சங்க இலக்கியச் சாறு

சொற்பொழிவாளர் தமிழருவி மணியன் அவர்கள், ஈரோடு புத்தக திருவிழாவில் நிகழ்த்திய உரைதான் சங்க இலக்கியச் சாறு .

இதை இவன் கண் விடல் , என்ற வள்ளுவ வாக்குப்படி சங்க இலக்கியத்தில் உள்ள மேன்மையை தனித்தன்மையை மானுடம் பாடிய மாண்பை தமிழருவி மணியன் போன்று அழுத்தம் திருத்தமாக நெஞ்சில் பதியுமாறு வேறு யாராலும் எடுத்து வைக்க இயலாது என நினைக்கிறேன்.

      நான் சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்தபோது திருமதி சாரதா நம்பி ஆருரன் என்ற தமிழ் பேராசிரியர் எடுத்த தமிழ் வகுப்பை நான் மெய் மறந்து ரசித்து கவனித்திருக்கிறேன்.

     அப்படி மெய் மறந்து வாசித்தநூல் இந்த சங்க இலக்கியச் சாறு.

     புறநானூற்றிலேயே மிக அதிகமான பாடல்களை பாடியது ஔவையார் தான். 

“நுண்ணறிவு உடையோர் நூலோடு பழகினும் பெண்ணறிவு என்பது பெரும் பேதமைத்தே”.

( அதாவது எவ்வளவு மகத்தான அறிஞர் பெருமக்களோடு பல்லாண்டு காலம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும் கூட அவர்கள் அறிவை பெண்கள் அடையவே முடியாது, அறிவுக்கும் பெண்களுக்கும் எள் மூக்கின் முனையளவும் தொடர்பே கிடையாது என்பது இதன் பொருள்😡😡 )

என்ற கூற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்த இனம் நம் பெண்ணினம்.

         புறநானூற்றில் உள்ள 398 பாடல்களில் (267, 268 கிடைக்கப் பெறவில்லை ) 33 பாடல்ககளை ஔவையார் பாடியுள்ளார்.

       தன் நெஞ்சில் வைத்து பூசித்து அன்பின் வடிவமாகவே ஆராதித்த அதியமானை பற்றி மட்டும் 22 பாடல்கள் பாடியிருக்கிறார்.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உடல் சார்ந்த உணர்வுகளுக்கு கிஞ்சித்தும் இடம் தராமல் ஆன்ம நிலையில் ஒருங்கிணைந்து அன்பு செலுத்துகின்ற உன்னதத்தை நாம் அவ்வையாரிடமும் அதியமானிடமும் தான் பார்க்க முடியும்.

    நாடா கொன்றோ காடா கொன்றோ...... 

………….. வாழிய நிலனே ‘
என்ற பாடலில் ஒரு மண்ணுக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதல்ல மண்ணுக்கு கிடைக்கக்கூடிய பெருமை மண்ணுக்கு மேலே நடக்கக்கூடிய மனிதர்கள் எப்படிப்பட்ட தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் கொண்டுதான் அந்த மண் பெருமையுறுகிறது,
என்ற மகத்தான உண்மை உலகிற்கு எடுத்துக் கூறப்படுகிறது.

      ஐக்கிய நாடுகளின் சபைக்கு முன்னால் 193 நாடுகளின் கொடிகள் பட்டொளி வீசி பறக்கின்றன. அதில் ஒரு கொடி நமது இந்திய கொடி.

ஆனால் இந்த 193 நாடுகளில் வேறு எந்த நாட்டிற்கும் இல்லாத பெருமை நமது இந்திய நாட்டிற்கு உள்ளது.

உலகில் 6000 மொழிகளுக்கு மேல் உள்ளன. ஆனால் அதில் ஆறு மொழிகள் மட்டுமே உயர் தனிச் செம்மொழிகள்.

    அந்த ஆறு மொழிகளில் இரண்டு மொழிகள் நம் இந்திய மொழிகள்( தமிழ், சமஸ்கிருதம் )

இந்த புத்தகம் முழுவதும் தமிழின் தனிச்சிறப்புகளை அடுக்கடுக்காய் சொல்லியுள்ளார், ஆசிரியர் தமிழருவி மணியன்.

          பெண்களை பேதை, பெதும்பை, மங்கை,......... என ஏழு பருவ நிலைகளாக தமிழில் பிரித்து வைத்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே..

அதேபோல் மலரின் ஏழு நிலைகளை ( அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் ) பற்றியும் நான் படித்திருக்கிறேன்.

    ஆனால் ஆண்களுக்கு உள்ள ஏழு பருவங்களைப் பற்றி நான் அறிந்ததில்லை ஒருவேளை தமிழாசிரியர்கள் அறிந்திருப்பார்கள். ( பாலன், மீளி, மறவோன் திறலோன், காளை, விடலை, முதுமகன் )

      சங்க இலக்கியத்தின் மூன்று பாடு பொருள்களான மனிதநேயம், உலகப் பொதுமை, வாழ்வியல் அறத்தை சுற்றியே பாடல்கள் அமைத்து பாடியிருப்பார்கள் அக்காலத்துப் புலவர்கள்.

 சங்ககாலத்தில் மன்னர்களை ஏற்றியும் போற்றியும் பாடினால்தான் புலவர்கள் வாழ முடியும்.

ஆனால் ஒரு புலவன் எந்த வள்ளலின் வீட்டு வாசலுக்கு முன்னாலும் நின்று அவனை இந்திரன் என்றோ சந்திரன் என்றோ ஏற்றியும் போற்றியும் பாடவில்லை.

அவன் பாடியதே இரண்டே இரண்டு பாடல்கள் தான்.

ஒன்று புறநானூற்றில் இருக்கிறது மற்றொன்று நற்றிணையில் இருக்கிறது கணியன் பூங்குன்றனார் என்பது அவன் பெயர்.

அவன் எழுதிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலை யாராலும் மறக்க முடியாது.

அன்பு மட்டுமே உடல் முழுவதும் நிரம்பி தழும்ப கூடிய உள்ளம் உடையவனாக இருந்தால் மட்டும்தான் இந்த வரியை எழுதி இருக்க முடியும்.

    ஒரு நதி மலையில் பிறந்து அருவியால் விழுந்து சமவெளியில் நடந்து சங்கீத நயத்தோடு கடலிலே கலக்கிறது.

அது போல் வாழ வேண்டும் மனிதர்கள்.

     அப்படி என்றால் மனிதனுக்கான அடையாளம் எது..,..? சிந்தனை. சிந்திப்பவன் தான் முயற்சி மேற்கொள்வான். முயற்சியை மேற்கொள்பவன் தான் வளர்ச்சியை அடைவான், 

வளர்ச்சியை அடையக்கூடியதுதான் மாற்றத்தை சந்திக்கும்.

 ஆற்றின் போக்குக்கு ஏற்ப தெப்பம் மிதப்பது போல் நம் செயலுக்கு ஏற்ப நம் வாழ்க்கை அமையும்.

சங்க இலக்கியச் சாறினை நான் பருகி விட்டேன் நீங்களும் பருகிப் பாருங்களேன்.

Life is so the festival is celebrated….
-ஓஷோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version