தென்பெண்ணை இலக்கியச் சமவெளி

திருவண்ணாமலை எனும் பெயரும், பெரும் வியப்பும் எனக்குள் பதிந்து, அதன் அகமும், புறமும் எனக்கு அறிமுகமாகியது எப்போது? என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன் அடடா! மார்கழி பனியில் நனைந்த பூசணி பூவென மனசு சில்லிடுகிறது.

“பழவிறல்மூதூர்” என்று சங்க கால இலக்கியங்களால் போற்றப்படுகிற மண், தமிழ்நாட்டின் டப்ளின் என்று நவீன இலக்கியவாதிகளால் பெரிதும் புகழப்படுகிற மண். எனக்குள் முதன் முதலாக ஊடுருவிய காலகட்டம். ஐப்பசியின் அடைமழைக் காலத்திற்கு பிறகான கார்த்திகை பட்டத்தில் மல்லாட்டை போடுவதற்காக (மணிலா விதைப்பிற்காக) நிலத்தை உழுது தயார் செய்துவிட்டு தீபத் திருநாளை ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். எங்கள்  எடத்தனூர் உழவுக்குடி மக்கள்.

திருவிழாவிற்கான கொடியேற்றம் தொடங்கி, வெள்ளித்தேர், பெரியத்தேர் என தேரோட்டங்கள் முடிந்து பத்தாம் நாள் நிறைவில் மாலை நேரத்தில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றிய உடன் தங்களின் வீடுகளில் தயார்செய்து வைத்திருக்கும் மாவிளக்கை ஏற்றி மலையை பார்த்து வணங்கி மகிழ்வார்கள்.

தொடர்ந்து வரும் மூன்று நாட்களிலும் தங்களின் வீடுகளிலும், குல தெய்வங்களின் கோவில்களிலும், வயல்வெளிகளிலும் அகல் விளக்குகளில் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடுவார்கள். எங்கள் கிராமத்து கூரை வீடுகளின் திண்ணைகளும் தெருக்களும் தீபங்களின் வெளிச்சத்தில் ஒளிரும் அந்த இரவுகள் ஒவ்வொன்றும் மிக அழகானவை.

ஒவ்வொரு நாள் இரவும் மாவளி சுற்றுதல், கோலாட்டம், கும்மியாட்டம் என்று விடிய விடிய தொடரும் மக்கள் கொண்டாட்டங்கள் மூன்றாம் நாள் நடக்கும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வோடு நிறைவு பெறும். இதுதான் எங்கள் கிராமத்தின் திருகார்த்திகை விழா

மழையை வழியனுப்பி வைத்துவிட்டு மகிழ்ச்சியோடு மல்லாட்டை (மணிலா) போடுவதற்காக தயாராவோம். நான் ஏர்ப்பிடிக்க தொடங்கிய இளம் பருவத்தில் கார்த்திகை திருவிழாவின் மூலமாகவே எனக்குள் வேர்ப்பிடிக்கத் தொடங்கியது திருவண்ணாமலை.

இரண்டாவது காலகட்டம் என்பது திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் எனும் இரு அமைப்புகளின் பெயர்களும், அவர்களின் நிகழ்வுகளும் அறிமுகமாகி என்னை வெகுவாக ஈர்த்த இரண்டாயிரத்தின் தொடக்கம். கலை இலக்கிய இரவு எனும் மகத்தான வடிவத்திற்காக நகரெங்கும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், தெருமுனைகளில் கட்டப்பட்ட பேனர்கள், அச்சிடப்பட்ட அழகிய துண்டறிக்கைகள் அவர்கள் அமைத்த மேடைகள், எழுத்தாளர்களின் சொற்பொழிவுகள், புத்தகங்களின் அறிமுகங்கள், கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், என ஒவ்வொன்றிலும் இருந்த புதிய புதிய உள்ளடக்கங்களால் மிகவும் கவரப்பட்டேன். அதனால் தொடர்ந்து திருவண்ணாமலையை நோக்கி நான் பயணிக்கத் தொடங்கினேன்.

