
சமூக மனிதனின் வழியில் பயணிப்பவர்களும் வெகு சிலரே;என்பது என் தனிப்பட்ட கருத்து.
தன்னைச் சார்ந்த இடங்களில் நடக்கும் நிகழ்வுகளையும்,
அனுபவங்களையும் ஆணித்தரமாக பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் தன் அனுபவம் சொல்லித் தந்த வலியோடு மட்டும் நின்று விடாமல் சமூக மனிதர்கள் காட்டிய வழியிலும் பயணிக்கும் சக எழுத்தாளர்களுக்கு மத்தியில் தன் வலி நிறைந்த வாழ்க்கை அனுபவத்தை இத்தொகுப்பில் பகிர்ந்துள்ளார்.
பல புத்தகங்களை வாசித்த அனுபவம் இருந்தாலும் இந்த புத்தகத்தை படிக்கும் போது மனதிற்குள் ஒரு மாற்றம் ஏற்படுகிறது.ஒரு குறிப்பிட்ட தகவல்களை மட்டும் சொல்லாமல் பல்வேறு தகவல் களஞ்சியமாக இந்த புத்தகம் உள்ளது.
இயற்கை வேளாண்மை,
சமூக அவலம்,
எதிர்கால அரசியல்,
வேறுபாடு ஏற்றத்தாழ்வு,
சாதிய வழிகள்,
எழுத்துக்களை கையாண்ட விதம் என பல்வேறு கோணங்களில் என்னை வியக்க வைத்தது.
ஒரு படைப்பாளியாக பார்க்கும் போது இந்த முழு தொகுப்பும் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த தூண்டுகிறது என்பதே உண்மை.
வறுமையின் கோரத்தையும்,
வளர்ப்பின் மகத்துவத்தையும் நம் கண் முன்னே நிறுத்தி உள்ளார் இந்த கவிதையின் மூலமாக;
📒 மழிக்காத தாடி அழுக்கேறிய சட்டை பழுப்பேறிய தலை அப்பாவின் அடையாளம்.
நைந்த வாழ்வை
ஊக்கு கோர்த்து
பிய்ந்த செருப்போடு அணிந்திருப்பார்.
பண்டிகை நாட்களில் புலர்வதற்குள் செல்பவர் யாரிடம் கடன் வாங்குவாரோ
துண்டடின் ஒரு முனையில் மளிகைச் சாமான்களை உருண்டையாக
மூட்டைபோல் கட்டி
முதுகுப்பக்கம் தொங்கவிட்டு
கையில் ஆட்டின் தலையோடு பெருமை மின்னும் ராஜா போல உறுமத்தில்தான் வீடு வருவார்.
நாங்கள் உறங்குவதாகப் படுத்திருக்கும் இரவுகளில் நீளும் வறுமைப் பட்டியலை அம்மாவின் காதுகளுக்குச் சொல்லும் அவர்
ஒரு நாள் விட்டுச் சொன்னதில்லை எங்களுக்கு.
சமூக அவலத்தையும்,
சமூக சீர்கேட்டையும் சீர்திருத்தம் செய்ய ஒரு வழியை தன் வரிகள் மூலமாக விவரித்து உள்ளார்.
மகளே!
எழு சாதிய நோய்க்கு மருந்தாகு என்கிறார்.
📒 ஒரு பித்தனைப் போல நிற்கிறேன்.
பீக்கலக்கப்பட்ட நீரைப் பருகியதால் வாந்தியும் பேதியுமாய் மயங்கி கிடக்கும் மகளைப் பார்த்தபடி.
கண்ணீர் சொட்டிக் கொண்டிருக்கும் கைவிடப்பட்டவனின் துயரங்களை ஏதுமற்ற கரங்களில் ஏந்தியபடி அழாதேப்பா நல்லாயிடும் என்கிறாள்.
கனக்கும் இதயத்தின் வலிபொறுத்த வார்த்தைகளை உதிர்க்கிறேன் மகளே!
எழு சாதிய நோய்க்கு மருந்தாகு.
காலங்காலமாக எரிந்துக் கொண்டிருக்கும் சாதியக் கொடுமையை இன்றும் நம்மால் அனைக்க முடியவில்லை அதை அனைக்க முயற்சித்து அழிந்து போனவர்களே அதிகம்
📒 எரிந்து அடங்கியது குடிசை மிச்சமிருக்கிறது சாதிச்சாம்பல்.
எதிர்கால அரசியலை நம்மால் அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது ஆனால்;மிகத் துல்லியமாக கணித்துள்ளார் இரு வரிகளில்.
📒 ஒரே நாடு
ஒரே தேர்தல்
ரெண்டு சுடுகாடு.
இந்த கவிதையின் மூலமாக சமூக நீதியை சவுக்கடி கொண்டு அடித்துள்ளார்.
📒 யூகம் வகுக்கிறார்கள் விருந்துண்டு;
வெறும் வயிற்றில் விக்கிக் கொண்டிருக்கிறது சமூக நீதி.
அதிகாரத்தின் ஆணவத்தை திரைச்சீலையின் பின் நின்று நடத்திக் கொண்டிருக்கும் நாத்தம் பிடித்த எதிரிகளை எள்ளி நகையாடியபடி நாசுக்காக சொல்லாமல் நம்மில் ஒருவராக சொல்லியிருக்கிறார் இந்த கவிதையின் மூலமாக.
📒 நீரில் பீயைக் கரைத்தீர்கள் குடிக்கத் தொடங்கியதும் நாறிக்கொண்டிருந்தது உங்கள் சாதியம்.
ஏதிலிகளின் ஒட்டுமொத்த குமுறல்களும் மெளனமாய் ஒலிக்கத் தொடங்கின.
புகாரளித்த பின் இனி எல்லாம் முடிந்துவிடும் நினைத்துத் திரும்புகையில் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பிக் கொண்டிருந்தன திரைச் சீலைகளின் பின் தெரியத் தொடங்கின அதிகாரத்தின் பிம்பங்கள்.
இதுபோன்ற பல்வேறு தலைப்புகளில் நம்மை திகைக்க வைத்துள்ளார் விஜயபாரதியின்
தொடுவானத்தின் கீழ் உதிரும் வண்ணங்கள்
என்னும் இத்தொகுப்பின் மூலமாக தான் அனுபவித்த, வலிகளை வார்த்தைகளாக விவரித்து இருக்கிறார்.
தன் பாசப் போராட்டத்தை பக்குவமாகவும் சொல்லி இருக்கிறார் தற்போது நடைபெறும் அரசியல் அவலங்களை நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார்.
தொடுவானத்தின் கீழ் உதிரும் வண்ணங்கள் புத்தகத்தின் ஆசிரியர் விஜயபாரதி அவர்கள்.
நூல் ஆசிரியர்:விஜயபாரதி
பதிப்பகம்:வேரல் புக்ஸ்
விலை:₹150