2016 மே மாதம் டாக்டர்.ஜீவாவின் கவிதைப்பூங்கா என்ற பெயரில் ஒரு முகநூல் குழுமம் ஆரம்பிக்கப்பட்டு, 4000 வளரும் கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகளை ஒருங்கிணைத்து, தினந்தோறும் அவர்களின் படைப்புத்திறனை வளர்க்கும் நோக்கில் போட்டிகள் நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் மரபுக்கவிதைப் பயிற்சி, ஹைக்கூ பயிற்சி என தேர்ந்த கவிஞர்களால் வகுப்புகள் நடத்தப்பட்டது. தினந்தோறும் திருக்குறள் என்ற பகுதியில் “தினமும் ஒரு திருக்குறளை “எடுத்து அதற்கான விரிவான விளக்கங்களை எல்லோருக்கும் புரியும்படியாக சான்றோர்களால் விளக்கவுரையாகக் கொடுக்கவைக்கப்பட்டது. 26.5.2017 அன்று மடிப்பாக்கம் வணிகர் சங்க மகாலில் “கவிதைப்பூங்காவின் ஆண்டுவிழா “நடத்தப்பட்டது. அந்த விழாவில் உலகளாவிய கவிஞர்கள் 150 பேருக்கு ஊக்குவிப்பு விருதுகள் கவிஞர்.சினேகன் அவர்கள் கரங்களால் வழங்கப்பட்டன. இந்தச் சங்கம் 20.7.2017 ஆரம்பிக்கப்பட்டு, 28.7.2017 அன்று முறைப்படி சார்பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்யப்பட்டு, 8.8.2017அன்று பதிவு எண் தரப்பட்டது(பதிவு- 381/2017) .
தமிழ்ச்சங்கத்தின் தொடக்கவிழா வேளச்சேரியில் உள்ள மாண்புமிகு.முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்களின் “அம்மா திருமண மண்டபத்தில் ” 2-12-2017 அன்று மாண்புமிகு நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது.
அந்த விழாவில் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞானி பிறைசூடன் அவர்களால் உலகளாவிய கவிஞர்கள் 160 பேருக்கு விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. இளைய தலைமுறையும் தமிழும் ” என்ற நோக்கத்தின் முதல் பணியாக கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 26-1-2018 அன்று தமிழ்மொழியின் சிறப்பு மற்றும் பண்பாடுகள் குறித்த தலைப்புகளில் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி ஆகியன நடத்தி திரைப்படப்பாடலாசிரியர் நிகரன் அவர்கள் கரங்களால் வெற்றி பெற்ற 10 குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் அப்பள்ளியில் படிக்கும் 1020 பிள்ளைகளுக்கு சங்கத்தின் சார்பில் இனிப்புடன் சிற்றுண்டி வழங்கப்பட்டது. சென்னை தரமணியில் உள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 6-5-2018 அன்று புதுவைத் தமிழ்ச்சங்கத்தலைவர் முனைவர்.முத்து அவர்கள் கரங்களால் தென்சென்னை மக்கள் நல அறக்கட்டளை தொடக்கவிழா மற்றும் சங்கத்தின் 200 ஆவது நாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த நாளில் உலகளாவிய கவிஞர்கள் 150 பேருக்கு திரைப்படப்பாடலாசிரியர் விவேகா அவர்களால் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 25.7.2018 அன்று சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு.அமைச்சர்.மாஃபா. க. பாண்டியராஜன் அவர்களால் தென்சென்னையில் இருக்கும் மூன்று பள்ளிகளான சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம்,மாம்பாக்கம், மேல்நிலைப்பள்ளிகளில் தமிழில் முதலிடம் பிடித்த 7 மாணவர்களுக்கும், அனைத்துப் பாடங்களில் முதலிடம் பிடித்த 5 மாணவர்களுக்கும் ஆகமொத்தம் 16 மாணவர்களுக்கும் தலா 3000 /ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. மற்றும் பள்ளியில் படிக்கும் 1600 மாணவர்களுக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. 13/10/18 அன்று மலைவாழ்ப்பிள்ளைகள் படிக்கும் பொள்ளாச்சி தொண்டாமுத்தூர் பள்ளியில் தமிழில் சிறந்து விளங்கிய மலைவாழ் பிள்ளைகள் 40 பேருக்கு பரிசுகள் வழங்கியது.மற்றும் பள்ளியில் படிக்கும் 500 பிள்ளைகளுக்கு சிற்றுண்டி வழங்கியது.