அந்த பயணத்தில் இருந்து நான் கற்றுக் கொண்ட கலை இலக்கிய அழகியலும், அதன் அரசியலும் எனக்குள் புதிய வெளிச்சத்தை தந்தன. தீபங்களின் வெளிச்சத்திலும் திருவண்ணாமலையில் இயங்கிய இடதுசாரி கலை இலக்கிய அமைப்புகளின் வெளிச்சத்திலும்தான் நான் திருவண்ணாமலையை முதன் முதலில் அண்ணாந்து பார்க்கத் தொடங்கினேன். அப்போது இருந்து நாமும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் அதன் மூலம் நமது பகுதிகளில் கலைஇலக்கிய அரசியல் நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் உருவானது.

அன்றைய காலகட்டங்களில் எல்லாம் இருண்டு கிடந்த கிராமங்களுக்கும், மக்களுக்கும் வெளிச்சம் என்பதே பெரும் கொண்டாட்டமானது, வெளிச்சம் தான் மகிழ்ச்சியை தந்தது. வெளிச்சம்தான் புதிய நம்பிக்கையை தந்தது. அதனால் வெளிச்சம் என்கிற சொல் எனக்குள் ஆழப்பதிந்து விட்டது. எனவே வெளிச்சம் (அறக்கட்டளை) என்கிற பெயரில் ஒரு அமைப்பை 28.12.2008 அன்று தொடங்கி அதன் முதல் நிகழ்வாக தண்டராம்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைத்து சமூக நல்லிணக்கத்திற்கான அம்பேத்கர் நினைவுநாள் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடுசெய்து நடத்தினோம். 

அதன் பிறகு பெரியார் பிறந்தநாள் விழா, மார்க்சின் பிறந்தநாள் புத்தக் கண்காட்சி, மகளிர் நூற்றாண்டு விழா என 2016 வரை தொடர்ந்து நிகழ்வுகளை நடத்தி கொண்டு இருந்தோம். வாசிப்பை மேம்படுத்துவோம் என்கிற நோக்கில் “நூலகம் போகலாம் வாங்க” என்கிற ஒரு மகத்தான நிகழ்வை நடத்திவிட்டு திரும்பி பார்க்கிறேன் அப்போதுதான் புரிகிறது நாங்கள் நடத்திய எல்லா நிகழ்வுகளும் அரசியலை மட்டுமே சுற்றி சுற்றி வந்து இருக்கின்றன. ஒரு நிகழ்வுகூட மண்வாசனையோடு கூடிய கலை இலக்கிய நிகழ்வாக அமையவில்லை. என்பதை புரிந்துக்கொண்டு அதற்கு என்ன காரணம் என்று சிந்திக்கிறேன். 1992 ம் ஆண்டில் எங்கள் கிராமத்தில் நடந்த மிகப்பெரிய சாதிய வன்கொடுமைகளின் பாதிப்பால் எமது முன்னத்தி தோழர்களின் மூலம் அம்பேத்கரும், பெரியாரும், மார்க்சும் எனக்குள் ஆழமாக வேரூன்றியிருந்தார்கள். அதன் தாக்கம்தான் இத்தனை ஆண்டுகளாக நாங்கள் நடத்திய நிகழ்ச்சிகளின் வடிவங்களாக இருந்திருக்கின்றன என்பதை புரிந்துகொண்டேன்.

அதனால் இனி முன்னெடுக்கும் நிகழ்வுகளை மாற்று வடிவங்களில் ஒருங்கிணைக்க வேண்டும் என முடிவெடுத்து அதற்கான செயல்திட்டங்களை வரையறுக்க திட்டமிடும்போது அமைப்பின் பெயரையே மாற்றக்கூடிய சூழல் அமைந்து விட்டது.

