏற்படும் உதிரப்போக்கினால் கர்ப்பிணிக்கு குருதிக் கொடை வழங்குவது அரசு மருத்துவமனையின் உள் நோயாளிகளுக்கு இரத்த தானமளிப்பது.
நீர் துளி இயக்கம், வம்சி பதிப்பகம் மற்றும் நடிகர் கார்த்தியின் உழவன் குழுமத்துடன் இணைந்து மூன்று ஏரிகளைப் புரணமைத்தனர். இவைப்போக சமூகபண்பாட்டு மற்றும் கலை இலக்கிய அமைப்புகள் மற்றும் சேவை அமைப்புகளுடன் இணைந்து தங்களின் களப்பணியைத் தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருக்கின்றனர்.
கேளிக்கை பொழுதுபோக்காய் சனி ஞாயிறுகளைக் கழித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் சமூக முனைப்புடன் செயல்படும் இக்குழுவினை மாதிரியாக எடுத்துக்கொண்டு செங்கம், திண்டிவனம் ஆகிய பகுதிகளிலும் இளைஞர்கள் திரண்டு அப்பகுதியில் களப்பணிகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர் என்பதும் மேலும் நம்பிக்கையை ஊட்டும் நற்செயலாக இருப்பது மக்களின் மனத்தில் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி வருவது மட்டும்மல்லாமல் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்துள்ள நீர்துளிகள்.!