23.5.19 அன்று அரும்பாக்கம் லீக்கிளப் அரங்கில் 126 படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் கவியரங்கம் மற்றும் சங்கத்தின் ஆண்டுவிழா, அறக்கட்டளையின் ஆண்டுவிழா நடைபெற்றது. அன்று உலகத்தமிழ்ச்சங்கத்தின் மேனாள் இயக்குநர் மற்றும் கவிஞர் அருண்பாரதி ஆகியோர் வந்திருந்து சிறப்பித்தனர்.
22.9.19 அன்று திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் எனது டாக்டர்.ஜீவரேகாவின் “மனதோடு பேசவா” நூல் வெளியீடு மாண்புமிகு.கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களால் வெளியிடப்பட்டது.
29.10.2019 அன்று தென்சென்னைக்குட்பட்ட ஐந்து அரசுப்பள்ளி மாணவர்கள் 21 பேருக்கு தலா 5000 ரூபாய் ஊக்கத்தொகை மாண்புமிகு.அமைச்சர் செங்கோட்டையன் அவர்களால் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் 10.1.2020 அன்று பொங்கல்விழா கொண்டாடப்பட்டது… இளையதலைமுறையும் தமிழும் நிகழ்ச்சிக்காக மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.சிறந்த மாணவிகளுக்கு காவல்துறை துணை ஆணையர் சரவணன் அவர்களின் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
8.3.2020 அன்று மகளிர் தின விழா கவிஞர் இளம்பிறை மற்றும் எழுத்தாளர் கிருஷாங்கினி தலைமையில் நடத்தப்பட்டது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் சாதனையாளர்கள் 12 பேர் கௌரவிக்கப்பட்டனர். தென்சென்னை தமிழ்ச்சங்கத்தின் நான்காம் ஆண்டுவிழா 24-1-21 அன்று சென்னை இக்சா அரங்கில் மாண்புமிகு.தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சரின் முன்னிலையில் நடத்தப்பட்டது. விழாவில் 84 படைப்பாளிகள் கௌரவிக்கப்பட்டனர். 8.3.2021 அன்று மகளிர் தினவிழா கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. பெண் சாதனையாளர்கள் 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
30.10.22 அன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கில் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டுவிழாவில் தமிழில் சிறந்த தொண்டாற்றும் சங்கங்களுக்கு விருதுகளும், தமிழ்ச்சான்றோர்கள் 52 பேருக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. மேலும் ஜீவரேகா பதிப்பகத்தின் சார்பில் புதுமுகக் கவிஞர்கள் இருவரின் கவிதை நூல்கள் வெளியிடப்பட்டன, மேலும் விழாவில் பாரதிப் பற்றாளர்களாய் சிறப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் சொல்லரசு பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கும் ,தென்காசியைச் சேர்ந்த பாரதி முத்துநாயகம் அவர்களுக்கும் பாரதி சக்தி விருதும் தலா 10000 பணமுடிப்பும் மற்றும், தமிழில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவருக்கு ரூபாய் 10000 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. விழாவிற்கு கவிஞர் தேவேந்திரபூபதி அவர்கள் சிறப்பு விருந்தினராய்க் கலந்துகொண்டாரென்பது மகிழ்ச்சியான தகவல். முனைவர். ஆதிராமுல்லை அவர்களின் தலைமையில் பாரதிவிழா சிறப்புக் கவியரங்கமும், முனைவர்.சொற்கோ கருணாநிதி அவர்களின் தலைமையில் ஆண்டுவிழாக் கவியரங்கமும் சிறப்பாக நடைபெற்றது.
எழுத்தாளர் எழிலரசு, கவிஞர்.ஆரூர் தமிழ்நாடன், கவிஞர், மானா பாஸ்கரன் மற்றும் கவிஞர் சொர்ணபாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கிப் பெருமை சேர்த்தனர். விழாவில் புலவர் செம்மங்குடி துரையரசன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், கவிஞர் சொர்ணபாரதி அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதும் வழங்கப்பட்டதென்பது விழாவின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
15-3-23 அன்று சென்னை இக்சா அரங்கில் மகளிர்தின விழா சிறப்பாக நடைபெற்றது. கம்பர் விருதாளர் சரஸ்வதி ராமநாதன் அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் வாழ்நாள். சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.மேலும் பல்வேறு துறைகளில்சாதனை படைக்கும் மங்கையர் ஐவருக்கு சாதனை மகளிர் விருது வழங்கப்பட்டது.