அமைப்பிற்கான மாற்றுப் பெயரை சிந்திக்கும் போது எனக்குள் தோன்றியப் பெயர்தான் “தென்பெண்ணை”. எடத்தனூர் எனும் எங்கள் சிற்றூர் தென்பெண்ணையின் வடகரையில் அமைந்துள்ளதால் நான் பிறந்தது வளர்ந்தது. படித்தது எல்லாம் தென்பெண்ணையின் கரையில்தான். பள்ளிக்கூட நாட்களில் நான் தாகத்திற்காக மட்டுமின்றி பசிக்காகவும் இரு கைகளையும் சேர்த்து அள்ளி அள்ளி குடித்தது தென்பெண்ணையைத்தான். அதனால் இயல்பாகவே தென்பெண்ணை எனக்குள் ஊடுருவி கிடந்தது. எனவே தென்பெண்ணையின் மீது நான் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில் அமைப்பிற்கு “தென்பெண்ணை இலக்கியச் சமவெளி” எனும் பெயரை தேர்ந்தெடுத்தேன் மேலும் நீண்ட காலமாக திருவண்ணாமலையிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் தென்பெண்ணை குறித்த குறைந்த பட்ச உரையாடல்கள் கூட எதுவும் நிகழ்ந்திருக்கவேயில்லை. அதனால் தென்பெண்ணையின் தொன்மை குறித்தும் அதன் கலை இலக்கிய பண்பாட்டு விழுமியங்கள் குறித்தும் உரையாடும் தலைமுறையை உருவாக்க வேண்டும். சூழலியல் சார்ந்த விழிப்புணர்வை மக்களிடம் விதைக்க வேண்டும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கங்களை அமைப்பின் கருப்பொருளாக கொண்டு 2017 ஜனவரி 14 தை திங்கள் முதல் நாளில் தென்பெண்ணை இலக்கியச் சமவெளியை உருவாக்கினோம்.

 தென்பெண்ணை‌ இலக்கியச் சமவெளியின் முதல் நிகழ்வு  2017  ஜனவரி 16. அன்று  “தை” திருவிழாவாக ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு மு.பெ.கிரி அவர்கள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். 

உறவுகள் கலைக் குழுவின் பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நம்முடைய  மக்களிசைப் பாடகர் செல்லங்குப்பம் சுப்பிரமணி அவர்களின் நாட்டுப்புற பாடல்களோடு தொடங்கிய அந்த நிகழ்ச்சி நமது மண்ணின் பெருமைமிகு கலைஞர்கள் மற்றும் அவர்களின் கலைநிகழ்ச்சிகள் மூலம் பெரிதும் சிறப்படைந்தது இவ்விழா விடிய விடிய மக்கள் கொண்டாடிய ஒரு மகத்தான கலை இலக்கிய பண்பாட்டு விழாவாக அமைந்தது.

முதலாம் ஆண்டு தை திருவிழா கொடுத்த உற்சாகத்தோடு இரண்டாம் ஆண்டு தை திருவிழா  2018 ஜனவரி 16 அன்று நடைபெற்றது இந்நிகழ்வில் எழுத்தாளர்  கதைச்சொல்லி பவாசெல்லதுரை அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார். எங்கள் மண்ணின் மகத்தான ஓவியர் தி ஹிந்து பத்திரிகையின் மூத்த இணை ஆசிரியர் ஓவியர் ராஜேஷ் அவர்களுக்கும். கவிஞர்  பாடல் ஆசிரியர் வடிவரசு அவர்களுக்கும், நாட்டுப்புற இசை கலைஞர்கள் செல்லங்குப்பம் சுப்பிரமணி, புரட்சிக்குயில் செந்தில் வேலன், சேரிக்குயில் சேட்டு ஆகிய தோழர்களை பாராட்டி கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 

மேலும் இந்நிகழ்வில் திருச்சி  துரைதாமோதரன் வழங்கிய “மந்திரமா தந்திரமா” என்கின்ற அறிவியல்  பல்சுவை நிகழ்ச்சியும், தோழர் கருப்பு கருணா அவர்கள் இயக்கிய “ஏழுமலை ஜமா” என்கின்ற  குறும்படம் திரையிடலும் நடைபெற்றது.  இந்நிகழ்விலும் பறையிசை ஒயிலாட்டம், மன்மதன் ஆட்டம் போன்ற மண் சார்ந்த  கலை நிகழ்வுகள் நடைபெற்று விடிய விடிய மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மூன்றாம் ஆண்டு தைத்திருவிழா 2019 ஜனவரி 17. அன்று நடைபெற்றது இந்நிகழ்வில் ஆதிக்குடி கலை இலக்கிய பண்பாட்டு மையத்தின் பொதுச்செயலாளர் கவிஞர் ஜெகதீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார் சிறப்பு அழைப்பாளர்களாக ஆசிரியர் க.பாண்டுரங்கன் பேராசிரியர் வெற்றிசங்கமித்ரா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இந்நிகழ்வில் ஓவியர் விஜய்வர்மா அவர்களும் எங்கள் மண்ணின் மகத்தான சிற்பக் கலைஞர்கள் குமார் பாலு, செல்வம், அரசு, சிம்பு பாண்டியன், ரமேஷ், அய்யாக்கண்ணு துரைமுருகன், பாண்டியன், தங்கதுரை பட்டுசாமி ஆகிய கலைஞர்களை பாராட்டி கேடயம் வழங்கி சிறப்பித்தோம்.

மேலும் எங்கள் எடத்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பல்வேறு தனித்திறன்களில் சிறப்புற விளங்கும் மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தோம். இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் தென்பெண்ணையின் சிறப்பு குறித்தும் விளக்குகின்ற வகையில் நான் (வெற்றிமுரசு)எழுதி இயக்கிய “ஆத்தா வந்திருக்கா” என்கின்ற மேடை நாடகமும் , திருவிழாக்களை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றவர்கள் ஆண்களா? பெண்களா? என்கின்ற தலைப்பில்  மாணவர்கள் நடத்திய பட்டிமன்றம் என தொடர்ந்து நடைபெற்ற சிறப்புக்குரிய இவ்விழாவையும் மக்கள்  விடிய விடிய கொண்டாடி மகிழ்ந்தனர். 

நான்காம் ஆண்டு தை திருவிழா 2020 ஜனவரி 17 அன்று நடைபெற்றது இந்நிகழ்வை பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக தம் வாழ்வையே அர்ப்பணித்து பாடாற்றுகின்ற மகத்தான தோழர் அந்தியூர் அன்புராஜ் அவர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார், நிகழ்வில் வளரும் இளம் கலைஞர் ராஜாசங்கர் வழங்கிய பலக்குரல் சுவை நிகழ்ச்சியும் முத்து விநாயகர் நாடக குழு வழங்கிய மன்மதன்ரதி ஆட்டமும் சனாயுல்லா இதயாத் குழுவினர் வழங்கிய புலி ஆட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திரைப்பட புகழ் பறைஇசை கலைஞர் முனைவர் ஜெயக்குமார்,மெல்லிசைப் பாடகர் தனலட்சுமி, நாட்டுப்புற பாடகர் பழையனூர் பச்சமுத்து, ஓவியர் ஸ்டாலின், உழவர் சி ஏழுமலை ஆகிய தோழர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தோம். எங்கள் சிற்றூரில் வசிக்கும் அனைத்து சமூக,மக்களும் சமூக நல்லிணத்தோடு சமய நல்லிணக்கத்தோடும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஐந்தாம் ஆண்டு தை திருவிழா தோழர் கருப்பு கருணா அவர்களின் நினைவு திடலில் 2021 ஜனவரி 16 அன்று நடைபெற்றது இந்நிகழ்வை கவிஞர் யாழன்ஆதி அவர்கள் தொடங்கி வைத்தார்  நாடகவியலாளர் முனைவர் கி.பார்த்திபராஜா, கவிஞர்.வெண்ணிலவன், முனைவர் வே.சுலோச்சனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் நம் மண்ணின் மகத்தான தெருக்கூத்து கலைஞர்கள் தெருக்கூத்து நாடக ஆசிரியர் இரா.மணி, தெருக்கூத்து நாடக ஆசிரியர் வே.செல்வராஜ் தெருக்கூத்து நாடக ஆசிரியர் துரைராஜ், தெருக்கூத்து நாடக ஆசிரியர் கோவிந்தராஜ் ஆகியோர் மேடையற்றப்பட்டு  பாராட்டு பட்டயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.  இந்நிகழ்விலும் நம் மண் சார்ந்த நாட்டுப்புற கலைகளோடு தெருக்கூத்து ஒன்றும் நிகழ்த்தப்பட்டது. 