24-9-23 அன்று பாரதி பிறந்த எட்டையாபுரம் மண்ணில் பாரதி மணிமண்டபத்தில் தென்சென்னைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பாரதி விழாவும், தென்சென்னைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மருத்துவர்.ம.ஜீவரேகா அவர்கள் எழுதிய பாரதி ஒரு மகாசக்தி என்ற நூல் வெளியீடும் இனிதே நடைபெற்றது. விழாவிற்குத் தலைமை வகித்து இயக்குநர் பேச்சாளர், பாரதிப் பற்றாளர் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தார்.
பாரதி ஆய்வாளர் முனைவர்.திரு.வே.வெங்கட்ராமன் அவர்கள் நூலினை வெளியிட, தென்சென்னைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் கவிஞர்.கோகுலன் ஆனந்தா அவர்கள் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிகள் பாரதி புகழ்பாடும் கவியரங்கம் நடைபெற்றது, கல்வெட்டு பேசுகிறது இதழாசிரியர் கவிஞர்.சொர்ணபாரதி அவர்கள் கவியரங்கத்தலைமை வகித்து நிகழ்வுக்கு மேலும் மெருகூட்டினார்.
எழுத்தாளர் திரு.வே.எழிலரசு, முனைவர், ஆதிரா முல்லை, எழுத்தாளர் மதுமிதா அவர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். நிகழ்வினைக் கவிஞர் விஜயராணி மீனாட்சி அவர்கள் சிறப்புறத் தொகுத்து வழங்கினார். அடுத்ததாக வரும் ஜனவரி மாதத்தில் தென்சென்னைத் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் ஆண்டுவிழா சென்னையில் நடைபெறவுள்ளது, நிகழ்வில் ஐந்து சிறப்பான அறிஞர் பெருமக்களுக்கு தலா பத்தாயிரம் பொற்கிழியுடன் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறாகத் தொடர்ந்து தென்சென்னைத் தமிழ்ச்சங்கம் சீரிய முறையில் தமிழுக்காக அரும்பணி ஆற்றிவருகிறது, இது மென்மேலும் தொடரும். அதன் தொடர்ச்சியாக புதிய படைப்பாளிகளை ஊக்குவிக்கும்பொருட்டு அவர்களின் படைப்புகளை தென்சென்னை தமிழ்ச்சங்கம் வாயிலாக எந்தவித பொருட்செலவும் வாங்காமல் எமது “ஜீவரேகா பதிப்பகம் “மூலம் அச்சடித்துக்
கொடுத்து வெளியிடுகிறோம். இதுவரை புதிய படைப்பாளிகளின் எட்டு புத்தகங்கள் வெளியிட்டுள்ளோம்.
தற்போது செய்கின்ற பணிகள் :
தென்சென்னை தமிழ்ச்சங்கத்தின் முக்கிய நோக்கம் இளைய தலைமுறையிடத்தில் தமிழின் மாண்பை வளர்ப்பது மற்றும் ஊக்குவித்தல், அங்கீகாரம் இல்லாத சிறந்த கவிஞர்களுக்கு அங்கீகாரம் அளித்தல், உலக அளவில் இருக்கும் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவது போன்றவை ஆகும்.
1. அரசுப்பள்ளிகளில் மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கான பயிலரங்குகளை நடத்தி தாய்மொழிப்பற்றை ஊக்குவிக்கிறோம்.
2.இளைய தலைமுறையிடத்தில் தமிழர் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் திருக்குறள் பயிற்சி, ஐம்பெருங்காப்பியங்கள், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள் போன்றவைகளை பயிற்றுவிக்கும் நோக்கில் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள தமிழாசிரியர்களின் மூலம் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
3.இதுவரை தென்சென்னை புறநகர் பகுதிக்குட்பட்ட மாம்பாக்கம், வாணியஞ்சாவடி, புதுப்பாக்கம், திருப்போரூர் ஆகிய அரசுப்பள்ளிகளில் பயிலரங்குகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
-மருத்துவர்.ம. ஜீவரேகா .B.A.M.S , தலைவர்