ஆறாம் ஆண்டு தை திருவிழா 2022 ஜனவரி 17, அன்று நடைபெற்றது குடவாசல் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.மாரிமுத்து அவர்கள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வில் திருவண்ணாமலையின் மூத்த ஓவியர் பல்லவன்,  நிதர்சனா நாடகக்குழு இயக்குநர் தோழர் சி.காளிதாஸ். உழவர் கோ. சின்னசாமி எங்கள் எடத்தனூரின் சமத்துவ திருமண மண்டப உரிமையாளர் மனோகரன் ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தோம். 

இந்நிகழ்வில் நம்முடைய நாட்டுப்புற மக்கள் இசை பாடல்கள் மக்களை பெரிதும் மகிழ்வித்தது இளம் இசைக்குயில்கள் சே.தமிழினி, ப.அன்புப்ரியா இவர்களின் இசை நிகழ்ச்சி விழாவை மேலும் அழகாக்கியது கூடுதல் சிறப்பு.

ஏழாம் ஆண்டு தை திருவிழா 2023 மார்ச் 12 அன்று எடத்தனூர்  அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில்  கோவிவன் திடலில் நடைபெற்றது வீணை இசைக் கலைஞர் இதிஹாஸனா அவர்களின் நிகழ்ச்சியோடு விழா தொடங்கியது. தொடர்ந்து….. கீ போர்டு இசைக் கலைஞர் செ.தமிழ்ப்பிரியன் அவர்களின் இசை நிகழ்ச்சியும் விழாவை மெருகேற்றியது. கீழ்ராவந்தவாடி இராமகிருஷ்ணன் குழுவினரின் பறையாட்டம் மக்களை  பெரும் உற்சாகப்படுத்தியது  இவ்விழாவில் திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன் பறவைகள் ஆர்வலர் –ஓவியர் இரா.சிவக்குமார்  நீர்த்துளிகள் இயக்கத்தின் தோழர்கள், கவிஞர் நடராஜன் பாரதிதாஸ் எங்கள் ஊரில் இருந்து மருத்தவராகும் மாணவி தமிழ் ரஞ்சனி ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தோம்.

“வாழிய தென்பெண்ணை” என்கிற தலைப்பில் கவிஞர் தமிழ் இலக்கியன் அவர்களின் கவிதையும்  பேராசிரியர் சு.பிரேம்குமார் அவர்களின் உரையும் விழாவை சிறப்பித்தன விழாவில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி அவர்களும் மாவட்ட கல்வி அலுவலர்  கே.காளிதாஸ் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இப்படியாக ஒவ்வொரு ஆண்டும்   தை திருவிழா தொடர்ந்து  நடந்து கொண்டு இருக்கிறது. 

 மேலும் நூல் வெளியீடு, திரையிடல், கருத்தரங்கம் போன்ற நிகழ்வுகளுக்காக  “உழவு” என்கிற தலைப்பின் கீழ் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றோம் முதல் உழவை (29.02.2020)  எழுத்தாளர் கே.வி ஷைலஜா அவர்கள் தொடங்கி வைத்தார்கள் அதில் கவிஞர் யாழன்ஆதி மற்றும் கவிஞர் வெண்ணிலவன் அவர்களும் கலந்து கொண்டு நமது மண்சார்ந்த கலை இலக்கிய அரசியல் பண்பாட்டு விழுமியங்களை மக்களிடம் விதைத்து உரையாடல் நிகழ்த்தினர்.

உழவு – 2 (13.11.2020)

மக்களிசைப் பாடகர் செல்லங்குப்பம் சுப்பிரமணி அவர்களின்  “ஆசப்பட்ட அத்த மகளே ” எனும் பாடல் வெளியீட்டு விழாவாக ஒருங்கிணைக்கப்பட்டு நடந்தேறியது. 

உழவு – 3 (22.08.2021)

இயக்குநர் ஜெயக்குமார் சேதுராமன் அவர்கள் இயக்கிய “செந்நாய்” என்கிற திரைப்படத்தை மக்களிடம் திரையிடல் நிகழ்வாக ஒருங்கிணைக்கப்பட்டு நடந்தேறியது. 

உழவு -4 (13.09.2021)

“தென்பெண்ணையும் வடகரையும்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று  ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது  இதில் ஓவியர் ப.இராமச்சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு தென்பெண்ணையின் தொன்மை குறித்தும், அதன் வரலாறு குறித்தும் உரையாடல் நிகழ்த்தினார். 

உழவு -5  (26.08.2023)

நமது மண்ணின் மாபெரும் அறிஞர் வளையாம்பட்டு வெங்கடாசலம் அய்யா அவர்கள் எழுதி  மணிமொழி பதிப்பகத்தின் மூலம்  உருவான “தமிழர் கணக்கியல்” நூல் வெளியீட்டு விழாவாக ஒருங்கிணைக்கப்பட்டு நடந்தேறியது. 

இப்படியாக தனது கலை இலக்கியப் பண்பாட்டு பயணத்தை  தொடர்ந்து கொண்டிருக்கும் தென்பெண்ணை இலக்கியச் சமவெளி இணையத்தின் வழியாகவும்  பல நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தியது குறிப்பிட தகுந்த பெருமை ஆகும்.

அமைப்பின் நிர்வாகிகள்: தலைவர், க.பாண்டுரங்கன். செயலாளர் ந.செல்வமணி, பொருளாளர் கி.அர்ச்சுணன். து.தலைவர்கள் ஏ.சீனிவாசன், இரா.சத்தியமூர்த்தி. து.செயலாளர்கள் மா.முத்து, க.இராஜகிரி. நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கா. ஏழுமலை, ஆர்.இரவி, ச.சக்திவேல் வீரணம் ஏழுமலை, க.லட்சுமி, ம.கலைச்செல்வி, ஒருங்கிணைப்பாளர் அ.வெற்றிமுரசு.

11 thoughts on “தென்பெண்ணை இலக்கியச் சமவெளி

  1. பழவிறல்மூதூர் எனும் சங்க கால நூலில் போற்றப்பட்ட மண், தமிழ்நாட்டின் டப்ளின் ஆக திகழ்கின்ற மண், உலகம் போற்றும் வெளிச்சத்தை தனதாக்கி கொண்ட மண், வெளிச்சம் என்ற பெயரில் முதன்முதலாக இயங்கிய மண், வெளிச்சம் தான் முதல் முதலில் மக்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்கின்ற வரலாற்று உண்மையை உரைத்த மண். வெளிச்சத்தை பொதுவுடமை ஆக்கிய வரலாற்று சிறப்பு வாய்ந்த மண். இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மண்ணின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் எனது தந்தை வழக்கறிஞர் மோகன் அவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட எனது அன்புக்குரிய அண்ணன் அன்புத்தமிழ் வெற்றிமுரசு அவர்களின் இந்த முயற்சிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தென்பெண்ணை இலக்கியச் சமவெளியில் இனி வரும் நிகழ்ச்சிகளில் நானும் நிச்சயமாக பங்கு எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். கலை ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் மக்களை மீட்டெடுக்கும் உரிமைகளை வென்றெடுக்கும் உங்களது மகத்தான பணி தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

    1. இதயம் நிறைந்த பேரன்போடு
      இணைந்து பயணிப்போம்!
      மிகவும் மகிழ்ச்சி தோழர்

  2. .
    அருமையான தொகுப்புங்க தோழர்…களே..
    ….தொன்மையுலிருந்து …
    தொடங்கி..
    தென்பெண்ணை பண்பாட்டு சமவெளி….யின்…
    வரலாற்றுப் பயணம்..
    .
    மேலும் தம் வெற்றிப் பயணங்களில் தொடரவும்…
    எடத்தூனூரின்…வெளிச்சம் உலகெங்கும் படரவும்…
    வாழ்த்துகள்…
    தோழர்..களே..
    .

    1. மிகவும் மகிழ்ச்சி
      தங்களின் பேரன்பிற்கும்
      தோழமைக்கும்
      மிகவும் நன்றி தோழர்

      தங்களின் வாழ்த்துகள்
      எங்கள் பயணத்தை
      மேலும்… மேலும்…
      ஊக்கப்படுத்தி வழிநடத்தும்

      நன்றி தோழர் ❤️

  3. வாழ்த்துக்கள் சொல்வதைவிட வேறெதுவும் தோணவில்லை தோழர் சிறப்பாக எழுதி முத்துக்கள் பதித்திருக்கிறீர்கள் தங்களின் ஆளுமையை இரண்டு இடங்களில் படித்து உணரமுடிகிறது

    அது “நான் ஏர்ப்பிடிக்க தொடங்கிய இளம் பருவத்தில் கார்த்திகை திருவிழாவின் மூலமாகவே எனக்குள் வேர்ப்பிடிக்கத் தொடங்கியது திருவண்ணாமலை”

    தீபங்களின் வெளிச்சத்திலும் திருவண்ணாமலையில் இயங்கிய இடதுசாரி கலை இலக்கிய அமைப்புகளின் வெளிச்சத்திலும்தான் நான் திருவண்ணாமலையை முதன் முதலில் அண்ணாந்து பார்க்கத் தொடங்கினேன்

    என சொல்லும்போது அழகாய் அமைந்துள்ளது

    1. மகிழ்ச்சி தோழர்
      தங்களின் பேரன்பிற்கும்
      தோழமைக்கும்
      மிகவும் நன்றி 💙❤️

      இதயம் நிறைந்த
      பேரன்போடு என்றும்
      இணைந்து பயணிப்போம்

  4. நாங்கள் கூடு கட்டிய கதையையும்,
    மக்களோடு கூடிப் பேசிய
    கதையையும் புழுதி யில் ஆவணப்
    படுத்தி இருக்கிறோம்!

    எளிமையான எங்களின் கதையை
    வாய்ப்பு இருக்கும் நண்பர்கள்
    வாசித்து பாருங்கள்….!

    மனசுக்கு நெருக்கமாக இருக்கும்
    என நம்புகிறேன்

    நன்றி ❤️
    | JP | Siragan | சல்மான் |
    | Yuvaraj Ambedkar |

  5. அருமையான தொகுப்பு
    மக்களோடு கூடி பேசிய கலைகளை நன்றாக ஆவணப்படுத்தி உள்ளார் நன்றி மகிழ்ச்சி

    எடத்தனூரின் பெருமையை
    வெளி உலகுக்கு எடுத்துக்காட்டி உள்ளாய்
    நன்றி மகிழ்ச்சி

    1. என்னை அரவணைத்து
      வழிநடத்தும்
      தங்களின் பேரன்பிற்கும்
      ஒத்துழைப்பிற்கும்
      மிகவும் நன்றிங்க அண்ணா

  6. அடுத்த நிகழ்வு எப்போது என்று ஆவலுடன் காத்த இருக்கிறேன், கடந்த ஆண்டுகளில் நான் பார்க்காமல் தவரவிட்டதை தங்கள் எழுத்தின் மூலம் தெரிந்துகொண்டேன்

    1. மிகவும் மகிழ்ச்சி
      தங்களின் பேரன்பிற்கு
      நன்றி தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version